மறுபக்கம்

வள் விழித்துக்கொண்டுதான் இருந்தாள்.

ஒவ்வொரு குனிவிற்குப் பின்னும் ஒரு நிமிர்தல் இருக்கிறது என்று நம்புகிறவள் அவள். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் அவளுக்கு அமைந்தவன் அப்படி இல்லை. சின்னச் சின்ன இடையூறுகளுக்கும் சஞ்சலப்படுகின்றவன். வாழ்வின் சகல முன்னேற்றங்களையும் வாய் வார்த்தைகளிலும், பகல் கனவுகளிலும் அடைந்துக் கொண்டிருந்தான்.

கணவனை வெளிப்படையாய் விமர்சிப்பது வேண்டுமானால், பாரத தர்மத்திற்கு விரோதமானதாய் இருக்கலாம். கோழை என்று மதிப்பிடுவது மனத்தில் நிகழும் தடை செய்ய இயலாத நினைப்பாயிற்றே!

‘கோழை’ என்று முனகினாள் மாலதி.

பக்கத்தில் படுத்திருந்த சுந்தரத்திற்கு அது கேட்டிருக்க முடியாது. உச்சக்கட்டத் தூக்கத்தில் இருந்தான். இடது பக்கம் ஒருக்களித்த நிலையில் சுவரைப் பார்த்தபடி படுத்திருந்தான். அடுத்த தலையணையில் மாலதி மேலே சுழலும் மின்விசிறியைப் பார்த்திருந்தாள்.

திடீரென விழிப்பு வந்தது. உடனே மனம் இயங்க ஆரம்பித்தது. இரவு சாப்பிடும்போது இருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடல் மனத்துக்குள் விட்டு விட்டு எதிரொலித்தது.

இருவேறுபட்ட துருவங்கள் வாழ்வில் ஒன்றாய் இணைந்த விதம் குறித்து ஆச்சர்யமும், அதன் உச்சமாய் வேதனை கலந்த பெருமூச்சும் விட்டாள்.

இவள்தான் பேச்சை ஆரம்பித்தாள். அவனுக்கு உணவு பரிமாறிய பிறகு எல்லாவற்றையும் எதிரே எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.

அவனைப் பொறுத்தவரை அன்றையக் கடமை முடிந்து விட்டது என்ற உணர்வோடு சாப்பிட்டவுடன் படுக்கைக்குப் போய் விட்டான்.

ஒன்பதரை மணிக்குக் கிளம்பி ஐந்தரைக்குத் திரும்புகிற அவளைப் பற்றி அவன் அதிகம் கவலைப்படுவதில்லை. நினைத்ததாகக் கூட இப்போது சொல்வதில்லை. மணமான புதிதில் ‘பாவம்.. உனக்குக் கூட கஷ்டம்’ என்று சொல்லி அனுசரணையுடன் நடக்கும் கணவன் தனக்கு வாய்த்த அதிர்ஷ்டத்தில் அவள் நெகிழும் போது, தன் சுயதேவையைப் பூர்த்தி செய்து கொள்வான். பிறகு அதுவும் இல்லை. சகல விதங்களிலும் ‘அவள் தனக்கானவள்’ என்ற ஆளுமையின் அதிகாரத்தில்தான் அவன் ஆட்சி நடந்தது.

"என்னங்க.. தூங்கிட்டீங்களா.."

"…."

உலுக்கினாள்.

"ஒங்களைத்தான்.."

"ம்..ஹாவ்.."

"டிபார்ட்மெண்ட் எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டேன்…"

"அப்படியா" என்பது போல ஒரு பார்வை.

அவளுக்குத் திடீரென ஒரு அலுப்பு வந்தது. ‘சே.. என்ன மனிதன் இவன். ஒரு சந்தோஷம், ஒரு வார்த்தை கன்கிராட்ஸ் என்று.. ஊஹூம்.. எதுவுமில்லை…’

