உறவுகள் தொடர்கதை – 9

அரவிந்தன் மிக உற்சாகமாக இருந்தான்.

முன் தினம் சூர்யா அவன் அலுவலகத்திற்கு போன் செய்து, "நாளைக்கு உங்க வீட்டுக்கு வரலாமா? என் தோழி மலர்னு சொன்னேனே, அவ உங்களை சந்திக்க விரும்பறா" என்று அனுமதி கேட்க, மகிழ்ச்சியோடு வரும்படி கூறினான்.

அன்று ஞாயிறு என்றாலும் காலை சீக்கிரமே எழுந்து அறையை ஒழுங்குபடுத்தினான். வரவேற்பறையை நீண்ட நாள்களுக்குப் பின் ஒட்டடை அடித்து சுத்தம் செய்தான்; சிதறிக் கிடந்த நாளிதழ்களை அழகாக அடுக்கி வைத்தான். சூர்யாவுக்குக் கொடுப்பதற்காக இனிப்பு, கார வகைகளை வாங்கி வைத்தான்.

சொன்னபடி சூர்யாவும், மலரும் மாலை நான்கு மணிக்கு வந்தனர். அறிமுகம் முடிந்தபின் அரவிந்தன் மலரிடம் அவள் படிப்பு, குடும்பம் பற்றி பேசினான். இடையில் மலர்,

"சூர்யா உங்ககிட்டே சாயந்தரம் வரேன்னு சொல்லிட்டா; ஆனா நான் காலையிலேயே வந்து ஒரு சர்ப்ப்ரைஸ் கொடுக்கலாம்னு பிளான் வைச்சிருந்தேன்."

"ஐயையோ! நல்ல வேளை!! நான் தப்பினேன்; காலையிலே வந்திருந்தா, இந்த வீடே வேற மாதிரி இருந்திருக்கும்." என்று அரவிந்தன் சிரித்தான்.

மலர் உடனே, " பார்த்தியா சூர்யா! நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டோம், சே!" என்றவள், அரவிந்தனிடம், "உங்க வீட்டுக்கு வர்றதா இருந்த பிளானை மாத்தி சூர்யா அவ ஆபிஸ்ல கூட வேலை செய்றவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டா" என்றாள்.

"அதுதான், நான் அன்னிக்கு உங்ககிட்டே சொன்னேனே, ப்ரியா அவங்க வீட்டுக்குப் போயிருந்தோம்."

"ஆங், இப்ப ஞாபகம் வருது" என்று அரவிந்தன் சொல்ல, மலர் குறுக்கிட்டாள்.

"சூர்யா, அவங்க பேரு சாந்தின்னு அவங்க பொண்ணு சொன்னா; நீ என்ன ப்ரியான்னு சொல்றே?"

"மலர்! அவங்க முழுப்பேர் சாந்திப்ரியா. எங்க ஆபிஸ்ல ஏற்கனவே ரெண்டு சாந்தி இருக்காங்க. அதனால இவங்களை ப்ரியான்னுதான் சொல்றோம்."

மலர் அரவிந்தனிடம், "அவங்க பொண்ணு என்ன ஸ்மார்ட் தெரியுமா? ஆனா பாவம் அது வயசுக்கு மீறிக் கஷ்டப்பட வேண்டியிருக்கு பாருங்க"

"என்ன விஷயம் சூர்யா? புரியற மாதிரிதான் சொல்லேன்"

"அவங்க எப்பவுமே ரிசர்வ்டு டைப். அன்னிக்கு மயக்கம் போட்டு விழுந்த பிறகு ரொம்ப கவலையா தெரியத் தொடங்கினாங்க. நான் ஆபிஸ்லே வைச்சு அவங்களைக் கேட்டுப் பார்த்தேன். சொல்ல மறுத்துட்டாங்க; எனக்கு மனசு கேட்கலை; அதான் இன்னிக்கு மலரைக் கூட்டிட்டு நேரா அவங்க வீட்டுக்கு போயிட்டேன்."

