அமானுஷ்யன்-77

கேசவதாஸ் வீட்டிற்குக் காவல் இருந்த நான்கு போலீஸ்காரர்கள் அன்றிரவும் யாரும் வருவார்கள் என்று நம்பவில்லை. சில நாட்களுக்கு முன் அப்படி ஒரு ஆள் வரக்கூடும் என்று தகவல் வந்துள்ளது என்று கூறி அவர்களைத் தருவித்த போது இருந்த சுறுசுறுப்பு இப்போது அவர்களிடம் இருக்கவில்லை. டிஐஜி கேசவதாஸ் அரசியல்வாதி அல்ல. அதே போல் அனாவசியமாக யாரையும் பகைத்துக் கொள்ளும் ரகமும் அல்ல. அப்படிப்பட்டவருக்கு யாரிடமிருந்தாவது ஆபத்து வரக் காரணம் வேறெதுவும் கூட இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. மேலும் வரக்கூடிய ஆள் யார், என்ன என்ற விவரங்களை எல்லாம் தெரிவிக்காததால் மேலிடம் என்று சொல்லப்படுகிற முட்டாள்கள் எதையோ சொல்லி வெறுமனே அவர்கள் நேரத்தை வீணாக்குவதாக அவர்கள் நினைத்தார்கள்.

ஆனாலும் வீட்டருகே வரும் ஆட்களை அவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்த்து விரட்டி அடிக்கத் தவறவில்லை. இருவர் முன் வாசலில் இருக்க மற்ற இருவர் இரு பக்கமும் இருந்த காம்பவுண்ட் சுவர்களில் சாய்ந்து நின்றார்கள். அவர்கள் வீட்டு சுவருக்கும், வெளிக் காம்பவுண்ட் சுவருக்கும் இடையே உள்ள இடைப்பகுதியை அவ்வப்போது கவனித்தார்களே தவிர அந்த வழியாகப் பின் பக்கம் வரை வரத் தயங்கினார்கள். காரணம் பின் பக்க வீட்டில் இருந்த பெரிய டாபர்மேன் நாய். அது பின் சுவர் அருகே யாராவது வந்தால் மோப்ப சக்தியால் அதை உணர்ந்து அந்த வீட்டுக்குள்ளேயே நுழைந்து விட்டது போல கத்தி எச்சரித்தது. இரவு நேர அமைதியைக் கெடுக்க விரும்பாத காவல் போலீஸ்காரர்கள் அந்த நாயை மீறி பின் பக்க வழியாக யாரும் வந்து விட முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்கள். ஒரு அதிகாலை அந்த நாயுடன் வாக்கிங் வந்த பின் வீட்டு கோடீசுவரன் அந்த நாய் நாலு போலீஸ்காரர்களுக்கு சமம் என்று அவர்கள் காதுபடவே வழியில் பேசக் கிடைத்த மனிதரிடம் பெருமை அடித்துக் கொண்டான். அதனால் பின் பக்க காவலை அந்த டாபர்மேன் நாய் தங்களை விட நன்றாகச் செய்யும் என்று எண்ணி பின்பக்கத்தை விட்டு விட்டார்கள்.

ஆனால் அவர்கள் அமானுஷ்யன் என்றழைக்கப்பட்ட அக்ஷயிற்கும் விலங்குகளுக்கும் இடையே இருந்த நெருக்கத்தை அறியாதவர்கள். திபெத்தில் லாமாக்களுடன் பழகி இருந்த காலத்தில் அவர்களிடம் இருந்து அவன் கற்றுக் கொண்ட வித்தைகளில் ஒன்று மிருகங்களை தன் வசப்படுத்துதல்-குறைந்த பட்சம் அது தன்னைப் பாதிக்காமலாவது பார்த்துக் கொள்தல். அந்தக் காலத்தில் காட்டுப் பாதையில் செல்லும் போது கொடிய விலங்குகள் எப்படியும் எதிர்படும் சூழ்நிலை இருந்ததால் லாமாக்கள் விலங்குகளுக்கு தாங்கள் எதிரிகள் அல்ல நண்பர்கள் என்ற தகவலை உணர்த்தும் வித்தையை அறிந்திருந்தார்கள். கூர்மையான பார்வையாலும், மந்திர வித்தைகளாலும் தங்கள் அன்பை அந்த விலங்குகளுக்கு உணர்த்தும் கலையில் வல்லமை பெற்று இருந்தார்கள். அவர்களிடம் இருந்து அந்த வித்தையைக் கற்றுத் தேர்ந்த அக்ஷய் எத்தனையோ காலம் காட்டில் விலங்குகளிடையே அச்சம் இன்றி வாழ்ந்திருக்கிறான்.

