மனிதரில் எத்தனை நிறங்கள்! (22)

Trust him not with your secrets, who, when left alone in your room, turns over your papers.
– Johann Kaspar Lavater

பார்வதி சோபாவில் சாய்ந்தபடியே அசந்து தூங்கும் கணவனை புன்னகையுடன் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். சிறிது நேரம் முன்பு வரை தான், அவள் காரில் காதைக் கடித்ததிற்குத் திட்டித் தீர்த்தார்.

"நான் என்ன பாவக்காயைக் கடிச்சுட்ட மாதிரி மூஞ்சை வச்சிருக்கேனா? இப்படிப் பொது இடத்தில் என் கிட்ட வம்பு வச்சுக்காதேன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பேன். நானே இந்த வீட்டுக்கு வர வேண்டியதாய் போயிடுச்சேன்னு வெறுப்புல உட்கார்ந்திருக்கேன். பெருசா உபதேசம் செய்ய வந்துட்டா. நிலைமை தெரியாம அந்த ஆகாஷும், நம்ம பேத்தியும் நெருக்கமாகிறதை ரசிச்சுட்டு வேற இருக்கிறாய். பட்டாலும் உனக்குத் தெரியறதில்லை…..உன்னைச் சொல்லித் தப்பில்லை…. …."

அதற்கு மேல் அவர் சொன்னதை அவள் காது கொடுத்து கேட்கவில்லை. இனி என்ன வரப்போகின்றது என்று அவளுக்குத் தெரியும். அவர்களுக்குப் பொருத்தம் பார்த்த அந்த எட்டி மடை ஜோசியன், என்றைக்கோ அவளுடைய தாயார் அவருக்கு காபித்தூளோ, பாலோ பெயருக்குப் போட்டு காபி என்ற பெயரில் ஒரு திரவத்தைக் கொடுத்தது, கல்யாணமான புதிதில் அவள் அவர் வாங்கிக் கொடுத்த சேலையில் ஊதுபத்தியால் கவனமில்லாமல் ஓட்டை போட்டுக் கொண்டது போன்ற பல முறை கேட்டு அலுத்துப் போன அவரது வருத்தங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும். பதில் சொல்லி அவர் இரத்த அழுத்தத்தை உயர்த்த விரும்பாமல் பார்வதி அமைதி காத்தாள். நீலகண்டன் பேசி முடித்து விட்டு அசதியில் கண்களை மூடியவர் தூங்கியே விட்டார்.

"இப்ப எல்லாம் மனுஷன் சீக்கிரமே களைச்சுப் போறார். முன்ன இருந்த சக்தியெல்லாம் இந்த ஹார்ட் அட்டாக்கில் போயே போயிடுச்சு. பாவம்….."

சத்தமில்லாமல் எழுந்து பேத்தி என்ன செய்கிறாள் என்றறிய வெளியே வந்தாள். ஹால் வெறிச்சோடி இருந்தது. ‘இந்த மாதிரி பெரிய வீட்டில் யார் எங்கே இருக்காங்கன்னே தெரியறதில்லை.’ ஆர்த்திக்கு ஆனந்தியின் அறை தான் ஒதுக்கி இருக்கிறார்கள் என்று அமிர்தம் சொன்னது நினைவுக்கு வர மாடிப்படி ஏறினாள். படியேற ஏற மனதில் கனமும் கூடியது. மகள் ஆனந்தி வாழ்ந்த போது பல முறை ஏறி இறங்கிய படிகள் இவை. அவள் வாழ்ந்த நாள் வரை அவர்கள் வரும் போதெல்லாம் சந்தோஷமாக ஆரவாரத்துடன் அவள் எதிர்கொள்வாள். இப்போதோ அந்த வீட்டில் உள்ளே வரச் சொல்லக் கூட உடனடியாக ஆள் இல்லை. ஏதோ அந்தப் பெரிய மனிதர் அழைத்திருக்காவிட்டால் நிலைமை பரிதாபமாகப் போயிருக்கும்…….

ஆர்த்தியின் அறைக்கு நுழைந்த போது பார்வதியும் திடுக்கிட்டுப் போனாள். அந்த அறையில் அந்த சூழ்நிலையில் கையால் அந்த வீணையை ஆழ்ந்த சிந்தனையுடன் தடவிக் கொண்டு நின்ற ஆர்த்தியைப் பார்க்கையில் அவளுக்குத் தன் மகள் ஆனந்தியே உயிர் பெற்று வந்தது போலத் தோன்றியது. அவளுக்கு வயிற்றை என்னவோ செய்தது. அவளையும் அறியாமல் வாய் அழைத்தது. "ஆனந்தி…." தன் குரலைக் கேட்ட பின் தான் தன்னையும் அறியாமல் பேத்திக்குப் பதிலாக மகளை அழைத்திருக்கிறோம் என்பதை அவள் உணர்ந்தாள்.

ஆர்த்தியும் திகைப்புடன் பாட்டியைத் திரும்பிப் பார்த்தாள். "என்ன பாட்டி அம்மா பேர் சொல்லிக் கூப்பிடறீங்க?"

ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்த பார்வதி கடைசியில் உண்மையைச் சொன்னாள். "இல்லை…. ஒரு நிமிஷம் உங்கம்மா மாதிரியே தெரிஞ்சுது. இந்த ரூம், இந்த வீணை, உங்கம்மாவோட சாயல் உன் கிட்ட இருக்கிறது இதெல்லாம் காரணமாய் இருக்கலாம்……"

"அம்மா குணத்திலேயும் என்னை மாதிரியா பாட்டி?"