                                                              **************************

"சூர்யா! எனக்கு முன்ன, பின்ன தெரியாத ஒருத்தர் வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டு வந்திருக்கே, வந்தோமா, பார்த்தோமா, பேசினோமானு கிளம்பணும்" என்ற மலருக்குத் தலையசைத்த சூர்யா, ப்ரியா வீட்டுக் கதவைத் தட்டினாள்.

கதவைத் திறந்த ப்ரியாவின் மகள் சூர்யாவை அடையாளம் தெரிந்துகொண்டாள்.

"சூர்யா ஆன்ட்டி தானே! அன்னிக்கு அம்மா கூட வீட்டுக்கு வந்தீங்களே!" என்றபடி, இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.

மலரை அறிமுகம் செய்ய அவளுக்கு வணக்கம் சொல்லிக் கைகுவித்தாள்.

"அம்மா இருக்காங்களா?" என்று சூர்யா கேட்டதுமே அந்தப் பிஞ்சு முகம் வாடியது.

"ம்ம்..உள்ளே ரூம்லே அழுதுகிட்டிருக்காங்க" என்று மெதுவாகக் கூறினாள்.

"என்ன அழறாங்களா?" சூர்யா அதிர்ச்சியாய்க் கேட்க, "ஆமாம் ஆன்ட்டி! முன்னெல்லாம் நான் "அப்பா வேணும்" அப்படின்னு கேட்டு அடம்பிடிச்சா, அம்மாவும் அழுவாங்க. ஆனா, இப்பல்லாம் நான் நல்லபெண் ஆயிட்டேன் ஆன்ட்டி! அப்பா வேணும்னு அழுகிறதேயில்லை. இப்ப அம்மா ரொம்ப ‘பேட்’ ஆயிட்டாங்க, அடிக்கடி உட்கார்ந்து அழுதுகிட்டே இருக்காங்க, நான் சொன்னாலும் கேட்கவே மாட்டறாங்க, ப்ளீஸ் ஆன்ட்டி, நீங்களாவது அம்மா கிட்டே சொல்லுங்க"

"அப்பா எங்கேம்மா போயிட்டார்?’

விவரம் அறியாத மலர் கேட்க, பிறருடைய பாவத்துக்காக சிலுவை சுமந்த இயேசுபிரான் போல் பெற்றோர் தவற்றால் வாடிக்கொண்டிருக்கும் அந்தக் குழந்தை தலை குனிந்து சோகமான குரலில்,"ம்..டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்க. எங்கப்பா எங்களை விட்டுட்டு தனியா போயிட்டாரு" என்றாள்.

"மலர், நீ குழந்தை கூட பேசிக்கிட்டிரு, நான் போய் ப்ரியாவைப் பார்த்துட்டு வரேன்" என்று சூர்யா சென்றாள்.

அழுது கொண்டிருந்த ப்ரியா, தன்னை யாரோ தீண்டியது உணர்ந்து நிமிர, சூர்யா தெரிந்தாள்.

"நீங்க …எங்கே….இங்கே ..என் வீட்டிலே..?" ப்ரியா திணறினாள்.

"ப்ளீஸ் ப்ரியா! என்ன கஷ்டம்னாலும் மனசுல போட்டு அடக்கி வைக்காதீங்க. உங்களுக்கு உதவி செய்ய நாங்க எல்லாரும் இருக்கோம். சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்னை? நீங்க இப்படி அழுதுகிட்டே இருக்கீங்கன்னு உங்க பொண்ணு ரொம்ப பயந்து போயிருக்கா"

"அவளோட எதிர்காலத்தை நினைச்சுத்தான் நான் தினம் தினம் அழுதுகிட்டிருக்கேன், சூர்யா" என்ற ப்ரியா, மேலும் அழத் தொடங்கினாள்.

