மனிதரில் எத்தனை நிறங்கள்!(43)

The best inheritance a person can give to his children is a few minutes of his time each day.
– O.A.Battista

கோயமுத்தூருக்கு காரில் போய்க் கொண்டிருந்த போது சந்திரசேகர் தன் மகளிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார். பவானி அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள். அவர் இப்படி விடாமல் தொடர்ந்து பேசுவது அபூர்வம். தன் பெரியக்காவிடம் அவர் அப்படி பேசுவார் என்ற போதிலும் என்றுமே அவள் முன்னால் அப்படி பேசியதாய் அவளுக்கு நினைவில்லை. சங்கரன் இருந்தால் கூட சந்திரசேகர் தமக்கையிடம் அதிக நேரம் பேச மாட்டார். மற்றவர்கள் அருகில் இல்லாத போது மட்டுமே அக்காவும் தம்பியும் நிறைய நேரம் பேசுவதை அவள் பார்த்திருக்கிறாள்.

அதனால் இன்று அவர் மகளிடம் பேசுவதை பவானி சுவாரசியத்துடன் பார்த்தாள். அவளுக்குத் தன் தந்தை நினைவு வந்தது. அவரும் அப்படித்தான் எல்லா விஷயங்களைப் பற்றியும் அவளிடம் மணிக்கணக்கில் பேசுவார். அவர் அவள் மீது உயிரையே வைத்திருந்தார். பவானியும் அப்படித்தான். தாயிடம் இல்லாத பாசமும் நெருக்கமும் தந்தையிடம் இருந்தது. சில நிமிடங்கள் அவள் பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள்.

அவள் திரும்பவும் நிகழ்காலத்துக்கு வந்த போது அந்தக் கால ஊட்டியைப் பற்றியும், அந்தக் காலத்தில் ஊட்டியில் தானும் டேவிடும் அடித்த லூட்டியைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்.

தந்தையின் இளமைக்காலத்தை ரசித்துக் கேட்ட ஆர்த்தி புன்னகையுடன் சொன்னாள். "அங்கிளும் இதை எல்லாம் இன்னைக்கு சொல்லிகிட்டு இருந்தார்".

சந்திரசேகரும் புன்னகைத்தபடி கேட்டார். "வேற என்ன சொன்னான்?"

"பெரியத்தை தயவுல தான் டாக்டராக முடிஞ்சதுன்னு சொன்னார்".

"உண்மை தான்… எங்கப்பா எச்சில் கைல காக்கா ஓட்டாத ரகம். அவர் கிட்ட நான் என் ஃப்ரண்டுக்குன்னு உதவி கேட்டிருந்தா மனுஷன் என்னை குழி தோண்டி புதைச்சுருப்பார். அக்கா கேட்டதால வேற வழியில்லாமல் வேண்டா வெறுப்பா உதவி செஞ்சார். காரணம் அக்கா மேல அவர் உயிரையே வச்சிருந்தார்….."

சிவகாமி மீது ஆர்த்திக்கு ஒரு கணம் பொறாமையாக இருந்தது. தந்தை, தம்பி, மகன் என்று எத்தனை பேர் அவள் மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள்?

சந்திரசேகர் தொடர்ந்தார். "….நானும் சின்னக்காவும் எப்பவுமே அவரை எதிர்த்து பேசினதோ, எதிர்த்து நின்னதோ இல்லை. ஆனா அக்கா அடிக்கடி எதிர்த்துப் பேசுவா. சண்டை போடுவா. ஆனாலும் அவ தான் கடைசி வரை அவரோட செல்லமாய் இருந்தாள்…."

அவர் சொன்ன விதம், அது ஏன் என்பதை அவரால் இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் வியப்பது போல இருந்தது. சிவகாமி தன் தந்தையிடம் சண்டை போடுவாள் எதிர்த்துப் பேசுவாள் என்ற தகவல் ஆர்த்திக்கு ஆச்சரியத்தைத் தந்தது. தந்தையிடம் நேரடியாக கேட்டாள். "அத்தை எதுக்கு தாத்தா கிட்ட சண்டை போடுவாங்கப்பா?"

சந்திரசேகர் அந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்லவில்லை. மகளிடம் தேவையில்லாமல் எதையோ சொல்லி இந்தக் கேள்வியை வரவழைத்து விட்டோம் என்று யோசித்ததாக ஆர்த்திக்குத் தோன்றியது. பவானியும் கணவன் என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வமாகப் பார்த்தாள்.

சந்திரசேகர் கடைசியில் பொதுவாகச் சொன்னார். "அவர் நிறைய விஷயங்கள்ல அக்காவுக்கு எதிர்மாறாய் இருப்பார். அதனால தான்….." அதற்கு மேல் அவர் எதையும் விவரிக்க முற்படவில்லை. அதற்குச் சரியாக அவர்கள் கார் பெரிய ஜவுளிக்கடை முன் நின்றது.

