மனிதரில் எத்தனை நிறங்கள்! -93

"If I have the belief that I can do it, I shall surely acquire the capacity to do it
even if I may not have it at the beginning."
– Mahatma Gandhi

ஆர்த்தி டாக்டர் ப்ரசன்னாவின் அறையில் இருந்த அதே சமயத்தில் அர்ஜுனின் திருமண விஷயமாய் சிவகாமி வசந்தி வீட்டில் பேசிக் கொண்டிருந்தாள்.

சிவகாமிக்கு வசந்தியையும், வசந்தியின் தந்தையையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க அதிகம் கஷ்டமிருக்கவில்லை. வசந்தி அர்ஜுனின் தற்போதைய தோற்றத்திலும், சிவகாமியைப் போன்ற ஒருத்தியின் வலதுகரமாக இருப்பதிலும் திருப்தியடைந்தாள். முன்பு அர்ஜுனிற்கு வந்த தோல் வியாதி மிக அபூர்வமானதென்றும் அது தொத்து வியாதியல்ல என்றும் டாக்டரின் சர்டிபிகேட்டை வேறு சிவகாமி அவர்களுக்கு காட்டினாள்.

வசந்தியின் தந்தை அவள் இந்தத் திருமணத்தில் காட்டிய ஈடுபாட்டைக் கண்டு அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்ததால் அவர் மகன் படிப்புக்கென சிவகாமி ஐந்து லட்ச ரூபாயைத் தர வேண்டி வந்தது. மனித குணாதிசயங்களை ஆழமாக அறிந்திருந்த சிவகாமிக்கு அது பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. ஆனால் அது அர்ஜுனிற்குத் தெரிய வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டாள். திருமணம் மூன்றாவது நாள் பக்கத்து பெருமாள் கோயிலில் எளிமையாக நடத்துவது என்று தீர்மானித்தார்கள்.

—–

ஆர்த்தியை ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்த ப்ரசன்னாவுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

ஆர்த்தி வருவதற்கு சற்று முன் தான், சென்ற செஷனில் ஆர்த்தி சொன்னதை எல்லாம் டேப்பில் ப்ரசன்னா மீண்டும் ஒரு முறை கேட்டிருந்தான். அதைக் கேட்டு விட்டு அவள் கனவுகளையும் ஒரு முறை அலசினான். சென்ற செஷனில் தன் தாய் போனில் பேச பயப்பட்டாள், போனை எடுத்தாலும் பேசாமலேயே வைத்து விட்டாள் என்றெல்லாம் ஆர்த்தி சொல்லியிருந்தாள். ஆனால் கனவில் அவள் தாய் கலவரத்துடன் யாரிடமோ போனில் பேச முயற்சி செய்து கொண்டிருப்பதும் வருகிறது. அது யாரிடம் என்று அறிய எண்ணினான்.

அவளுடைய மூன்று வயது காலத்திற்கு அவளைக் கொண்டு வந்து கேள்விகளை ஆரம்பித்தான்.

"ஆர்த்தி ஒரு நாள் உங்கம்மா யார் கிட்டயோ போன்ல பேச முயற்சி செய்துகிட்டிருக்காங்க. உன்னால் பார்க்க முடியுதா"

"ம்"

"என்ன பார்க்கிறாய்?"

"அம்மா போனை சுத்தறாங்க. வெக்கிறாங்க…சுத்தறாங்க. வெக்கிறாங்க. அவங்க சீலைல மூஞ்சு துடச்சுக்கறாங்க" ஆர்த்தி மழலைக் குரலில் சொன்னாள்.

"பேசலையா?"

"ரொம்ப நே…ர…ம் கழிச்சு தான் பேசறாங்க"

"யார் கிட்ட பேசறாங்க?"

"தெரியல"

"என்ன சொல்றாங்க…?"

"எனக்கு பயமாயிருக்குன்னு சொல்றாங்க…..என்னைக் கொன்னாலும் கொன்னுடுவாங்கன்னு சொல்றாங்க….சொல்லிட்டு அம்மா அழறாங்க. அம்மா பாவம்" ஆர்த்தி சொல்லும் போது கண்களில் இருந்து நீர் வடிந்தது.

"அப்புறம் என்ன சொல்றாங்க?"

