உறவுகள் தொடர்கதை – 2

"உள்ளே வாங்க" என்ற அரவிந்தன், மனதுக்குள்ளேயே அந்தப் பெண்ணை எடை போட்டான்.

வயது இருபத்திஆறு இருக்கும். சிவப்பும், வெள்ளையுமாய் சின்ன சின்ன பூக்கள் தெளித்த சுடிதார் போட்டிருந்தாள். துப்பட்டாவை இடத்தோளின் மீது போட்டிருந்தாள். வலப்புறம் ஒரு சிறிய, அழகான கைப்பை ஊசலாடியது.

அமைதியும், அடக்கமும் பொலியும் முகம். சிலரைப் பார்த்தால் அவர்களுடைய பரபரப்பும், கோபமும் நமக்கும் ஒட்டிக்கொள்ளும். வேறு சிலரைப் பார்த்தாலோ அவர்களுடைய நிதானமும், சாந்தமும் நம்மையும் அமைதிப்படுத்தும். இந்தப் பெண் இரண்டாம் வகையைச் சேர்ந்தவள். ‘இவள் கணவன் அதிர்ஷ்டசாலி’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.

அவள் உட்காராமல் இன்னும் நின்று கொண்டிருந்தாள்.

"நீங்க முதல்ல உட்காருங்க; அரவிந்தனைப் பார்க்கலாம்" என்று மீண்டும் வற்புறுத்திய பிறகு நாற்காலியில் அமர்ந்தாள்.

அவள் எதிரே அமர்ந்த அரவிந்தன், "நான் தான் அரவிந்தன். என்ன விஷயம் சொல்லுங்க?" என்றான்.

அவள் தயங்கியபடி தொடங்கினாள். வெட்கப்படுவது போல் தலை குனிந்திருக்க, "நான்….வந்து…என் பேர் சூர்யா. உங்க விளம்பரத்தைப் பார்த்து வந்திருக்கேன். வயது இருபத்தைந்து. படிப்பு பி.காம். பிரைவேட் கம்பெனியில் வேலை செய்யறேன்."

"உங்களுக்காக என்னைப் பார்க்க வர்றதுக்கு…." அரவிந்தன் முடிப்பதற்குள், சூர்யா குறுக்கிட்டாள்.

"எனக்காக யாரும் இந்த உலகத்துல இல்லை.சின்ன வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்துட்டேன். அப்புறம் தூரத்து உறவுக்காரங்க வீடு, தெரிஞ்சவங்க உதவி, இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா போராடி வளர்ந்தேன். படிப்பு முடிஞ்சதும் என் சினேகிதியோட அப்பா சிபாரிசுல இந்த வேலை கிடைச்சுது. பிறகு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சேன். இப்ப லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன்."

"ஐ’ம் ஸாரி."

அரவிந்தன் மெல்லிய குரலில் வருத்தப்பட்டான்.

"பரவாயில்லை, விடுங்க. வருத்தப்பட்டு என்ன லாபம்? உங்க அப்பா, அம்மா எங்கே இருக்காங்க?"

அரவிந்தனின் குரல் இறுகியது.

"அவங்க ஊரில் இருக்காங்க. எனக்கு அவங்க இல்லாத மாதிரி தான்."

"என்ன சொல்றீங்கன்னு புரியலை"

‘நானும், சாந்தியும் – அதாவது என் முதல் மனைவியும் – பிரியக் கூடாதுன்னு ரொம்ப முயற்சி செய்தாங்க. ஆனா நாங்க அவங்க பேச்சைக் கேட்காம ‘டைவர்ஸ்’ பண்ணிட்டோம். அப்ப கோபப்பட்டு ஊருக்குப் போனவங்கதான். அதுக்குப் பிறகு ஒரு தகவலுமில்லை; நான் கடிதம் எழுதினா பதிலும் வர்றதில்லை".

சூர்யா என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாய் இருந்தாள்.

அரவிந்தனே மீண்டும் தொடர்ந்தான்.
"உங்களுக்கு வேற ஏதாவது விவரம் வேணும்னா கேளுங்க"

"நீங்க எங்கே வேலை செய்யறீங்க?"

"சொல்லவே மறந்துட்டேன் பாருங்க" என்றவன் தான் வேலை செய்யும் அலுவலகம், அதில் தன்னுடைய பணி, தான் வாங்கும் சம்பளம், உள்ள சலுகைகள் எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான்.

"வந்து…கேட்கறேன்னு தவறா நினைக்காதீங்க. நீங்க எவ்வுளவு நாளாத் தனியா இருக்கீங்க?"

"நான் டைவர்ஸ் பண்ணி இரண்டு வருஷமாகுது. நானும், அவளும் சேர்ந்து முடிவெடுத்து வாங்கிய விவாகரத்து. ஒரே பொண்ணு, ரஞ்சனி – இப்ப மூணாவது படிக்கிறா. அவ கூடத் தான் இருக்கணும்னு கோர்ட்ல சொல்லிட்டாங்க" என்றவன் சற்று நேர இடைவெளி விட்டு, "எங்க விவாகரத்துக்குக் காரணம் என்னன்னா…"

"பிளீஸ்…நிறுத்துங்க" என்றாள் சூர்யா.

