விடிவு காலம்

"கும்பிடுரேனுங்க எஜமான்".

"வாப்பா குப்பா. எப்படியிருக்க?"

"ஏதோ உங்க புண்ணியத்துல புழப்பு ஓடுதுங்க" என்றான் குப்பன்.

"கலியாணங் கட்டிக்கிட்டியே. ஏதாச்சும் விசேஷம் உண்டா!" நலம் கேட்டார் எஜமான்.

"ஒரு ஆம்பிள புள்ளங்க" என்றான் வெட்கத்துடன் குப்பன்.

"குப்பா உன்ன ஏன் கூப்பிட்டேன் தெரியுமா?"

"ஒரு வாரமா மனிதக்கழிவு தொட்டி (செப்டிக் டாங்க்) நிரம்பி வழியது. நாற்றம் தாங்கமுடியல. அத்த சுத்தம் செஞ்சு கொடேன். என்ன வேணும். எவ்வளவு வேணும் உனக்கு" என்று கேட்டார் எஜமான்.

"இரண்டு வாழப்பழமுங்க – அப்பால வாசன சோப்பு இரண்டு சென்ட் பாட்டில் ஒன்னு ஒரு பாட்டில் சரக்கு – ரூவா 100 கொடுங்க சுத்தமா செஞ்சு தரேனய்யா" என்றான் குப்பன்.

"என்னப்பா இவ்வளவும் கேட்கிற" என்றார் எஜமான்.

"என்ன என்ன பண்ணச் சொல்லுதீங்க. இந்த வேல அப்படிங்க. ஒரு புள்ள பெத்துக்கிட்டதும் என் பொஞ்சாதி கூட கிட்ட வரமாட்டேங்குது. பையங்கூட எங்கிட்ட வரமாட்டானுங்க இந்த வேலய விடவும் முடியலீங்க. என்ன செய்யறது. இத வச்சத்தான் என் சம்சாரம் அந்த புள்ளய படிக்க வைக்குது" என்றான் குப்பன்.

"சரி சரி. சுத்தமா வேலய முடிச்சுட்டு காச வாங்கிட்டுப் போ" என்றார்; எஜமான்.
அரை பாட்டில் சரக்க அடிச்சுட்டு மூகத்தில சிறிய துணியக் கட்டிக்கிட்டு மனிதக் கழிவு தொட்டியில் இறங்கினான்.

"உடம்பெல்லாம் கழிவு பூச எத்தன நாளு இந்த வேலயத்தான் செய்ய. இதுக்கு ஒரு விடிவுகாலம் வராதா" என்று ஆதங்கத்துடன் எண்ணினான் குப்பன்.

நாட்கள் ஆண்டுகள் நகர்ந்தன.

எஜமானைப் பார்த்துக் கேட்டான் குப்பன்.

"இன்னிக்கு யாருமே கூப்பிடலீங்க. அதான் அந்த தொட்டியவாவது சுத்தம் செய்துட்டுப் போறேன்" என்றான் குப்பன்.

"குப்பா உனக்கு இனி இந்த வேலை கிடையாது. இன்னிக்கு பேப்பர் படிக்கிலயா?" என்றார் எஜமான்.

"எனக்குப் படிக்க தெரியாதே. நீங்க படிச்சத சொல்லுங்க ஐயா" என்றான் குப்பன்.

"அரசாங்கம் ஒரு உத்தரவு போட்டிருக்கு.மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்ய இனி ஆட்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது. இனி இந்த மனிதக் கழிவை அள்ளும் வேலை உனக்கு இல்லை.அதற்கென்று தானியங்கி எந்திரங்கள்; வெளிநாட்டிலிருந்து வந்திருக்கு" என்றார் எஜமான்.

"அப்ப எங்க புழப்பு?" என்றான் குப்பன்.

"உங்களுக்கெல்லாம் பென்சன் தரச் சொல்லி அரசாங்கம் உத்தரவு போட்டாச்சுப்பா" என்று பேப்பரைப் படித்தார் எஜமான்.

"அந்த புண்ணியவான் யாருங்க எஜமான்" கேட்டான் குப்பன்

"யாரோ சுப்பனாம் நம்ம ஊராமுல" என்றார் எஜமான்.

"அந்த சுப்பன் வேற யாருமில்ல சாமி. அவன் என்ற புள்ள சாமி" என்றான் உச்சக்குரலில் குப்பன்.

"உன்ற மவனால இந்த ஊருக்கே விடிவுகாலம் வந்தாச்சுப்பா" என்றார் பெருமிதத்துடன் எஜமான்.

தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு குப்பன் கம்பீரமாக நடந்தான் வீட்டைநோக்கி…

About The Author

6 Comments

  1. chitra

    ஊருக்கு மட்டும் அல்ல விடிவு காலம் குப்பன் சுப்பனுக்கும் தான் அவர் அவர் வேட்டு மலதொட்டியை அவரவர் சுத்தம் செய்வது தற்போது அனேக இடங்களில் உள்ளது தான் குப்பன் சுப்பன் களின் கன்ட்ரிபூஷன் பசந்தியின் இச்சிறு கதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது

  2. K Narasimhan

    மிகவும் அருமையான கதை. ஆனால் தானியன்கி யந்திரம் நடைமுறைக்கு யெல்லா எடத்திலும் வரவில்லை.

Comments are closed.