பாவம், அவரைப் பழிக்காதீர்கள்…!

என்னாச்சு…! வாரப் பத்திரிகை ஒண்ணைக்கூடக் காணலை…?

சொல்லியவாறே அந்த மேஜையின் மீது கிடந்த புத்தகங்களை அங்கும் இங்குமாகப் பொறுமையின்றி புரட்டி சட்டுச் சட்டென்று தூக்கிப் போட்டுக் கலைத்துக் கொண்டிருந்தார் அவர்.

வலது கையில் ஏதோவொரு பத்திரிகையை எடுத்து மடக்கி வேறு வைத்துக் கொண்டிருந்தார். அது அத்தனை முக்கியமில்லையோ என்னவோ, அல்லது கிடைக்காத மற்றதற்கு பதிலாகவோ, தேடுவது கிடைக்கும் வரையோ அல்லது புரட்டித்தான் பார்ப்போமே என்றோ, கையில் எடுத்து வைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது.

முக்கிய இதழ்களெல்லாம் படித்து முடித்து, வேறு இல்லையென்றால், நேரம் போகவில்லையென்றால் இம்மாதிரிப் படிப்பதுண்டு என்பதாகவும் கொள்ளலாம். ஆனாலும் எப்பொழுது அதைப் படிப்பார் என்று சொல்ல முடியாது. ஒரு வேளை விரும்பியது, இப்பொழுது தேடுவது கிடைத்துவிட்டால், கையில் வைத்திருக்கும் இதை வீசியெறிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அம்மாதிரி அவர் அலட்சியப்படுத்தும் புத்தகங்கள் அநேகம் அங்கிருந்தன. இவர் தன் கையில் என்னை எடுத்துப் படிப்பதே என் பாக்கியம் என்று ஏங்கிக் கிடப்பது போல்!

இவனும் அவரை அந்த நூலகத்தில் பலமுறை கவனித்திருக்கிறான். ஒரே சமயத்தில் மூன்று நான்கு புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு படிப்பதே அவரின் வழக்கமாயிருந்தது. அப்படி எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்வதில் அவருக்கு எந்த லஜ்ஜையும் இல்லை. தன் வயது, அனுபவம் பற்றியெல்லாம் இவ்வகையில் சிந்திக்க அவர் தயாராயில்லை போலும்…?

அப்படிச் செய்வதால், தான் படிப்பது போக மீதம் தன் வசமுள்ள புத்தகங்களை மற்றவர்களும் படிப்பதைத் தடுக்கிறோம் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. உணர்ந்ததாகத் தெரியவில்லையா, அல்லது பிறர் கேட்டால் பார்த்துக்கொள்ளலாம், அதுவரை டேபிளில் கிடப்பதற்குப் பதில் தன்னிடம் இருக்கட்டுமே என்று நினைத்தாரா தெரியவில்லை.

நூலக நேரம் காலை மூன்றரை மணி அளவேதான் என்றும் அதுவேதான் மற்றவர்களுக்கும் என்பதால் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தன்னைப்போலவே மற்றவர்களும் குறிப்பிட்ட சில புத்தகங்களைப் படித்து முடித்துவிட வேண்டும் என்று வருவார்கள் என்பதையெல்லாம் அவர் சிந்திக்கவில்லை என்று தெரிந்தது.

நூலகம் என்பது அமைதி காக்கும் இடம். அங்கு படிக்க வருபவர்கள் அந்தக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுத்தான் வருகிறார்கள். அமைதி காப்பது என்பது ஒரு அரிய குணம். இந்த அற்புத குணாம்சம் மனிதனின் கௌரவத்தின், கண்ணியத்தின், பண்பாட்டின் அடையாளம். இந்த அடையாளம்தான் சரி, போனால் போகிறது, அவர்தான் படித்துவிட்டுத் தரட்டுமே என்கிற விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையை அங்கு வந்து போகும் மற்றவர்களுக்கு ஏற்படுத்தியிருந்ததோ என்னவோ?

ஆனாலும், அது சரி என்று தோன்றவில்லை இவனுக்கு. பெரும்பாலும் முதிய பிரஜைகளே வருகிறார்கள் அங்கே. பெரும்பாலானவர்களால் விரும்பிப் படிக்கப்படும் இதழ்களை இவர் ஒருவரே கையில் எடுத்து வைத்துக்கொண்டால் மற்றவர் எப்படிப் பார்ப்பது? படிப்பது? தன்னால் விரும்பப்படும் பத்திரிகை மற்றவர்களாலும் விரும்பப்படக்கூடும் என்ற உணர்வு அவருக்கு வேண்டாமா? எந்தெந்த நாளில் எந்தெந்த இதழ்கள் வருகின்றன என்ற எதிர்பார்ப்பில்தானே ஆர்வமாய் இவரைப்போலவே மற்றவர்களும் அங்கு வந்து படிக்க விழைகிறார்கள்?

