மனிதரில் எத்தனை நிறங்கள்! -94

"The evil of the world is made possible by nothing but the sanction [that] you give it."
– Ayn Rand

பவானி உள்ளே நுழைந்தாள். வீடு மிகச் சிறியதாக இருந்தது. சிறிய இரண்டு அறைகள், ஒரு சமையலறை தான் இருந்தன. "வீட்டுல வேற யாரும் இல்லையா?"

"என் பொண்டாட்டி செங்கல்பட்டுல ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்கா. பொண்ணு காலேஜுக்குப் போயிருக்கா. உட்கார்"

"உன் பொண்ணைப் பார்த்துட்டு தான் வர்றேன்"

அவன் கண்களை மூடிக் கொண்டு சில வினாடிகள் மௌனமாக இருந்தான். பின் பேசிய போது குரல் கரகரத்தது. "சன் டிவில பார்த்துட்டே இல்லையா?"

அவள் தலையசைத்தாள். கண்கள் கலங்க சொன்னாள். "உயிரோட இருக்கேன்னு ஒரு தபால் கார்டு போட்டுருக்கலாம். என்னோட எத்தனையோ கண்ணீர் மிச்சமாயிருக்கும்"

"உனக்கு மட்டும் தெரிய வாய்ப்புருக்குன்னா கண்டிப்பா நான் போட்டுருப்பேன். உனக்குத் தெரிஞ்ச எதுவுமே உங்கம்மாவுக்குத் தெரியாமப் போகாது பவானி"

"ஏன் உங்கம்மா, உங்கம்மான்னு பிரிச்சு சொல்றே. அவங்க உனக்கு அம்மா இல்லையா?"

பவானியின் அண்ணன் இளங்கோ அதற்கு பதில் சொல்லவில்லை. "நம்ம அப்பா எப்படி செத்தார்னு மறந்துட்டியா பவானி?"

சிறிது நேரம் இருவராலும் பேச முடியவில்லை. பஞ்சவர்ணம் தன் கணவனிடம் ஒருநாள் பலத்த வாக்குவாதத்திற்குப் பிறகு சொன்ன வார்த்தைகள் இப்போதும் வார்த்தைக்கு வார்த்தை அவர்களுக்கு நினைவிருந்தது. "இதோ பாருய்யா. சும்மா ஏன் அவன் கூட போனாய், இவன் கூட படுத்தாய்னு இன்னொரு தடவை கேட்டால் நான் பொல்லாதவளாயிடுவேன். லட்சக்கணக்கில சம்பாதிச்சுட்டு வந்து நின்னா நான் ஏன் போறேன். நீ சம்பளம்கிற பேர்ல வாங்கிட்டு வர்ற பிச்சைக்காசுக்கு, நீ வாயைத் திறக்கக் கூடாது"

அவள் பேசும் போது பின்னால் வந்து நின்ற மகனையும் மகளையும் பார்க்கவில்லை. ஆனால் அவள் கணவன் அவர்களைப் பார்த்து விட்டார். அவமானத்தில் தலை குனிந்தவர் பிறகு வாயைத் திறக்கவில்லை. மறுநாள் காலை தூக்கில் தொங்கி அவர் பிணமாய் இருந்தார்.

இளங்கோ சொன்னான். "அன்னைக்கு ஏற்பட்ட வெறுப்பு அதிகமாய் அதிகமாய் கடைசில பதினெட்டு வருஷங்களுக்கு முன்னால் மனசுக்குள்ள பந்தத்தையே அறுத்துடுச்சு"

"என்னை எப்பவாவது நினைச்சுப் பார்த்தியான்னா?"

இளங்கோ ஷோகேஸைக் காண்பித்தான். அதில் பவானியின் புகைப்படமும், மூர்த்தியின் குழந்தைப்பருவப் புகைப்படமும் இருந்தன. பார்த்தவுடன் பவானியின் மனம் நெகிழ்ந்தது. தன்னைப் பார்த்தவுடன் அண்ணனின் மகள் அடையாளம் கண்டு கொண்டது எப்படி என்று இப்போது புரிந்தது.