விலங்குகள் மனிதர்களை விட எத்தனையோ உத்தமமானவை. அவை தேவையில்லாமல் யாரையும் தாக்குவதில் மகிழ்ச்சி அடைவதில்லை. தங்களுக்குத் தீங்கு விளவிக்காத பட்சத்தில் யாருக்கும் தீங்கிழைக்கவும் அவை முற்படுவதில்லை. நண்பர்களாக இருந்தவை திடீரென்று நிறம் மாதிரி எதிரிகளாக மாறி விடுவதில்லை… மனிதர்களிடம் நிறைய கசப்பான அனுபவங்களைப் பெற்றிருந்த அக்ஷய் விலங்குகள் மீது உண்மையில் நிறைய மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தான்.

கேசவதாஸ் வீட்டுக் காவல் போலீஸ்காரர்கள் பின்பக்கம் வரை ரோந்து போகாத காரணம் என்ன என்பதை ஊகித்து அறிந்த அக்ஷய் உள்ளே செல்ல பின் வழியே உகந்தது என்று விரைவிலேயே முடிவு செய்து பின் தெரு வழியாக பின் வீட்டு கேட் முன்னால் வந்து நின்றான். வேகமாகக் குரைத்த படி வந்த நாய் அக்ஷயைப் பார்த்தவுடன் மந்திரத்தால் கட்டுண்டது போல அமைதியாக அப்படியே நின்றது. அக்ஷய் கூர்மையாக அந்த நாயின் கண்களையே பார்த்து நின்றபடி தானந்த நாயிற்கோ, அதன் எஜமானனுக்கோ எதிரியல்ல என்பதை மௌன பாஷையில் உணர்த்தினான். அதைப் புரிந்து கொண்டது போல பின் வாங்கிய நாய் தன் வீட்டு வாசற்படியில் சென்று அமர்ந்து கொண்டது.

அதன் மீது வைத்த கண்களை எடுக்காமலேயே அக்ஷய் மெல்ல கேட் மீது ஏறினான். அந்த உயர் ரக நாய் அவன் என்ன தான் வசியப்படுத்தினாலும் அந்த வாசற்படியில் கால் வைத்தால் போதும், அந்த நாய் வசியத்தைக் கலைத்துக் கொண்டு தன் மீது பாய்ந்து குதறி விடும் என்பதைப் பார்வையிலேயே புரிந்து கொண்ட அக்ஷய் சுவரோரமாகவே நடந்து பின் புறம் வந்தான். பின் காம்பவுண்ட் சுவர் மீது சத்தமில்லாமல் ஏறி கடக்கும் வரை அவன் கண்களும் நாயின் கண்களும் சந்திப்பிலேயே இருந்தன. அவன் அதன் கண்ணில் இருந்து மறைந்த பின்னும் கூட அந்த நாய் அந்த சுவரையே பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தது.

தனதறைக் கட்டிலில் தலையணைகள் மீது சாய்ந்து அமர்ந்திருந்த கேசவதாஸ் ஜன்னல் கண்ணாடி வழியே ஒரு உருவம் வேகமாக நகர்ந்ததைப் பார்த்து விட்டார். உடனடியாக அது அவன் தான் என்பதும் தெரிந்து விட்டது. அவர் தன் அறைக்கதவைத் திறந்து தான் வைத்திருந்தார். ஒருவேளை அவனைச் சுட்டு அவன் பிணத்தை ஒப்படைத்தால் பல லட்ச ரூபாயைப் பரிசாகத் தருவதாக வேறு அந்த மந்திரி சொல்லி இருந்தார். பின் வேறு விதங்களிலும் நன்றாக அவரைக் கவனிப்பதாகவும் சொல்லி இருந்தார். அவனைப் பார்த்தவுடனேயே சுட்டு விட்டால் என்ன என்று நினைத்தவராக துப்பாக்கியை தன்னருகே இருந்த போர்வைக்குள் மறைத்து வைத்திருந்தார். எந்தக் கணமும் எடுத்து அவனை சுட்டு விடலாம்…..

