அமானுஷ்யன்(34)

அக்‌ஷய் கதவைத் திறந்த போது வெளியே அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் நின்றிருந்தார்கள். இரண்டு பேரும் கிட்டத்தட்ட 25 முதல் 50 வயதுடையவர்களாக இருந்தார்கள். ஒருவர் பாதி வழுக்கைத் தலையுடன் பருமனாக இருந்தார். மற்றவர் ஒடிசலாக பெரிய மீசை உடையவராக இருந்தார்.

"போலீஸ்" என்று வழுக்கைத் தலையுடையவர் தன் அடையாள அட்டையைக் காட்டினார்.

வாசலில் இருந்து வழி விடாமல் அமைதியாக அந்த அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த பின்தான் அக்‌ஷய் அவர்களை உள்ளே விட்டான்.

"உள்ளே வாங்க சார். உட்காருங்கள்"

சஹானா ஸ்தம்பித்துப் போயிருந்தாள். போலீஸைப் பார்த்தவுடன் இம்மியளவும் அசராமல் அவன் அந்த அடையாள அட்டையைப் பரிசோதித்த விதம் நிலைமையை முழுதும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு புதிய அக்‌ஷயை அவளுக்கு அறிமுகப்படுத்தியது.

"உங்களுக்கு யார் வேண்டும்?" அக்‌ஷய் இயல்பாக அவர்களிடம் கேட்டான்.

"நீங்கள் யார்?" வழுக்கைத் தலை கேட்டார். அவர்கள் கணக்கில் வீட்டில் ஒரு கிழவி, சஹானா, சஹானாவின் மகன் மட்டுமே இருந்தார்கள்.

"அக்‌ஷய்" என்றவன் மரகதத்தைக் காண்பித்து "அவருடைய தங்கை மகன்" என்றான்.

"சஹானா என்கிறது….." வழுக்கைத் தலை இழுத்தார்.

சஹானாவைக் காண்பித்து "இவர் தான்" என்ற அக்‌ஷய் "சஹானாவின் மாமியார் அவர்கள். அவர்கள் தங்கை மகன் நான். என்ன விஷயம் சொல்லுங்கள்" என்றான்.

சஹானா பக்கம் திரும்பிய மீசைக்காரர் "நாங்கள் ஒரு தீவிரவாதியைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அந்தத் தீவிரவாதி உங்களுடன் இமயமலைச் சாரலில் இருந்து காரில் பயணம் செய்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது…

சஹானா யோசிப்பது போல் பாவனை செய்தாள்.

"அந்த ஆளைப் பற்றி நாங்கள் இரண்டு மூன்று நாட்கள் முன்னால் பத்திரிக்கைகளிலும் டிவியிலும் கூட விளம்பரம் செய்தோம். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக நீங்கள் எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை"

சஹானாவிற்குக் கோபம் வந்தது. "நீங்கள் இங்கே வெடிகுண்டு வைத்ததாக ஒரு ஆளைக் காண்பித்தீர்கள். கிட்டத்தட்ட அதே மாதிரி தோற்றமுள்ள ஆள் அந்த நேரத்தில் என்னுடன் காரில் வெகுதூரத்தில் இருந்தான். ஒரே ஆள் இரண்டு இடத்தில் ஒரே நேரத்தில் இருக்க முடியாது என்பதால் நான் அது வேறு ஆளாக இருக்கும் என்று நினைத்தேன்"

போலீஸ் அதிகாரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் மீசைக்காரர் கவனமாகச் சொன்னார். "இது அரசாங்க பாதுகாப்பு விஷயம் என்பதால் நாங்கள் முழுத் தகவல்கள் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்……"

"சஹானா, நீங்கள் சொன்னதும் சரியாக இருந்து இவர்கள் சொன்னதும் சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது" அக்‌ஷய் ஆலோசனையுடன் சொன்னான்.

எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அக்‌ஷய் சொன்னான். "அவனும் இவனும் இரட்டைப்பிறவியாக இருக்கலாம்"

போலீஸ் அதிகாரிகள் முகங்களில் ஈயாடவில்லை. ஆனால் அக்‌ஷய் கருத்திற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் வழுக்கைத் தலை சஹானாவிடம் சொன்னார். "அந்த ஆளை நீங்கள் சந்தித்த நேரத்தில் இருந்து அவனைப் பற்றி எல்லா விவரங்களையும் நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும்"

சஹானாவிற்கு வாய் ஓட்டிக் கொண்டது போல் இருந்தது. அக்‌ஷய் சொன்னான். "சார் நான் சொல்கிறேன்…."

"உங்களுக்கு எப்படி அவனைத் தெரியும்?" மீசைக்காரர் சந்தேகத்தோடு கேட்டார்.

