மனிதரில் எத்தனை நிறங்கள்!(77)

What! wouldst thou have a serpent sting thee twice?
– Shakespeare in "Merchant of Venice"

ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் வந்து ஆர்த்திக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது சந்திரசேகர் தான். ஆர்த்தி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஐந்தரை. மனம் நெகிழ ஆர்த்தி தந்தைக்கு நன்றி சொன்னாள். அவருடன் வந்திருந்த பவானியும் ஆர்த்திக்கு வாழ்த்து சொன்னாள். ஆர்த்தி பவானியைக் கட்டியணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். "தேங்க்ஸ் சித்தி"

ஒரு கணம் பவானி திகைப்புடன் ஆர்த்தியைப் பார்த்தாள். ஆர்த்தியின் முகத்தில் உண்மையான பாசம் தெரிந்தது. சமீப காலங்களில் அவளிடம் யாரும் இந்த அளவு அன்புடன் நடந்து கொண்டதாக பவானிக்கு நினைவில்லை. தந்தை, தமையனோடு எல்லாம் போயிற்று. இன்று இவள் காட்டிய இந்தப் பாசம் மனமார்ந்த ஒன்றாகத் தெரிய பவானிக்கு கண்கள் லேசாகக் கலங்கின. இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்தால் வாய் விட்டு அழுது விடுவோமோ என்ற பயத்தில் பவானி சில வினாடிகள் மட்டும் அங்கே தங்கி விட்டு தனதறைக்குச் சென்று விட்டாள். கதவை சாத்திக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவளையும் நேசிக்க ஒரு ஜீவன் இருக்கிறது. அருகதை இருக்கிறதோ இல்லையோ நேசிக்கப்படுவதில் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. அதுவும் நேசித்தவர்களை எல்லாம் தொலைத்து விட்டு ஒரு ஜடமாய் வாழ்ந்து வரும் அவளுக்கு இந்தப் பாசம் ஒரு உயிரூட்டமாய்த் தோன்றியது.

சந்திரசேகர் மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார். "டேவிட் பொண்ணு லிஸாவை கூட்டிகிட்டு வர கார் அனுப்பி இருக்கிறேன். அவள் வந்தால் உனக்கும் ஒரு நல்ல கம்பெனி. ரொம்ப நல்ல பொண்ணு."

லிஸாவைப் பற்றி அவர் சொன்னவுடன் ஆர்த்திக்கு மூர்த்தி சொன்னது தான் நினைவுக்கு வந்தது. அவன் ஆகாஷையும், அந்தப் பெண்ணையும் இணைத்துப் பேசி இருந்தான். அது எவ்வளவு தூரம் உண்மை என்று அவளுக்குத் தெரியவில்லை.

சந்திரசேகர் அவளிடம் பேசிக் கொண்டிருக்கையில் அமிர்தம் வந்து வாழ்த்தினாள். அவர்கள் இருவரும் சென்ற பின் பஞ்சவர்ணமும், மூர்த்தியும் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். பஞ்சவர்ணம் அதிக நேரம் நிற்கவில்லை. போய் விட்டாள். ஆனால் மூர்த்தி தங்கி சில நிமிடங்கள் பேசினான். அவன் அன்று தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொன்னது சம்பந்தமாக இன்று எதுவும் பேசவில்லை. ஆனால் பஞ்சவர்ணம் அறிவுரையின் படி லிஸாவைப் பற்றி மட்டும் சொல்லி எச்சரித்தான்.

"ஆர்த்தி அந்த லிஸா வர்றாள்னு கேள்விப்பட்டேன். அவ கிட்ட நீ ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப இனிமையா பழகினாலும் மனசு அந்த அளவு சுத்தமில்லை. நான் ஆகாஷும், அவளும் சொல்லக் கூசற அளவு நெருக்கமா இருந்ததை ரெண்டு மூணு தடவை பார்த்துட்டேன். நான் வெளியே சொல்லிடுவேன்னு பயந்து என்னைப் பத்தி அவங்களாவே தப்பு தப்பா வெளியே பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க…."

ஆர்த்திக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. அவன் போய் நிறைய நேரம் அவளால் வேறெதைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை. பார்த்திபன் வந்து வாழ்த்து தெரிவித்து அவள் சிந்தனைகளை திசை திருப்பினான்.

"தேங்க்ஸ். என்ன பார்த்திபன். நீங்க ரொம்ப பிசி போல இருக்கு. இடையில சில நாள் பார்க்கவே இல்லை. அப்படிப் பார்த்தாலும் பேசக் கூட உங்களுக்கு நேரம் இருக்கிறதில்லை"

அது உண்மையே. சில நாட்களாக அவனுக்கு வேலைகள் அதிகமாக இருந்தன. சில நாட்கள் கோயமுத்தூரிலேயே தங்க வேண்டி இருந்தது. சிரித்துக் கொண்டே சொன்னான். "பெரியம்மா கீழே வேலை பார்க்கிறது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை ஆர்த்தி. ஆபிஸ்ல சொந்தம், உறவுன்னு எந்த சலுகையும் கொடுத்துட மாட்டாங்க. என்னை விடு உங்கப்பாவே சில நேரங்கள்ல பெரியம்மா கண்ல படாம இருக்க டிரை செய்வார்…"

சிவகாமிக்குப் பயந்து அப்பா ஓடி ஒளிவதைக் கற்பனை செய்யவே ஆர்த்திக்கு வேடிக்கையாக இருந்தது. பார்த்திபன் தொடர்ந்து சொன்னான். "….எதிர்காலத்துல உன் ஆதிக்கத்துல கம்பெனி வர்றப்ப அவ்வளவு கெடுபிடி இருக்காதுன்னு நினைக்கிறேன்."

