கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 26

பத்துமணி வரை படுத்தே கிடந்த கங்கா பின் எழுந்து தன் புகலிடமான அலுவலகத்துக்குக் கிளம்பினாள். ஞாயிற்றுக் கிழமையானாலும் அவளுக்குப் பார்ப்பதற்கு வேலையா இல்லை! அதற்கு மேல் வீட்டிலிருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்.

நேரம் போவது தெரியாமல் வேலையில் மூழ்கி இருந்தவளைத் தொலைபேசி கலைத்தது.

"உங்களைப் பார்க்க அஞ்சலின்னு ஒருத்தங்க வந்திருக்காங்க, மேடம்" செக்யூரிடி

‘ஞாயிற்றுக் கிழமையில் விசிட்டரா? விசித்திரமாக இருக்கிறதே!’

"எந்த கம்பெனின்னு கேளுங்க"

அவர் கேட்டுவிட்டு, "பர்சனலா பேசணுமாம், மேடம்" என்றார்

அவளைப் பார்த்தவுடன் கங்காவுக்கு அவள் யாரெனப் புரிந்தது. ரகுவின் ரசனை அவளில் வழிந்தது.

"நான்… " என அஞ்சலி தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளத் தயங்கியபோது, "தெரியும்… சொல்லுங்க" என அமைதியாய்ச் சொன்ன கங்காவை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் அஞ்சலி.

"மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன்"

கங்கா வறட்சியாய்ப் புன்னகைத்து, "அதுக்கு அவசியமில்லை" என்றாள் அவளைப் பாராமல்.

"யமுனா ரொம்ப அப்செட் ஆயிட்டதா சொன்னார்"

"ம்… வீட்ல இருக்கப் பிடிக்கலைன்னு ஹாஸ்டல் தேடறா" சொன்னபோது அவள் குரல் உடைந்ததில் அஞ்சலிக்கு மிகுந்த சஞ்சலம் உண்டானது.

"நான் பேசிப் பார்க்கட்டுமா?"

தோளைக் குலுக்கினாள் கங்கா. "அவளுக்காகத்தான் இத்தனை நாள் பல்லைக் கடிச்சிக்கிட்டு ஒரே வீட்ல இருந்தோம். இப்போ அவளே போறேங்கறா… ப்ச்… அவள் கல்யாணத்தை எப்படி நடத்தப் போறேனோன்னு நினைச்சாதான் பயமா இருக்கு" யாரிடமும் மனதைத் திறக்காதவள் அபூர்வமாய் தன் கவலையை வெளிப்படுத்தினாள்.

"யமுனா செட்டிலாகிற வரை என்னைப் பார்க்க வர வேண்டாம்னு அவர்கிட்டே சொல்லிடட்டுமா?" என அஞ்சலி கேட்டதும் அவளை நிமிர்ந்து பார்த்தாள் கங்கா.

"எனக்குத் தெரியலை. டிவோர்ஸ் பேப்பர்ஸ்ல கையெழுத்துப் போட நான் தயாரா இருக்கேன். ஆனா அது யமுனா வாழ்க்கையை பாதிச்சதுன்னா என்னை என்னால மன்னிக்கவே முடியாது" கவலையாய்த் தன் முகத்தைக் கையில் தாங்கிக் கொண்ட கங்காவின் தாய் மனது அஞ்சலிக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் தீர்வு சொல்லும் நிலையில் அவளில்லையே!

"அவருக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்யச் சொல்லுங்க. அவரவர் வாழ்க்கை போகிற படி போகட்டும்" என்று விரக்தியாய் சொல்லிவிட்டு கங்கா எழுந்து கொண்டதும் குறிப்பை உணர்ந்தவளாய் அஞ்சலி விடை பெற்றாள்.

"ஒரே நிமிஷம்… உங்களுக்கு எவ்வளவு நாளாய் அவரைத் தெரியும்?" என்ற கங்காவின் கேள்விக்கு, "சின்ன வயசிலருந்தே தெரியும்" என்று தயக்கமாய்ச் சொன்னாள் அஞ்சலி.

"ம்ம்ம்… நீங்க முன்னமே கல்யாணம் பண்ணிட்டிருந்திருக்கலாம். நான் தப்பிச்சிருப்பேன்" விளையாட்டாய்ச் சொலவது போல் பாவனை செய்தாலும் கங்காவின் கூற்றிலிருந்த கசப்பு அஞ்சலியின் மனதைக் கீறிற்று.