அவன் பி.காம் பட்டதாரி. தேர்ட்கிளாஸ். ‘பாஸ் செய்ததே ஆச்சர்யம்’ என்று ஒரு பலவீனமான நேரத்தில் அவளிடம் சொன்னான். யாரோ சிபாரிசு செய்ய, இப்போது பார்க்கும் வேலை கிடைத்தது. மேலே படிக்கவும் முயற்சி செய்யவில்லை. படிப்பு வரவில்லை. அதை ஒரு குறையாக அவள் நினைக்கவில்லை. "போதும்… பிரமோஷன். வரப்ப வரட்டும்.. இப்படியே ரிடையர் ஆயிடுவேன்.." என்ற அவனது சோம்பேறி மனோபாவம் அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவளும் பி.காம் பட்டதாரிதான். மணமாகிய வருடமே பிடிவாதமாய்த் தபால் மூலம் எம்.காம் சேர்ந்தாள். வேலைக்குப் போய்.. வீட்டு வேலைகளையும் கவனித்து.. படிக்கவும் செய்தாள். பாஸ் செய்தாள். இப்போது அலுவலகத் தேர்விலும் தேறிவிட்டாள். இதற்காகக் குழந்தை பெற்றுக் கொள்வதைக் கூடத் தள்ளிப் போட்டனர். இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவள், பதவியிலும் பணத்திலும் அவனை மிஞ்சிவிடுவாள். பிறகு..

அவளுக்குள் கசப்பு பொங்கியது.

என்ன சொல்லி விட்டான்.

"பிரமோஷனை ஏற்றுக் கொள்ளாதே.. இல்லாவிட்டால் ரிஸைன் செய்து விடு…"

"அது எப்படி…"

"அப்படித்தான்.."

மேலே பேசாமல் திரும்பிப் படுத்து விட்டான்.

இந்த விஷயத்தில் என்று மட்டுமில்லை. எப்போதுமே அவன் பிடிவாதக்காரன். அடுத்தவருக்கும் உணர்ச்சிகள், ஆசைகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறவன். புடவை.. சினிமா… டிபன் எதுவும் அவன் சொல்வதுதான். அவன் விருப்பம்தான்.

ரு முறை அவர்கள் வீட்டிற்கு வந்திருந்த அவன் தங்கையும் அதைத்தான் சொன்னாள்.

"முரடன்.. சுயநலக்காரன்.. இப்ப மாறிட்டானா.. அனுசரிச்சுப் போறானா.." என்று கேட்டாள்.

இவள் பேசாமல் சிரித்து வைத்தாள்.

‘என்ன சொல்வது.. எதையாவது சொல்லப் போய்.. கட்டின புருஷனைப் பத்தி நாக்கூசாமே பேசறாளே..இவ ஒரு பொம்பளையா.. என்ன இருந்தாலும் அவன் எனக்கு அண்ணன்.. உடன்பிறப்பு.. நான் பேசலாம்.. இவ பேசலாமோ.. குடும்ப கௌரவம் கெடாதோ..’ என்று ஒரு முறை அவள் மற்றவர்களிடம் கூறியதாகக் கேட்டவர்களில் ஒருத்தி வந்து இவளிடம் சொல்லிவிட்டுப் போனாள்.

என்ன ஆனாலும் சரி.. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் விட்டுக் கொடுப்பதில்லை என்று கறுவிக் கொண்டாள். இப்படி நடு இரவில் தூக்கம் கெட்டு மனத்தின் முனகல்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டு.. தான் எதிர்பார்த்த, அநுராகம் இழையோடும் வாழ்வு அமையாமல் போன விதி குறித்து நொந்து கொண்டாள்.

திடீரென வயிற்றைக் குமட்டியது.

என்னது.. எழுந்து வாஷ்பேசினுக்கு அருகில் போனாள்.

மனதின் மொத்தக் கசப்பும் வெளியேறியது போன்ற உணர்வுடன் துப்பினாள். மீண்டும் ஒரு குமட்டல். உமிழ்ந்தாள். வாயைக் கொப்பளித்து விட்டுத் துண்டால் துடைத்துக்கொண்டாள். படுக்கையில் வந்து அமர்ந்தாள்.

கைவிரல்கள் தானாக மடங்கிப் பிரிய.. மனம் மெல்லக் கணக்குப் போட.. நாள் தள்ளிப் போனதை உணர்ந்தவளாய் ஒரு கணம் சிலிர்த்தாள்.

‘இந்த நேரத்தில் இது வேறயா.. இப்போது வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தது நிகழ்ந்தே விட்டதா..’

