முகங்கள் (8)

அடுத்த வாரமே சிரங்கூன் புகழ் குடும்பத்தின் எழுபத்திரண்டு வயது மூத்தவர் இறந்தார். போதோங்க் பாசிர் ஈரச்சந்தை பத்து நாட்கள் மூடப்பட்டு திறந்தது. முதல் இந்திய சார்ஸ் நோயாளியும் இறந்தார். அரசாங்கம் வசதி குறைந்தோருக்குப் பீயூபி கட்டணத்தில் இருபது வெள்ளி மானியம் வழங்குகிறது என்பது மற்றொரு முக்கியச் செய்தி. இது சிட்டியின் குடும்பத்துக்கு பேருதவியாக இருக்கும். சார்ஸின் தீவிரம் கட்டுப்பட்டது போலவே மக்களின் அறியாமையும் மெல்ல விலகியது.

"இன்னொன்னு தெரியுமா உனக்கு, வேற ஏதாவது சூடான விஷயம் கிளம்பினா சார்ஸையும் மறந்துடுவாங்க நம்ப ஆளுங்க. சார்ஸ் அன்றாட வாழ்க்கையோட அங்கமாயிடும். சார்ஸுடன் வாழப் பழகணும்னு தினசரியிலயே இப்போவே போட ஆரம்பிச்சுட்டாங்க. ‘கிட்டி’ பொம்மை வந்த புதுசுல என்ன ஆச்சு. ம்… ஜப்பானியப் பொருள்கள் மீது மோகம் கொண்ட நம்ம ஆளுங்க ராத்திரியெல்லாம் வரிசையில் நின்னு சண்டை போடாத கொறையா அந்த போக்கத்த பொம்மைய வாங்கினாங்க. அதையும் செய்தியா வெளியிட்டாங்க. சரியான ‘கியாஸு’ப்பா நம்ப சிங்கப்பூரியன்ஸ். வாங்கினதோட சரி. அதுக்கப்புறம், வீட்டுல சீந்துவாரில்லாம கெடக்கும் அது. இப்போப் பாரு, ‘கிட்டி’ கடை கடையாச் சீரழியிது, வாங்கத் தான் ஆளில்ல. தள்ளுபடி பண்ணினாலும் இப்ப வாங்கப் பொருளாதாரம் விடல்ல."

"அத்த விடுப்பா. நொவீனா எம்ஆடீ ஸ்டேஷன்ல ஏராளமான வாழ்த்து மற்றும் பாராட்டு அட்டைகள் வச்சிருக்காங்க. நிச்சயம் நீ அதப் போயி பார்க்கணும் செல்வி. நானும் இந்த ஒரே வாரத்துல உங்கிட்ட பல முறை சொல்லிட்டேன்."

எப்போதும் பேருந்தில் வரும் மெய்ஃபெங் இப்போதெல்லாம் இலகு ரயிலிலேயே வருகிறாளாம். "ஏதோ ஒரு நல்லவர் ஆரம்பித்ததைத் தொடர்ந்து மேலும் மேலும் பலர் எழுதி வைக்கிறார்கள். இதில் மருத்துவர்கள், தாதியர் மற்றும் மருத்துவ ஊழியர்களை ஊக்குவித்து அழகான சொல்லோவியங்கள் உள்ளன. அதில் எத்தனை சிறார்கள் தங்கள் கைவண்ணத்திலேயே உருவாக்கிய அட்டைகள் தெரியுமா? ஒண்ணொண்ணும் கொள்ளை அழகு. சார்ஸால் அவதிப்பட்டு, போராடிப் பிறகு குணமாகி வீடு சென்றவர்களின் உருக்கமான வார்த்தைகள் தான் பொதுமக்களிடம் செவிலியரின் சேவையின் நிதர்சனத்தை உணர்த்தப் போகிறது என்று நான் நம்புகிறேன். நான் தினமும் அதை படிக்கவே இப்போதெல்லாம் இரயிலில் தான் வருகிறேன். காலையில் உற்சாகமாக வேலையைத் தொடங்க ஒரு டானிக் மாதிரி இது மிகவும் உதவியாக இருக்கு. நிராகரிப்பையும் தீண்டாமையையும் மறக்கணும்னா நிச்சயமா இது மாதிரி உள்ள பிரகாசமான் பக்கம் தான் நம்ம கவனத்தத் திருப்பணும். இல்ல, நாம வேலை செய்யவும் முடியாது. நமக்கு ஈடுபாடும் வராது. புழுங்கித் திணறி சார்ஸில்லாமலேயே செத்துட வேண்டியது தான்."

அட, இது கூட நல்ல யோசனை தான். கொஞ்சம் நேரம் அதிகம் எடுத்தாலும், நேராகப் பேருந்திலேயே வராமல் முதலில் வேறு பேருந்தை எடுத்து ‘ரெட் ஹில்’ ரயில் நிலையம் வரை வந்து, பிறகு ரயிலில் இதற்காகவே வரலாம் போலிருக்கிறதே. நாளையிலிருந்து பத்து நிமிடம் முன்பாகவே வீட்டைவிட்டுப் புறப்பட வேண்டியது தான். ஜூன்ரோங் கொடுத்த அட்டையையும் கூட அங்கு வைக்க வேண்டும். புதிதாய் ஒரு நாளைத் தொடங்க செய்தித்தாளை விட இதுவே நல்ல உத்தி.

(முடிந்தது)

(திசைகள் டாட் காம், நவம்பர் – 2003)

(‘நியாயங்கள் பொதுவானவை’ மின்னூலிலிருந்து)

To buy the EBook, Please click here

About The Author