சிபி (22)

பம்பாய்க்கு வடக்கே செல்லவே வாய்க்கவில்லை இன்னும். அப்படி வாய்க்கிற பட்சத்தில், தாஜ்மஹால் என்கிற உலக மஹா அதிசயத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்கிற எல்லா இந்தியர்களுக்கும் இருக்கிற நியாயமான ஆசையோடு, சிரபுஞ்சிக்குப் போய் உலக மஹா மழையில் நனைந்து விட்டு வரவேண்டும் என்கிற அநியாயமான ஆசைதான் நம்ம மெகா மழைத் திட்டம்.

கூரியர் ஆஃபீஸுக்கு முந்திய சந்திப்பில் காலூன்றி நின்றபோது, பாதையோரமாய் நின்றிருந்த பெண்ணொருத்தி, போக்குவரத்துக் காவலரொருவரிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

"சார், ஃபஸ்ட் டைம் இந்த ஏரியாவுக்கு வர்றேன். நுங்கம்பாக்கத்துக்குப் போகணும். எந்த பஸ் போகும்னு தெரியல, பஸ் ஸ்டாப் எங்க இருக்குன்னு தெரியல. மெட்ரோ ரயில் வேலக்யாக எல்லாத்தையும் மாத்தியிருக்காங்கன்னு சொல்றாங்க. மழவேற பெரிசா வரும் போலத் தெரியுது…"

மெட்ரோ ரயில் வேலைக்காக, அண்ணா நகரில் சாலைகளையெல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறார்கள். பஸ் ரூட்கள், பஸ் ஸ்டாப்கள் எல்லாம் தடம் புரண்டு கிடக்கின்றன. தினம் தினம் இந்தப் பாதைகளில் புழங்குகிறவர்களுக்கே குழப்பம். புதிதாய் வருகிறவர்கள் திண்டாடிப் போகிறார்கள்.

அந்தப் பெண் தனியாக இல்லை. இடுப்பில் ஒரு குழந்தை, இடுப்பளவில் ஒரு பிள்ளை. தன்னுடைய புடவைத் தலைப்பை அஜஸ்ட் பண்ணி, ரெண்டு குழந்தைகளையும் மூட முயற்சித்திருந்தாள்.

அடடே, நாம் காரில் வந்திருந்தால் இந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் நுங்கம்பாக்கத்தில் விட்டு விட்டு வருகிற புண்ணிய காரியத்தைப் பண்ணியிருக்கலாமே என்று யோசித்தபோது பச்சை விளக்கு வந்தது.

கூரியரில் வேலை முடிந்துத் திரும்பி வருகிற போது, அந்தப் பெண் இன்னும் அங்கே தான் நின்று கொண்டிருக்கிறாளா அல்லது உதவி கிடைத்துக் கிளம்பி விட்டாளா என்று பார்க்கிற குறுகுறுப்பில், ஒரு சுற்று வட்டம் போட்டு அந்த ஸிக்னலுக்கு வந்து சேர்ந்தால், அங்கே ஓர் அதிர்ச்சி.
அந்தப் பெண்ணும் குழந்தைகளும் காவல் துறைக் காரொன்றில் ஏற்றப் பட்டுக் கொண்டிருந்தார்கள். நல்லதுக்கா அல்லது விபரீதத்துக்கா என்று தெரியவில்லை. அந்த வாகனத்தை பின் தொடர்ந்து போகவேண்டுமென்று மட்டும் தோன்றியது.

பின் தொடர்ந்தேன்.

ஹாரிங்டன் ரோடு, ஹாடோஸ் ரோடு வழியாய் வள்ளுவர் கோட்டம் சாலையை அடைந்து, ஒரு குறுகலான தெருவுக்குள்ளே திரும்பி நின்றது காவல் வாகனம். தூறல் நின்னு போச்சு. முன் இருக்கையிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர், பின் கதவைத் திறந்து விட, அந்தப் பெண் இறங்குகிற போது, அவளிடமிருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர், வீட்டுக்குள்ளிருந்து வெளிவந்த பெரியவரிடம் குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை ஒப்படைக்குமுன்னால், அதற்கொரு முத்தம் வேறு. அம்மாவை ஒட்டிக் கொண்டு நின்ற அடுத்த குழந்தையைத் தலையை வருடிக் கொடுத்து கன்னத்தில் ஒரு செல்லத் தட்டுதல் வைத்தபின்னால், அவரை நோக்கிக் கை கூப்பியபடியிருந்த அந்தப் பெண்ணிடமும் பெரியவரிடமும் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறிக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.

ஆண்டவனே! இந்த இருபத்தொண்ணாம் நூற்றாண்டில், இந்தியாவில் இப்படியொரு இன்ஸ்பெக்டரா என்று நெகிழ்ந்து போய், மானசீகமாய் நான் அவருக்கொரு சல்யூட் அடித்த போது, காவல் துறையைக் குறித்து முந்திய அத்தியாயங்களில் நான் முன் வைத்த விமர்சனங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாய் டிலிட் செய்து விடலாமா என்றொரு சபலம் தட்டியது.