கீழே காரில் காத்திருந்த ரகுவிடம், "ரொம்ப ஸ்வீட் லேடி. அவங்களை உனக்கு ஏன் பிடிக்காமப் போச்சு, ரகு?" என்று கேட்டவளிடம், "திருத்தம். எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காமப் போயிருச்சு" என பதிலளித்தார்.

"யமுனா ஹாஸ்டல் போகப் போறாளாம்" என்றவுடன் அவர் முகத்தில் சோகம் படர்ந்ததைக் கவனித்தாள் அஞ்சலி.

"நான் பேசாம உன்னோடேயே தங்கிடறேனே, அஞ்சலி. அவங்க ரெண்டு பேருமாவது நிம்மத்¢யா இருக்கட்டும்" என்றார்.

"அப்புறம் யமுனா என்றைக்கும் உன்னையும் என்னையும் மன்னிக்கமாட்டா, பரவாயில்லையா?"

"என்னை என்னதான் செய்யச் சொல்றே, அஞ்சலி?"

"யமுனாகிட்டே பேசு, ரகு"

"என் மூஞ்சிலயே முழிக்கப் பிடிக்கலைன்னுட்டா என் பொண்ணு" கரகரவென்ற குரலில் அவர் சொன்னதற்கு, "அப்போ அவ எவ்வளவு ஹர்ட் ஆகி இருக்கணும்? அவ புத்திசாலின்னு நீதானே சொன்னே? எடுத்துச் சொன்னா புரிஞ்சிப்பா" என்றாள் அஞ்சலி மிருதுவாக.

***

திங்களன்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது யமுனாவின் அலைபேசி அழைத்தது. யமுனா அதனை அலட்சியப்படுத்தியதைக் கண்ட விஜி அவள் பையிலிருந்து அதனை எடுத்து நம்பரைப் பார்த்து, "அம்மாடி" என்றாள்

"தெரியும்" என்றவளை முறைத்துக் கொண்டே, "ஹலோ ஆன்டி நான் விஜி பேசறேன்" என்றாள்.

"யமுனா இல்லையாப்பா?"

"அவ… பாத்ரூம் போயிருக்கா, ஆன்டி"

"ம்ம்… என் மேல இன்னும் கோபம் தீரலையாமா?"

"ஆன்டி… "

"அவர் பண்றதுக்கு நான் என்னம்மா செய்வேன்? எங்கிட்ட ஏன் பேச மாட்டேங்கறா?"

"நான் சொல்றேன், ஆன்டி"

"அவளை வீட்டுக்கு வரச் சொல்ல்லுப்பா"

"ஹாஸ்டல் போறேங்கறா, ஆன்டி"

"எனக்கு நோட் எழுதி வச்சிருந்தா. அவ ஹாஸ்டல்ல இருந்துக்க மாட்டா, விஜி. ஒரு ரெண்டு நாள் உங்க வீட்ல வச்சிருந்துட்டு சமாதானப்படுத்தி அனுப்பப் பாரும்மா" தவிப்புடன் சொன்னாள் கங்கா.

"சரி, ஆன்டி" விஜிக்கு கங்காவின் மேல் அனுதாபம் பிறந்தது

"உன்னால ஹாஸ்டல்ல இருந்துக்க முடியாதுன்றாங்கடி உங்கம்மா"

"அவங்க என்ன சொல்றது? இப்பவே போய் நான் வார்டனைப் பாக்கப் போறேன்" என வீராப்புடன் கிளம்பினாள் யமுனா.

"சரியான அடம்டி நீ. சரி, நீ போயிட்டு வா, நான் யாரைப் பார்த்தாவது அசென்மென்ட் காப்பியடிச்சு வைக்கிறேன்." என்று அவளை அனுப்பி வைத்தாள் விஜி

வகுப்பறையை விட்டு வெளியே வந்ததும் எதிரில் வந்த வகுப்புத் தோழி ஒருத்தி, "யமுனா உன்னைத் தேடி ஒரு லேடி வந்திருக்காங்க. கீழே நோட்டிஸ் போர்ட்கிட்டே நிக்கறாங்க. க்ரீன் கலர் ஸாரி. வெரி ஸ்மார்ட். அம்மாவா?" என்றாள்.

"தெரியலையே" என்றபடி குழப்பத்தோடு கீழே வந்தவள், தோழி சொன்ன அடையாளத்துடனிருந்த அஞ்சலியிடம், "ஐ’ம் யமுனா. நீங்க?" என்றாள்.

About The Author