"அண்ணா நீ ஓடிப் போறப்ப உன் குழந்தையைக் கூட எடுத்துட்டு போயிருக்கலாமே"

"எடுத்துட்டு வரணும்னு தான் நினைச்சேன் பவானி. ஆனா அவன் உங்கம்மா கிட்ட இருந்தான். உங்கம்மாவைத் திரும்பப் பார்க்க எனக்குப் பிடிக்கல. அப்புறம் நீ இருக்கிறாய். அவனை நல்லா பார்த்துக்குவாய்னு தோணிச்சு. அப்ப யோசித்து பார்க்கற மனநிலையிலயும் நான் இல்லை. சிவகாமி காரைப் பார்த்துட்டு அலறி அடிச்சுட்டு ஓடினவன் தான். அப்புறம் திரும்பிப் பார்க்கல"

"அவனை என் கையில அம்மா கொடுக்கலை. நான் பலவீனமாய் வளர்த்துடுவேனாம்….அம்மா நீயும் அண்ணியும் செத்திருப்பீங்கன்னு ரொம்ப நாள் நம்பலை. திடீர்னு ஒரு நாள் வந்து நிப்பீங்கன்னு நினைச்சுட்டு இருந்தாங்க. நீ ஏன் அண்ணா ஓடி வந்தே?"

"முதல்ல பயம் தான் காரணம் பவானி. சிவகாமி மேல் இருக்கிற பயம். உனக்கு அந்தம்மாவைத் தெரியாது. குடும்பத்துக்குள்ள இருக்கிற சிவகாமி வேற. வெளியில் வர்ற சிவகாமி வேற. நான் அந்தம்மா கம்பெனில தான் வேலை பார்த்தேன்கிறது உனக்கு ஞாபகம் இருக்கலாம். கை நிறைய சம்பளம், போனஸ், குழந்தைகள் படிக்க பணம்னு கொடுக்கறதுல அந்தம்மாவுக்கு மிஞ்சற ஆள் கிடையாது. ஆனா அதே சமயம் யாராவது கம்பெனி பணத்தைக் கையாடிட்டான், துரோகம் செஞ்சுட்டான்னு மட்டும் தெரிஞ்சுதுன்னா அந்தம்மா சொரூபமே மாறிடும் பவானி. போலீஸ், கோர்ட்டுன்னு எல்லாம் அந்தம்மா போகாது. அந்தம்மா தான் கோர்ட்டு. அந்தம்மா தான் போலீஸ், அந்தம்மா நினைக்கிறது தான் தீர்ப்பு. சில ஆளுங்க என்னமா ஆனானுங்கன்னு நான் என் கண்ணால பார்த்திருக்கேன் பவானி…. செய்யறது எல்லாம் செய்துட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி நடந்துக்கறதையும் நான் பார்த்துருக்கேன்."

"அந்த நேபாளம் தான் அந்தம்மாவோட வலது கை பவானி. அந்தம்மாவுக்கு ஆகாதவங்கள அவன் எப்படி கையாள்வான்னு நான் நேரில் பார்த்திருக்கேன். கொஞ்ச நாளுக்கு முன்னால் ஒரு வேளையா கோயமுத்தூர்க்கு வந்தவன் ஒரு சிக்னல்ல கார்ல வந்துட்டிருந்த அவனைப் பார்த்துட்டு தலை தெறிக்க ஓடினேன் தெரியுமா? அந்தம்மா எதையும் மறக்கற ரகம் இல்ல. நீயும் உங்கம்மாவும் எரிமலைக்கு மேல தான் உட்கார்ந்திருக்கீங்க பவானி. அது எந்நேரமும் வெடிக்கலாம். நான் உன் கிட்ட அப்பவே சொல்லிகிட்டு இருந்தேன். அப்படி இருக்கறவ தம்பி கூட நீ ஒரு தேவையில்லாத தொடர்பு வச்சுகிட்டது சரியில்லை பவானி…."

பவானி ஒன்றும் சொல்லவில்லை. சந்திரசேகர் அந்த நாட்களில் ஆனந்தியை விவாகரத்து செய்யப்போவதாய் சொல்லிக் கொண்டிருந்தார். பார்க்க அழகாகவும், கோடீஸ்வரனாகவும் இருந்த அவர் மீது அவளுக்கு ஒருவித மையல் வந்ததில் ஆச்சரியம் இல்லை. பஞ்சவர்ணம் அதைப் பட்டவர்த்தனமாக ஆதரித்தாள். இளங்கோ ஒருவன் தான் அதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவன். அண்ணன் மீது அவள் நிறையவே பாசம் கொண்டிருந்தாலும் இந்த விஷயத்தில் அவன் பேச்சைக் கேட்கவில்லை……

"நீ எப்போ இன்னொரு கல்யாணம் செய்துகிட்டாய்" பவானி கேட்டாள்

"ஒரு வருஷம் கழிச்சு. பழசு எல்லாத்தையும் அழிச்சுட்டு வாழ்க்கையைப் புதுசா ஆரம்பிச்சேன். பண வசதி கம்மியின்னாலும் சந்தோஷமாய் இருக்கேன். பவானி நீ சந்தோஷமாய் இருக்கிறியா?"