இது ஏன் இவருக்குத் தெரியமாட்டேனென்கிறது? மனிதனுக்கு வயசானால் மட்டும் போதுமா? அதற்கேற்ற பக்குவம் வேண்டாமா? இது ஒரு சாதாரண விஷயம். இதுகூடவா தெரியாமல் ஒருவர் நடந்து கொள்வது?

ஒருவேளை நாளைக்கு நாம் இருப்போமோ, மாட்டோமோ, இன்றைக்கே எதையும் மிச்சம் வைக்காமல் படித்து முடித்துவிடுவோம் என்று கருதுகிறாரோ?

தனக்குள் இப்படி நினைத்துச் சிரித்துக்கொண்டான் இவன்.

காணாத புத்தகங்களை எங்கே என்று கேட்பதில்தான் என்ன ஒரு அதிகாரம் அவரிடம்? அந்தக் கேட்பில் கூட ஒரு வேண்டுதல், விசாரிப்பு நிலை இல்லையே?

தொடர்ந்து அங்கே வந்து கொண்டிருப்பதால், அந்த உரிமை, தானே அவருக்கு ஏற்பட்டுப் போனதோ? அல்லது அவரே அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டாரா?

என்னைப்போன்ற ஆட்களின் தொடர் வருகையினால்தான் இந்த இடத்தில் இந்த நூலகமே இயங்கிக் கொண்டிருக்கிறதாக்கும் என்று சொல்லாமல் சொல்கிறாரோ?

ஆக, வெறுமே வயதாவது மட்டும் ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தி விடுவதில்லை! உலகாயத அனுபவங்கள் வேண்டும். பல்வேறுபட்ட மனிதர்களோடு பழகி, பேசி, செயல்புரிந்து பக்குவப்படவேண்டும். இந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில், ஒரு மனிதனுக்கு எல்லா அனுபவங்களுமா கிடைத்து விடுகின்றன?

குறிப்பிட்ட செயல்கள், இடங்கள், குறிப்பிட்ட மனிதர்கள் என்கிற குறுகிய எல்கைக்குள்தானே வாழ்க்கை விரிந்து கிடக்கிறது? இந்தச் சிறிய எல்கைக்குள்ளான அனுபவங்கள் மனிதனுக்குப் போதிய பக்குவத்தை வழங்கிவிடுகின்றனவா? இல்லையே? அப்படியானால் வேறு என்னதான் செய்வது? மனிதன் மேல்நிலைக்குச் செல்ல வேறு என்ன வழி? பரந்து விரிந்த அனுபவங்களைக் கண்டு, கேட்டு, அனுபவித்து, வாழ்ந்து முடித்த பெரியோர்கள், அறிஞர்கள் எழுதி வைத்த புத்தகங்களைப் படிப்பதும், அவற்றை உள் வாங்கிப் பக்குவப்படுவதும்தானே மனிதனை முழுமையாக்கும் விஷயம்.

அதற்குத்தானே நூலகங்கள் போன்றவை பேருதவி செய்கின்றன? அப்படியானால் அந்த இடத்தை எவ்வளவு பக்குவத்துடனும், எத்தனை கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்?

****

மேஜைக்கு இருபுறமும் வரிசைக்கு ஐந்துபேர் என்று நெருக்கமாக உட்கார்ந்து அமைதியாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். நான்குபேர் விசாலமாக உட்காரும் அளவு பெஞ்சுதான் அது. மேiஐயும் அந்த அளவு நீளமுடையதுதான்.

ஆனால் இவனும் பார்க்கிறான், தினமும் ஐந்து பேர், சமயங்களில் ஆறுபேர் என்றுகூட உட்கார்ந்து ஒருங்கிணைந்த மன உணர்வோடு ஒற்றுமையாக அங்கே படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களைப் புத்தகங்கள் மிகப்பெரிய விவேகமுள்ளவர்களாக மாற்றிவிடுகின்றன. மனிதனின் சலசலப்பைப் போக்கி அமைதியை ஏற்படுத்திவிடுகின்றன.

