யுக மனிதர்

என்னால் நம்பவே முடியவில்லை. என் எதிரில் நின்று பேசுகிறவர் போன யுகத்தைச் சேர்ந்தவராம். தற்செயலாகத்தான் அவரைக் கடை வீதியில் பார்த்தேன். நல்ல பசி. ‘டிபன் எதுவும் செய்யலியா?’ என்றேன் மனைவியிடம். ‘எது பண்ணாலும் குறை சொல்றீங்க. என்னதான் டிபன் செய்யிறது?’ என்று சலித்துக் கொண்டாள். பசியில் கோபமும் சேர்ந்தது.

வெங்கடேச பவனில் சுடச்சுட ரவா தோசை கிடைக்கும் என்று மெயின் பஜாருக்கு வந்தேன். யார் மீதோ இடித்துக் கொண்டதும் நிதானித்து ‘ஸாரி’ சொன்னேன். ஆனாலும் படு குள்ளம். தோற்றம் மட்டும் விசித்திரம். சர்க்கஸ் கோமாளி மாதிரி. பதிலுக்கு அவர் சொன்னது புரியவில்லை. நிச்சயம் தமிழ் இல்லை. என் முகம் போன போக்கைப் பார்த்து அவராகவே சொன்னார்.

"உங்கள் மொழியிலேயே பேசுகிறேன்"

"நீங்க எங்கேர்ந்து வரீங்க?"

ஏதோ ஆந்திரா, கர்நாடகா என்று சொல்லப் போகிறார் என நினைத்தால் சிரித்தார்.

"போன யுகத்திலேர்ந்து"

தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான் என்று தீர்மானித்தேன்.

"கொஞ்சம் அவசரம்.. வரட்டுமா?"

கையைப் பிடித்தார்.

"உங்களுக்கு நல்ல பசி. சரிதானே"

"ஆ..மா"

"இதைச் சாப்பிடுங்கள். இனி பசிக்கவே பசிக்காது"

ஒரு பழுப்பு இலையை நீட்டினார்.

"வே.. ணாம்"

"துணிச்சலாகச் சாப்பிடுங்கள். கேடு எதுவும் வராது"

எப்படி வாங்கிக் கொண்டேன்.. எப்போது சாப்பிட்டேன்.. எதுவும் நினைவில்லை. லேசாய்ப் புளித்தது. வயிறு ஒரு முறை இரைச்சலிட்டது. பின் படு அமைதி.

"பசி இருக்காதே"
"ஆமா"

"சரி. இப்படியே நடக்கலாம்"

மந்திரித்து விட்ட மாதிரி அவர் பின்னால் போனேன். கூட்டமில்லாத இடத்தில் அமர்ந்தார்.

"இந்த யுகம் முடிகிறவரை நான் இருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு பதிவாளன். நிகழ்வதைக் குறிப்பெடுத்துப் பாதுகாக்கிற பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிக்கு நான். வெவ்வேறு பகுதிகளில் இன்னும் சிலர் என்னைப் போல"

நம்பவே முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

"பாரத யுத்தம் நடந்தபோது குதிரைப் படை ஓடிய சத்தம் கேட்க வேண்டுமா?"

என் பதிலுக்குக் காத்திராமல் என் தலையைப் பிடித்துத் தன் மார்புப் பகுதியில் வைத்தார். கடகடவென ஏதோ சத்தம்.

"காட்சியும் உண்டு. ஆனால் உங்களுக்குக் காட்ட அனுமதி இல்லை."

திகைப்பில் வாயடைத்துப் போனேன். நிஜமாகவே வேற்று யுக மனிதரா?

"உங்களை எனக்கு ஏனோ பிடித்துப் போய் விட்டது. உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அப்படியே கண் மூடி அமருங்கள். நான் சொன்னபிறகு கண்ணைத் திறக்கலாம்"

ஆர்வம் தாங்காமல் கண்ணை இறுக்க மூடி அமர்ந்தேன். எத்தனை நிமிடங்களோ. மீண்டும் அகோரப் பசி வயிற்றைக் கிள்ள கண் விழித்துப் பார்த்தேன். எதிரில் எவரும் இல்லை.

ஒரு பேப்பரில் பெரிய எழுத்தில் "நன்றி. அடுத்தமுறை கொஞ்சம் கூடவே பணம் எடுத்து வரவும்" எழுதி வைக்கப் பட்டிருந்தது.

****

About The Author