பார்வதி மறுபடியும் தயங்கினாள். ஆனந்தியைப் பற்றிப் பேச்சு திரும்புவது அவளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. பிறகு சமயோசிதமாகச் சொன்னாள். "உன்னை மாதிரி யாரும் கிடையாது ஆர்த்தி".

"இது நான் கேட்ட கேள்விக்கான பதில் இல்லையே பாட்டி"

பார்வதி தன் ஓட்டைப் பல் தெரிய சிரித்தாள். பிறகு சிரிப்பு தேய்ந்து அவள் முகத்தில் சிந்தனை படர்ந்தது. என்ன சொல்வது என்று நினைத்தபடி மகளுடைய புகைப்படத்தைப் பார்த்தாள். ஆனந்தியின் கண்கள் புகைப்படத்தில் மின்னின. ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்றன. அவள் உயிர் பெற்று அங்கு வந்து இருப்பதைப் போல் ஏனோ தோன்றியது. பார்வதிக்கு அந்த ஊட்டிக் குளிரிலும் வியர்த்தது.

ஆனந்தி உயிரோடு இருந்த காலத்தில் என்றுமே நீலகண்டன் மகளைப் பற்றி ஏதாவது தப்பாக சொன்னதாகவோ, கண்டித்ததாகவோ பார்வதிக்கு நினைவில்லை. மகள் தவறே செய்ய முடியாது என்ற திடமான நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆனால் பார்வதி மகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, கண்டிக்கவோ என்றுமே தயங்கியதில்லை. ஆனந்தி தன் தாய் பேச்சைக் கேட்டுத் திருந்தாவிட்டாலும் கண்களில் குறும்பு மின்ன முழுவதையும் கேட்காமல் இருந்ததில்லை….

மகள் புகைப்படத்தைப் பார்த்தபடி பார்வதி உள்ளதை உள்ளபடி சொன்னாள் "உன் அம்மாவும் ரொம்பவே நல்லவள். புத்திசாலி. எதிலும் நியாய அநியாயத்தைப் பார்க்கக் கூடியவள். அந்த விஷயத்தில் எல்லாம் அவள் உன்னை மாதிரி தான். ஆனால் சில விஷயங்களில் உனக்கு நேர் எதிர்மாறாய் இருப்பாள். முக்கியமாய் உனக்கு மன்னிக்கத் தெரியும். அவளுக்கு மன்னிக்கத் தெரியாது"

பாட்டி சொன்ன விஷயமும், அதை அவள் ஆனந்தியின் புகைப்படத்தைப் பார்த்தபடி சொன்ன விதமும் ஆர்த்தியை திகைக்க வைத்தது. "என்ன பாட்டி சொல்றீங்க"

பார்வதி அவள் திகைப்பைக் கவனித்தது போல் தெரியவில்லை. மகள் புகைப்படத்தில் இருந்து கண்களை எடுக்காமல் சொன்னாள்.

"எத்தனை நெருக்கமாய் பழகி இருந்தாலும் சரி, எவ்வளவு வருடங்கள் பழகி இருந்தாலும் சரி யாராவது அவளை ஏமாத்திட்டாலோ, அவமானப்படுத்திட்டாலோ அவளால் தாங்க முடியாது. அதுக்குப் பிறகு அவங்க எத்தனை கீழிறங்கி வந்து மன்னிப்பு கேட்டாலும் சரி, பிறகு என்ன ஆனாலும் சரி அவளைப் பொருத்த வரை அவங்க எதிரி தான். பல சமயங்கள்ல அது ரொம்ப சின்ன விஷயமாய் இருக்கும். ஆனா அவளைப் பொருத்த வரை ஒரு தடவை ஆன விரிசல் எப்பவுமே விலக்கி விட்டுடும்"

ஆர்த்திக்குக் குழப்பம் குறையவில்லை. பார்வதி மகள் புகைப்படத்திலிருந்து விலக்கிய பார்வையை பேத்தி மீது திருப்பினாள். ஆர்த்தியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைக் கவனித்த போது அவள் மனம் பாசத்தால் கனிந்தது. பேத்திக்கு விளக்கம் தர வாயைத் திறந்தாள்.

அவள் என்ன சொல்லப் போகிறாள் என்றறிய அறைக்கு வெளியே ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த மூர்த்திக்கும் ஆவலாக இருந்தது. ஆனந்தியைப் பற்றி அந்த வீட்டில் பேசுபவர்கள் குறைவு என்பதால் ஆனந்தி ஒரு புதிராகவே அவனுக்கு இருந்தாள். சந்தேகிக்கப்படும் விதத்தில் மரணமடைந்தாள் என்பதைத் தவிர அவளைப் பற்றி வேறெந்தத் தகவலும் அவனுக்கும் தெரியாது. ஆனால் அந்த நேரமாய்ப் பார்த்து ஒரு வித்தியாசமான கார் ஹாரன் சத்தம் கேட்டது. உடனடியாக அந்த இடத்தை விட்டு மூர்த்தி மறைந்தான்.

சிவகாமியின் கார் ஹாரன் சத்தம் தான் அது என்பதை பார்வதியும் உணர்ந்தாள். உச்சஸ்தாயியில் நாதமிசைக்கும் அந்த ஹாரனை அன்றிலிருந்து இன்று வரை சிவகாமி மாற்றவில்லை….. பேத்தியிடம் சொல்ல வந்ததை அப்படியே விழுங்கிக் கொண்டு அப்போதைய தகவலைச் சொன்னாள். "ஆர்த்தி உன் பெரியத்தை வந்துட்டா"

(தொடரும்)

About The Author