கந்தர்வ வீணைகள் (15)

ஆயிற்று.. எல்லாம் முடிந்து போனது.. அம்மா வாழ்ந்ததும்.. அந்த வீட்டில் இருந்ததும்.. இவனுடன் பேசியதும்..
ஒவ்வொரு இடமாக சஞ்சு பார்த்தான்..

”டேய் சஞ்சு எழுந்து படிடா.. அப்பா திட்டப் போறார்..”

”சஞ்சு ஸ்கூல்ல இருந்து சீக்கிரம் வந்திடுப்பா.. உனக்குப் பிடித்த பக்கோடா போடப் போறேன்..”

”ஆமா.. இவன் படிக்கிற படிப்புக்கு பக்கோடாதான் பாக்கி.. முட்டையை அவிச்சு வை.. இவன் வாங்குற மார்க்குக்கு சரியா இருக்கும்..”

”எந்தக் குழந்தையைத் திட்டுறீங்க..?”

”ஆமா.. குழந்தை..”

சட்டென்று காட்சி மாற்றம்..

”இந்தா சஞ்சு.. இந்தப் பணத்தை வைச்சுக்கோ.. நகையை வைச்சுக்கோ.. ச்சும்மா பீரோல கிடக்குற நகை உனக்கு உபயோகப்படும். இந்தப் பாழும் உலகத்திலேயே பணம் இல்லேன்னா ஒண்ணும் இல்லே.. உன் சொந்தக் கால்லே நிக்கணும். நீ நல்ல நிலைக்கு உயரணும்..”

அம்மா..

இன்னமும் இவன் கண்ணீர் வற்றவில்லை.

பால் சுரந்த நெஞ்சில் இவன் ரத்தக் கண்ணீரை வரவழைத்துவிட்டானோ..?

சஞ்சு கண்ணீர் துடைத்தான்.

அம்மாவின் இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்துவிட்டன. தாலி கட்டிய மனைவி போல் ப்ரவீணா இவனுடன் கூட நின்றாள். எதுவும் பேச முடியாத நிலை.அம்மாவை எரித்து சாம்பலைக்கூட ஆற்றில் கரைந்துவிட்டது..

கறுப்பு, பதினோராவது நாள்.. என்று நிறைய சடங்குகள்.. வேண்டாம்.. இதற்கெல்லாம் ப்ரவீணா இங்கிருக்க வேண்டாம்.
அவளையும், ப்ரியாவையும் ஊருக்கு அனுப்பிவிட வேண்டும்.அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு குற்றவுணர்வு.
இவன் அலுவலகத்திற்குக்கூட போன் செய்து தகவல் சொல்லிவிட்டாளாம்..சஞ்சு வேலைக்கு வர இன்னும் ஒரு மாதமாகும் என்று சொல்லிவிட்டாளாம்..

இவனுக்கு ஆச்சரியம்.. வேதனை..

இவளை இவன் சந்தித்ததே ஒரு விபத்து..

அதன் பின் எத்தனை விபத்துக்கள்..

இவன் மெல்ல ப்ரவீணாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தான்..

குழந்தை ப்ரியா தூங்கிக் கொண்டிருந்தாள்.

சஞ்சு கனைத்தான்.

சட்டென்று ப்ரவீணா திரும்பினாள்.

”ஊருக்குக் கிளம்பலை.. இப்படி நான் கேட்கக் கூடாதுதான்.. ஆனா எனக்காக உங்க நேரத்தை..?”
ப்ரவீணா சிரித்தாள்.

”கரெக்டா.. நானே சொல்லணும்னுதான் நினைச்சேன். ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான்.. ப்ரியாவுக்கு ஸ்கூல் வீணாகுது..”

”என்னிக்குக் கிளம்புறீங்க..? டா.. டாக்ஸிக்கு..”

”வேண்டாம்.. நான் செல்லிலேயே எங்க ஆபீஸ் வேனுக்கு போன் பண்ணிட்டேன்.. இன்னிக்கு வந்திரும்..”

