பெண் பால் (3)

"அவிய யாராயிருந்தா ஒனக்கென்ன புள்ள? கெளம்பு. பெறவு தேரஞ் செல்லச் செல்ல எல்லா பஸ்ஸயும் நிறுத்திப் புடுவாக"

தன்னுடைய கையைப் பற்றியிழுத்த கணவனைப் பொருட்படுத்தாது அந்த காமராக் காரனை எதிர் கொண்டாள், இன்னுங்கொஞ்சம் தைரியமாக.

"அண்ணாச்சி நா ஒங்கட்ட ஒரு சாமாசாரம் பேசணும்."

அவன் அவளை அக்கறையாய்ப் பார்த்தான். "என்ட்டயா. என்ன விஷயம்மா? எதாவது இன்ட்ரஸ்ட்டிங் ஸ்டோரி வச்சிருக்கியா?"

லேசாய்ச் சிரித்தான் அவன்.

"எளா, இப்ப நீ வாறியா, நாம் போவட்டா?" மாடசாமி அவளை மிரட்டிப் பார்த்தான்.

காமராக்காரன் மாடசாமியை மடக்கினான்.

"கொஞ்சம் இருங்கண்ணாச்சி. அந்தம்மா என்னமோ சொல்ல வருது. சொல்லட்டுமே. நீ சொல்லும்மா. சீக்கிரஞ் சொல்லு."

குரலில் தெம்பை வரவழைத்துக் கொண்டு சிவகாமி பேசினாள்.

"அண்ணாச்சி, எங்க ஊர்ல ஒரு அக்கரமம் நடந்துட்டிருக்கு. பொறந்த பொட்டப்புள்ளகளயெல்லாம் கள்ளிப் பாலக் குடுத்துக் கொல்லுதாவ."

எல்லாக் கண்களும் சிவகாமியின் மேலே. அங்கேயிருந்த எல்லோருக்கும் சுவாரஸ்யம் தட்டியது, காமராக்காரனைத் தவிர. அவன் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான், "இது ரொம்பப் பழைய ஸ்டோரிம்மா. ஏற்கனவே வேற பத்திரிகையில வந்திருச்சி. வேறே ஏதாச்சும் விசேஷம் உண்டா ஒங்க ஊர்ல?"

சிவகாமிக்கு சப்பென்று ஆகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கையை முழுமையாய் இழந்துவிட மனசில்லை.

"என்னண்ணாச்சி அவ்ளோ சுளுவாச் சொல்லிப் பிட்டீய! எம்புள்ளயக் கொல்ல வாராக அண்ணாச்சி. அதான். பயந்துக்கிட்டு நாம் பொறந்த வூட்டுக்குப் பொறப்பட்டேன்."

"ஒம் புள்ளயக் கொல்ல வாறாகளா, யாரது கொல்ல வாறது?"

இந்தக் கட்டத்தில் அவளுடைய காலை மிதித்துக் குறிப்பறிவித்தான் மாடசாமி.

சிவகாமி சமாளித்தாள்.

"அது வந்து, தெரிஞ்ச பொம்பளதான். பக்கத்து ஊர்க்காரப் பொம்பள."

"கொல்ல வந்ததாகதான, கொல்லலியே?"

"அப்ப உசுரு போனப் பெறவுதா நீங்கக் காப்பாத்த வருவியளாக்கும்?"

"காப்பாத்தறது பத்திரிகைக்காரன் வேலயில்லம்மா. நீங்க போலிஸ் ஸ்டேஷன்ல போய்க் கம்ப்ளய்ன்ட் குடுங்க"

பத்திரிகைக்காரன் சொல்ல விட்டுப் போனதை இன்னொருவன் சொன்னான்.

"போலீஸ் ஸ்டேஷன் பக்கம் இன்னிக்கிப் போயிராதீக. போலீஸ்காரன் ஒவ்வொர்த்தனும் கையில லத்தியக் கொண்டுக் கிட்டு எவனச் சாத்தலாம்னு கோட்டி புடிச்சி அலயுதான்."