சுந்தரம் திரும்பிப் படுத்தான்.

தூங்கும்போது அவன் முகம் இன்னும் விகாரமாய்த் தெரிந்தது. இடுப்பு நழுவிய வேட்டி, கன்னத்தில் கோடு போட்ட உமிழ்நீர்.. பாதி திறந்த கண்கள்.. புஸ்..புஸ்ஸென்ற மூச்சு..

எழுப்பிச் சொல்லலாமா.. உன் வாரிசு என் வயிற்றில் என்று. என்ன சொல்வான். ‘இதுக்காக நல்லாத் தூங்கிட்டு இருந்தவனை எழுப்பணுமா..காலையில சொல்லக்கூடாதா ..’என்பானா.. ‘இது வேற சனியன்..இப்ப எதுக்கு..’ என்பானா..இவன் குணமே தனி.. எப்படி நடந்துகொள்வான் என்று யூகிக்க முடியாது.

ஆனாலும் வீம்புக்கு எழுப்பத் தோன்றியது. உலுக்கினாள்.

"என்னடி.." குரலில் லேசான சீற்றம்.

"வாமிட் வருது.."

"எடு..அதுக்கு என்னை ஏன் எழுப்பறே.."

"அதில்லீங்க..வந்து.."

வெட்கப்பட முடியவில்லை.

"நாள் தள்ளிப் போச்சு.. ஒருவேளை.. அப்படியிருக்கலாமோன்னு நினைக்கிறேன்.."

"நிஜம்மாவா.."

தலையாட்டினாள். அவன் உணர்வுகளை அவளால் ஊகிக்க முடியவில்லை. ‘பேசு ..பதில் சொல்கிறேன்..’ என்று வார்த்தைகளுடன் தயாரானாள்.

"ஆறு வருஷத்துக்கு அப்புறம்.. இப்பதான் வேளை வந்திருக்கு.." என்று ஏதோ முனகினான்.

அருகில் நகர்ந்து வந்து இவள் வயிற்றில் கையை வைத்துத் தடவினான்.

"நாளைக்கு லீவு போட்டுடு. லேடி டாக்டரைப் பார்த்துட்டு வரலாம்.."

அவன் தொட்டதில் ஒரு சிலிர்ப்பும், குரலின் எதிர்பாராத கனிவில் ஒரு திகைப்புமாய் ‘இவனுக்கு என்ன நேர்ந்தது’ என்று இவனை வெறித்தாள். ‘அபார்ஷன் செய்யச் சொல்லுவான்’ என்று நினைத்தால் இவ்வளவு சந்தோஷப்படுகிறானே!

அவள் மேல் கால்கள் படாமல் கட்டிலின் ஓரம் ஒதுங்கி அவள் படுக்க நிறைய இடம் விட்டுப் படுத்துக்கொண்டான். எதிர்பாராத ஆனந்தத்தில் தூக்கக் கலக்கம் மறைந்து, முகத்தில் புதுமலர்ச்சி தெரிந்தது. கண்களைத் திறந்து எதிரே காலண்டர் பேபியை ஒரு வினாடி பார்த்துவிட்டு மெல்லியதாய்ச் சீட்டி அடித்தான். மறுபடி கண்களை மூடிக் கொண்டான்.

இவளால் நம்ப முடியவில்லை. வேஷமா.. நிஜ சந்தோஷமா..

ஏதோ புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தது.

அவனைப் பார்த்தாள். தூங்கிவிட்டான். அதே அரைக்கண் பார்வை. கன்னத்தில் உப்புக்கோடு.. மூச்சு. ஆனால் முகத்தில் ஏதோ ஒரு தேஜஸ். தூக்கத்தில் கால் பட்டாலே முனகுகிறவன் அவளுக்காக இடம் விட்டுத் தள்ளிப் படுத்திருந்ததைப் புரிந்து கொள்ள முடியாமல்.. கட்டிலின் இந்த ஓரத்தில் நகர்ந்து படுத்துக் கொண்டாள். தூக்கம் வரும்வரை மனம் ஏதேதோ நினைப்புகளில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

தூங்கியபின் கட்டிலின் நடுவே இருவருக்கும் இடையே நிறைய இடைவெளி இருந்தது.”

About The Author