"அம்மா என்னை பாத்துட்டாங்க. இங்கிலீசுல பேசறாங்க"

ஆனந்தி தான் சொல்வது தன் மகளுக்குத் தெரியக்கூடாது என்று ஆங்கிலத்தில் பேசுகிறாள் என்பதை ப்ரசன்னா அனுமானித்தான்.

"எத்தனை நேரம் பேசறாங்க?"

"ரொம்ப நேரம்….."

"இங்கிலீஷ்ல பேசறது உனக்கு ஒன்னுமே புரியலயா?"

"அவங்க ஸ்பீடா பேசறாங்க. அதனால தான் எனக்கு புரியல. எனக்கு இங்கிலீசு தெரியும். ஏ பி சி டி….."

ஜேவையும் யூவையும் விட்டு விட்டு 24 எழுத்துகளை மழலையுடன் சொன்ன ஆர்த்தி முகத்தில் பெருமிதம் தெரிந்தது. ஆங்கிலம் தனக்கு புரியவில்லை என்பதை ஒத்துக் கொள்ளாத அந்த மூன்று வயதுக் குழந்தையின் கௌரவம் ப்ரசன்னாவைப் புன்னகைக்க வைத்தது.

"வெரி குட். உனக்கு நல்லா இங்க்லீஷ் வருது. அம்மா ஸ்பீடா பேசுனதுனால தான் உனக்கு அம்மா பேசுனது புரியல. சரி பேசி முடிச்சுட்டு அம்மா என்ன செய்யறாங்க"

"என்னக் கட்டிப்புடிச்சுட்டு அழறாங்க" ஆர்த்தியின் முகத்தில் மறுபடி சோகம் படிந்தது. "நான் தோத்துட்டேன். தோத்துட்டேன்னு சொல்லி அழறாங்க….அம்மா எப்பவுமே அப்புடி அழ மாட்டாங்க" அவள் கண்களில் இருந்து மறுபடி கண்ணீர்.

"உங்கம்மா யார் கிட்ட எல்லாம் இங்கிலீஷ்ல பேசுவாங்க.?"

"அப்பா கிட்ட எப்பவாவது கோவமா இங்கிலீசுல பேசுவாங்க"

"அப்ப அம்மா பேசுனது அப்பா கிட்ட இருக்கலாமா?"

"தெரியில"

ப்ரசன்னா மெல்ல அந்த மழை நாள் சம்பவத்திற்கு வர எண்ணினான். "அம்மா போன்ல பேசிகிட்டு இருந்தப்ப வெளியே மழை இருந்துச்சா ஆர்த்தி?"

"இல்ல"

"சரி ஆர்த்தி உனக்கு மழை பிடிக்குமா?"

"ரொம்ப புடிக்கும். நான் மழைல வெளாடுவேன். ஆனா அம்மா பாத்தா திட்டுவாங்க"

"ஏன்?"

"சளி புடிக்குமாமா"

"மழை கூட இடி மின்னலும் இருந்துதுன்னாலும் பிடிக்குமா?"

ஆர்த்தியின் முகத்தில் பயம் தெரிய ஆரம்பித்தது.

ப்ரசன்னா அமைதியாக தைரியமளிக்கும் தொனியில் பேசினான். "ஆர்த்தி பயப்படாதே. ரிலாக்ஸ்…ரிலாக்ஸ்… நான் உன் கூட இருக்கேன்….பயப்படறதுக்கு ஒண்ணுமேயில்லை…ஓகே… உன் அம்மாவுக்கு யாரோ கெட்டது செஞ்சுருக்காங்க. நீ அவங்கள பத்தி சொன்னா தான் அவங்கள நாம கண்டு பிடிக்க முடியும். அவங்கள கண்டுபிடிச்சா தானே நாம போலிஸ்ல புடிச்சு குடுக்கலாம்….. அம்மாவுக்கு கெட்டது செஞ்சவங்கள போலீஸ்ல புடிச்சு குடுக்கணுமா வேண்டாமா?"

"புடிச்சு குடுக்கணும்"

"அப்படின்னா நீ பயப்படாம சொல்லு. வெளியே நல்லா இடியோடு மழை பெய்யுது. நீயும் அம்மாவும் வீட்டுக்குள்ளே இருக்கீங்க. வெளியே இருந்து யாரோ காலிங் பெல்ல அமுத்திகிட்டே இருக்காங்க….உனக்கு அந்த சத்தம் நல்லாவே கேட்குது. இல்லையா?"

"கேக்குது" ஆர்த்தியின் குரல் மிகப் பலவீனமாக வந்தது.

