உறவுகள் தொடர்கதை – 7

இரவு மணி பதினொன்று.

கடிகாரம் பதினோரு முறை மணியடித்து ஓய்ந்தது. ஆனந்தி விடிவிளக்கு வெளிச்சத்தில் ஊசலாடும் பெண்டுலத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் மனமும் காதல், நியாயம் என்ற இரு உணர்வுகளுக்கிடையே ஆடிக்கொண்டிருந்தது.

முதன்முதலில் சரணைச் சந்தித்ததும், அவர்கள் காதல் வளர்ந்த விதமும் நினைவில் வந்தன.

சரவணின் ஒன்று விட்ட தம்பி, ஆனந்தியின் வகுப்பில் படிப்பவன். அவனைப் பார்த்துப் பேச அடிக்கடி சரண் ஆனந்தியின் வகுப்புக்கு வருவான். எல்லாரிடமும் கலகலப்பாகப் பேசும் ஆனந்தி கூடிய சீக்கிரம் சரணுடன் அமர்ந்து அரட்டை அடிக்கும் அளவுக்குப் பழகி விட்டாள். அதைத் தொடர்ந்து அவனுடைய நண்பர்கள், ஆனந்தி, அவள் தோழிகள், சரண் என்று எல்லாருமாக ஹோட்டல், சினிமா, பிக்னிக் என்று வெளியே செல்லத்தொடங்கினார்கள். நண்பர்கள் கூட்டத்தை படிப்படியாக விலக்கி இறுதியில் சரண்- ஆனந்தி மட்டும் தனியாகச் செல்லும்படி அவர்கள் நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறிவிட்டது.

"நிச்சயம் இது தெய்வீகக் காதல் தான்" என்றுதான் ஆனந்தி எண்ணியிருந்தாள். ஆனால், இன்று சூர்யா கேட்டுவிட்டுப் போன கேள்விகளை ஆனந்தியால் அலட்சியப்படுத்த முடியவில்லை.

"உங்கள் காதலை நிரூபிக்கும் சாட்சி யார்?" என்று கேட்டு அவை ஆனந்தியைச் சுற்றிச் சுற்றி வந்தன.

ஆனந்தி யோசித்துப் பார்த்தாள். கல்லூரியைப் பொறுத்தரை அவர்கள் எல்லாரையும் போல் நண்பர்கள்தான். வெளியிடத்தில் அவர்களை ஒன்றாகப் பார்த்த ஒரே சாட்சி, சூர்யா மட்டுமே.

சரவணன் ‘ஐ லவ் யூ’ என்று ஒரு வாழ்த்து அட்டை கொடுத்தான்; அவளோ அதே அட்டையில் ‘ஐ டூ லவ் யூ’ என்று கையெழுத்திட்டு சரணிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள்.

ஒருக்கால் சரண் அவளைக் காதலிக்கவே இல்லை என்று சொல்லிவிட்டால், அதை மறுத்து ஆதாரம் காட்ட ஆனந்தியிடம் எதுவுமே இல்லை என்று ஒருபக்கம் மனது நியாயம் கூறியது.

"சேச்சே! சரண் அப்படிச் சொல்லக்கூடியவர் அல்ல. அவர் என்னை மிகவும் நேசிக்கிறார். நாளைக் கல்லூரியில் பார்த்ததும் ‘ஐ’ம் ஸாரி ஆனந்தி! நேற்று என்னால் வரமுடியலை. ப்ளீஸ், மன்னிச்சுடு" என்று கெஞ்சப் போகிறார். இன்று வராவிட்டால் என்ன? உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம். ஊருக்கு எங்கேயாவது அவசர வேலையாக போயிருக்கலாம்; நான் இரண்டு நாளாக கல்லூரிக்குப் போகவில்லை. அதனால் எனக்கு அவர் நிலைமை தெரியவில்லை." என்று காதலில் விழுந்துவிட்ட மறுபக்க மனது சமாதானம் சொன்னது.

ஆனந்தி சரணை கடைசியாக சூர்யா வந்த அன்று ஹோட்டலில் பார்த்ததுதான். எப்படியும் ஞாயிறன்று சரண் வருவான்; திருமணம் நிச்சயமாகி விடும். திங்களன்று திடீர் அறிவிப்பாக கல்லூரியில் கல்யாணச் செய்தியைச் சொல்லும் ‘த்ரில்’லை இழக்க விரும்பாமல் இரண்டு நாள்களாக லீவு எடுத்து வீட்டிலேயே இருந்து¢விட்டாள்.

நியாயம் மூளைக்குப் புரிந்தாலும் மனது காதலையே ஆதரிக்க, சரண் மீது முழு நம்பிக்கையோடு தூங்கத் தொடங்கினாள்.

மறுநாள் சொன்னபடியே ஆனந்தி பேருந்து நிலையத்தில் காத்திருக்க, சூர்யா குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிட்டாள். இருவரும் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில் ஏறினார்கள்.

ஆனந்தி உற்சாகமாகவே இருந்தாள். ‘ஏதோ பெரிதாக நேற்று சரணை சூர்யாக்கா சந்தேகப்பட்டு விட்டாரே! இன்று நேரடியாகவே பார்த்துப் பேசிக்கொள்ளட்டும். அப்போதுதான் என் சரண் மீது நம்பிக்கை வரும்’ என்பது அவள் எண்ணமாக இருந்தது.
சூர்யா நினைவோ வேறுவிதமாக இருந்தது. சரணை முதலில் பார்த்தபோதே அவன் திருமணம் செய்துகொள்ளும் ரகமில்லை என்று ஊகித்துவிட்டாள். அவள் உள்ளுணர்வு அப்படி தீர்மானமாகக் கூறியது. அந்த தைரியத்தில்தான் ஞாயிற்றுக்கிழமை பெண்கேட்க வரும்படி அன்று சரணிடம் கூறினாள்.

