மாறும் பருவம்

வாசல் நடையில் செருப்புகளைக் கழற்றி விடும் போதே, உள்ளே அப்பாவின் பேச்சுக் குரல் கேட்டது .

"என்னப்பா, லெட்டரே வரலியேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். நீங்களே வந்துட்டீங்க" என்றான் கண்கள் மின்ன.

பாபு செல்லமாய்த் தாத்தாவின் மடியில் அமர்ந்திருந்தான். புவனா இவன் குரல் கேட்டுக் காபியுடன் வந்தாள்.

"அப்பாவுக்கு?"

"அப்பவே குடிச்சாச்சு. டிபனோட" என்றார் அப்பா, பேரனின் தலையை வருடியபடி.

"சுரேஷ் எப்படி இருக்கான்? பெங்களூர் கிளைமேட் உங்களுக்கு சூட் ஆச்சா?"

தம்பி பெங்களுருவில் இருக்கிறான். இங்கே கொஞ்ச நாட்கள், அங்கே கொஞ்சம் என்று அப்பா காலம் தள்ளுகிறார். ஒய்வு பெற்றும், அம்மாவை இழந்தும் தனிமை பாதிக்காமல் இன்னமும் மனதளவில் அதே சுறுசுறுப்பு.

"உன் கதையெல்லாம் அவன்தான் வாங்கிண்டு வருவான். எல்லா இடத்துலையும் தமிழ் புக் வராது.
மல்லேஸ்வரமோ ஜெயநகரோ ஏதோ சொல்லுவான். அங்கே போய் வாங்கிண்டு வருவான்."

"இவருக்கு பிரைஸ் கிடைச்சிருக்கு" என்றான் புவனா.

"அதான் லெட்டர்ல எழுதியிருந்தானே, அந்தக் கதை எல்லாம் பிரசுரம் ஆயிருச்சா?"

அப்பா இவனுடைய கதைகள் பிரசுரமாகும் வாரப் பத்திரிகையை முதலில் படித்து விடுவார்.

"உங்கப்பா ஓபினியன் ஒண்ணும் சொல்ல மாட்டாரோ?" என்றாள் புவனா ஒருமுறை .

"நான் எதுவும் கேட்டதில்லே"

"சொல்ற மாதிரி எதுவும் இல்லையோ என்னவோ?"

அவளுக்குப் பட்டென்று பேச்சுவரும். இவனுடைய ஒவ்வொரு கதையையும் அவள் அக்கு வேறு ஆணி வேறாக விமர்சிப்பதில் மிரண்டு, அதன் பின் படிக்கவே சொல்வதில்லை. தவறிப் படித்தாலும் விமர்சனம் கேட்பதில்லை.
x x x
"ராத்திரி சமையலுக்குக் காய் வேணும். நாம் மட்டும் தானேன்னு நான் எதுவும் வாங்கலே. அப்பளம் சுட்டுக்கலாம்னு விட்டுட்டேன்" என்றான் இவனிடம் தணிந்த குரலில்.

"எனக்குன்னு எதுவும் ஸ்பெஷலா பண்ண வேண்டாம்மா" எனறார் அப்பா.

இவன் ஷர்ட்டை மறுபடி எடுத்து மாட்டிக் கொண்டான்.

"நீங்களும் வரீங்களா?" என்றான்.

"நானும் வரேம்பா" என்றான் பாபு.

மூவருமாய்க் கிளம்பினார்கள். அன்றைய வார இதழ் காலையில் கடைக்கு வரவில்லை. இப்போது நின்று விசாரித்து வாங்கிக் கொண்டான். அவசரமாய்த் தனது கதை எதுவும் பிரசுரம் ஆகியிருக்கிறதா என்று பார்த்தான்.

"இந்த அப்பா எப்பப் பார் இப்படித்தான்" என்றான் பாபு, தாத்தாவிடம்.

அப்பா சிரித்துக் கொண்டார். இவன் முகம் சுணங்கிப் போயிருந்தது. எதிர்பார்த்த கதை இந்த வாரமும் பிரசுரம் ஆகவில்லை. திரும்பி விடுமோ?

அப்பா ஏதோ கேட்டதற்கு மனதில் வாங்காமல் பதில் சொன்னான். பாபு சாக்லேட் கேட்டதற்கு லேசாகக் கடிந்தான். மொத்ததில் கிளம்பியபொது இருந்த மனநிலை மாறி அமைதி இழந்திருந்தான்.

"கோவிலுக்குப் போயிட்டு அப்புறம் போலாமே?" என்றார் அப்பா.

"காய் பண்ணனுமே"

"பரவாயில்லே. சாப்பாடு லேட்டானா தப்பில்லே. டிபன் ஹெவியா இருக்கு"
X x x
மணல் வெளியில் – கோவில் பிராகாரத்தில் பாபு உற்சாகமாய் விளையாட, இவனும் அப்பாவும் அமர்ந்து கொண்டனர். வாங்கும் பொது இருந்த சுவாரசியம் இழந்து, மறுபடி ஒவ்வொரு பக்கமாய்ப் பிரித்துக் கொண்டிருந்தான்.

