முதல் கால்

வருடம் : கி.பி 2071
இடம் : ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளம்
நாள் : ஆகஸ்ட் 15, இந்தியாவின் 124வது வருட சுதந்திர தினம்.

நியூஸ் பேப்பர்களும் நியூஸ் சேனல்களும் மாறி மாறி லைவ் செய்து கொண்டும், தகவல் அனுப்பிக் கொண்டும் உலகை சிறு பந்தாக செய்து கொண்டிருந்தன. சி.என்.என், பிபிசிகள் அடுத்து நடக்கவிருக்கும் சரித்திர புகழ் பெறப்போகும் தருணத்திற்காக காத்துக் கிடந்தன. சுமார் 40 வருடங்களில் இந்தியா இந்த அளவிற்கு உயருமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க முடியாது. அந்நாள், இந்தியாவின் பொன்னாள். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் செலுத்தியிருக்கும் "அக்னி யந்திரா"வை நாஸா மலைப்போடு நோக்கிக் கொண்டிருக்கிறது.

சும்மாவா? யுரேனஸ் கிரகம் என்றால் ஈரோடு, திருச்சி பக்கமா? சூரியனிலிருந்து பலகோடி ஒளி வருடங்கள் தள்ளியிருக்கும் கிரகம். அதற்கு ஆளில்லா விண்கலம் அனுப்பிபோதே வியந்த உலகம், இன்று மனிதனையும் யுரேனஸிற்கு கொண்டு செல்லவிருக்கிறதே! உலகம் வியப்பதில் வியப்பேதும் இல்லை என்றே தோன்றியது.

காமிராக்கள் பளிச்சிட்டன. ஆல்பர்ட், கிருஷ்ணகுமார், அர்விந்த் சிங், மணிநாயக் பட்டேல் – இந்த நால்வரும்தான் யுரேனஸிற்கு செல்லவிருக்கும் முதல் மனிதர்கள். புறப்படுவதற்கு முன் ஓராண்டுக்கு யுரேனஸ் கிரகநிலையிலேயே இருந்தவர்கள், கண்ணாடிக் கூண்டு வழியாக ராக்கெட்டின் முன்புற ஷட்டலுக்கு சென்றுவிட்டனர். இந்தியாவின் பெருமை, அவர்களின் கட்டைவிரலின் மூலம் உயர்த்தி காண்பிக்கப்பட்டது. கவுண்ட் டவுண் தொடங்கியது.

9 8 7 6 5 4 3 2 1 0

நெருப்பு பிழம்புகள் கீழே கக்கப்பட்டன. நியூட்டனின் மூன்றாவது விதி விசுவரூபமெடுத்து விண்ணில் சீறிப் பாயத் தொடங்கியது. சற்று நேரத்தில் பூமியின் வளிமண்டலம் தாண்டப்படவும், நால்வரும் மிதக்கத் தொடங்கினர்.

இந்தியா இன்று வல்லரசு! காரணம் 2010களில் இருந்த இளைஞர்கள் என்பது அந்த நால்வருக்கும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இவர்களும் இளைஞர்களே! அதனாலேயே அவர்கள் அனைவருக்கும் சம அதிகாரம் கொடுக்கப்பட்டு, அந்த விண்கலத்திற்குத் தலைவன் என்று ஒருவருமே நியமிக்கப்படவில்லை. இதில்தான் பிரச்சனை ஆரம்பம். அனைவருக்கும் தேவையான ஒன்று புகழ். அதாவது, யார் யுரேனஸில் கால் வைப்பது என்ற புகழ். அனைவரின் எண்ணமும் அதிலேயே இருக்க, பட்டேலின் எண்ணம் வார்த்தையாய் வெளிவந்தது. "நான் கிட்டத்தட்ட 10 வருடங்களாய் யுரேனஸை ஆராய்ந்து வருபவன். யுரேனஸின் நிலப்பரப்பு, இரவு, பகல் பிரிவினை அனைத்தும் எனக்கு அத்துப்படி. அதனால், நான் முதலில் கால் பதிப்பதுதானே முறை. என்ன கிருஷ்!" என்று ஏற்கனவே எரிகிற கொள்ளிக்கு எண்ணெய் ஊற்றினான்.

"இல்லை. இதை நான் ஆட்சேபிக்கிறேன். நான் இந்த விண்கலத்தின் தலைமைப் பொறியாளன். நான் மனது வைத்தால்தான் யுரேனஸிற்கு நாம் போய் சேரமுடியும். நான்தான் முதலில் கால் பதிப்பேன்" என்று மிரட்டும் தொனியில் கிருஷ்ணகுமார் பேசவும், "என்ன நான் இருப்பது தெரியாமல் பேசுகிறீர்களே? யுரேனஸ் என்ன உங்க மாமனார் வீடா? நிலப்பரப்பு மட்டும் தெரிந்தால் போதுமா? யுரேனஸின் சீதோஷ்ண நிலை, சூரிய ஒளி படும் நேரம் அதெல்லாம் தெரியவேண்டாமா? கண்ட இடத்தில் கால் வைத்தால் …ஜாக்கிரதை" என்று ஆட்டமாய் ஆடினான்.