அவன் அறை வாசலில் அமைதியாக நின்றான். அவனை அவனுடைய ஃபைல் போட்டோவில் பார்த்தவர்கள் யாரும் தற்போதைய தோற்றத்தை வைத்துக் கண்டு பிடித்து விட முடியாது. வேறு ஆளாகவே தெரிந்தவன் உற்றுப் பார்த்தால் மட்டுமே அந்த சாயல்களைக் கண்டு பிடிக்க முடியும். அவனிடம் பயம் மட்டுமல்ல எந்த உணர்ச்சிகளையும் அவரால் காண முடியவில்லை. சலனமில்லாமல் இருந்தான். விசாரணைக்குக் கைதியைக் காண வந்த மேலதிகாரி போல அவன் பாவனை இருந்தது. துப்பாக்கியை உபயோகிக்கலாமா என்ற எண்ணத்தில் இருந்தவர் அவனைப் பார்த்த பிறகு அது அபாயம் என்று உணர்ந்து அந்த எண்ணத்தை உடனடியாக மாற்றிக் கொண்டார்.

அவரைப் பார்த்தவுடனேயே அவர் அவனை எதிர்பார்த்து தான் இருக்கிறார் என்பதை உணர அக்ஷயிற்கு வெகு நேரமாகவில்லை. எதிரிகள் அவன் அங்கு வரக்கூடும் என்பதை ஊகித்து இன்று கூட எச்சரித்திருக்க வேண்டும். அவரிடம் அவனை ஆராய்ச்சி செய்யும் மனோபாவம் இருந்ததே ஒழிய பயம் தெரியவில்லை. அவர் கேட்டார். "யார் நீ?"

அக்ஷய் அமைதியாகக் கேட்டான். "நான் யார் என்று தெரியாதா?"

"தெரியாது"

"நீங்கள் தான் நான் டெல்லி புறநகர் பகுதியில் வெடிகுண்டு வைத்தவன் என்று என்னை விளம்பரப் படுத்தினீர்கள். நேரில் வந்தால் தெரியவில்லை என்கிறீர்கள்"

மனிதர்களை எடை போடுவதில் வல்லவரான கேசவதாஸ் இவனை வெடிகுண்டைக் கையாள்வதைப் போல் மிகக் கவனமாகக் கையாள வேண்டும், இல்லையென்றால் ஆபத்து தான் என்பதைப் புரிந்து கொண்டார். முழு உண்மையும் சொல்லாமல் அதே நேரத்தில் பொய்யாகவும் அவன் தெரிந்து கொள்ள முடியாதபடி உண்மையையும் பொய்யையும் கலந்து பேச்சுக் கொடுக்க அவர் முற்பட்டார்.

"அவனா நீ? எங்களுக்குக் கிடைத்த போட்டோவிற்கும் இப்போது நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனால் தான் தெரியவில்லை"

"ஆனால் என்னை எதிர்பார்த்தபடியே இருப்பது போல் அல்லவா தெரிகிறது"

"நீ என்னேரமும் வரலாம் என்று என் உள்மனம் சொல்லியது"

"இன்றைக்கா?"

"இன்றைக்கு என்று இல்லை பத்து நாளாகவே"

"ஏன்?"

"நீ இதற்கு முன் அப்படித்தான் சிலரைப் போய் பார்த்திருக்கிறாய்"

"நான் வெடிகுண்டு வைத்தேன் என்று யார் சொல்லி பொய் குற்றச்சாட்டு பதிவு செய்தீர்கள்?"