"சஹானா சொல்லித்தான். சார்…. உங்களுடைய விளம்பரத்தில் காட்டிய போட்டோவைப் பார்த்ததில் இருந்து சஹானா குழம்பிப் போய் விட்டார்கள்.. படம் பார்த்தால் அந்த ஆள் மாதிரி இருக்கிறது. ஆனால் அந்த ஆள் அந்த நேரத்தில் இங்கே இருக்க வாய்ப்பே இல்லையே என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் எனக்கு அந்த ஆள் நடவடிக்கையைப் பற்றி அவர்கள் சொன்னதெல்லாம் சந்தேகத்தை நிறையவே கிளப்பியது. அப்போதே அதை சஹானாவிடம் சொல்லியும் இருக்கிறேன்….."

"சந்தேகப்படுகிற மாதிரி என்ன நடவடிக்கை?" வழுக்கைத் தலை கேட்டார்.

"சார். ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேனே"

"அதை ஏன் சஹானாவே சொல்லக் கூடாது?" மீசைக்காரர் சொன்னார்.

"சார் சாகப்போகிற உங்கள் மகனை ஒரு ஆள் காப்பாற்றினால், அவன் குற்றவாளி அல்ல என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நாளைக்கு அந்த ஆள் ஒரு குற்றவாளி என்று யார் சொன்னாலும் காட்டிக் கொடுப்பீர்களா? நீங்கள் மனதைத் தொட்டு பதில் சொல்லுங்கள்"

மீசைக்காரர் எந்த பதிலையும் சொல்லாமல் அவனையே கூர்ந்து பார்த்தார்.

ஆனால் அதையே ஒரு பதிலாக எடுத்துக் கொண்ட அக்‌ஷய் அவருக்கு எதிரில் இருந்த சோபாவில் சாய்ந்தபடியே சொன்னான். "அதே நிலைமை தான் சஹானாவுக்கும். நீங்கள் அவன் வெடிகுண்டு வைத்ததாகச் சொன்ன நேரம் தான் சஹானாவை அவனுக்கு சாதகமாக நினைக்க வைக்கிறது"

போலீஸார் இருவரும் சஹானாவைப் பார்த்தார்கள். அவள் ஒரு பிரபல டிவி சேனலில் வேலை பார்ப்பவளாக இருந்திரா விட்டால் அவர்கள் அவளை விசாரித்திருக்கும் விதமே வேறு மாதிரியாக இருந்திருக்கும். மிகக் கவனமாக அணுக வேண்டிய கேஸ் இது என்று அவர்களுக்கு பல முறை எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால் தயங்கினார்கள். பின் வழுக்கைத் தலையர் அவர்களிடம் ரகசியமாய் சொல்வது போல் சொன்னார். "ஒரு பயங்கரமான தீவிரவாதியை நேர் வழியில் பிடிக்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். அதனால் தான் இந்த குழப்பங்கள் எல்லாம்…."

சஹானா அக்‌ஷயைப் பார்த்தாள். அக்‌ஷய் சொன்னான். "என்ன நடந்ததோ அதைச் சொல்வதில் என்ன பிரச்னை சஹானா?"

சஹானா பேசாமல் இருந்தாள். என்ன செய்வது, என்ன சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அக்‌ஷய் அவள் தயக்கத்திற்கு வேறு அர்த்தம் உள்ளது போல் பெருமூச்சு விட்டபடி போலீஸ் அதிகாரிகளிடம் திரும்பினான்.
"சார். அந்த நாள் இவர்கள் மகன் வருண் ஒரு லாரியில் அடிபட்டு சாக இருந்தான். அந்த சமயத்தில் நீங்கள் சொன்ன ஆள் வந்து எப்படியோ காப்பாற்றி விட்டான். அவனுக்கு நன்றி சொல்லி இவர்கள் தன்னுடைய விசிட்டிங் கார்டு கொடுத்திருக்கிறார்கள். அவன் அதைப் பார்த்து விட்டு நானும் டில்லி தான் போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறான். இவர்கள் ‘வேண்டுமானால் காரில் ஏறிக் கொள்ளுங்கள். நான் டில்லியில் இறக்கி விடுகிறேன்" என்றிருக்கிறார்கள். அவனும் இவர்கள் காரில் ஏறி இருக்கிறான். அப்போது தான் அவனிடம் லக்கேஜ் எதுவும் இல்லை என்பதை இவர்கள் கவனித்து இருக்கிறார்கள். அது பற்றி கேட்ட போது அவன் சொன்ன பதில் தான் எனக்கு அவன் மேல் முதல் சந்தேகத்தைக் கிளப்பியது…."

