சிபி (2)

எழுந்து கொள்ளலாமா, அல்லது கண்களை மூடிக்கொண்டு இன்னும் பத்து நிமிஷம் படுத்துக் கிடக்கலாமா என்கிற சோம்பலிலிருந்தபோது, பக்கத்தில் கிடந்த ஸெல்ஃபோன் செல்லமாய்ச் சிணுங்கியது.

ஃபோனை எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்ததும் பரபரப்பானேன்.

"தலைவர்! அஸ்ஸலாமு அலைக்கும் தலைவர்!"

"மெட்ராஸ்க்கு வந்துட்டிருக்கேன்" என்று மாநிலத் தலைவர் சொன்னதும் படுக்கையிலிருந்து துள்ளியெழுந்தேன்.

"தலைவர்! ட்ரெய்ன்லதான? அனந்தப்புரியா தலைவர்?"

"ட்ரெய்ன்ல டிக்கட் கன்ஃபம் ஆகல தம்பி. பஸ்ல வந்துட்டிருக்கேன். செங்கல்பட்டு தாண்டியாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்ல கோயம்பேடு வந்துருவேன். தம்பி! ஃப்ரீயா இருக்கீங்களா? கோயம்பேட்டுக்கு வர முடியுமா?"

"இதோ கௌம்பிட்டேன் தலைவர், வந்துர்றேன்."

கன்னியாகுமரி மாவட்டக் கட்சித் தொண்டர்கள் பரிசளித்த அம்பாஸடர் டர்போ கார் தலைவரிடம் இருக்கிறது. ரயில் டிக்கட் கன்ஃபம் ஆகவில்லையென்றால் நம்ம தலைவர் என்ன செய்திருக்க வேண்டும்? தக்கலையிலிருந்து காரில் திருவனந்தபுரம் போயிருக்க வேண்டும்.

அகில இந்தியப் பொதுச் செயலாளர் டாக்டர் நீலன் நாயருக்கு ஒரு ஃபோன் போட்டால் அவர் சென்னை ஃப்ளைட்டில் ஒரு ஸீட்டுக்கு ஏற்பாடு செய்து விடுவார்.

திருவனந்தபுரத்தில் விமானமேறி, அலுங்காமல் வியர்க்காமல் ஒண்ணே கால் மணி நேரத்தில் திரிசூலத்தில் வந்து தரையிறங்கிவிடலாம்.

நானும் கட்சிக் கொடி கட்டின பச்சை மாருதியில் பந்தாவாய்ப் போய்த் திரிசூலத்தில் தலைவரைப் பிக் அப் பண்ணிக் கொண்டு வரலாம்.

தலைவர், நாகர்கோவிலில் அரசாங்க விரைவுப் பேருந்தில் ஏறி, எக்ஸ் எம்.எல்.ஏ-வுக்கான இலவச ஆசனத்தில் ராத்திரி முழுக்க உறக்கம் துறந்து உட்கார்ந்து பயணம் செய்து கோயம்பேட்டை வந்தடைகிறார்.

மஹாத்மா காந்தியிடம் கேட்டார்களாம், "நீங்கள் ஏன் ரயிலில் எப்பொழுதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்கிறீர்கள்" என்று.

"ரயிலில் நான்காம் வகுப்பு இல்லையே" என்றாராம் மஹாத்மா.

அது உன்னத மாந்தர்களின் காலம். தேசியவாதிகளின் காலம், சரி.

மாட்டிக் கொள்ளாத வரை தியாகப் பரம்பரை வேஷம், மாட்டிக் கொண்டால் திஹார் ஜெயில் வாசம் என்று ஊழலில் ஊறிய அரசியல்வாதிகள் ஆதிக்கம் புரிந்து கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் இப்படியொரு கட்சித் தலைவரா!

அவசர அவசரமாய்க் காலைக் கடமைகளை முடித்து விட்டுக் கிளம்பினேன். ஷேவ் செய்து கொள்ள அவகாசமில்லை. பரவாயில்லை. திரிசூலத்துக்கா போகிறேன்? கோயம்பேட்டுக்குத்தானே என்று மாடிப்படியில் இறங்க ஆரம்பித்தவனுக்கு மனசு கேட்கவில்லை.

அடடே! நம்ம மாநிலத் தலைவரை வரவேற்க ஸ்மார்ட்டாய்ப் போக வேண்டாமோ? வாட்ச்சைப் பார்த்து மனசைத் தேற்றிக் கொண்டு பாத்ரூமுக்குள் ஓடி, ஷேவிங் நுரையைப் பாவிக்காமலேயே ரேஸரால் டிரை ஷேவ் செய்து கொண்டு படியிறங்கினேன்.

கோயம்பேடு போய்ச் சேரவும் தலைவருடைய ஃபோன் வரவும் சரியாயிருந்தது.

பதிமூணு மணி நேர, அசௌகர்யமான பஸ் பிரயாணத்தின் அலுப்பை முகத்தில் வெளிப்படுத்தாமல், புன்னகைக்கிற பிரகாசமான வதனம் தலைவருக்கு.

