பங்காளிகள்

சிட்டுக் குருவி, பட்டு ரோஜா – இவை இரண்டினில் எதை ஆதரிப்பது, எதை நிராகரிப்பது என்பது எனக்கு ஒரு பிரச்சனையாயிற்று.

ஒரு சிட்டுக்குருவியின் உயிருக்கும், ஒரு பட்டு ரோஜாவின் உயிருக்கும், ஒரு மனிதனாகிய என் உயிருக்கும் அடிப்படையில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? இல்லை. நாங்கள் மூவருமே பூமியின் சம பங்காளிகள். இது எனக்கு தெரிகிறது. ஆனால் அந்தச் சிட்டுக் குருவிக்கு இது தெரியவில்லையே. அனாவசியமாக, ஒரு பாவமும் அறியாத பட்டு ரோஜாக்களை அது கொன்று போட்டுக் கொண்டிருந்தது.

மரங்கள் அடர்ந்த இந்தப் பகுதிக்கு நாங்கள் சமீபத்தில்தான் குடிவந்தோம். சின்ன டைரி மாதிரி அடக்கமான வீடு. எனக்கும் சுமதிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் இது அரண்மனை. வைகறையில், ஜன்னல்களின் குறுக்குக் கட்டைகளிலும் சிமெண்ட் மறைப்பு மேலும் அமர்ந்து காக்கைகளும், சிட்டுக் குருவிகளுமே எங்களை வாடிக்கையாகத் துயில் எழுப்பும், கடூரமான கார் பஸ், லாரி ஹாரன்களைக் கேட்டுக் கேட்டுப் புண்பட்ட காதுகளுக்குப் பறவை இரைச்சல் இதமான வெந்நீர் ஒத்தடம்.

அடுப்புப் பலகாரம் பெரும்பாலும் எங்கள் வீட்டில் இட்டிலியாகத்தான் இருக்கும். இட்டிலி மாவில் தோசை கூடச் சுடலாம் என்று ஒரு வித்தியாசம். தேவை கருதிப் பெரியோர்கள் வகுத்திருக்கிறார்கள். விதவிதமான ருசியை அவாவுதல்தானே மனித இயற்கை. ஆனால் சுமதிக்கு ஏனோ தோசை வார்ப்பது பெரும் சங்கடம் தருகிற காரியம். ‘இன்னைக்கு தோசை பண்ணக் கூடாதா?’ என்று நான் கேட்டு விட்டேன் என்றால் போச்சு. ஏதோ பாவ காரியத்தைச் செய்யச் சொன்னது போல் அவள் திடுக்கிட்டுப் போய் விடுவாள்.

பரபரவென்று இரண்டு ஈடு இட்டிலியை சைபர் சைபராகச் சுட்டு இறக்கி வைத்து விட்ட பிறகுதான் அவளுக்கு அந்தக் காலைப் பொழுது ரம்மியமாகும். ஒரு மந்தகாசம் அவள் முகத்தில் தவழும். சுட்டு முடித்த பிறகு முதல் இட்டிலியை துண்டுத் துண்டாய் பிய்த்துக் காக்கைக்குப் போடுவாள். பசித்துக் காத்து கொண்டிருக்கும் அந்த ஜீவன்கள் இட்டிலியைத் தின்று பசியாறித் திருப்தியுடன் அகலும். அப்புறம் சிட்டுக்குருவிகள் தயங்கித் தயங்கி வந்து, சாய்வாகத் தலையைச் சாய்த்து அவளைப் பார்க்கும். அவைகளுக்கு என்று ராத்திரியே எடுத்து வைத்த பழைய சோற்றில் ஒரு கைப்பிடி எடுத்து இறைப்பாள். அவை கொத்திக் கொண்டு ஓடும்.

‘ஏங்க.’

‘என்ன?’

‘டிரான்சிஸ்டர் வாங்கி வந்தீங்களே, ஒரு அட்டைப் பெட்டியில் போட்டு? அந்தப் பெட்டி பரண்ல இருக்கு. கொஞ்சம் எடுத்துக் கொடுக்கறீங்களா?’

‘எதுக்கு இப்போ அது?’

‘பாவம் அந்தச் சிட்டுங்க, சுத்திச் சுத்தி வருது. நேத்தெல்லாம் எங்க எங்க இருந்தோ சணல், காய்ந்த புல்லு, செத்தை, குச்சின்னு எதை எதையோ பொறுக்கிட்டு வந்து பரண்ல சேர்த்து வைக்குதுங்க… நாமே அதுங்களுக்கு ஒரு கூண்டு செஞ்சு கொடுத்துட்டா என்ன? அதுக்குத்தான்.’

‘எதுக்கு?’

‘உன் தோளை பிடுச்சிட்டுத்தான் ஸ்டூல்ல நிக்கனும். வழுக்கி விட்டுடும்பா.’

‘ஐய… சீ…!’

அவளுக்கு ஒரே வெட்கம்.