சிவகாமிக்குள்ளே சின்னதாய்த் துளிர்த்த ஒரு நம்பிக்கையும் தகர்ந்து போனது.

"சொல்லி முடிச்சாச்சில்லா, கெளம்பு" என்று மாடசாமி அவளை நெட்டித் தள்ளினான்.

"அண்ணாச்சி. கொஞ்சம் இருங்க. ஒங்கபேரு என்ன அண்ணாச்சி?"

பத்திரிகைக்காரன் கேட்டதற்கு மாடசாமி நின்று தன்னுடைய பெயரைச் சொன்னான்.

"மாடசாமியண்ணாச்சி. ஒங்க ஊர்ல போன் இருக்கா?"

"அங்ஙன ஏதுங்கய்யா போன். அபிசேகப்பட்டிக்கித்தா வரணும்."

"படிக்கத் தெரியுமா?"

"அஞ்சாப்பு படிச்சிருக்கேங்கய்யா. இவ என்ன விட சாஸ்தி படிச்சிருக்கா. எதுக்குக் கேக்கிய?"

"ஒண்ணுமில்ல, இந்தக் கார்ட வச்சிக்கிருங்க. எதாச்சும் சமாசாரம் நடந்தா எனக்கு போன் பண்ணுங்க. நாங்க வந்து போட்டோ எடுப்போம். ஒங்க பேரு படமெல்லாம் பத்திரிகையில வரும். அப்ப நாங் கெளம்பறேன். மெட்ராஸ்க்கு ஸ்டோரி அனுப்பணும்."

அவனை வழிமறித்து, அந்தக் காமராவைப் பிடுங்கி அதைக்கொண்டு அவன் மண்டையைப் பிளக்க வேண்டுமென்றிருந்தது சிவகாமிக்கு. அவன் சொன்னதன் உள்ளர்த்தம் உறைத்தபோது ரத்தம் உறைந்தது.

இனி செய்வது என்ன என்று தெரியவில்லை. தெய்வத்தில் நம்பிக்கை வைத்து, கடவுளை உச்சரித்துக் கொண்டே கணவன் பின்னால் நடந்தாள், குழந்தையை இறுக அணைத்தபடி.

அபிஷேகப்பட்டி விலக்கு வழியாய்ப் போகிற பஸ் கிளம்பத் தயாராய் இருந்தது.

மெய்ன் ரோடில் இறங்கி கிராமத்தைப் பார்க்க நடந்த போது சூரிய வெளிச்சம் மயங்க ஆரம்பித்திருந்தது.

எந்த உறுத்தலுமில்லாமல், ஒரு பீடியைப் பற்ற வைத்து இழுத்தபடி மாடசாமி முன்னே நடக்க, ‘கடவுளே, கடவுளே’ என்கிற ஜெபத்தோடு அவனைப் பின் தொடர்ந்தாள் சிவகாமி.

குடிசையை அடைந்த போது, சாத்திவிட்டுப் போன கதவு கொஞ்சம் விலகியிருப்பது புலப்பட்டது.

‘ஆத்தா வந்திருக்கும்’ என்ற ரெண்டே வார்த்தைகளில் இவளுக்கொரு கிலியைக் கொடுத்து விட்டு, கதவை மெல்லத் தள்ளித் திறந்து உள்ளே பார்வையைச் செலுத்தினாள் மாடசாமி.

பிறகு, இவளைப் பார்க்கத் திரும்பினான்.

"ஆத்தா அசந்து தூங்குது. சத்தங்கித்தம் போடாம உள்ள போய் இரி. புள்ள அளாமப் பாத்துக்க, ஆத்தாத் தூங்கங் கெட்ரப் போவுது. நா ஓட வரக்யும் போய்ட்டு வந்திருதேன்."

திரும்பவும் ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு மாடசாமி ஓடையை நோக்கி எட்டி நடந்தான்.

(அடுத்த இதழில் முடியும்)

(குமுதம், 15.10.2001)“

About The Author