கடை முழுவதும் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டு இருந்தது. சந்திரசேகரைப் பார்த்தவுடன் கடை முதலாளி எழுந்து நின்று ராஜமரியாதையுடன் வரவேற்றார். அந்தப் பெரிய கடையைப் பார்த்து ஆர்த்தி மலைத்துப் போனாள். அவளுக்காக பவானி ஆடைகள் தேர்ந்தெடுத்துக் கொண்டே போன போது மலைப்பு அதிகரித்தது. "போதும் சித்தி" என்று அவள் சொன்னதை பவானி பொருட்படுத்தவில்லை. ஆர்த்திக்கு எந்த நிறங்கள் பொருந்தும், எந்த மாடல்கள் பொருந்தும் என்று யோசித்து தானே நல்ல ரசனையுடன் ஆடைகளை தேர்ந்தெடுத்தாள். ஓரிரு ஆடைகளில் ஒட்டியிருந்த விலையை ஆர்த்தி பிரித்துப் பார்த்த போது சந்திரசேகர் மெல்ல மகளின் காதைக் கடித்தார். "விலையெல்லாம் பார்க்காதே. இந்தக் கடையையே வாங்கினாலும் நம்ம பட்ஜெட்டுல துண்டு விழாது""

அவளுக்கு துணிமணிகள் தேர்ந்தெடுத்த பின் தனக்கும் சிலதை பவானி வாங்கிக் கொண்டாள். கடைசியில் தன் தாயிற்காக பட்டு சேலைகள் தேர்ந்தெடுத்த போது சந்திரசேகர் அவள் தேர்ந்தெடுப்பைப் பார்த்து சந்தேகப்பட்டு கேட்டார். "இதெல்லாம் யாருக்கு?"

பவானி அவர் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள். "எங்கம்மாவுக்கு"

சந்திரசேகர் முகத்தில் இகழ்ச்சி தெளிவாகத் தெரிந்ததை ஆர்த்தி கவனித்தாள். ‘நல்ல வேளையாக சித்தி கவனிக்கவில்லை’ என்று நினைத்துக் கொண்டாள்.

பவானி பத்து பட்டு சேலைகளை வாங்கி விட்டு ஆர்த்தியிடம் சொன்னாள். "உங்க பாட்டி தாத்தாவுக்கும் டிரஸ் எடுக்க பெரியக்கா சொல்லி இருக்காங்க".

பஞ்சவர்ணத்திற்கு பட்டு சேலை எடுத்த போது இகழ்ச்சியாக தந்தை பார்த்ததை கவனித்திருந்த ஆர்த்திக்கு இன்னொரு இகழ்ச்சியான பார்வையை சந்திக்க விருப்பமிருக்கவில்லை. "அவங்களுக்கு வேண்டாம் சித்தி"

சந்திரசேகர் மகளிடம் சொன்னார். "பரவாயில்லை எடு"

சிவகாமி சொல்லியிருக்கிறாள் என்பதற்காக அப்படி சொல்கிறாரா, இல்லை பஞ்சவர்ணத்தை விட நீலகண்டன் பார்வதி தம்பதியர் மேல் அவருக்கு சிறிதாவது நல்ல அபிப்பிராயம் இருக்கிறதா என்பதை ஆர்த்தியால் ஊகிக்க முடியவில்லை. சிவகாமி தன் தாத்தா பாட்டி மீது காட்டிய அக்கறை அவளை நெகிழ வைத்தது. பவானி மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் அவர்களுக்கும் தானே தேர்ந்தெடுத்தாள்.

கடையை விட்டு வெளியே வந்த போது ஆர்த்திக்கு திடீரென்று தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆட்கள் நிறைய தெருவில் இருந்தாலும் ஓரிருவர் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாலும் தன்னுள் எழுந்த உணர்வுக்கு அவர்கள் காரணம் இல்லை என்று உறுதியாகத் தோன்றியது. பின் யார் எங்கிருந்து தன்னை கண்காணிக்கிறார்கள் என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவளுள் அழுத்தமாகத் தோன்றிய அந்த உணர்வை அவளால் ஒதுக்கி விட முடியவில்லை. சிறு வயது முதல் பல சந்தர்ப்பங்களில் இதே போல் தோன்றியிருக்கிறது. பார்த்த போதெல்லாம் அங்கே கூட்டத்தையும், நெரிசலையும் தான் கண்டிருக்கிறாள். அதில் யார் என்று சுட்டிக் காட்ட அவளால் முடிந்ததில்லை.

இன்று நிறைய ஆட்கள் தெருக்களில் நடந்து கொண்டிருந்தார்கள். சிலர் செல் ஃபோன்களில் பேசியபடி நின்றிருந்தார்கள். இரண்டு இளைஞர்கள் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இல்லை என்று மறுபடியும் மனம் சொன்னது. தங்கள் காரை நோக்கி நடக்கையில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து தான் யாரோ பார்ப்பதாக திடீர் என்று தோன்ற ஆரம்பித்தது. காரின் கறுப்புக் கண்ணாடி ஏற்றப்பட்டிருந்தது. உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா, இல்லையா என்று வெளியே இருந்து சொல்ல முடியாவிட்டாலும் அவள் உள்மனதில் உள்ளே இருந்து தான் யாரோ தன்னை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தது.

மகள் திடீரென்று சிலையாக நிற்பதைக் கண்ட சந்திரசேகர் "என்ன ஆர்த்தி?" என்று கேட்டார்.

சொன்னால் தன்னை தந்தை பைத்தியக்காரி என்று நினைப்பார் என்று ஆர்த்திக்குத் தோன்றியது. ஒன்றுமில்லை என்று சொல்லி அவர்களுடன் தங்கள் காரில் ஏறி அமர்ந்தாள். ஆனாலும் அந்த உணர்வை மனதில் இருந்து அவளால் அகற்ற முடியவில்லை. யாரோ அவளை அங்கிருந்து தான் கண்காணிக்கிறார்கள். யார்? ஏன்? அவர்களுடைய கார் கிளம்பியது. அவர்கள் கார் போய் சரியாக ஒரு நிமிடம் கழித்து அந்தக் காரும் அங்கிருந்து கிளம்பியது.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. hemamalini.s

    I started reading after 30 chapters.were over. But, now it is so intriguing and interesting I read it every week . Very well presented work ; reminds of crime writer Sujatha. Good Work and Congrats to the writer!

Comments are closed.