அந்தச் சின்னக் கேள்வி அவளை அடுத்த கணம் குமுறிக் குமுறி அழ வைத்தது. முகத்தை மூடிக் கொண்டு அழுதபடி சொன்னாள். "நகைக்கடை….. ஜவுளிக்கடை………. பொம்மையாட்டம் இருக்கேன்…"

அவள் அழுது ஓய்ந்த போது இளங்கோ சொன்னான். "ஆனா ஒரு மனைவிங்கற அந்தஸ்தோட அங்கே உன்னை அந்தம்மா உட்கார வைக்கும்னு நான் எதிர்பார்க்கலை. நான் உன்னையும், உங்கம்மாவையும் சுட்டுக் கொன்னு அன்னிக்கு மழையில செத்துப் போன பிணங்களோட போட்டுருப்பான்னு நினைச்சேன். அப்படியெல்லாம் செய்யாமல் விட்டதும், உங்கம்மாவை அந்த வீட்டுல உக்கார வச்சதும் ஏன்னு எனக்கு இன்னும் புரியல. அந்தம்மா கேரக்டருக்கு இது ஒத்துப் போகல…."

கல்யாணமான புதிதில் சந்திரசேகரின் கட்டாயத்தின் பேரில் தான் தங்கள் திருமணம் நடந்ததென பவானி நம்பியிருந்தாள். பின் தான் புரிந்தது, சிவகாமி லேசாக முகம் சுளித்திருந்தால் போதும் சந்திரசேகர் பவானி என்ற ஒருத்தி இருப்பதையே மறந்திருப்பார் என்று. பின் எப்படி தங்கள் கல்யாணம் நடந்ததென்ற கேள்விக்கு அவளுக்கு இன்றும் பதில் கிடைக்கவில்லை.

இளங்கோ ஆர்வமாகக் கேட்டான். "உங்கம்மாவுக்கும், அந்தம்மாவுக்கும் ஒத்துப் போகுதா?"

பவானி அங்கு வந்த பிறகு முதல் முறையாகப் புன்னகை பூத்தாள். "அம்மா ஆரம்பத்துல கொஞ்சம் கொஞ்சமா அந்த வீட்டு அதிகாரத்தைப் பிடிக்கலாம்னு பார்த்தாங்க. ஆனா பெரியக்கா ஆரம்பத்துலயே சொல்லிட்டாங்க. "என் வீட்டுல விருந்தாளி விருந்தாளி மாதிரி தான் இருக்கணும். அதுக்கும் அதிகமா நடந்துகிட்டா எனக்குப் பிடிக்காது"ன்னு. அன்னிக்கு தன்னோட ரூம்ல போய் அடைஞ்சுகிட்டவங்க அதிகமா வெளியே வர்றதில்லை. ஆனா என்னிக்காவது ஒரு நாள் பழி வாங்காம விட மாட்டேன்னு அடிக்கடி சொல்றாங்க. புதுசு புதுசா திட்டம் போடறாங்க…"

"ஒரு தடவை போட்ட திட்டம் எதுல போய் முடிஞ்சதுன்னு தெரிஞ்ச பிறகும் உங்கம்மாவுக்கு புத்தி வரலை"

"அதுல அம்மா என்ன திட்டம் போட்டாங்க. அன்னிக்கு என்ன தான் நடந்தது?"

இளங்கோ தங்கையை சந்தேகத்தோடு பார்த்தான். "உனக்கு நிஜமாவே தெரியாதா?"

"சத்தியமா தெரியாது. அம்மாவைப் பொறுத்த வரை நான் பலவீனமானவள். அதனால் என் கிட்ட எதுவும் சொல்றதில்லை. நீ எதிர்த்துப் பேசறவன்னு உன் கிட்டயும் சொல்ல மாட்டாங்களே. பிறகு உனக்கெப்படி தெரியும்"

"உங்க அண்ணி சொன்னா…"

"அண்ணி என்ன ஆனாங்க?"

"தெரியல.."

"அண்ணா அந்த நாள் அப்படி என்ன தான் ஆச்சு?"

