பந்தல்கால்கள் (5)

முதல் நிக்காஹ்க்குரிய ‘குத்பா’ ஓதப்பட்டது. இன்னும் பல கட்டங்கள் இருந்தன. கூட்டத்தினரில் சிலரிடம் ஒரு அலை தாவித் தாவிச் சென்றது. அந்த அலையின் வீச்சு கூட்டத்தை அசைவுறச் செய்தது. மண்டபத்தின் மையத்தில் அமராமல் அதற்கு வெளியில் நின்று கொண்டிருந்தவர்கள் சற்றே படபடப்பு கொண்டார்கள். "சாப்பாடு எந்த இடத்துல? பந்திக்கு முந்திடலாம்" என்று கேட்டபோது, கொஞ்சம் தயாள மனம் படைத்த முதியவர் "மாடியில்" என்று பதில் தந்தார். மெதுவாகக் கால்களை நகர்த்தினார்கள். மாடிப்படி இருந்த இடம் நோக்கி விரைந்தார்கள். மச்சான்மார்களுடன் அபுல்ஹஸனும் அடித்துப் பிடித்து முன்னேறினான். அவர்கள் ஏறியதும் மிக மிக விரிந்து கிடந்த சாப்பாடுக்கூடம் முழுக்க கச்சக்கச்ச என்று ஜனங்கள் மொய்த்தபடி, இடம் பிடித்து அமர பகீரதப் பிரயத்தனத்துடன் முந்துவதைப் பார்த்தார்கள். இவர்களுக்காகக் கடைசி வரிசை இருக்கவும், அதில் ஓடிப்போய் உட்கார்ந்தனர். இன்னும் மூன்று அல்லது நான்கு அடிதூரம் அவர்கள் பின் தங்கி இருந்தால் இடம் எதுவும் இல்லை என்று ஆகியிருக்கும். "நிக்க்காஹ் நேரத்துல அங்க இல்லாம துஆவும் கேக்காம இப்படி யாரோ எவரோன்னு சாப்பாட்டுக்கு பாக்க, அடிச்சிப் பிடிச்சி நாமளும் ஓடியாந்துட்டோமே!" என்று வருந்தினான் அபுல். மறுநினைப்பு அவனை, ரொம்பவும் சங்கடப்படச் செய்தது. "முதப்பந்திய விட்டுட்டா அப்புறம் சாப்பாட்டுக்கு நேரமாய்டும்னு நெனச்சி வந்தோமா? இல்லே, பிரியாணிக்கு ஆசப்பட்டு வந்தோமா?" உடல் நெளிந்தான். சாப்பாட்டுப் பந்தி நெடுக அமர்ந்திருந்த பல்வேறு ஜெண்டில்மேன்களைப் பார்த்தும் அவன் மனம் சமாதானாம் அடையாமல் இருந்தான். மாப்பிள்ளையிடம் பேச்சுக் கொடுத்தபோது அவன் சொன்னான். "பந்திக்குக் காத்திருந்தா இன்னைக்கு ராத்திரிக்குக் கூட நாம் ஊரு போயிச் சேர முடியாது"

முதல் பந்தி நடக்கும்போதே, அடுத்த பந்திக்கு உரியவர்கள் ஓடோடி வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் பின்னாலும் நிற்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் அரைகுறையாகச் சாப்பிட்டு வெளியே வந்து மணமகள் ஃபைசூனையும் அவள் கணவனையும் ஒரு சேரப் பார்க்கச் சென்றார்கள். ஆனால் அதற்குள் மாப்பிள்ளையைப் பெண்ணிடமிருந்து பிரித்து தனியே அழைத்துச் சென்று விட்டர்கள். அபுல்ஹசனுக்குப் பகீரென்றது. சரிதான்! இந்தச் சமயத்தை விட்டால் இனி எந்தக் காலம் மாப்பிள்ளையையும் பெண்ணையும் சேர்த்துப் பார்க்கப் போகிறோமோ என்ற கவலை பிடித்துக் கொண்டது. அவர்கள் தத்தமது பரிசுப் பொருட்ள்களை மணப்பெண்ணிடம் வழங்கினார்கள். அவ்வாறு அவர்கள் அதனை அளிக்கும்போது பரகத்நிஸா, யார் யாரென்று மகளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். வெட்கத்தில் உறைந்து போயிருந்த மணப்பெண்ணின் தலை நிமிர்ந்த பாடில்லை. அவளிடமிருந்து சுகந்தமான மணம் வீசுவதை மட்டும் உணர்ந்து கொள்ள முடிந்தது. பரகத்நிஸா எதிர்பாராத வகையில், அவர்கள் நால்வரும் விடைபெற முயன்றார்கள்.

"என் புள்ளைக்குத் தாலிகட்டு முடிஞ்சதும் யாரோ எவரோ மாதிரி போயிட்டு வாரோம்னு சொல்லிட்டீங்களே! இருந்து நாளைக்குப் போவலாம். வாறவங்க தங்குறதுக்குன்னு மாப்புள்ள வீட்டுக்காரங்க ஒரு இடத்தப் புடிச்சிப் போட்டிருக்காங்க" என்றாள். கண்ணீரால் பளபளத்தன கண்கள். ஒருவரையொருவர் திரும்பி பார்த்த நால்வரும், ஆளுக்கொரு காரணமாய்ச் சொல்லி விடைபெறுவதை நியாயப்படுத்தினார்கள். செவிகள் இரண்டும் ஏற்க முடியாதவை அவை. பரகத்நிஸா மிகவே தளர்ந்து விட்டாள். பெரிய சமாதனங்கள் கூறி, மணமக்கள் ஹக்கில் ஆண்டவனிடம் துஆ கேட்பதாகச் சொல்லி மனம் உருகச் செய்து விடை பெற்றார்கள். ஏக்கம் ததும்ப பரகத்நிஸா மச்சியும், சாச்சியும், பிள்ளைகளும் பார்த்திருக்க அவர்கள் கீழே இறங்கினார்கள்.

அவர்கள் இறங்கி வரும் வேளையில், அபுல்ஹஸன் ஆரம்பத்தில் பார்த்த அந்தப் பச்சை நிறச் சேலைக்காரியை தாஹிர் உரசி இடித்தவராய் நழுவினார். அந்தப் பெண்ணோ கண்டுகொள்ளாமல் வேறெங்கோ மறைந்து சென்றாள். இதை ஹக்கீம் மச்சானிடம் கேட்டுப் பார்த்தால் நல்ல வேடிக்கையாக இருக்கும். அதே சமயத்தில் ஹக்கீம் மச்சானும் அந்தக் காட்சியைப் பார்த்தார். அபுல்ஹஸன் சிரித்தபடி கேட்டான். "என்ன மச்சான் உங்க தம்பி ஒரு பொண்ண இந்த இடி இடிச்சுட்டுப் போறாரு!" என்று.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author