உறவுகள் தொடர்கதை – 16

பொன்மாலைப்பொழுது. அலைகள் கரையோடு அலுக்காமல் விளையாடிக் கொண்டிருந்தன.

"ரொம்ப உள்ளே போகாதே; அலை அடிச்சிட்டுப் போயிடும்" – தாய்மையின் எச்சரிக்கைக்குத் தலையாட்டிக் கொண்டே கடலுக்குள் முன்னேறும் சிறுவன்;

உடை நனையும் என்ற அச்சத்தில் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்;

பொங்கும் அலையில் குதிக்கும் சிறுவர்கள்; பந்து, துப்பாக்கி, குதிரைச் சவாரி, ராட்டினம் – எதையுமே லட்சியம் செய்யாமல் கர்மயோகியாய் "பட்டாணி சுண்டல், சுண்டல் " என்று டின்களுடன் சுற்றி வரும் சிறுவர் கூட்டம்;

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து சூர்யாவுக்கு அலுத்துவிட்டது.

"என்ன அரவிந்தன்! ஏதோ பேசணும்னு வரச் சொல்லிட்டு, அப்படியே உட்கார்ந்துட்டிருக்கீங்க? நான் இன்னொரு நாளைக்கு வரட்டுமா?"

சூர்யா மணலைத் தட்டிவிட்டுக் கொண்டே எழ, அரவிந்தன் அவசரமாக, "இரு, சூர்யா! முக்கியமான விஷயத்தைப் பேசணும்னு தான் வரச் சொன்னேன்; உட்கார்" என்றான்.

"சரி, சொல்லுங்க!" என்ற சூர்யா மணலில் அமர்ந்தாள்.

"உன் கூட ஆஃபீஸ்லே வேலை பார்க்கிற சாந்தியைப் பத்தி அன்னிக்கு சொல்லிட்டிருந்தியே, சூர்யா…."

"சாந்திப்ரியாவையா சொல்றீங்க?"

"ஆமாம். அவங்களோட கணவர் திரும்ப அவங்க கூட சேர்ந்து வாழத் தயாரா இருக்கார்."

"நிஜமாவா சொல்றீங்க? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு."

சூர்யா பரவசமுற்றாள்.

"எப்படிக் கண்டுபிடிச்சீங்க? எப்படி சமரசம் செய்தீங்க?" கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

"சூர்யா! அதெல்லாம் பிறகு உனக்குச் சொல்றேன். ஆனா அவரு மறுபடி சாந்தியோட வாழறதுல ஒரு சிக்கல் இருக்காம். அதைத் தீர்த்துவைக்க என்கிட்டே உதவி கேட்டார். நான் உன்கிட்டே கேக்கப் போறேன்."

"அப்படி என்ன பெரிய சிக்கல்?"

"அவரு இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்துக்கறதா ப்ராமிஸ் பண்ணிட்டாராம். ஆனா இப்ப சாந்தியோட நிலைமை தெரிஞ்ச பிறகு, சாந்தி கூட வாழவே அவர் இஷ்டப்படறார். இதை அந்தப் பெண் ஒத்துக்குவாளான்னு சந்தேகப்படறார். தனக்குத் துரோகம் பண்ணிட்டதா அந்தப் பெண் நினைக்கக்கூடாதுன்னு வருத்தப்படறார்."

"இது எப்படி துரோகமாக முடியும்? சாந்தியைப் பத்தித் தெரிஞ்ச பிறகு அவர் அந்தப் பெண்ணோடு பழகத் தொடங்கியிருந்தா அதுதான் துரோகம்.

இது அவருக்கே தெரியாம நடந்துவிட்ட தவறு. நடந்ததை விளக்கமா எடுத்துச் சொல்லி மன்னிப்பு கேட்டுட்டா, எந்தப் பெண்ணும் புரிஞ்சுக்குவா."

"அந்தப் பெண்ணோட நிலையில இருந்தா, நீ மன்னிச்சுடுவியா சூர்யா?"

அரவிந்தன் குரலில் ஆர்வப் படபடப்பு.

"வேற வழி? மன்னிச்சுட்டு, அவங்கவங்க வழியைப் பார்த்துட்டுப் போக வேண்டியதுதான்."

"அப்ப என்னை மன்னிச்சுடு, சூர்யா!"

சூர்யா அரவிந்தனைத் திகைப்புடன் பார்த்தாள்.

"ஸாரி சூர்யா! நான் இவ்வுளவு நேரம் சொல்லிட்டு இருந்தேனே சாந்தியோட கணவர் – அது நான் தான்!"

சூர்யா மௌனமாய் தலையைக் குனிந்தபடி மணலைக் கிளறினாள்.

"நீங்க அன்னிக்கு சாந்தி, அவங்க பொண்ணு ரஞ்சனின்னு சொன்ன போதே எனக்கு லேசா சந்தேகம் வந்தது. இன்னிக்கு ரஞ்சனியோட ஸ்கூலுக்கு போயிருந்தேன். அவள் என் பொண்ணுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன். நாளைக்கு சாந்தியைப் பார்க்கப் போகலாம்னு இருக்கேன். இனிமே சாந்திகூடவே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கு முன்னாடி உன்னைப் பார்த்து உண்மையைச் சொல்லலாம்னுதான் வரச்சொன்னேன். என் முடிவு தவறா சூர்யா?"