"அப்புறம் என்ன ஆகுது?"

"அம்மா என்னைக் கட்டிப் புடிச்சு உக்காந்துட்டாங்க. பெல்லு அடிச்சுட்டே இருக்கு"

"அப்புறம்?"

"அம்மா ‘விஜயா கதவத் திறக்காதே’ங்கறாங்க" ஆர்த்தியின் குரல் மிகத் தாழ்ந்தே இருந்தது.

"விஜயா யாரு?"

"வேலக்காரி"

"அதுக்கு விஜயா என்ன சொன்னா?"

"விஜயா ஒண்ணும் சொல்லல. அவ போய் குடையை எடுக்கறா?"

"அப்புறம்?"

"வெளிய வேற எதோ சத்தமும் கேக்குது…."

"என்ன சத்தம்? கொஞ்சம் நல்லா கவனிச்சு சொல்லு"

"யாரோ வேண்டாம்…வேண்டாம்னு கத்தறாங்க"

"யாரு?"

"தெரியல"

"அது ஆம்பிள குரலா? பொம்பள குரலா?

"ஆம்பிள குரலு"

ப்ரசன்னா ஒரு கணம் திகைத்தான். இது வரை அவள் கனவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு ஆண் அடிபடவில்லை. இப்போது இது என்ன புதுத் தகவல்.

"அவன் யார் கிட்ட சொல்றான்?"

"தெரியல. அம்மா ஜன்னல் வழியா வெளிய பாக்கறாங்க"

"நீயும் பாத்தியா?"

"எனக்கு ஜன்னல் எட்டல"

"அப்புறம்"

"அந்த விஜயா கதவத் திறந்துட்டா"

ஆர்த்தி மூச்சு ஓரிரு வினாடிகள் நின்று போனது. முகம் வெளிற ஆர்த்தி அலறினாள்.

((((((((((())))))))))))

சர்தார்ஜி வேஷத்தில் இருந்த அசோக் சென்னையில் ஒரு கல்லூரியினுள் பவானி நுழைவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் இருந்தே அவளைப் பின் தொடர்வது அவனுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. தன்னை ஒருவன் பின் தொடர்வான் என்ற சந்தேகமே அவளுக்கு ஏற்பட்டது போல் தெரியவில்லை.

விமானத்திலும் அவனுக்குப் பக்கவாட்டில் இரு வரிசைகளுக்கு முன்னால் தான் பவானி அமர்ந்திருந்தாள். விமானத்தில் அவள் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவள் தன் சக பயணிகள் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு முறை கூடத் திரும்பி அவன் பக்கமும் பார்க்கவில்லை. எனவே அங்கும் அவன் தன்னை மறைத்துக் கொள்ளவோ, நடிக்கவோ தேவையிருக்கவில்லை.

விமானத்தில் இருந்து இறங்கியவள் ஒரு நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று அறையெடுத்துத் தங்கினாள். மறு நாள் காலை 10 மணி வரை வெளியே வரவில்லை. பின் கால் டாக்சியில் இந்தக் கல்லூரிக்கு வந்து இறங்கி உள்ளே போகிறாள்.

அசோக் தானும் உள்ளே சென்றான். பெண்கள் கல்லூரிக்குள் நுழையும் அந்த இளைஞனைக் கேள்வி கேட்க முனைந்த கூர்க்காவை அவன் அலட்சியமாகவும் கடுமையாகவும் பார்க்க கூர்க்கா பின் வாங்கினான். கூர்க்கா அவனை யாரோ அதிகாரி என்று முடிவு கட்டினான். அந்த சர்தார்ஜியின் கம்பீரம் அப்படி இருந்தது. பவானி கல்லூரி அலுவலகத்திற்கு சென்று ஏதோ விசாரிக்க அசோக் சுமார் இருபதடி தள்ளி நின்று தன் பாக்கெட்டில் இருந்த விசிட்டிங் கார்டுகளில் ஏதோ தேடுவது போல் பாவனை செய்தான்.

அலுவலகத்தில் இருந்து ஒரு பியூன் சாவகாசமாக வெளியே வந்து ஏதோ ஒரு வகுப்புக்குப் போய் ஒரு மாணவியை அழைத்து வந்தான்.

பவானியைப் பார்த்த அந்தப் பெண் ஒரு கணம் திகைத்து நின்றாள்.