எக்ஸ் எம்.எல்.ஏ என்கிற தகுதியின் அடிப்படையில், தலைவர் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் வந்து தங்குவார். அடிக்கடி வந்து இவர் சகாய வாடகைக்குத் தங்கிவிட்டுப் போகிறார் என்பதற்காகவோ என்னவோ, அந்த ஹாஸ்டல் கட்டடத்தையே இப்போது இடித்து விட்டார்கள்.

எழும்பூரில், கென்னத் லேன் என்கிற மூச்சு முட்டுகிற சந்துக்குள்ளே ஓர் ஒண்ணே முக்கால் நட்சத்திர ஹோட்டேலில்தான் இப்போது தங்கல்.

உட்கார்ந்த நிலையிலேயே முழு இரவும் பயணம் செய்து வந்தவர், மெத்தையைக் கண்டதும் கால்நீட்டிப் படுத்துக் கொஞ்சம் கண்ணயர வேண்டாமோ? ம்ஹும். குளித்து விட்டு உடனே கட்சி அலுவலகத்துக்குக் கிளம்ப வேண்டுமென்றார்.

தலைவர் வருகிற தகவல் கிடைத்து, மத்திய சென்னை, தென் சென்னைக் கட்சிப் பிரமுகர்கள் சிலர் தலைவரைப் பார்க்கக் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தார்கள். மூத்த பொதுச் செயலாளர் அறிவரசன் மேலே ஒரு புகார்ப் பட்டியலோடு வந்திருந்தார்கள்.

"அந்த ஆள் கட்சி விரோத நடவடிக்கைகள்ள ஈடுபட்டிருக்கார் தலைவர்."

"எத வச்சிச் சொல்றீங்க?"

"ஒங்களுக்கு விரோதமா வேல செஞ்சிட்டிருக்காரு."

"மாநிலத் தலைவருக்கு விரோதமா வேல செய்றதக் கட்சி விரோத நடவடிக்கைன்னு எப்டிங்க சொல்ல முடியும்?"

"அதில்லீங்க தலைவர்! கட்சித் தொண்டர்களுக்கு மத்தியில ஒங்களுக்கெதிராப் பொய்ப் பிரச்சாரம் பண்ணிட்டிருக்கார் அந்த ஆள். ஒங்களுக்கெதிரா அவதூறு பரப்பிட்டிருக்கார்."

"என்ன பிரச்சாரம்? என்ன அவதூறு?"

"எத்தனையோ!"

"ஒண்ணே ஒண்ணை எடுத்து வுடுங்களேன்!"

"மாவட்டங்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுக்கறதுக்குன்னு நம்ம அகில இந்தியத் தலைவர் ஒங்கக் கைல எம்பது லச்சம் ரூவா குடுத்தாராம், நீங்க அத அமுக்கிக்கிட்டீங்களாம்."

"இத நீங்க யாராவது நம்புறீங்களா?"

"நாங்க நம்பல தலைவர்! ஆனா இதயெல்லாம் நம்பற ஏமாளிங்க நம்பக் கட்சியில இருக்காங்க. அவங்களயெல்லாம் கைக்குள்ள போட்டுக்கிட்டுத்தான் அறிவரசன் ஒங்களுக்கு எதிரா வேல செஞ்சுட்டிருக்கார்."

"நீங்க ஆதரவா வேல செய்யுங்க! தொண்டர்கள்ட்ட உண்மையைச் சொல்லுங்க! பொய்ப் பிரச்சாரத்த முறியடிங்க!"

"என்னமோ தலைவர்! நீங்க மெத்தனமாயிருக்கறது எங்களுக்கெல்லாம் கவலையாயிருக்கு."

எனக்கும் கூடக் கவலையாய்த்தானிருந்தது. கவலைக்குக் காரணம் தலைவருடைய மெத்தனம் மட்டுமல்ல. கட்சி அலுவலகத்துக்கு வருகிற மும்முரத்தில் தலைவர் காலையில் சிற்றுண்டி உட்கொண்டிருக்கவில்லை.

நானுந்தான்.

தலைவரைக் கிளப்பிக் கொண்டு மாருதியில் கிளம்பினேன், மவுன்ட் ரோடுக்கு. மவுன்ட் ரோடு புஹாரிக்கு. சில வருஷங்களுக்கு முன்பு வரை முகாரி பாடிக் கொண்டிருந்த புஹாரி, புதுப்பிக்கப்பட்டு இப்போது புதுப் பொலிவுடன் இருக்கிறது.

ரெண்டு ப்ளேட் மட்டன் பிரியாணி. தலைவர் அரை ப்ளேட், நான் ஒண்ணரை ப்ளேட்.

அந்தக் காலத்தில் தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது சைக்கிளில் பட்டணத்துக்கு வந்து பார்த்த சினிமாக்கள் பற்றி, ரம்யாஸ் ஹோட்டேலில் அவர் சுவைத்த மினி சமோசாக்கள் பற்றி சுவாரஸ்யமாய்ப் பேசிக் கொண்டே தலைவர் பிரியாணியைக் கோட்டை விட்டு விடுவார். அவர் மிச்சம் வைக்கிற அரை ப்ளேட் பிரியாணி, என்னுடைய தட்டில் ஐக்கியமாகி விடும்.

