பொங்கல் ரிலீஸ் (1)

நரி மொகத்துல முழிச்சா நமக்கு அதிர்ஷ்டம். புலி மொகத்துல முழிச்சா?
புலிக்கு அதிர்ஷ்டம்.

எப்போதோ ஒரு பழைய கருப்பு வெள்ளைப் படத்தில் வந்த இந்த ஜோக் செந்திலுக்கு ரொம்பப் பிடித்துப்போன ஒன்று.

நரி மொகமும் புலி மொகமும் சரி, எருமை மாட்டு மொகத்துல முழிச்சா? என்று செந்தில் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். இவன் தினமும் முழிப்பது எருமை மாட்டின் முகத்தில்தான். இதுவரை இவனுக்கோ அல்லது அந்த எருமை மாட்டுக்கோ அதிர்ஷ்டம் அடிக்கவில்ல. இதுவரை என்றால், நேற்றுவரை.

இன்றைக்குக் காலையில், அலுமினியச் சொம்பில் தண்ணி மொண்டு கொண்டு, குடிசை வாசலில் வைத்துப் பல்லு விளக்கிக் கொண்டிருந்தபோது, மேலே, ரோடிலிருந்து யாரோ இவனைக் கை தட்டிக் கூப்பிடுகிற மாதிரி இருந்தது.

கூவம் மகாநதியின் உபநதிகளில் ஒன்றின் கரையோரப் பள்ளத்தாக்கிலிருந்தது செந்திலுடைய குடிசை. அந்தச் சேரிப் பகுதியில் இந்தக் குடிசைக்குப் பல தனித்தன்மைகள் உண்டு. செந்திலுடைய நயினா ஆறு வருஷங்களுக்கு முன்பு வடிவமைத்த இந்தக் குடிசைதான் அந்தப் பகுதியிலேயே ஒரே பாத் அட்டாச்டு குடிசை. கேபிள் டி.வி. கனக்க்ஷன் உள்ள ஒரே குடிசை.

இதையெல்லாம் விட முக்கியமான சிறப்பு, பள்ளிக்கூடத்தை எட்டியே பார்க்காத பிள்ளைகள் உற்பத்தியாகிக் கொண்டிருக்கிற இந்தச் சேரியில், ப்ளஸ் ட்டூ முடித்து, காலேஜுக்குப் போய்க் கொண்டிருக்கிற ஒரு சுரிதார்ப் பொண்ணு வசிக்கிறது இந்தக் குடிசயில்தான்.

மீனாட்சி. செந்திலுடைய ஒரே செல்லத் தங்கச்சி.

ஐயயோ மறந்தே போனேனே, மேலே ரோடிலிருந்து ஒரு ஆள் செந்திலைக் கை தட்டிக் கூப்பிட்டானில்லயா?

ஆமாம் கூப்பிட்டான்.

வாயிலிருந்த தண்ணியக் கொப்பளித்துவிட்டு செந்தில் அவனைத் திரும்பிப் பார்த்தான். அந்த ஆள் செந்திலை மேலே வரச்சொல்லி செய்கை செய்யவும், செந்தில் போனான்.

"ஏம்ப்பா, இந்த எருமை மாடெல்லாம் யாருது?"

"எங்கள்துதான் ஏன், பால் வேணுமா?"

"பால் வேணாம்ப்பா, எருமையே வேணும்."

"அதுக்கு எங்க நயினாவைக் கேக்கணும். நயினா ஊர்ல இல்ல."

"வெலைக்கி இல்லப்பா. வாடகைக்கித்தான் வேணும்."

"வாடகைக்கா? அப்படியெல்லாம் தர்றதில்லீங்க."

டீலை முறித்துக்கொண்டு செந்தில் திரும்பி நடக்க முற்பட்டபோது அந்த ஆள் அவசரமாய்த் தடுத்தான்.

"தம்பி தம்பி, கொஞ்சம் நில்லு. என்ன ஏன்னு வெவரங் கேக்காம போய்க்கினே இருந்தா எப்படி? நா ஒரு சினிமா அஸிஸ்ட்டன்ட் டைரக்டர் தம்பி. இன்னிக்கி ஷூட்டிங்க்கு ஒரு எருமை மாடு வேணும். ஏற்கனவே ஏற்பாடு பண்ணி வச்சிருந்த சப்ளையர் திடீர்னு ஸ்ட்ரைக் பண்ணிட்டான். எருமை மாடு இருந்தாத்தான் இன்னிக்கி ஷூட்டிங். ஒம் மாட்டக் கொஞ்சம் கொண்டு வா தம்பி. மூணு அவர்தான் கால்ஷீட்."