"நான் பவானி" என்று பவானி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அந்தப் பெண்ணுக்கு அவளைப் பார்த்தவுடன் பேச்சு வரவில்லை. தலையை அசைத்தாள். அவள் பார்வை பவானியின் விலை உயர்ந்த புடவையிலும், நகைகளிலும், கட்டியிருந்த விலை உயர்ந்த கடிகாரத்திலும் தங்கி ஆராய்ந்தது.

தன்னை யார் என்றோ, வந்த காரணம் என்ன என்றோ அந்தப் பெண் கேட்காதது தன்னைப் பற்றி முன்பே தெரிந்திருந்ததால் தான் என்று பவானி அனுமானித்தாள்.

"சாந்தி நான் அப்பாவைப் பார்க்கணும்"

அந்தப் பெண் எச்சிலை விழுங்கினாள். "அப்பாவுக்கு இன்னைக்கு ஆ•ப். வீட்ல தான் இருக்கார்"

"எனக்கு அட்ரஸ் வேணும் சாந்தி"

அந்தப் பெண் ஒருவித தயக்கத்திற்குப் பின் வீட்டு விலாசத்தை சொன்னாள். எழுதிக் கொண்ட பவானி அவளுக்கு நன்றி சொன்னாள். கிளம்பும் முன் தன் கையில் இருந்த விலை உயர்ந்த கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பெண் கையில் மாட்டி விட்டாள். அந்தப் பெண் ஆராய்ச்சியில் அதிகம் பார்வை தங்கி இருந்தது அந்த கடிகாரத்தின் மேல் தான்.

அந்தப் பெண் ஒரு கணம் திகைத்து மறு கணம் ஒருவித வெட்கத்துடன் மறுக்க முற்பட்ட போது பவானி புன்னகையுடன் அவளைத் தட்டி கொடுத்து விட்டு நகர்ந்தாள்.

அசோக்கின் காமிரா அவர்கள் அறியாமல் அவர்களை போட்டோ எடுத்தது.

அந்தப் பெண் சிலை போல நின்று பார்க்க, பவானி கல்லூரியை விட்டு வெளியே வந்து டாக்ஸி டிரைவரிடம் அந்த விலாசத்தைத் தர கார் கிளம்பியது. இன்னொரு டாக்ஸி பிடித்து அசோக் அவளைப் பின் தொடர்ந்தான். அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு பவானி ஒரு சிறிய வீட்டின் முன் இறங்கினாள்.

அந்த வீடு சுண்ணாம்பைக் கண்டு பல வருடங்கள் ஆகி இருக்கும். கதவு கூட சொந்த நிறம் என்ன என்பதைக் கேள்விக்குறியாக்கி இருந்தது. பவானி அந்த வீட்டின் அழுக்குப் பிடித்த அழைப்பு மணியை அழுத்தினாள்.

கதவைத் திறந்த மனிதன் பவானியைப் பார்த்துத் திகைத்து நின்றான்.

கண்கள் கலங்க பவானி சொன்னாள். "என்னை உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியலை. என் பேர் பவானி"

அடிபட்டது போல சிலிர்த்தவன் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தபடி நின்றான்.

"உள்ளே வரச் சொல்ல மாட்டாயா?"

அவன் உள்ளே வரச் சொல்லவுமில்லை. விலகி அவள் வர வழி விடவுமில்லை. ஒரே கேள்வியைக் கேட்டான். "நீ இங்கே வந்தது உங்கம்மாவுக்குத் தெரியுமா?" அவன் குரலில் பீதி இருந்தது.

"அம்மாவுக்குத் தெரியாது" என்றாள் பவானி.

அவன் நிம்மதியடைந்தது போலத் தெரிந்தது. "உள்ளே வா" என்றான்.

அவர்களை ஒரு காமிரா போட்டோ பிடித்ததை இருவரும் அறியவில்லை.

(தொடரும்)

About The Author

4 Comments

  1. shanthakumari

    Better finish the story as early as possible because it is being tooo long to understand….

  2. vijay

    மர்ம நாவல் படிக்கிறவங்களுக்குக் கொஞ்சம் பொறுமை வேணும். மொத்தக் கதையையும் ஒரே அத்தியாயத்தில் முடிச்சா அது சிறுகதை. இது தொடர்கதை… ஆசிரியர் இரண்டு மூணு வாரமா கதையை விரைவுபடுத்திருக்காருன்னு படிச்சா தெரியலையா?

Comments are closed.