நூலகம் என்பது அமைதிக்கான இடம் என்று வகுக்கப்பட்டது என்றாலும், எத்தனை பேர் அதை ஒழுங்காகக் கடைபிடிக்கிறார்கள்? எத்தனைபேர் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்து கொள்கிறார்கள்?

இதோ எதிரே நின்று, தன்னை மட்டும் ஏதோ தனிப்பிறவிபோல் கருதிக் கொண்டு பரிதவித்துக் கொண்டிருக்கிறாரே? இவரே அதற்கு ஒரு உதாரணம்தான்!!

இவன் தினமும் அந்த நூலகத்திற்கு வருபவன்தான். காலையில் வந்து ஒரு அரைமணி நேரம், தவறினால் மாலையில் ஒரு மணி நேரம். அலுவலகம் முடிந்து வருகையில் இவன் வண்டி தவறாமல் நேரே அங்குதான் வந்து நிற்கும். அது என்ன பழக்க தோஷமோ, தினமும் அங்கு வரும் ஒரு குறிப்பிட்ட நபர்களின் முகம் பார்க்காமல் அவனால் வீடு செல்ல முடியாது.

வாங்க…வாங்க… என்று பரஸ்பரம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டால்தான் மனது நிம்மதிப்படுகிறது. இத்தனைக்கும் வேறு சொந்த விஷயங்களை எதுவும், யாரும், எப்பொழுதும், கலந்து கொண்டதேயில்லை. ஒருவேளை அதனால்தான் அந்த உறவு, பழக்கம், அத்தனை பலப்பட்டு நிற்கிறதோ என்னவோ? அம்மாதிரி அங்கு வருபவர் எவராலும் இன்றளவும் எந்தப் பிரச்சினையும் அந்த நூலகத்துக்கு ஏற்பட்டதில்லை. சமீபமாய் வந்து கொண்டிருக்கும் இவர்?

இத்தனை கட்டுக்கோப்பாக உள்ள ஒரு அமைதிப் பூங்காவை, கோயிலை, இப்பொழுது ஒருவர் சலனத்துக்கு ஆட்படுத்துகிறாரே? இது சரியா?

ஏறக்குறைய மேஜை மீது கிடந்த அத்தனை புத்தகங்களையும் இப்போது கலைத்துப் போட்டிருந்தார் அவர். வார இதழ்கள், மாத இதழ்கள், பலரால் விடாமல் படிக்கப்படுபவை, எப்பொழுதாவது படிக்கப்படுபவை, எடுத்துப் புரட்டப்படுபவை என்று அந்த நூலகருக்குப் பழக்கப்பட்டிருக்கும் போலும்…தரம் பிரித்து அடுக்கி வைத்திருந்தார் அவர். யாராலும் தொடப்படாதவற்றைத் தேவையில்லாமல் ஏன் இஷ்டத்துக்குக் கலைத்துப் போட வேண்டும்? அதுபாட்டுக்கு அடுக்கிய மேனிக்கே இருந்துவிட்டுப் போகிறது? என்ன குடிமுழுகிப் போகிறது? இது நூலகரின் அக்கறையாக இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாமும் அந்தலை சந்தலையாகக் கிடக்கின்றனவே?

என்னங்க ஒரு புஸ்தகத்தைக்கூடக் காணோம்? பொறுமை கழன்று கேட்டார் அவர்.

இவன் அவரையே பார்த்தான். அவர் முகத்தில் அத்தனை சலிப்பு, கோபம். காற்று வரும் என்று ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தான் இவன். அங்கிருந்து பார்ப்பதற்கு அவர் முகம் நன்றாகத் தெரிந்தது. தலைக்கு சாயம் பூசியிருந்தார் அவர். மீசைக்கும் சாயம் பூசப்பட்டு இப்பொழுது பாதி வெளுத்துக் கிடந்தது. சட்டையை பேன்ட்டுக்குள் விட்டு இன் பண்ணியிருந்தார். வெளியே கருப்புக்கலர் பெல்ட் பளபளத்தது. பார்ப்பதற்கு ஆபீசர் போன்ற தோரணை தெரிந்தது. ஆபீசராகவே இருக்கட்டுமே, யார் வேண்டாம் என்றது? ஆனால் இது பொது இடமாயிற்றே? இங்கு படிக்க வரும் வாசகர் என்றுதானே பெயர்?

உங்களுக்கு என்ன புத்தகம் வேணும்? எல்லாந்தான் இருக்குல்ல? – நூலகரின் உதவியாளர் கேட்டார்.