ஆர்த்திக்கு கம்பெனி நிர்வாகத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்வதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. அனுபவமும், திறமையும் தேவையான அளவு இல்லாத அவளால் என்ன செய்து விட முடியும்.? ஆனால் அவளுக்கு அந்தக் கம்பெனி நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் இருக்கிறது என்பதை அவன் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறான் என்பது புரிந்தது. பார்வதியும் நீலகண்டனும் வர பார்த்திபன் மேற்கொண்டு பேச்சை வளர்த்தாமல் விடை பெற்றான்.

ஆர்த்தி கீழே வந்த போது சிவகாமியும், சங்கரனும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள். அந்த வீட்டில் ஆகாஷ் மட்டும் வாழ்த்து சொல்லவில்லை. அன்று காலை முதல் அவள் கண்ணுக்கு அவன் தென்படவேயில்லை.

=========

லிஸாவின் வரவால் டேவிடும், மேரியும் சந்தோஷப் பிரவாகத்தில் மூழ்கி தத்தளித்தார்கள்.

"பார்த்தியா மேரி. நாம ரெண்டு பேரும் எவ்வளவு கெஞ்சிக் கூப்பிட்டிருப்போம். அப்ப எல்லாம் வராதவ சந்துரு கூப்பிட்டவுடனே வந்து நிக்கறா பாரு…"

லிஸா தர்மசங்கடத்துடன் பெற்றோரைப் பார்த்தாள். "என் வீட்டுக்காரர் கிட்ட சந்துரு மாமா பேசினவுடனே அவர் ‘அவ்வளவு பெரிய மனுஷன் அப்படி வற்புறுத்திக் கூப்பிடறார். நீ போகாம இருந்தா நல்லா இருக்காதுன்னு என்னை தள்ளாத குறையா அனுப்பிட்டார்"

"ஏன் மேரி. அப்ப மாப்பிள்ளைக்கு நான் பெரிய மனுஷனாத் தெரியலையா?"

"அதென்ன, மேரி மேரின்னு மறைமுகமா சாடறது. நேரிலேயே கேட்கலாமே" என்று லிஸா கேட்க மேரி சமாதானப்படுத்தினாள். "அவர் கிடக்கிறார் விடு. யார் கூப்பிட்டு நீ வந்தா என்ன, நீ இங்கே வந்து நின்னதே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்…."

சிறிது நேரம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு பேச்சு ஆர்த்தியைப் பற்றியதாக இருந்தது. டேவிட் சொன்னார். "நீ உன் அம்மா கிட்ட அவங்க ப்ரண்டைப் பத்தி அடிக்கடி கேட்பாயில்லையா. ஆர்த்தியைப் பார்த்தா நீ அவ அம்மாவையே பார்த்த மாதிரி தான். அச்சு எடுத்த மாதிரி அப்படியே இருக்கிறாள். ஆனா இவ ஆனந்தியை விடவும் நல்ல பொண்ணு"

"அதென்ன ஆனந்தியை விடவும் நல்ல பொண்ணு. ஆனந்தி கிட்ட அப்படி என்ன நல்லதில்லாம இருந்துச்சு" மேரி கணவனைப் பார்த்து முகம் சுளித்துக் கேட்டாள்.

"ஒண்ணுமில்லை. வாய் கொஞ்சம் அதிகம். இந்தப் பொண்ணு அப்படியில்லைன்னு சொல்ல வந்தேன்"

"உண்மையைப் பேசினா வாய் அதிகம்னு அர்த்தமா?"

டேவிட் என்ன சொல்வதென்று யோசித்தார். மேரி அவரை விடுவதாக இல்லை. "அதுவே சிவகாமி அக்கா பேசினா நீங்களும், உங்க ஃப்ரண்டும் ஆஹா, ஓஹோன்னு புகழ்வீங்க. எங்கக்காவை மிஞ்சி எதுவுமே இல்லைன்னு தம்பட்டம் அடிச்சுக்குவீங்க. இந்த தைரியம் யாருக்கு வரும்னு கேட்பீங்க. ஆனா நீங்க கட்டிகிட்டு வந்தவ பேசினா மட்டும் வாயாடின்பீங்க. திமிர்ம்பீங்க. ஏங்க இப்படி ஆளுக்கொரு அளவுகோல் வச்சு அளக்குறீங்க"

டேவிட் மெள்ள எழுந்தார். "எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க பேசிகிட்டிருங்க. நான் இதோ வந்துடறேன்…"

தந்தை சென்ற பின்னும் கோபம் அடங்காமல் அமர்ந்திருந்த தாயை லிஸா திகைப்புடன் பார்த்தாள். மேரி இந்த அளவு கோபித்து அவள் இதுவரை பார்த்ததில்லை. அந்த பழைய நாட்களில் அப்படி என்ன தான் நடந்திருக்கிறது?

(தொடரும்)”

About The Author