அமானுஷ்யன் 68

"அக்‌ஷய் இன்னும் எத்தனை நாட்கள் நீ இப்படி இங்கேயே இருப்பதாக உத்தேசம்"

ஆச்சார்யாவின் கேள்விக்கு அக்‌ஷய் உடனடியாக பதில் சொல்லவில்லை. அவனுக்கே அவனுடைய எதிர்கால வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக இருந்தது.

பிறகு சொன்னான். "தெரியவில்லை"

"எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடந்திருக்கிறது. நீ வெறும் கருவி மாத்திரம். அப்படி இருக்கையில் நீ தேவை இல்லாமல் குற்றவுணர்ச்சியோடு இருப்பது புத்திசாலித்தனம் அல்ல. உனக்கு இருக்கும் திறமைகளை வீணடித்துக் கொண்டு முடங்கிக் கிடப்பது சரியில்லை"

"நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?"

"சமூகத்திற்கு உபயோகமாகிற மாதிரி நீ எத்தனையோ செய்யலாம்…."

அவன் அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

"சமூகத்தையே பாழாக்குகிற சமூக விரோதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நீ தண்டனை வாங்கிக் கொடுத்து அவர்கள் செயல்களை நிறுத்தலாம்"

"அது உங்களைப் போன்ற ஆட்களின் வேலை தானே"

"உண்மை. ஆனால் சில சமயங்களில் சில இடங்களில் நிறையவே இடைஞ்சல்கள் எங்களுக்கு இருக்கின்றன. சில நேரங்களில் ஒரு தனிமனிதனுக்கு இருக்கிற சுதந்திரம் எங்களுக்கு இருப்பதில்லை. அதுவும் உன்னைப் போல பல திறமைகள் இருக்கும் தனிமனிதனால் முடிகிற விஷயங்கள், எங்களைப் போல கூட்டாக இயங்கும் மனிதர்களுக்கு முடிவதில்லை…."

அவர்களுக்கு இருக்கும் அரசியல் தலையீட்டைப் பற்றியும், அவர்களுக்கு உள்ளேயே சமூக விரோத சக்திகளுக்குத் துணை போகும் மனிதர்கள் இருப்பது பற்றியும் அவர் விவரித்தார். வெளியே யாருக்கும் சந்தேகமில்லாதபடி இருக்கும் அவனால் நிறைய உதவ முடியும் என்றும் சொன்னார். சில பெரிய பெரிய கேஸ்களில் சில யூகங்கள், கிடைக்கும் தகவல்கள் எல்லாம் அவனுக்குத் தந்தால் அவன் அதை வைத்து நிறையவே கண்டுபிடித்துத் தர முடியும் என்றார். அதில் ஆபத்துகளும் நிறையவே இருக்கும் என்றாலும் அவனைப் போன்ற பல சக்திகள் படைத்த மனிதனால் அதையெல்லாம் மீறி சாதிக்க முடியும் என்றார்.

ஒரு அர்த்தமும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் அவனுடைய வாழ்க்கையை ஏதோ ஒரு பயனை நோக்கி திருப்புவது நல்லது தான் என்று அவனுக்கும் தோன்றியது. மேலும் ஆபத்துகள் பற்றி அவன் சிறிதும் கவலைப் படவில்லை. அவன் இறக்க நேரிட்டால் கூட நஷ்டப்பட ஒரு குடும்பம் கூட அவனுக்கு இல்லை. அக்‌ஷய் சம்மதித்தான்.

ஒன்றன் பின் ஒன்றாக அவர் அவனிடம் சில கேஸ்களின் விவரங்களை ஒப்படைப்பார். அவனும் அவருக்கு அந்த சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு பிடித்து கைது செய்யத் தேவையான அசைக்க முடியாத ஆதாரங்களை ரகசியமாக ஒப்படைப்பான். இப்படி நாட்கள் நகர்ந்தன. அவன் அனாயாசமாக அதனை எல்லாம் மிகவும் பொறுமையாகவும், தைரியமாகவும், கச்சிதமாகவும் செய்து முடித்தான். மாறுவேடங்களில் செல்வது, சமயத்திற்குத் தகுந்தது போல் வேகமாக கச்சிதமாக மாறிக் கொள்வது, ஆபத்தான கட்டங்களுக்கு அசராமல் நிதானமாக உள்ளே நுழைவது எல்லாம் அவனுக்கு மிகவும் கை வந்த கலையாக இருந்தது.

கள்ள நோட்டு அடித்து புழக்கத்திற்கு விடும் பெரிய கும்பல் ஒன்றைப் பிடித்துக் கொடுத்ததும், போதைப் பொருள்களை கடத்தும் கும்பல் ஒன்றைப் பிடித்துக் கொடுத்ததும் அவன் ஈடுபட்ட கேஸ்களில் மிகப் பெரிய கேஸ்கள்…..

*************

அக்‌ஷய் சொல்லி முடித்தான்.

ஆனந்த் அவன் அடுத்தது சொல்வது கேட்க ஆவலாக இருந்தான். அக்‌ஷயோ அவனையே பார்த்தபடி அமைதியாக இருந்தான்.

ஆனந்த் பொறுமை இழந்து சொன்னான். "சரி சொல். அப்புறம் என்ன?"

அக்‌ஷயிற்கு நினைவுகள் மறுபடி வெறுமையானது போல் தோன்றியது. அந்த ஃபைலை படித்த பிறகு அதில் உள்ள விஷயங்களோடு தொடர்ச்சியாக கிட்டத்தட்ட இரண்டரை வருட காலச் சம்பவங்கள் கோர்வையாக இது வரை அவன் நினைவில் வந்து அந்த நினைவுச் சங்கிலி அத்துடன் அறுந்து போனது போல் தோன்றியது.