எங்க இருக்கு? விகடன், கல்கி, குமுதம் எதுவுமே கண்ணுல படமாட்டேங்குது? நானும் அப்பேயிருந்து தேடிட்டிருக்கேன்? மந்த்லி மேகஸினைக் கூடக் காணலை. ஏதேதோ வேண்டாததெல்லாம் கெடக்கு… வேணுங்கிறது ஒண்ணைக் கூடக் காணலை?

இப்பொழுது எல்லோருடைய பார்வையும் அவர் பக்கம் திரும்பியிருந்தது.

அந்தா படிச்சிட்டிருக்காருல்ல விகடன்… இல்லேங்கிறீங்க? அதப்போல பாருங்க சார்… இருக்கும்… எங்க போகுது… தெனமும் நீங்கல்லாம்தான் வர்றீங்க…. படிக்கிறீங்க… போறீங்க…. அப்புறமும் இப்படிக் கேட்குறீங்களே?

இப்பொழுது கூட யார் யார் என்னென்ன புத்தகம் படிக்கிறார்கள் என்று கூட ஒரு பார்வை பார்க்க அவர் தயாராயில்லை. என்ன லைப்ரரி நடத்துறீங்க? என்பது போலிருந்தது அவரது செயல்.

அப்போ நாங்க எடுத்துட்டுப் போறோம்னு சொல்றீங்களா? என்ன பேசுறீங்க நீங்க? -அவர் கேட்டார்.

நீங்க என்ன சார், இப்படி விதண்டாவாதம் பேசுறீங்க? தெனமும்தான பார்த்துட்டிருக்கீங்கன்னு சொல்ல வந்தேன்…

பார்த்துட்டிருந்தா? கண்ணுல படாமத்தான சொல்றேன்! அதனாலதான கேட்கிறேன்? எடுத்துத் தரலாமுல்ல?

இப்பொழுது ஒருவர் வாயைத் திறந்தார்.

சார்… நாங்கள்லாம், நாங்களாத்தான் பார்த்து எடுத்துக்கிறோம். லைப்ரரில வாங்கிப் போடத்தான் செய்வாங்க… நாமதான் எடுத்துப் படிக்கணும்

இவர் அவரையே முறைத்தார். எல்லோர் பார்வையும் ஏறக்குறைய இப்போது அவரிடமே நிலைத்திருந்தது. மீண்டும் அவர் அதையே சொன்னார்.

எந்தப் புத்தகமும் இல்லை. ஏதேதோ வேண்டாததெல்லாம் கெடக்கு..- நான் தேடித் தவித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அமைதியாகப் படிப்பதா? என்பது போலிருந்தது அவரின் பேச்சு.

சார், வேண்டாதது, அது இதுன்னுல்லாம் பேசாதீங்க… எல்லாமும் வேணுங்கிறதுதான்… உங்களுக்கு வேணாங்கிறது, மத்தவங்களுக்கு வேணுங்கிறதா இருக்கும். அது வந்திருச்சா, இது வந்திருச்சான்னு ஓடி ஓடி வந்து பார்த்துப் படிக்கிறவங்களெல்லாம் இருக்காங்க நிறைய… அதைத் தெரிஞ்சிக்குங்க. சும்மாவானும் வெள்ளைப் பேப்பரைக் கருப்பாக்குறது இல்லை யாரும்… எத்தனை பேர் நன்கொடையாக் கொண்டுவந்து போடுறாங்க தெரியுமா? தாங்களும் படிச்சு, மத்தவங்களும் பயனடையட்டும்னு? அப்போ அதெல்லாம் வேஸ்ட்டா? வேண்டாததா? அநாவசியமாப் பேசுறீங்களே?

அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்த உதவியாளர் அப்படிச் சொன்னபோது, தள்ளியிருந்த இருக்கையில் இருந்து ஒருவர் எழுந்து வந்தார்.

சார்… இந்தாங்க இந்த வாரக் குமுதம்… பிடிங்க… படிங்க… – தந்தி வாக்கியம்போல் சொல்லி அவர் கையில் புத்தகத்தை அழுத்தினார். எதையோ தேடுபவர்போல் சுற்று முற்றும் குறிப்பாகப் பார்த்துவிட்டு, ஜன்னலருகே இருந்த இவனுக்கருகில் உட்கார்ந்திருந்தவரிடம், சார்… கல்கி படிச்சிட்டு இவர்ட்டக் கொடுத்திடுங்க… சரிதானா? என்று விட்டு சுற்றிலும் எல்லோரையும் ஒரு முறை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு, வேகமாக வெளியேறினார்.