சூர்யா பெரூமூச்சு விட்டாள். அவள் கண்கள் கலங்கியிருப்பதாய் அரவிந்தன் உணர்ந்தான்.

"தவறில்லைன்னுதான் என் வாயாலேயே ஏற்கனவே சொல்ல வைச்சுட்டீங்களே."

"என்னை மன்னிச்சுடு, சூர்யா! என்னால உனக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்."

"போதும் அரவிந்த்! திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க! உங்க நிலைமையிலே யார் இருந்தாலும், இந்த முடிவைத்தான் எடுத்திருப்பாங்க. உங்களோடவாழ்க்கை சிறப்பா இருக்க என் வாழ்த்துக்கள்!"

"சூர்யா! நாங்க மறுபடி சேரக் காரணமே நீ தான். சூர்யா! நான் உன்னை மறக்கவே மாட்டேன், தாங்க்யூ வெரிமச்!"

சூர்யா விரக்தியாய்ப் புன்னகை புரிந்தாள்.

"அப்ப நான் கிளம்பலாமா?"

"ஒரு சின்ன வேண்டுகோள் சூர்யா!"

" என்ன சொல்லப்போறீங்கன்னு எனக்குத் தெரியும். உங்களை எங்கேயாவது சந்திக்க நேர்ந்தா, தெரியாத மாதிரி காட்டிக்கணும். அதுதானே? கவலைப்படாதீங்க. என்னால உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது.

என் வாழ்க்கையில புதுக்கதை எழுதறதா நான் நினைச்சுக்கிட்டிருந்தேன். இப்பதான் தெரியுது, ஒரு தொடர்கதைக்கு இடைஞ்சலா நடுவில வந்திருக்கேன்; வந்த வழியிலேயே திரும்பிடறேன். ஹ்ம்…எது எப்படியோ, இனிமே சாந்தியும், ரஞ்சனியும் சந்தோஷமா, நிம்மதியா இருப்பாங்க இல்லே! அது போதும் எனக்கு! குட்பை!"

சூர்யாவின் உருவம் மறைந்து போகும்வரை, அவள் சென்ற திசையையே பார்த்தபடி அரவிந்தன் அமர்ந்திருந்தான்.

சூர்யா வாசமிகு மலராய் அரவிந்தன் உள்ளத்தில் மணம் வீசினாள். மலர் மணம் வீசி, வீழ்வது போல சூர்யா அரவிந்தனை அவன் குடும்பத்தோடு இணைத்து விட்டாள்; ஆனால் அவள் பாதை இப்போது வேறு திசையில் மாறிவிட்டது.

சூர்யாவைப் பற்றின உயர்வான எண்ணம் நிறைந்த நெஞ்சோடு அரவிந்தன் வீட்டுக்குத் திரும்பினான்.

மறுநாள் மாலை பள்ளி முடியும் நேரம். அரவிந்தன் சரியான நேரத்துக்கு வந்து ரஞ்சனிக்காகக் காத்திருந்தான்.

அவனைப் பார்த்ததும் ரஞ்சனி துள்ளிக்கொண்டே ஓடிவந்தாள்.

"அப்பா! வந்துட்டீங்களா? இன்னிக்கு நாம வீட்டுக்குப் போறோம்…ஹே….!"

"அம்மா என்ன சொன்னாங்க, ரஞ்சு?"

சாந்தியின் பதில் எப்படி இருந்தாலும், அன்று வீட்டுக்குப் போவதாக அரவிந்தன் ஏற்கனவே முடிவு செய்துவிட்டான். இருந்தாலும் சாந்தியின் பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அவனை விடவில்லை.

"நீங்க வந்தீங்கன்னு நான் சொன்னதை அம்மா நம்பவே இல்லைப்பா. பிறகு நாளைக்கு அப்பா வந்தா, வீட்டுக்குக் கூட்டிட்டு வான்னு சொன்னாங்க."

சாந்தி தன்னைப் பார்ப்பதை தவிர்க்கவில்லை என்பதே அரவிந்தனுக்குப் போதுமானதாக இருந்தது.

இரண்டு வருட நிகழ்ச்சிகளைப் பேசியபடியே ரஞ்சனி உற்சாகமாய் உடன்வர, இருவரும் வீட்டுக்கு வந்தனர்.

"வாங்கப்பா, உள்ளே வாங்க!! ஆயா, எங்கப்பா வந்துட்டார், வந்து பாருங்க..!!"

ரஞ்சனி அரவிந்தனின் கையைப் பற்றி இழுத்துச் செல்ல, ஆயா வந்து ஆச்சரியமாகப் பார்த்து, வணக்கம் சொல்லிப் போனார்.

"ரஞ்சனி! அம்மா எப்படி இருக்கிறா?"

"அதை ஏம்ப்பா கேட்கறீங்க? இப்பல்லாம் அடிக்கடி தனியா உட்கார்ந்துட்டு அழுதுகிட்டு இருக்காங்க."

சாந்தியின் நோயை எண்ணி அரவிந்தன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

ரஞ்சனியோடு விளையாடியபடி நேரம் சென்றுவிட, அலுவலகம் முடிந்து வந்த சாந்தி அரவிந்தனைப் பார்த்து அப்படியே திகைத்து நின்றாள்.

(உறவுகள் தொடரும்…..)

About The Author