தலைவருடைய தட்டைக் காலி பண்ணுவதென்பது, அஜெண்டாவில் இல்லாத ஓர் அரசியல் பணி.

மதிய உணவுக்குப் பிறகு ஹோட்டேலுக்குப் போய் ஓய்வெடுக்கலாமா என்கிற சபலம் தட்டியபோது, தலைவருக்குக் கட்சி ஆஃபீஸிலிருந்து தொலைபேசி. திருநெல்வேலியிலிருந்து மோத்திலால் தலைமையில் கட்சிப் பிரமுகர்கள் வந்து காத்திருக்கிறார்களாம்.

திருநெல்வேலிப் பிரமுகர்களும் ஒரு புகார் மனு வைத்திருந்தார்கள். கோயமுத்தூர்க்காரரான சண்முகமும், மதுரை பீட்டரும் அறிவரசனோடு கூட்டணி போட்டிருக்கிறார்களாம்.

"இது ரொம்பப் பழைய நியூஸாச்சேங்க! மூணு வருஷத்துக்கு முந்தியே இந்த மூணுபேரும் என்ன நீக்கிட்டுக் கூட்டுத் தலைமைக்கு அனுமதி கேட்டு அகில இந்தியத் தலைவர்ட்ட அப்ளிகேஷன் போட்டவங்கதான? நா பதவி விலக ரெடியாத்தான் இருந்தேன். அகில இந்தியத் தலைவர் ஒத்துக்க மாட்டேன்ட்டார். தொண்டர்கள்ட்ட கருத்துக் கேட்டார். தொண்டர்களும் ஒத்துக்கல. அதனால திரும்பவும் என் தலைமேலயே இந்தப் பொறுப்பு விழுந்திருச்சி."

"அன்னிக்கி ஒங்கத் தலைமை மாறிக் கூட்டுத் தலைமை வந்திருந்தா, இந்த மூணு பேரும் மூணு திக்குல கட்சியப் பிச்சிக் கொண்டு போயிருப்பாங்க. கட்சி காணாமலேப் போயிருக்கும். இப்பக்கூட அதே நிலைமைதான் தலைவர். இப்ப நீங்க களையெடுக்கலன்னா, இந்த மூணு பேரையும் கட்சியை விட்டு நீக்கலன்னா, கட்சி காணாமத்தான் போயிரும்."

"இந்த மூணு பேரக் கட்சிய விட்டு நீக்கினா ஒரு முன்னூறு பேர் அவங்க பின்னால போயிருவாங்க. அதில்லாம, இந்த மூணு பேரையும் நல்வழிப்படுத்த வழியிருக்கான்னு யோசிச்சிப் பாருங்களேன்!"

"மிதமிஞ்சிய அஹிம்சாவாதியாயிருக்கீங்க தலைவர் நீங்க. அஹிம்சையக் கொண்டு வெள்ளைக்காரங்கள ஜெயிக்கலாம். கொள்ளைக்காரங்கள ஜெயிக்க முடியாது."

"நெல்லைக்காரங்க நீங்க துணையாயிருக்கும்போது எந்தக் கொள்ளைக்காரங்களையும் சமாளிச்சிரலாம் மோத்திலால்."

அதற்கு மேல் ஏதும் பேச வழியில்லாமல் நெல்லைக்கார நல்லவர்கள் டாப்பிக்கை மாற்றினார்கள்.

மண்டல மாநாடுகள் பற்றிப் பேச்சு வந்தது. திருச்சியிலும் நாகர்கோவிலிலும் மாநாடுகள் சிறப்பாய் நடந்து முடிந்தன. அடுத்து, கோவையில் நடக்க வேண்டும். அதை, கோவை சண்முகம்தான் நடத்த வேண்டும். மாநாடு பற்றிய சுவரொட்டிகளிலோ சுவர் விளம்பரங்களிலோ பத்திரிகைச் செய்திகளிலோ மாநிலத் தலைவரின் படமோ பெயரோ இடம் பெறாது என்று பூச்சாண்டி காட்டுகிறாராம் சண்முகம்.

வேண்டாம்! மாநாடு நடக்கிறபோது கோயம்பத்தூர்ப் பக்கமே நான் வரக் கூடாது என்றாலும் கூட எனக்குச் சம்மதம்தான். மாநாடு சிறப்பாய் நடந்தால் அதுவே போதும் என்று தன்னுடைய பெருந்தன்மைக்குச் சொல்வடிவம் கொடுத்தார் தலைவர்.

இந்த அளவுக்கு நல்லவராயிருக்க வேண்டியது அரசியல் கட்சித் தலைவரொருவருக்கு அவசியந்தானா என்று சந்தேகம் மேலிட்டது.

சரி. பெருந்தலைவர் காமராஜரின் வழி வந்தவர், அப்படித்தானிருப்பார்.

திருநெல்வேலிக்காரர்கள் விடைபெற்றுக்கொண்டு கிளம்புகிறபோது இருட்டி விட்டிருந்தது.

–தொடர்வேன்…

About The Author