"நம்ம மாடு ரொம்ப பிசியாக் கீது சார், ஒரு பத்து நாளக்கிக் கால்சீட் கெடைக்காது."

"ஐயோ, அப்படிச் சொன்னா எப்படி தம்பி. பொங்கலுக்கு படத்த ரிலீஸ் பண்ணனும்."

"அப்ப இப்படி வச்சுக்கலாம்."

"எப்படி வச்சிக்கலாம் சொல்லு. நீ சொல்ற மாதிரியே செஞ்சிருவோம். சொல்லு"

"படத்த மாட்டுப் பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுவோம். அப்பத்தான் நம்ம மாடு சந்தோசமா நடிக்கும்."

"ஆஹா, சூப்பர் ஐடியால்ல! ஒம்மாடு மட்டுமா சந்தோஷப் படும்? மாட்டுப் பொங்கலுக்குப் படம் ரிலீஸாச்சுன்னா தமிழ்நாட்டு மாடுகள்ளாம் கூட்டங் கூட்டமாப் படம் பாக்க வருமே! ஒனக்கும் எனக்கும் இது புரியுது தம்பி, ஆனா இந்த ப்ரடியூஸர் ஒரு மோசமான மனித நேயர். மனுஷ ஜென்மங்களுக்காக மட்டுமே படமெடுக்கறவர். அதனால பொங்கலுக்குத்தான் ரிலீஸ் பண்ணனும்னு பிடிவாதம் பிடிப்பார். ஆனா, ஒன்னோட மாடு கலைக்கு சேவை செய்யப் போகுதே, அத நெனச்சுப் பார். நூறு ரூவா வாங்கித் தாறேன். ப்ளீஸ். ஓக்கே சொல்லு தம்பி."

செந்தில் சில விநாடிகள் யோசித்துவிட்டு ஓக்கே என்றான். எருமையைக் கூட்டிக்கொண்டு எங்கே வர வேண்டுமென்று கேட்டதற்கு அஸிஸ்ட்டன்ட் டைரக்டர் ஒரு கல்லூரியின் பெயரைச் சொன்னார். காலேஜ் கதை, கல்லூரி வளாகத்தில் படப்பிடிப்பு என்றார். பத்து மணிக்கு லொகேஷனில் இருக்க வேண்டுமென்றார்.

காலேஜ் கதை என்றதும் செந்திலுக்கு மீனாட்சியின் நினப்பு வந்தது. இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை. காலேஜ் கிடையாது. ஷூட்டிங் பார்க்க மீனாவைக் கூட்டிக் கொண்டு போனாலென்ன?

தங்கையை எழுப்பி, விஷயத்தைச் சொன்னவுடன், அந்தக் காலேஜா? வேணாண்ணா, எங்க காலேஜுக்கும் அந்தக் காலேஜுக்கும் புடிக்காது என்று திரும்பவும் படுத்துக் கொண்டாள்.

அவளை சமாதானப் படுத்தி, தயார்ப்படுத்தி, பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு செந்தில் எருமை மாட்டோடு நடந்தான்.

ஷூட்டிங் லொகேஷனில் எருமை மாட்டுக்கு எக்கச்சக்க வரவேற்பு. ப்ரடியூசர், டைரக்டர், உதவி டைரக்டர்கள், கேமராமேன், கதாநாயகன், எக்ஸ்ட்ராக்கள் எல்லாரும் மாட்டைப் பார்த்து முகம் மலர்ந்தார்கள்.

கதாநாயகி மட்டும் சலித்துக் கொண்டாள். "இந்த எருமை மேல ஏறி நா ரைடு பண்ணனுமாக்கும்? என்ன கஷ்ட காலம்டா சாமி!"

டைரக்டர் அவளை அநாயாசமாய் மடக்கினார். "இந்த ஷாட்டுக்கு நீங்க ஒத்துக்கிட்டதனாலதான் மேடம், ஒங்களை இந்தப் படத்துல புக்கே பண்ணியிருக்கோம்."

கதாநாயகி டைரக்டர ஒரு சிணுங்கல் பார்வை பார்த்தாள். பிறகு சிணுங்கினாள்.

"இந்த மாட்டைக் குளுப்பாட்டியாவது விடுங்க சார், ஸச் ய டர்ட்டி திங்!"

டைரக்டர் செந்திலைப் பார்த்துக் கண்ணடித்தார். "தம்பி, மாட்டக் குளுப்பாட்டித்தானேப்பா கூட்டிட்டு வந்திருக்க?"