சொல்லி நிறுத்தி அவர்களை எதிர்பார்ப்போடு பார்த்தான். வழுக்கைத் தலை ஆர்வத்துடன் கேட்டார். "என்ன சொன்னான்"

"யாரோ அவனை அடித்துப் போட்டு அவனிடம் இருந்து துணிமணி, பணம் எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டார்கள் என்று கதை அளந்திருக்கிறான். ஏன் சார் சஹானா சொல்வதை வைத்துப் பார்த்தால் அவன் நல்ல திடகாத்திரமான ஆளாய்த்தான் தெரிகிறான். அப்படி இருக்கையில் ஆள்களே அதிகம் இல்லாத அந்த இடத்தில் இவனை அடித்துப் போட்டு பணம் மட்டுமல்ல துணிமணியும் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள் என்றால் நம்பவா முடிகிறது? இந்தக் காலத்தில் துணிமணியைத் திருடுகிற தரித்திர கொள்ளைக்காரன் இருக்கிறானா சார்?"

சரியாகத் தான் சந்தேகப்பட்டாய் என்பது போல வழுக்கைத் தலை தலையாட்டினார். தண்ணீர் குடிக்கிற சாக்கில் யோசிக்க அக்‌ஷய் சிறிது சமயம் எடுத்துக் கொண்டான். சஹானாவையும் அவனையும் சேர்த்துப் பார்த்து அடையாளம் காட்டி இருக்கிற ஆள் யாராக இருந்தாலும் அது மலைச்சாரலில் இருந்த டீக்கடைப் பக்கத்தில் இருந்திருக்க முடியாது என்று நம்பினான். அதிகாலை நேரம் முழு வெளிச்சம் இல்லாத நேரம் அது என்பதால் அந்தக் கணக்குப் போட்டான். அடுத்ததாக அவர்கள் இருவரையும் சேர்ந்து பார்த்தது ரெடிமேட் கடைக்காரனும், கண்ணாடிக் கடைக் காரனும்தான். இருவரில் ஒருவன் டிவியில் காண்பித்த போட்டோவை வைத்து அடையாளம் கண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

கண்ணாடிக் கடைக்காரன் அவர்களை வேண்டா வெறுப்பாகத்தான் கவனித்தான். அந்த நேரத்தில் அவன் கடைக்கு வந்திருந்த இளம்பெண் ஒருத்தியைக் கவர பிரம்மப் பிரயத்தனம் அவன் செய்து கொண்டிருந்ததால் அவன் அவர்களை அடையாளம் சொல்லும் அளவு கவனித்த மாதிரி தெரியவில்லை. அந்த ரெடிமேட் கடைக்காரன்தான் அவர்களை முழுவதுமாகக் கவனித்தவன். அவன் கடையில் டிவியும் கூட இருந்தது. அவன் தான் அந்த விளம்பரத்தையும், சஹானா டிவி நிகழ்ச்சியில் வந்ததையும் கவனித்துப் போன் செய்திருக்க வேண்டும். மின்னல் வேகத்தில் முடிவுக்கு வந்த அவன் தண்ணீர் குடித்து முடித்தவுடன் மீண்டும் தொடர்ந்தான்.

"சார்! அப்புறமாய் டில்லி வரை இவர்கள் கூட வந்த அவன் தன்னைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. வீடு டில்லியில் கரோல்பாகில் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறான். வேறெதாவது உதவி வேண்டுமா என்று சஹானா கேட்டதற்கு எனக்கு ரெடிமேட் ஆடைகள் ஏதாவது வாங்கிக் கொடுத்தால் பரவாயில்லை என்று சொல்ல இவர்களும் அவனுக்கு
வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். பிறகு திடீர் என்று ஒரு சிக்னலில் ‘நான் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்’ என்று அவசர அவசரமாக இறங்கிப் போய் இருக்கிறான். அதுவும் இறங்கியவன் அடுத்த வினாடியே எங்கே போனான் எப்படிப் போனான் என்று தெரியவில்லை என்று சஹானாவே சொல்கிறார்கள். எனக்கென்னவோ இதெல்லாம் ஏதோ சந்தேகத்தைக் கிளப்புகிற மாதிரி இருக்கிறது"

போலீசார் இருவரும் ஒருவரை ஒருவர் மறுபடியும் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்குக் கிடைத்த தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கையில் இவன் சொன்னதில் பொய் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த ரெடிமேட் கடைக்குப் போயிருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்த தகவலைக் கூட இந்த இளைஞன் தானாகவே சொல்லியிருக்கிறான்.

ஆனால் மீசைக்காரருக்கு அவன் மேல் ஏனோ சந்தேகம் நீடித்தது. அவர் அவனை சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பார்த்தார்.

(தொடரும்)
 

About The Author