"உன்னை லவ் பண்ணக் கூப்பிடலம்மா, கொஞ்சம் ஒத்தாசை பண்ணத்தான்."

பரணில், இப்போதைக்குத் தேவையில்லை என்று போட்டு வைத்திருந்த என் ஷுக்கள், சிட்டுக்களுக்கு கூண்டாகி இருந்தன. ஷுக்களின் உள்ளே நிறையப் புற்கள், குச்சிகள் என்று குவிந்திருந்தன.

எனக்கு பக்கென்றது. நூற்று ஐம்பது ரூபாய் ஷுக்கள்.

"பரவாயில்லை. அப்புறமா எடுத்துக்கலாம்" என்றாள் சுமதி.

"செருப்பு இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கு சுமதி. ஷு வை எடுக்கலாமா?"

"உஸ்.. அதைத் தொடாதீங்க. அதுங்க பயந்துடும்."

நான் அவைகளைத் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்கிற முன் ஜாக்கிரதையோடு, அந்த அட்டைப் பெட்டியை எடுத்தேன். அப்படியும் அரவம் கேட்டு, ஒரு சிட்டு சிடுக்கென்று என் காதோரம் பறந்து போய், ஜன்னல் கட்டையில் உட்கார்ந்து என்னை பார்த்தது.

அதற்குக் கோபம் வந்திருக்கக்கூடும். நியாயம்தானே! நம் வீட்டிற்குள் அன்னியன் அனுமதியின்றி வந்தால் நமக்குக் கோபம் வராதா?

அந்த அட்டைப் பெட்டியில் ஒரு பழைய ஒற்றை ரூபாய் அளவுக்குத் துளை செய்து, பாத்ரூமுக்கு எதிரில் பத்திரமாய் இருக்க வைத்தோம்.

சிட்டுகள் தங்கள் இருப்பிடத்தை அட்டைப் பெட்டிக்கு மாற்றிக் கொண்டன. அந்தச் சில நாட்கள் அவைகளின் இயக்கத்தை நான் கவனித்தேன்.

அடடா! ஆணும் பெண்ணுமாக அந்த ஜோடி தங்கள் வீட்டைத் தயார் பண்ணிக் கொள்ளும் சுறுசுறுப்பும், நேர்த்தியும், தங்கள் வீட்டுக்குள் வர இருக்கும் புதிய வரவுக்காக, தங்கள் குழந்தைகளுக்காக, அந்தப் பெற்றோர்கள் எடுத்துக் கொள்ளும் தாய்மை நலம் கனியும் அந்த அன்பு சுரக்கும் நெஞ்சங்கள் என்னை மிகவும் கிளர்த்தின. இவைகள் உயிர் சுழற்சியின் உன்னதமான வெளிப்பாடு. சிட்டுகளே! உங்களூக்கு இதை கற்றுக் கொடுப்பது யார்? இந்த உள் உணர்ச்சியைத் தூண்டியது எது?

அவை சாப்பிட்டனவா? ஓய்வு எடுத்துக் கொண்டனவா? தெரியவில்லை. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், தங்கள் சின்னஞ் சிறிய வாய்களில் ஏதேனும் புற்களை, குச்சிகளைக் கவ்விக் கொண்டு வருவதும் அவைகளைப் பெட்டிக்குள் விட்டுச் செல்வதுமாக இருந்தன. கீச்கீச் சென்று கத்திக் கொண்டே இருக்கும் சத்தம் இடையறாது கேட்டுக் கொண்டே இருந்தது.

விடுமுறை வந்தது. விடுமுறை என்றதும் குழந்தைகளுக்குத் தாத்தா வீடு தானே ஞாபகத்துக்கு வரும்? எங்கள் குழந்தையையும் தாத்தா வீட்டில் விட்டு வர நாங்கள் போயிருந்தோம். வரும்போது சுமதி, ரொம்ப நாளாகச் சொல்லிக் கொண்டிருந்த பட்டு ரோஜாச் செடியும், துளசிச் செடியும் கொண்டு வந்திருந்தாள்.

பட்டு ரோஜாக்கள் வெயில் விரும்பிகள். எவ்வளவுக் கெவ்வளவு வெயிலைத் தின்கின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு பூக்களாய் உதிர்ப்பவை. எங்கள் வீட்டில் வெயில் வரும் இடம், பாத்ரூமுக்கு முன்னும், குருவிகளின் அட்டைப் பெட்டிக்கும் கீழேயுமாகத்தான் இருந்தது.

எனவே, அட்டைப் பெட்டிக்குக் கீழேயே, ஜாடிகளில் அந்த ரோஜாக்களையும் துளசிச் செடியையும் ஜாடிகளில் நட்டு வைத்தோம்.

"சிட்டுங்க குஞ்சு பொரிச்சாச்சு" என்று ஒரு நாள் மாலை, நான் அலுவலகம் விட்டுத் திரும்பியதும் என் மூத்த மகன் சொன்னான். சிட்டுக்களின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்து எங்களுக்குச் சொல்பவன் அவன்.