"ஏன் நிறுத்தச் சொல்லிட்டீங்க?" அரவிந்தன் வியப்புடன் கேட்டான்.

"உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில நான் தலையிட விரும்பலை. உங்களுக்கும், உங்க மனைவிக்கும் ஏதாவது பிரச்னை இருந்திருக்கலாம். நீங்க பிரிஞ்சுடலாம்னு தீர்மானிச்சீங்க, பிரிஞ்சுட்டீங்க. அந்தக் காரணத்தைத் தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன செய்யப்போறேன்? உங்க கடந்த காலம் எனக்கு சம்பந்தம் இல்லாதது. அதைக் கேள்வி கேட்க எனக்கு எந்த உரிமையும் இல்லை."

சூர்யாவின் மீதுள்ள மதிப்பு சட்டென்று மேலே ஏறியது.

"இன்னும் ஒரு சின்ன விஷயம், சொல்லட்டுமா? கடந்த காலத்தோட சோகமும், வருங்காலத்தைப் பற்றிய பயமும் சேர்ந்து மனத்தை நிரப்பிடுச்சுன்னா, நிகழ்காலம் நாம உணர்றதுக்குள்ள கரைஞ்சே போயிடும்."

"நீங்க ரொம்ப அழகாப் பேசறீங்க!"

"நீங்க வேற, நான் இப்ப கடைசியா சொன்னது என் சொந்த வசனமில்லை. ஏற்கனவே யாரோ ஒரு மேதை சொன்னது. புத்தகத்துல பார்த்தேன். சட்டுனு மனசுல தங்கிடுச்சு. அதைத்தான் இப்ப சொன்னேன்."

சூர்யா சிரிக்கும் போது கூடுதலான அழகாகத் தெரிவதை அரவிந்தன் கவனித்தான்.

"நானே பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏதாவது கேட்கணும்னா கேளுங்க" என்று சூர்யா சொல்ல அரவிந்தன், "உங்களுக்கு பொழுதுபோக்கு என்ன?" என்றான்.

"சின்ன வயசில பெரிசா எதுவும் கத்துக்கிற மாதிரி சூழ்நிலை இல்லை. இப்ப சில வருஷங்களா புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கு. ரொம்ப சீரியஸா படிக்க மாட்டேன். காமெடியா இருக்கிற கதைகள், சிறுகதைகள் படிப்பேன். சமீபமாத்தான் கொஞ்சம் கனமான விஷயங்களைப் படிக்கத் தொடங்கி இருக்கேன். டி.வி பார்க்கிறது உண்டு. அவ்வுளவு தான். நீங்க?"

"எனக்குப் படிக்கிறது பிடிக்கும். இந்த சப்ஜெக்ட்னு இல்லை. வேர்க்கடலை வாங்கினாக்கூட, அந்தக் காகிதத்தைப் பிரிச்சுப் படிப்பேன். சினிமாப்பத்திரிகையும் கூடப் படிப்பேன். ஒரேயொரு விஷயம் – இந்தக் குடும்பக் கதைகள் எழுதுவாங்களே, அதுமட்டும் படிக்க மாட்டேன். அதென்னவோ, அப்படி ஒரு அலர்ஜி" என்ற அரவிந்தன் தொடர்ந்து, " சரி, அதை விடுங்க. கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள் வேலைக்கு போறதைப் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?"

"இதிலே பொதுவா அபிப்ராயம் சொல்ல முடியாதுங்க. கல்யாணத்துக்குப் பிறகும் குடும்பத்தேவை இருந்தா, பெண்களும் வேலைக்குப் போக வேண்டியதா ஆயிடுது. அப்படியில்லாம, ஒருத்தர் சம்பளமே போதும்னு ரெண்டு பேரும் முடிவெடுத்தா, அப்ப அந்தப் பெண் வேலையை  விட்டுடலாம். உங்க அபிப்ராயம் என்ன?"

"பெண்கள் வேலைக்கு போறதுல எனக்கு ஆட்சேபணையே இல்லை. ஆனா, அவங்களுக்கு வேலையை விடவும் குடும்பம்தான் பெரிசா இருக்கணும். கணவன், குழந்தைகளைக் கஷ்டப்படுத்திக்கிட்டு ‘தன் வேலை தான் பெரிசு’ன்னு பெண்கள் போறது எனக்குச் சுத்தமா பிடிக்காது."

அரவிந்தன் நினைப்பில் சாந்தி இருந்ததால், கடைசி வாக்கியம் சற்று அழுத்தமாகவே விழுந்தது.

"ம்..சரி, நான் புறப்படறேன்" சூர்யா கிளம்பினாள்.

"இருங்க….ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம்."

"இல்லை. பரவாயில்லை. இந்தாங்க என்னோட நம்பர். உங்களுக்கு விருப்பமிருந்தா, ஃபோன் பண்ணுங்க. யோசிக்க ரெண்டு வாரம் போதுமா?’

"ம்.. தாராளமாப் போதும்."

புன்னகையோடு சூர்யாவை வழியனுப்பி வைத்தான் அரவிந்தன்.

(உறவுகள் தொடரும்……)

About The Author