நேற்று சரண் வராமல் இருந்தது சூர்யாவின் சந்தேகத்தை உறுதியாக்கி விட்டது. தான் ஏமாறப்போவது தெரியாமல், மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு உடன்வரும் ஆனந்தியை நினைத்தால்தான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

கொஞ்சம் கஷ்டமாக இருந்தபோதிலும், இந்தப் பாடம் ஆனந்திக்கு ரொம்பவே அவசியம் என்பது நினைவுக்கு வந்ததும், தன் வருத்தம் கொஞ்சம் குறைந்ததுபோல சூர்யா உணர்ந்தாள். கூடவே ‘காதல் தோல்வி’ என்று ஆனந்தி மனம் உடைந்து போகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் எழுந்தது.

ஆனந்தியின் கல்லூரி வாசலில் பேருந்து நிற்க, இருவரும் இறங்கினார்கள்.

வழக்கம்போல சரணும் அவன் நண்பர் பட்டாளமும் இன்னும் பல மாணவர்களும் கல்லூரியின் சுற்றுச்சுவரிலேயே அமர்ந்திருந்தனர். ஆனந்தி அவர்கள் இருந்த இடத்தை அடைந்ததும், ‘ஹாய்’ என்றாள். சரண் சூர்யாவைப் பார்த்து திடுக்கிட, மற்ற அனைவரும் பதிலுக்கு ‘ஹாய் ஆனந்தி’ என்று கோரஸாக குரல் கொடுத்தனர்.

"ஹாய் சரவணன்! இப்படி வர்றீங்களா? உங்க கிட்டேகொஞ்சம் பேசணும்" சூர்யா அழைக்க சரண் எழுந்து வந்தான்.

மூவரும் கல்லூரிக்குள் நுழைந்து ஒரு மரத்தின் அடியில் நின்று பேசத் தொடங்கினர்.

ஆனந்திதான் முதலில் ஆவலுடன் கேட்டாள்:

"நல்லவேளை சரண்! உங்களுக்கு நேத்து உடம்பு சரியில்லையோன்னு கவலைப்பட்டேன்; இப்ப உங்களைப் பார்த்ததும்தான் எனக்கு நிம்மதியா இருக்கு. ஆமாம், நேத்து ஏன் வரலை?"

சற்றே கவலை தோய்ந்த குரலில், ஆனந்தி மேலும் தொடர்ந்தாள்.

"உங்க வீட்டுல .. நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கலையா, சரண்?"

சூர்யா இடையில் குறுக்கிட்டாள்.

"உங்க வீட்டுல சம்மதிக்கலைன்னாலும் பரவாயில்லை, சரண்! ஆனந்தி வீட்டுல முழு ஆதரவு உண்டு. எப்ப கல்யாணத்தை வைச்சுக்கலாம்?"

"ஸாரி மேடம்! இந்தக் கல்யாணம் நடக்காது. ஏன்னா…எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை."

ஆனந்தி அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் திகைத்து நின்றாள். சூர்யாவைப் பொறுத்தவரை, இது அவள் எதிர்பார்த்ததுதான், எனவே மேலும் தொடர்ந்தாள்.

"அப்ப சரவணன்! நீங்களும் ஆனந்தியும் பழகினதெல்லாம்?"

"அதெல்லாம் வெறும் நட்பு மேடம். இந்த வயசுல கேர்ள் ஃப்ரெண்ட் இல்லாட்டாதான் அதிசயம். அதுக்காக கல்யாணம் செய்துக்க முடியுமா? நோ சான்ஸ்!!"

"சரண்! நீங்களும் நானும் காதலிச்சது?" ஆனந்தி இன்னமும் சரண் சொன்னதை நம்ப முடியாதவளாய்க் கேட்டாள்.

"ஆனந்தி! அதெல்லாம் காதலாகாது. எல்லார் கூடவும் நீ சகஜமாப் பழகினே, கலகலப்பாப் பேசினே. எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தது. உன்னைக் கவரணும்கிறதுக்காக காதல்ங்கிற வார்த்தையை பயன்படுத்திக்கிட்டேன். தட்ஸ் ஆல்."

"அப்ப நம்ம கல்யாணம் சரண்?"

"திரும்பத் திரும்ப அதையே கேட்காதே ஆனந்தி! அப்படியே நான் கல்யாணம் பண்றதா இருந்தாலும், 50 பவுன்,100 பவுன்னு கொட்டிக் கொடுக்க எங்க ஜாதியிலேயே எவ்வளவோ பேர் காத்துக்கிட்டிருக்காங்க தெரியுமா? உனக்கு இஷ்டமிருந்தா நம்ம நட்பு எப்பவும் போல தொடரலாம்; இல்லைன்னா, இன்னையோட விட்டுடலாம். முடிவு உன்னோடதுதான். பை ஆனந்தி, பை மேடம்!"

சரவணன் முடித்துவிட்டுப் போய்விட்டான்.

காதல்தோல்வி, ஏமாற்றப்பட்ட அவமானம், சரவணனுடைய உண்மை சுபாவம் ஏற்படுத்திய அதிர்ச்சி – அனைத்தும் சேர்ந்து தாக்கியதில் நிலைகுலைந்து போய், கண்ணீர் வழிய நின்றிருந்த ஆனந்தியை சூர்யா மெல்ல ஆறுதலாய் அணைததபடி வீட்டுக்குச் செல்லப் புறப்பட்டாள்.

(உறவுகள் தொடரும்…..)

About The Author