இந்த இன்ஸ்பெக்டரைப் போல, காவல் துறையினர் எல்லோரும், வேண்டாம் ஒரு கால்வாசிக் காவல் துறையினர் நல்ல மனிதர்களாயிருந்தாலே போதும். இந்தியா எங்கேயோ போய்விடும்.

சாமான்ய மனிதனுக்கும் காவல் துறைக்கும் இடையே இருக்கிற இடைவெளி குறைந்தால் நாடு ஆரோக்யமாயிருக்கும். ஆனால் இந்த இடைவெளி பூர்வீக காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

பாரதியார் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார் பாரதியார்.

சிப்பாயைக் கண்டஞ்சுவார் – ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டொருவன் – வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டி லொளிப்பார்.

*******

முன்னொரு காலத்தில் காவல் துறைத் திரைப்படம் ஒன்று வந்தது, உங்கள் நண்பன் என்கிற பெயரில். சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சந்திரபாபு எல்லோருக்கும் அதில் வேஷம் இருந்தது. எஸ் ஏ அசோகன் கதாநாயகன். தப்பு. காவல் துறை தான் கதாநாயகன். காவல் துறையைக் கனிவான ஒரு துறையாய்ப் பொதுமக்களுக்கு சித்தரித்துக் காட்டிய கால்மணி நேரப் படம் அது. எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் அந்தப் புராதனப் படத்தின் பிரதிகள் பதுங்கிக் கிடக்கலாம். தேடியெடுத்து, தூசிதட்டி, டிஜிட்டல் பண்ணித் திரும்பவும் திரையிடலாம்.

உங்கள் நண்பன், இன்றைக்கு மிகவும் அவசியமான திரைப்படம். தலைப்பை வேண்டுமானால் இந்தக்கால ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரி மாற்றி விடலாம், "உங்கள் நண்பேன்டா" என்று.

*******

இந்தக்கால ட்ரெண்டை நினைத்தபடி ஸ்கூட்டரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, என்னை முந்திக் கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து எழுந்த பேரிரைச்சல் என் நினைவுகளை நிலைகுலயச் செய்தது. கல்லூரி மாணவர்கள் நிரம்பி வழிகிற பஸ். முன் படிக்கட்டிலும் பின்

படிக்கட்டிலும் பல மாணவர்கள் ஒற்றைக் காலில் தொங்கிய படி சாகசம் பண்ணிக்கொண்டு வந்தார்கள். பஸ்ஸுக்குள் ளேயிருந்த மாணவச் செல்வங்கள், ஜன்னல் வழியே வெளியே கையை விட்டு, பஸ்ஸின் உடம்பில் தட தடவென்று தட்டி ஒலியெழுப்பியபடி, கானா பாட்டுக்களைக் கத்திக்கொண்டு வந்தார்கள்.

கல்லூரிகளில் இதெல்லாமா இப்போது சொல்லித் தருகிறார்கள்!

நாம் படிக்கிற காலத்தில் இந்தமாதிரி ஜனரஞ்சகமான
ஐட்டங்களெல்லாம் பாடத்திட்டத்தில் இருக்கவே இல்லை.

என்னைப் போலவே, கடந்த காலப் பாடத்திட்டக் கவலையோடு வந்த கார் ஒன்று, அண்ணா ஆர்ச் ஸிக்னலில் நின்றிருந்த போது நம்ம ஸ்கூட்டரின் பின் பகுதியில் ஒரு தட்டுத் தட்டியது. பின்புறம் திரும்பிப் பார்த்தேன். காரோட்டி வந்தவர் கண்டு கொள்ளாமல் மெத்தனமாய் உட்கார்ந்திருந்தது உசுப்பேற்றிவிட்டது என்னை. இங்கிதமில்லாத இந்த மனிதனை சும்மா விடக்கூடாது என்று ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, ஹெல்மெட்டைக் கழட்டிக் கையில் வைத்துக் கொண்டு அந்தக் காரை நெருங்கி, கண்ணாடியை இறக்கக் கட்டளையிட்டு, இறக்கப்பட்ட ஜன்னலுக்குள் நான் காட்டுத்தனமாய் கர்ஜித்ததைக் கேட்டு வெல வெலத்துப் போனான் அவன்.

அவனைவிட அதிகமாக, பின்னிருக்கையில் இருந்த ரெண்டு பெண்மணிகள். அந்த இருவரில் ஒரு பெண்மணி, "ப்ளீஸ் ப்ளீஸ்" என்று என்னை நோக்கிக் கும்பிட்டு மன்றாடியபின் தான் நம்ம கர்ஜனை தணிந்தது.

ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு திரும்ப ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து, பச்சை விளக்கைத் தாண்டி வலது பக்கம் திரும்பின பிறகு தான், கடவுளே, நான் என்ன காரியம் செய்தேன் என்கிற சிந்தனை வந்தது.

அந்தக் கார், ஸ்கூட்டரைத் தட்டியதா, இல்லை சும்மாத் தொட்டுவிட்டு நின்றதா? தட்டவே இல்லை, தொடத்தான் செய்தது.

தட்டினால் தான் என்ன? அட, முட்டினால் கூட என்ன? சராசரிக்கு ரொம்ப ரொம்ப மேம்பட்ட ஒரு நான் இப்படியா தரந்தாழ்ந்து கத்துவேன்? ஒரு மைக்ரோ ùஸகண்டில் என்ன ஆய்ப்போச்சு எனக்கு? அந்த பஸ் இரைச்சல் தந்த எரிச்சலா?

காரணங்களைத் தேடுவதை விடு. காரைத்தேடு.

தேடினேன்.

முன்னே, பின்னே, வலப்பக்கம், இடப்பக்கம் எங்கேயுமே அந்தக் காரைக் காணவில்லை. என்னைக் கடந்து போயிருக்க வேண்டும். பார்வையிலிருந்து மறைந்து விட்டது. மனசைத் தேற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்தால், தேற மறுத்தது மனசு.

அவர்கள் அண்ணா நகர் ஏரியாவில் தான் விஸிட்டிங் வந்திருப்பார்கள். வந்த பாதையில் தான் திரும்பிப் போகும் அந்த வாகனம். ஸ்கூட்டரைக் கிளப்பு. உடனே கிளம்பு. ஸ்பாட்டுக்குப் போ. போய்க் காத்திரு. சாலையில் பார்வையைச் செலுத்தியபடி சாலையோரமாய் நில். அந்தக் கார் கட்டாயம் கண்ணில் படும். வழி மறித்து அதனிடம் மன்னிப்புக் கேள். கார்க்காரரிடம் வருந்து. பின்னிருக்கைப் பெண்மணிகள் முன் கரங்குவித்து நில். அந்தப் பெண்கள் உன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? யாரோ ஒரு பொறுக்கி நம்மிடம் வந்து ரவுடித்தனம் பண்ணுகிறானே கடவுளே என்றல்லவா பயந்து போயிருப்பார்கள்!

நொடிப் பொழுதில் நிதானம் தவறிப் போக எப்படி நீ உடன்பட்டாய்? போ. பிராயச்சித்தம் செய்ய உடனடியாய்க் கிளம்பிப் போ.

போனேன்.

அண்ணா ஆர்ச்சின் உட்புறச் சாலையின் ஓரமாய் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வாகனங்களை நோட்டமிட்டேன்.

அது ஒரு சிகப்புக் கலர்க் கார் என்பது மட்டுமே தெரிந்திருந்தது. நம்பர் தெரியாது. என்ன மேக் என்று கூட கவனிக்கவில்லை. சிகப்புக் கலர். சிகப்புக் கலர். சிகப்புக் கலர்.

நான் உற்றுப்பார்த்த சிகப்புக் கார்களெல்லாம் மறுப்புச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டன.

மாலை மயங்கி, இருள் கவியத் தொடங்கின பின்னாலும் நின்று கொண்டேயிருந்தேன்.

வண்ணப் பாகுபாடு கண்களுக்குப் புலப்படாத நிலை வந்த போது, இதற்கு மேலும் நின்று கொண்டிருப்பதில் பயனேதுமில்லையென்று புறப்பட்டேன்.

அந்தக் கார்க்காரர்களிடம் மன்னிப்பு, மானசீகமாய்த்தான் கேட்க முடிந்தது. கனகாலமாகியும் அந்தக் கார் காலம், ஒரு களங்கமாய் கனத்துக் கிடக்கிறது.

இந்த தொடர் ஓஹோவென்று பிரபலமடைந்தால், இதன் ஒரு பிரதி அந்தக் கார்க் காரர்களுக்குக் கிட்டும். அப்போது எனக்கு மன்னிப்பும் கிட்டும்.

மன்னிப்புக் கிட்டுவதற்கு முதற்கட்டமாக, இந்த தொடர் பிரபலமடைய வேண்டும். அடையுமா?

யும்.

ஆசையாய்த்தானிருக்கிறது.

ஆசைப்படுவதில் தப்பேயில்லை.

அளவோடு ஆசைப்படுவதில் தப்பேயில்லை.

அத்தனைக்கும் ஆசைப்படுவது தான் தப்பு.

அளவோடு ஆசைப்பட்டால் ஆனந்தமாய் வாழலாம்.

அத்தனைக்கும் ஆசைப்பட்டால் மதுரை ஆதீனமாகலாம்.

(தொடர்வேன்)

About The Author