சஞ்சய்க்கு கொஞ்சம் வேதனையாக இருந்தது. ப்ரவீணா இவனை விட்டுப் பிரியும் நேரம் வந்துவிட்டது..

”உ.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை..”

”எதுக்கு..?”

”எல்லாத்துக்கும் நீங்க பண்ணின ஒவ்வொரு காரியத்துக்கும்.. முன் பின் அறிமுகமில்லாத எனக்கு நீங்க செஞ்ச பேருதவிக்கு..”

”இந்தக் கிராமம்.. இந்தச் சூழ்நிலை.. எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்பப் புடிச்சது.. அதுவும் உங்க அம்மா ஒண்டர்புல் லேடி. ஆதர்ஷ பெண்மணி. அவங்க உயிரோட இருந்தபோது இங்கே வராமப் போயிட்டோமேன்னு ஒரு ஆதங்கம். என்னோட கந்தர்வ வீணையை மீட்டப் போற சரஸ்வதி அவங்க..”

கந்தர்வ வீணை.. ப்ரவீணாவின் அடுத்த புஸ்தகத் தலைப்பு..

”அதைத்தான் எழுதிட்டிருந்தேன். இன்னும் இரண்டு நாள்ல முடிஞ்சிரும். இங்கேயே அதை முடிச்சிட்டுத்தான் கிளம்பப் போறேன்..”

”அப்போ ஆபீஸ் வண்டி..?”

”அது ப்ரியாவை கான்வென்ட்டுக்கு அனுப்ப.. நான் போறேன்னு சொன்னனே..?”

ஒரு நிமிஷம் இவனுள் ஆயிரமாயிரம் ரோஜா இதழ்களின் வர்ஷிப்பு..!

”ஆ.. ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன். உங்க அம்மாவோட கடைசி ஊர்வலத்துக்கு ரொம்பப் பேர் வந்தாங்க. அதுலே அதுலே.. ஒருத்தர் உள்ளே ஓடி வந்து அண்ணி.. அண்ணின்னு உங்க அம்மா மேல புரண்டு விழுந்து அழுதாரே.. அவர் யார்..?”

இவன் யோசித்தான்..

அது.. அது யார்..? ஆ.. இப்போது நினைவுக்கு வருகிறது. அது.. அது.. குமாரசாமி.. இவனின் தந்தையின் ஒன்றுவிட்ட தம்பி. தூரத்து உறவு. இவர்கள் வீட்டில்தான் இருந்தான். அப்பாவின் விவசாய வேலைகளுக்கு உதவியாக ஒரு எடுபிடியாக இருந்தவன்..
சுருதியின் மரணத்திற்குப் பிறகு எல்லாம் மாறிப் போனது. அப்பா நிலபுலன்களை விற்றுவிட்டார். இவனும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

இந்தக் கிராமத்து நிகழ்வுகள் எதுவும் இவனுக்குத் தெரியாது.

சஞ்சய் பேசினான்..

”அவர் என்னோட தூரத்து உறவு.. முந்தி எங்க வீட்ல இருந்தார். இப்போ எங்கே இருக்காருன்னு தெரியலை..”

ப்ரவீணா இறுகிய குரலில் கூறினாள்.

”அவரை எனக்குப் பார்க்கணும்..”

”அப்பாகிட்ட கேக்குறேன்..”

”வேண்டாம்.. நானே விசாரிச்சுக்கிறேன்..”

அவர் தூரத்து உறவு..

”உங்களுக்கு.. ஆனா எனக்கு நெருங்கிய உறவு..”

சஞ்சய், பிரவீணாவைப் பயத்துடன் பார்த்தான்.

நெருங்கிய உறவு.. அப்படியென்றால் மனைவியா..?

சஞ்சய் குழப்பத்துடன் ப்ரவீணாவைப் பார்த்தான்.

(தொடரும்)

About The Author