அவன் முகத்தில் இருந்து அதை ஊகிக்க முடிந்த ஆனந்திற்குப் பகீரென்றது.

பரபரப்போடு ஆனந்த் சொன்னான். "….சரி சொல்லு. அந்தக் கடைசி கேஸ் தான் நமக்கு மிக முக்கியம். அந்தக் கேஸ் என்ன, அதில் நீ என்ன கண்டு பிடித்தாய் என்றெல்லாம் யோசித்து சொல். அந்தக் கேஸ் தான் ஆச்சார்யா கொலை செய்யப்படக் காரணம். உன்னை அவர்கள் கொல்லத் துடிப்பதும் அந்தக் கேஸில் நீ ஏதோ கண்டுபிடித்து ஆச்சார்யாவிற்குத் தந்து இருப்பது தான். நீ உயிரோடு இருப்பது ஆபத்து என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் யார்? யோசி அக்‌ஷய்….ப்ளீஸ்… அது நமக்கு மிகவும் முக்கியம்….யோசி…"

அக்‌ஷய் எவ்வளவு யோசித்தும் அவனால் எதையும் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அக்‌ஷய் இயலாமையுடன் சொன்னான். "சாரி. ஆனந்த்…."

ஆனந்த் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சொன்னான். "பரவாயில்லை. விடு அக்‌ஷய். இந்த அளவு நினைவிற்கு வந்ததல்லவா. இனி மீதியும் கண்டிப்பாக வரும். சிறிது நேரம் கழித்து யோசித்துப் பார்…..

அக்‌ஷய் மேலும் சிறிது மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்து நினைவுகளைத் திரும்பக் கொண்டு வர முடியாமல் போகவே ஆனந்த் சொன்னது போல சிறிது நேரம் கழித்து யோசிக்க முடிவு செய்தான்.

ஆனந்த் கேட்டான். "எனக்கு ஒரு சந்தேகம்"

"என்ன?"

"இப்ராஹிம் சேட்டின் மூத்த இரண்டு மகன்களுக்கு ஆபரேஷன் செய்யாமல் அப்படியே விட்டிருந்தால் நீ அவர்களையும் கூட காப்பாற்றி இருப்பாயா?"

அக்‌ஷய் சொன்னான். "இந்தக் கேள்வியை நானும் எனக்குள்ளேயே பல தடவை கேட்டு இருக்கிறேன். அப்படி ஒரு சூழ்நிலை இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்று சொல்லத் தெரியவில்லை ஆனந்த். என் அப்பா, அம்மா இரண்டு பேரையும் கொல்ல திட்டம் போட்டது அவர்கள் இரண்டு பேரும் தான் என்பதால் நான் என்ன செய்திருப்பேன் என்பதை என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை"

சகோதரர்கள் இருவரும் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

அக்‌ஷய் தான் மௌனத்தை முதலில் கலைத்தான். "சரி இனி என்ன செய்வதாய் உத்தேசம். இத்தனை நாட்கள் உன்னை ரகசியமாக கண்காணித்த ஆட்கள் இப்போது வெளிப்படையாகவே பின் தொடர்கிறார்கள் என்றால் அது நல்லதற்கில்லை. நீ இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நீ என்னைப் பார்க்க வருகிறாய் என்பது நன்றாகவே தெரிந்து விட்டதால் தான் இந்த அளவு மும்முரமாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளிப்படையாகவே வருகிறார்கள். நீ இனி திரும்பி உன்னறைக்குப் போனால் சிபிஐ அதிகாரி என்று எல்லாம் பார்க்க மாட்டார்கள். கண்டிப்பாக நேரடியாகத் தாக்குவார்கள். உன்னிடம் இருந்து என்னைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்"

ஆனந்திற்கும் அது தெரிந்தே இருந்தது. அவர்களிடம் இருந்து அவனைத் தற்காத்துக் கொள்ள இப்போது ஒரே வழி ஜெயினின் உதவியை நாடுவது தான். அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே அவன் அறைக்குப் பாதுகாப்பாகத் திரும்ப முடியும். ஆனால் அவன் அவரிடம் சொல்லாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. அவன் அதை எல்லாம் இப்போது சொன்னால் முன்பே ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்கும் தகுந்த பதில் தயார் செய்து கொள்ள வேண்டி இருக்கும்… ஆனந்தால் உடனடியாக என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.

பின் தம்பியிடம் சொன்னான். "அதை அப்புறமாய் யோசிக்கலாம். நீ முதலில் அம்மாவிடம் பேசு. அம்மா உன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள். இந்த கலாட்டாவில் சொல்ல மறந்து விட்டேன். நீ பேசா விட்டால் தேவை இல்லாமல் எதை எதையோ யோசித்துக் கொண்டே உட்கார்ந்திருப்பார்கள். சரியாகச் சாப்பிடக் கூட மாட்டார்கள்."

அக்‌ஷய் சரியென்று சொல்ல ஆனந்த் தாயிற்குப் போன் செய்தான்.

போன் அடித்துக் கொண்டே இருந்தது. ஆனால் மறுமுனையில் பதில் அளிக்க ஆளிருக்கவில்லை.

ஆனந்த் முகத்தில் கலவரம் படர ஆரம்பித்தது.

(தொடரும்)

About The Author