"அப்பா… அந்தக் குஞ்சுகளை நீ பார்க்கணுமே! ஐயோ… செக்கச் செவேலென்று, சிவப்புத் திராட்சைப் பழம் மாதிரி இருக்கு. நான் பாத்ரூமுக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டுப் பார்த்தேன். யாரும் இல்லேன்னு தெரிஞ்சதும் அந்தக் குஞ்சுங்க வெளியே வந்து சந்து வழியாப் பாக்குதுப்பா. ஆ ஆன்னு வாயைத் திறந்துகிட்டு நிக்குது, பெரிய சிட்டுங்க வந்து அதுங்க வாயில் என்னமோ ஊட்டுதுப்பா."

சுமதி கடுகடுத்துப் போய் இருந்தாள்.

அவள் ஆசையாக ஊரிலிருந்து எடுத்து வந்து நட்ட துளசிச் செடியை சிட்டுக்கள் கொத்திப் போட்டிருந்தன. சின்னத் தளிர் அது. நான் ஜாடிக்கு அருகில் நின்று கவனித்தேன். துண்டாக இரண்டுபட்டுக் கிடந்தது அந்தத் துளசிச் செடி.

"என்ன அநியாயம்! இன்னிக்குக் காலைலதாங்க பட்டு ரோஜா பூத்துச்சு, காலைல பாத்தவ, பத்து மணிக்கு நீங்க ஆபீசுக்குப் போனதும், குளிக்கலாம்னு இங்க வந்தா பூவைக் காணோம். அத்தோட, அந்தப் பட்டு ரோஜாக் கிளையைக் கூடக் கடிச்சு வச்சிருக்கு" என்றாள் சுமதி. அவள் குரலில் ஆழ்ந்த விசனம் தொனித்தது.

பட்டு ரோஜாச் செடிகளின், அருகம்புல் மாதிரியான இலையையும் கொத்தி மொட்டையாக்கி விட்டிருந்தன சிட்டுக்கள்.

நான் ஜன்னல் கட்டையைக் கவனித்தேன். குருவிகள் மிகச் சாதுவாக கீச்கீச் என்று என்னவோ சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருந்தன. தான் செய்தது என்னவென்றே அறியாத ஜீவன்களாய், உயிரை அழித்துவிட்டு உட்கார்ந்திருந்தன அவை. மூக்கும் பலமும் மட்டுமே இருக்கிற காரணத்தால், சிட்டுக்கள் பட்டு ரோஜாக்களைக் கொன்று போட்டிருந்தன.

"என்னங்க பண்ணலாம்?"

எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அறிவால் இந்தப் பிரசினைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது.

"கூண்டை பிரிச்சு எறிஞ்சிடுவோமா?" என்றாள் சுமதி.

செய்யலாம். கூண்டைப் பிய்த்து எறிந்தால் செடிகள் பிழைக்கும், ஆனாலும் பறவைகள் என்ன பண்ணும்? இன்னும் இறகு முளைக்காத அந்தக் குஞ்சுகள் காக்கைகள், பருந்துகளுக்கு பட்சணமாகி விடுமே.

"செடியைத் தெருவில் வைக்கலாமா?"

"மாடு மேயும். பையன்கள் கை சும்மா இருக்குமா?"

சுமதிக்கு அந்த சிட்டுக்களின் மீது ஏராளமான எரிச்சல்.

"இந்தச் சனியன்களுக்குப் போய் இடம் குடுத்தேனே?" என்று காய்ந்தாள்.

"பாவம் அதுங்களுக்கு என்ன தெரியும்?"

"நீங்க சும்மா இருங்க… உங்களுக்கு ஒன்றும் தெரியாது," என்று என்னைக் கடிந்து கொண்டாள்.

நான் அமைதியாகி விட்டேன். யோசிக்கும் போது விஷயம் தெளிவாயிற்று. குருவிகள் இருக்கும் வரை எங்கள் செடி வளராது.

ஒரு நாள் என் மகன் சொன்னான்: "அப்பா, சிட்டுங்க எல்லாம் பறந்து போயிடுச்சி. கூண்டு காலி,"

நான் கூண்டை எடுத்து உதறினேன். குப்பைகள் கீழே விழுந்தன. தூசு தட்டிப் பெட்டியை பரணில் வைத்தேன்.

சுமதி மீண்டும் செடி வைக்கும் முயற்சியில் இறங்கினாள். இப்போது அவைகளுக்கு எந்த எதிரிகளும் இல்லை.

பட்டு ரோஜா, குழந்தையின் கன்னங்களைப் போல, எவ்வளவு அழகாகப் பூக்கிறது! குடிக்கும் தண்ணீரில் துளசி எப்படி மணக்கிறது!

About The Author

2 Comments

  1. aruna

    பட்டு ரோஜாவும் துளசி இலையும் சிட்டுக் குருவிகளும் மனதில் இன்னும் சண்டை போடுகின்றன

Comments are closed.