சிறிது நேரம் தங்கையையே பார்த்து அமர்ந்திருந்த இளங்கோவுக்கு அவளை எண்ணுகையில் பாவமாக இருந்தது. நடந்ததில் அவளுக்கும் பங்கு இருக்கும் என்று சந்தேகித்தது தவறு என்பது புரிந்தது.

"ஆரம்பம் மட்டும் தான் எனக்கும் தெரியும் பவானி…" என்று ஆரம்பித்தவன் அந்த மழைநாளில் அவனுக்குத் தெரிந்து நடந்த சம்பவங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்……….

(((((((((()))))))))))

ஆர்த்தியின் அலறலைக் கேட்டு ஆகாஷ் மின்னல் வேகத்தில் எழுந்து உள்ளே ஓட முயற்சிக்க, அந்த செக்ரட்டரி பாய்ந்து வந்து அவனைத் தடுத்தாள்.

"நீங்க போகக்கூடாது ஆகாஷ். நீங்க போனா விபரீதமா எதாவது நடந்தாலும் நடக்கும். இந்த ஸ்டேஜில் பேஷண்டை எப்படி ஹேண்டில் செய்யறதுன்னு டாக்டருக்குத் தெரியும். போய் டிஸ்டர்ப் செய்யாதீங்க"

என்ன தான் வழிந்தாலும் தன் வேலையில் கச்சிதமாக இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்ட ஆகாஷ் ஆர்த்தியைப் பற்றிய கவலையுடன் வேண்டா வெறுப்பாகத் தன் இருக்கையில் போய் அமர்ந்தான். சென்ற முறை கூட ஒன்றும் ஆகவில்லையே இப்போது ஏனிப்படி ஆயிற்று?

ப்ரசன்னாவும் அந்த அலறலை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆழ்மன உறக்கத்திலிருந்து விழித்து விடப்போகிறாள் என்று பயந்தவனாக, உடனடியாக சத்தமாக அதே நேரம் தைரியப்படுத்தும் வகையில் சொன்னான்.

"ஆர்த்தி பயப்பட ஒண்ணுமேயில்லை. நான் கூட இருக்கேன். தைரியமாயிரு. ரிலாக்ஸ்…..ரிலாக்ஸ்…."

நல்ல வேளையாக ஆர்த்தி ஆழ்மன உறக்கத்திலிருந்து வெளி வரவில்லை. ஆனால் தைரியமானது போலவும் தெரியவில்லை. அவள் முகத்தில் இன்னும் பயம் விலகவில்லை.

"ஆர்த்தி…விஜயா கதவைத் திறந்துட்டா. யார் உள்ளே வந்திருக்காங்க பார்"

ஆர்த்தியின் உதடுகள் அசைந்தன. ஆனால் சத்தம் வெளியே வரவில்லை. ப்ரசன்னா இரண்டு முறை கேட்டும் அவள் பேசவில்லை. அவள் உடல் லேசாக நடுங்கியது…

ப்ரசன்னா அதைப் பின் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். அவளுடைய கனவின் இன்னொரு பகுதியை எடுத்துக் கொண்டான். "ஆர்த்தி யாரோ வேகமா ஓடி வர்றாங்க. சத்தம் உனக்குக் கேட்குதா"

ஆர்த்தி மெல்ல முணுமுணுத்தாள். "கேட்குது"

"யாரது ஆர்த்தி?"

"தெரியல. என்னால பாக்க முடியல. இருட்டா இருக்கு"

ப்ரசன்னாவை அந்தப் பதில் திகைப்படைய வைத்தது. இது வேறு ஒரு நாள் நிகழ்ச்சியா? இல்லை அவள் அந்த சமயத்தில் இருட்டறையில் இருக்கிறாளா? ஆனாலும் தொடர்ந்து கேட்டான்.

"ஓடி வந்த ஆள் ஏதாவது பேசறாங்களா ஆர்த்தி"

"இல்ல….ஆனா பின்னாடியே நடந்து வந்தவங்க சொல்றாங்க. "குழந்தையை முதல்ல எடுத்துட்டு போ"ன்னு"

"அப்படி சொன்னது யார் ஆர்த்தி. உனக்கு அந்தக் குரல் யாரோடதுன்னு தெரியுமா?"

"ம்"

"யாரோடது"

"அக்காவோடது"

"அக்காவா? எந்த அக்கா"

"அப்பா அம்மாவோட அக்கா"

(தொடரும்)

About The Author

1 Comment

  1. Rave Krish

    The author already explained about Sivagami and the Dream lot. I am getting sick of this story. How many more days you need to end this freaking serial.

Comments are closed.