"சரி! சரி! அமைதி! அமைதி! உங்களுக்கில்லாத பெருமை எனக்கிருக்கிறது. ஏற்கெனவே, வியாழன், செவ்வாய் போன்ற கிரகங்களில் கால் பதித்தவன் நான். என் ராசியால், இன்று செவ்வாயில் இந்தியா குடியிருப்புகள் கட்டுமளவுக்கு உயர்ந்துள்ளது. அதனால் இதையும் எனக்கு விட்டுத் தாருங்களேன்" என்று கெஞ்சல் தொனியில் அர்விந்த் சிங் கேட்கவும் மற்ற அனைவரும் முகத்தை திருப்பிக் கொண்டனர்.

ஆனால், யுரேனஸ் போய் சேருவதற்குள் இதற்கொரு முடிவு எட்டப்பட வேண்டுமென்பதில் அனைவரும் உறுதியோடு இருந்தனர். உறுதியாய் இருந்தால் மட்டும் போதுமா? எப்போது இதைப் பற்றி பேசினாலும் வாக்குவாதமே முற்றியது.

கிருஷ்ணகுமார் எல்லோருக்கும் ’ரெட்அலர்ட்’ சைகை கொடுத்தான். இன்னும் ஒரு மணிநேரத்தில் விண்கலம் யுரேனஸை அடையும் என்று தெரிவிக்கப்பட்டது. அனைவரும் கவச உடை, ஷு என்று சிறிது கூட உடல், வெளியுலகத் தொடர்பு இன்றி இருக்க முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

சட்டென்று ஒரு குலுங்கலுடன் ‘அக்னி யந்திரா’ நின்றது. கண்ணாடி வழியே பார்த்தவர்களை உறைந்து போகவைக்கும் அளவுக்கு பனி. எங்கு நோக்கினும் பனி! முதல் கால் வைப்பது ஞாபகம் வரவும், அனைவரும் வாசலை நோக்கி ஓடினர் (மன்னிக்கவும்! மிதந்தனர்). ஆல்பர்ட் கதவைத் திறந்தான். காலும் பதித்து விட்டான். சந்தோஷத்தில் தன் பலமெல்லாம் திரட்டி, குதிக்க முயற்சித்தான். பலத்த சத்தம்! அனைவரும் திடுக்கென்று திரும்பினர். ஐய்யோ!!

*****************

வணக்கம். செய்திகள்.

இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப பலத்தால் மனிதன் யுரேனஸை அடைந்தான். ஆல்பர்ட், யுரேனிஸ்ஸில் முதலில் கால்பதித்த பெருமையைப் பெறுகிறார்.மேலும் அவர் யுரேனஸில் கிரேட்டர் எனப்படும் குழிகள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார். இக்குழியில் விழுந்ததால், அவரின் கவச ஷூ கழன்று, இரத்தம் உைற்யத் தொடங்கியது.முழுமையாக உறையும் முன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

அவருடன் சென்ற கிருஷ்ணகுமார், டாக்டர் என்பதால் அவரின் இரத்தம் உறைந்த பகுதியான காலை வெட்டி எடுத்து ஆல்பர்டின் உயிரை காப்பாற்றினார். யுரேனஸில் பதித்த "முதல் கால்" இன்று தனி ஷட்டில் மூலம் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது இன்னும் ஒரு வருடத்தில் பூமி வந்தடையும்.முதல் கால் டெல்லி மத்திய அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்தார்.இத்துடன் செய்திகள் முடிவடைகின்றன. வணக்கம்.

**************

அக்னியந்திராவினுள், "ஆல்பர்ட்! அநியாயமா காலை பலி கொடுத்திட்டியே!" என்று பட்டேல் ஆதங்கப்பட்டான்."அதைப் பார்த்தால் முடியுமா? யுரேனஸில் பதித்த என் முதல் காலை உலகம் முழுவதும், எந்த தலைமுறையும் காண முடியுமே. நான் முடமானதில் எனக்கு துளி வருத்தமில்லை. படு சந்தோஷம்" என்றான் ஆல்பர்ட்.

உண்மையில் ஆல்பர்ட்டிற்கு சந்தோஷமா? வருத்தமா?

About The Author

9 Comments

  1. கே.எஸ்.செண்பகவள்ளி

    நல்ல அதீத கற்பனை. வாழ்த்துகள்!
    கே.எஸ்.செண்பகவள்ளி, மலேசி

Comments are closed.