"என்னைப் போன்ற அரசாங்க ஊழியன் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் மேலிடத்தில் சொல்கிறபடி அனுசரித்துத் தான் ஆக வேண்டும். இல்லா விட்டால் என்னை அப்புறப்படுத்தி விடுவார்கள்"

"அதனால் யாருக்கு என்ன அநியாயம் வந்தாலும் உங்களுக்குக் கவலை இல்லை"

அவன் அமைதியாகத் தான் கேட்டான். ஆனால் குரலில் இருந்த ஏதோ ஒன்று பேச்சு அவருக்கு அபாயச் சங்கு ஊதியது. அவர் இந்த இடத்தில் உண்மை பேசுவது தான் நல்லது என்று நினைத்தார். "எனக்கு அவர்கள் உன்னைத் தீவிரவாதி என்றும் நியாயமான வழியில் உன்னைப் பிடிக்க முடியாது என்றும் சொல்லி இந்த வழியில் பிடிக்க ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி நீ தீவிரவாதியாக இருந்தால் அதில் தப்பில்லை என்று நினைத்தேன்…."

"அவர்கள் என்றால் யார்?"

"அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள்"

"அவர்களுக்குப் பெயரில்லையா?"

மந்திரி சொன்ன கேள்வி வந்து விட்டது. கேசவதாஸ் ஒரு நிமிடம் மௌனம் சாதித்து விட்டு சொன்னார். "பாதுகாப்பு செயலாளர் த்ரிபாதி"

"அவர் அவராகவே சொன்னாரா, இல்லை அவரும் அவருக்கும் மேல் இருப்பவர்கள் சொல்லி சொன்னாரா?"

"தெரியாது"

"நீங்கள் கேட்க மாட்டீர்களா?"

"கேட்கக் கூடாது என்றில்லை. கேட்டால் அவர்கள் சொல்ல மாட்டார்கள். அவர்கள் கேள்வி கேட்பதை விரும்ப மாட்டார்கள்"

அவரையே சில வினாடிகள் உற்றுப் பார்த்த அக்ஷய் கேட்டான். "சரி என் அம்மாவையும், வருணையும் எங்கே கடத்தி வைத்திருக்கிறீர்கள்?"

கேசவதாஸ் அதிர்ந்து போனார். இது என்ன புது சிக்கல்? அவர் அவன் ஃபைலைப் படித்ததில் அவன் தாய், தந்தை இருவருமே மும்பையில் இறந்து விட்டார்கள் என்று தான் இருந்தது. இப்போது அம்மாவைக் கடத்தி வைத்து இருக்கிறதாகச் சொல்கிறான். செத்துப் போன அம்மா திரும்ப எங்கே வந்தாள்? யாரந்த வருண்?

ஆனால் இவன் சொன்னது உண்மையாக இருந்தால்-அவர்கள் உண்மையாகவே இவனுக்கு வேண்டியவர்களைக் கடத்தி வைத்திருந்தால்-கடத்தப்பட்டவர்களுக்கு ஏதாவது தீமை விளையுமானால்- இவனை விட அபாயகரமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பதை உணர்ந்தார். முன்னொரு காலத்தில் மும்பையில் பல பேர் சாகவும் சாகாமல், உயிரோடு இருந்தும் பயனில்லாமல் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜடங்களாகக் கிடந்தது பற்றி நினைவுக்கு வந்தது. அன்று பலரை இவன் மன்னித்து விட்டிருக்கலாம்? இன்று அவன் முகத்தில் தெரிந்த சலனமில்லாத ஒருவித கொடூரத்தைப் பார்க்கையில் இன்று அவன் மன்னிப்பான் என்று அவருக்குத் தோன்றவில்லை.

அவருக்கு மந்திரி மீது கடுங்கோபம் வந்தது. தெரியாத்தனமாக இவன் விஷயத்தில் சிக்கிக் கொண்டது ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொண்டது போல என்று புரிந்தது. ஆனால் கோபத்தை மந்திரி மீது காட்ட முடியாது. அவரைப் பகைத்துக் கொள்ளவும் முடியாது. எனவே இந்த அபாயகரமானவனிடம் இருந்து தப்பிக்க இவனைக் கொல்வது தான் ஒரே வழி, கொன்றால் பணமும் பதவி உயர்வும் கூட கிடைக்கும் என்பதால் கையெட்டும் தூரத்தில் போர்வைக்கு அடியில் வைத்த துப்பாக்கியை எடுத்து சுடுவது தான் எல்லா விதங்களிலும் உசிதம் என்ற முடிவுக்கு கேசவதாஸ் வந்தார்.

(தொடரும்)

About The Author

1 Comment

Comments are closed.