"கதை எதுவும் வரவேண்டி இருக்கா?" அப்பாவின் குரலில் மேன்மை தெரிந்தது.

"ம்… நல்ல கதை"

"என்ன தீம்?"

அப்பா இதுவரை இந்த மாதிரி கேட்டதில்லை. இவனுக்கும் லேசாய் பரபரப்பு. கொஞ்சம் கூச்சம் அப்பிய குரலில் கதையை விவரித்தான்.

"நல்லா இருக்கு. இன்னிக்கு இல்லேன்னா அடுத்த வாரம், ஏன் அப்செட் ஆகணும்?"

மனசு கொஞ்சம் கனம் குறைந்தது. சரி அடுத்த வாரம் வரும் நிச்சயம்!

"எவ்வளவு பெரிய கோவில். இல்லே?" என்றார் நிமிர்ந்து பார்த்து.

"ம்…" – இவனும் மூலஸ்தான கோபுரம், அதன் கலசம் பார்த்தான்.

"எழுதறது கூட ஒரு கலை, கோவில் கட்டற மாதிரி. கலைக் கோவில்னு சொல்லலாம், இல்லே?"

"செங்கல் அடுக்கற மாதிரி வார்த்தைகள அடுக்கணுமே" என்றான் இவன் தன் பங்குக்கு.

"ரொம்பச் சரியாச் சொன்னே. ஆனா ஒரு விஷயம் யோசிச்சியா? கோவிலோட பெருமை, நடு நயாகமா இருக்கிற மூலஸ் தானமும், அதனுள்ளே இருக்கிற முக்கியமான சுவாமியும்தான். சக்தி நவக்கிரகம் வேற சன்னதிகள் இருந்தாலும் கூட…"

‘என்ன சொல்ல வருகிறார்?’ அப்பாவைக் கூர்ந்து பார்த்தான்.

"ஒவ்வொரு எழுத்தாளனும் நிறைய எழுதறான்- செங்கல் அடுக்கற மாதிரி, இல்லைன்னு சொல்லலை. அதுவும் அவசியம். ஆனா ‘மாஸ்டர் பீசா’ ஒரு படைப்பு மூலஸ்தான ஸ்வாமி மாதிரி"

"என்ன சொல்றீங்க அப்பா?"

"நீயும் வெருங் கற்களா, கதைகளை அடுக்காம மூலஸ்தான ஸ்வாமி போல உருவாக்க முயற்சி பண்ணேன். தெய்வம் வடிக்கிற சிற்பி, சும்மா அம்மிக்கல்லா செதுக்கிகிட்டு இருந்தா அவன்கிட்டே இருக்கிற கலைக்கு என்ன மதிப்பு?"

"நான் நல்லாத்தானே எழுதறேன்?"

"இன்னும் சிறந்த படைப்புக்கு உன்னைத் தூண்டிக்கனும். சராசரிக் கதைகள் யார் வேணா எழுதலாம். ஆனா நீ உருவாக்கற கதைகள் உன்னைத் தனிப்பட்டு இனம் காண்பிக்கணும். அதுக்கு முயற்சி பண்ணேன்."

"இப்ப எழுதறது சரியில்லையா?" உள்ளுக்குள் லேசாக எதோ சீறத் தொடங்கியது.

"இதைவிட பெட்டரா எழுதணும்னு சொல்றேன். அப்ப நிச்சயமா நீ இந்த மாதிரி புத்தகம் பிரிச்சு பிரசுரமாகலைன்னு ஏங்கற தன்மை போயிடும். நிச்சயமா பிரசுரம் ஆகும்னு உறுதிவரும். வெறுமே பெயரை அச்சுல பார்க்கணும்னு எழுதற பருவம் இப்ப உனக்குத் தாண்டிப் போச்சு. இனிமே கவனத்தொட செதுக்கணும்கிற பொறுப்பு வரணும்."

பாபு குறுக்கே ஓடி வந்தான்.

"தாத்தா கதை சொல்றேன்னு சொன்னியே, முருகன் யாரோட சண்டை போட்டார்?"

அப்பா அவனை மடியில் இருத்திக் கொண்டார்.

"உன் கையில் கிடைச்சிருக்கிறது அஸ்திரம் மாதிரி – வார்த்தைகள் வெறுமே வீசறதுக்கு இல்லே. சரியான, தகுந்த எதிரி சக்தி மேல பிரயோகிக்கத்தான். புரிஞ்சுதா? அதுக்கு உன்னை மாத்திக்கோ. உன்னை வளர்த்துக்கோ!"

பாபு தாத்தாவின் முகவாயைப் பற்றித் தன் பக்கம் திருப்பிக் கொண்டான். தன் முகத்துக்கு எதிரே அப்பா விமர்சித்ததில் எரிச்சலுற்று பின் சுதாரித்து, இவன் நிமிர்ந்து யோசிக்க ஆரம்பித்தான்.

About The Author