சிலர் லேசாகச் சிரித்துக் கொண்டதுபோல் இருந்தது. முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லாமல், நடுவே கிடந்த ஒரு நாற்காலியைச் சத்தம் எழ எடுத்து ஒரு காற்றாடிக்கு அருகில் போட்டுக்கொண்டு, மடியில் ரெண்டு புத்தகங்களைத் தாங்கலாக வைத்துக் கொண்டு, கையில் வைத்திருந்ததை விரித்துப் படிக்கலானார் அவர்.

ஒரே சமயத்துல நாலஞ்சை எடுத்து வச்சிக்கிட்டீங்கன்னா, மத்தவங்களும் படிக்க வேண்டாமா? ஒண்ணொண்ணாப் படிங்க..- நூலகர் பலமுறை சொல்லி ஓய்ந்திருந்தார். எப்படியோ, உடன் படிப்பவர்கள் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் சரி என்று.

அவரின் இத்தனை பேச்சுக்கும் அவரை யாரும் எதுவும் சொல்லாததுதான் ஆச்சரியம். அந்த இடத்தின் அமைதி கடந்த அரைமணி நேரத்திற்கும் மேலாகக் கெட்டிருந்தது. இங்கே இத்தனை பேருக்கு இருக்கும் பொறுமையும், நிதானமும், பொறுப்புணர்ச்சியும் அவருக்கில்லை. தன் நேரம், தன் படிப்பு, தன் திருப்தி, இவைதான் அவருக்கு முக்கியமாயிருந்தன. அவரின் இருப்புக்கு இவைதான் அடையாளம் என்று கொள்ளலாமா?

பல நாட்களாக, பல மாதங்களாக, நூலகப் பொது விதியான அமைதி என்ற மையப்புள்ளியை ஏற்றுக்கொண்டு, விடாமல் அங்கு வந்து போய்க் கொண்டிருக்கக்கூடிய பலருக்கு இருக்கும் பலரிடமும் அந்த இடத்திற்கேயுரிய நற்குணங்கள் அவரிடம் மட்டும் கிஞ்சித்தும் தென்படவில்லை.

மனிதர்கள் பல்வேறு நிறத்தினர்கள்தான். எனினும் நல்லொழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், அமைதியாக நின்று உணர்த்தும் நூலகம் என்ற அந்தக் கோயில் அவருக்கு மட்டும் ஏன் அதை உணர்த்தவில்லை?

ஒரு சாதாரண விஷயத்தை இந்த அளவுக்குச் சிந்திக்க வைத்து விட்டாரே?

ஆனாலும் ஏனோ அவர் மீது இவனுக்குக் கோபம் எழவில்லை!

ஒன்றுமறியாத ஒரு குழந்தையின் நடவடிக்கைகளாக இதைக் கொள்ளலாமா? ஏன் அவ்வாறு இதை எடுத்துக் கொள்ளக்கூடாது? அன்றாட வாழ்க்கையில் யாரையாவது, எப்பொழுதாவது இப்படி வித்தியாசமான இடைஞ்சலாகச் சந்திக்கத்தானே செய்கிறோம்? போனால் போகட்டும் என்று விட்டுவிடத்தானே செய்கிறோம்?

எல்லோரும் மீண்டும் இப்பொழுது அவரவர் படிப்பினில் ஆழ்ந்திருந்தனர். அந்த அறையினில் அமைதி முழுவதுமாகப் பரவியிருந்தது.

அந்தப் பல புத்தகக்காரர் இப்பொழுது எங்கும் திரும்பாமல், தான் படிக்கும் (படிக்கிறார் என்றுதான் கொள்ள வேண்டும்!) ஒரு புத்தகத்தினுள் முகத்தைப் புதைத்துக்கொண்டு, யாருக்கும் தன் மூஞ்சி தெரியாமல் தன்னை மறைத்துக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் ஆன பொழுதில், இருக்கையை விட்டு எழுந்து, அந்தக் கல்கிப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தவர் அருகில் போய்ச் சட்டென அமர்ந்துகொண்டு சொன்னார்.

"சீக்கிரம் கொடுங்க… நேரமாச்சு…!!! "

About The Author

1 Comment

  1. Dr. S. Subramanian

    What is this piece supposed to be? Humorous? serious? story? observation? I am amazed such pieces find a place here.

Comments are closed.