"ஓ, ஜோராக் குளிப்பாட்டி பவுடர் போட்டு இட்டாந்திருக்கேன் சார்" என்று குறிப்பறிந்து ஒத்து ஓதினான் செந்தில்.

தன்னப் பார்த்து சிநேகபூர்வமாய்க் கண்ணடித்த டைரக்டரோடு ஓர் அந்நியோன்யம் ஏற்பட்டு விட்டதை உணர்ந்த செந்தில், அவரை நெருங்கிப் பேச்சுக் கொடுத்தான்.

"நம்ம மாட்டுக்கு நல்லா நடிப்பு சொல்லிக் குடுங்க சார்."

"ஜமாச்சிருவோம் தம்பி, கவலயேப்படாத."

"அதோ அங்க நின்னுக்கினுக்கீறது நம்ம ஸிஷ்டர் சார்."

"ஷூட்டிங் பாக்கக் கூட்டிக்கிட்டு வந்தியா? வெரிகுட்."

"சார், படம் ரிலீஸ் அன்னிக்கி நமக்கு ப்ரீ டிக்கட் குடுப்பீங்களா சார்?"

"ஒனக்குக் குடுக்காம யாருக்குக் குடுக்கப் போறேன் தம்பி! பொங்கலண்ணிக்கி ஜோராப் படம் பாக்கலாம். ரெண்டு டிக்கட் தரச் சொல்றேன்.”

“மூணு டிக்கட்டா குடுங்க சார். நம்ம ஸிஷ்டரும் படம் பாக்க ஆசைப்படும்."

மூணாவது டிக்கட் ஸிஷ்டருக்கு என்றால், ரெண்டாவது யாருக்கு என்பது உறைத்தபோது டைரக்டருக்கு சிரிப்போ சிரிப்பு. சிரிப்புடனேயே குதூகலமான மூடில் வேலையை ஆரம்பித்தார் டைரக்டர்.

கல்லூரி மாணவர்களின் ராகிங் ஸீன் அது. கதாநாயகனும் அவனுடைய நண்பர்களும், காரில் வந்து இறங்குகிற பணக்கார மாணவியான கதாநாயகியை ராகிங் செய்கிறார்கள். ராகிங்கின் ஒரு அம்சம், இந்த எருமை மாட்டுச் சவாரி. கல்லூரியின் முன்புறத் திறந்தவெளிதான் களம்.

துணை நடிக நடிகைகளுக்கெல்லாம் அவர்களுடைய ரோல் சொல்லித் தரப்பட்டு, அவரவருடய இடத்தில் உட்கார்த்தி, நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தத் துணை நடிகைகளைப் பார்க்கையில் செந்திலுக்குத் தோன்றியது, இந்த மூஞ்சிகளவிட நம்மத் தங்கச்சி மூஞ்சி எவ்வளவோ பரவாயில்லயே என்று. ஏன், மேக்கப் போட்டால் மீனா, இந்தக் கதாநாயகியவிடக் கூட ஒரு ஆங்கிளில் அழகாயிருப்பாள்.

டைரக்டர் பிஸியாகிவிட்டார். இப்போது அவரை இடை மறிப்பது நாகரீகமில்ல என்பது செந்திலுக்குப் புரிந்தது. காலையில் வந்த உதவி டைரக்டரிடம் செந்தில் போனான்.

சார் நம்ம ஸிஷ்டர் ஷூட்டிங் பாக்க வந்துக்கீது சார் என்றான். அதுக்கென்ன என்றார் உடனே.

"நம்ம ஸிஷ்டர் காலேஜ்ல படிக்கிது சார்."

"சரிப்பா, அதுக்கென்ன இப்ப?"

"இந்த எக்ஷ்ட்ராவோட எக்ஷ்ட்ராவா நம்ம ஸிஷ்டருக்கும் ஒரு சான்ஸ் குடுங்க சார்."

"அது சரி, ஒன் எருமை மாட்டுக்குச் சான்ஸ் கெடச்சதே பெரிசு. இப்ப ஒன் ஸிஷ்டருக்கு வேற சான்ஸ் குடுக்கணுமாக்கும்!"

தங்கைக்கு சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்டது செந்திலுக்கு ரொம்ப ஏமாற்றமாய்ப் போய்விட்டது. தன்னுடய ஏமாற்றத்தை ஒரு முணுமுணுப்பாய் வெளிப்படுத்தினான்.

"அது சரி, காத்தால எருமை மாட்டைத் தேடிக்கினு நீ வந்த. இப்ப வேல ஆய்ப்போச்சுல்ல. நீ தெனாவட்டாத்தாம் பேசுவ."

(மீதி அடுத்த இதழில்)

About The Author