"ப்ளீஸ்…அழாதீங்க, என்ன விஷயம்னு சொல்லுங்க"

"அன்னிக்கு டாக்டர் டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வரச் சொன்னார், இல்லியா? அதன்படி எல்லா ரிப்போர்ட்டும் எடுத்துக்கிட்டு மறுபடி போனப்போ, அவர் என்ன சொன்னார் தெரியுமா, சூர்யா? என் இதயம் ரொம்ப பலவீனமா இருக்காம்; அதிகபட்சம் ஒரு வருஷம்தான்; அதுக்குமேல நான் உயிரோட இருக்கமாட்டேன்னு சொல்லிட்டார்."

சூர்யா திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

"நான் சாகப்போறதைப் பத்திக்கூட எனக்குக் கவலையில்லை, சூர்யா! ஆனா என் பெண்ணோட எதிர்காலம்? அவ நிலைமை என்னவாகும்? அதை நினைச்சுத்தான் அழறேன்."

"அதுக்குள்ளே நீங்க மனசைத் தளர விடாதீங்க, ப்ரியா. எவ்வளவோ நல்ல ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க; அவங்க கிட்டே காட்டினா, உங்களுக்கு குணமாயிடும்."

"எனக்கு அதெல்லாம் அவசியமில்லை சூர்யா! அம்மாவும் இல்லாம என் பொண்ணு அனாதை ஆயிடுவாளோன்னு பயமா இருக்கு."

"சேச்சே! வீணா பயப்படாதீங்க ப்ரியா! அவங்க அப்பாவை வரச் சொல்லலாமே? உங்களுக்கும் துணையாயிருக்கும்"

"இல்லை சூர்யா! நாங்க டைவர்ஸ் வாங்கின ஒரு வாரத்துல அவர் ஆபிஸில் லீவு எடுத்துக்கிட்டு வடக்கே எங்கேயோ போயிட்டார். நானும் அப்போ இருந்த கோபத்திலும், வெறுப்பிலும் அதுக்குப் பிறகு அவரைப் பார்க்க முயற்சி செய்யலை. இப்போ என் நிலைமை தெரிஞ்சா வருவார், என் மேல பரிதாபத்தினால வருவார்; என் மேல கோபம் இருந்தாலும் நான் சாகப்போறேன்னு தெரிஞ்சா அவரும் வேதனைப்படுவார்; என்மேலே கோபிச்சுக்கிட்டு எங்கேயோ சந்தோஷமா இருக்கிறவரை எதுக்காகத் தேடிக் கூட்டிட்டு வந்து வேதனைப்படுத்தணும்? நீங்களே சொல்லுங்க"

சூர்யாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"அப்ப அவருக்கு இதைப்பற்றிச் சொல்ல வேண்டாங்கறீங்களா?"

"நான் போனபிறகு ரஞ்சனி அவர்கிட்ட தான் வளரணும். அவருக்கு ரஞ்சனின்னா உயிர். அவளை நல்லா வளர்ப்பார். நான் இறந்த பிறகு நீங்கதான் அவரைக் கண்டுபிடிச்சு, அவர்கிட்டே அவளை ஒப்படைக்கணும். தயவுசெய்து, எனக்காக இந்த உதவியைச் செய்யறீங்களா, சூர்யா?"

"கண்டிப்பா செய்யறேன். நீங்களும் உங்க உடம்பை கவனமா பார்த்துக்கணும். மருந்துகளை தவறாம சாப்பிடணும், அடிக்கடி அழக்கூடாது."

"சரி, சூர்யா, இன்னோர் விஷயம், ரஞ்சனி ஏற்கனவே அவ அப்பா கூட இல்லையேங்கற ஏக்கத்துல இருக்கா. அவகிட்ட இதையும் சொல்லி, கஷ்டப்படுத்த வேணாம், குழந்தை கிட்டே சொல்லிடாதீங்க."

                                                                  ******************

கேட்டுக்கொண்டே இருந்த அரவிந்தன் சட்டென திடுக்கிட்டவனாய், "அந்தக் குழந்தை பேர் என்ன சொன்னீங்க?" என்று கேட்க, சூர்யா ‘ரஞ்சனி’ என்றாள்.

(உறவுகள் தொடரும்……)

About The Author