மனிதரில் எத்தனை நிறங்கள்! (78)

Perdition catch my soul,
But I do love thee! and when I love thee not,
Chaos is come again.
– Shakespeare in "Othello"

"ஆர்த்தி இது தான் எங்க மகள் லிஸா. லிஸா, இது ஆர்த்தி"

மேரி அறிமுகப்படுத்தினாள். லிஸாவைப் பார்த்தவுடன் ஆர்த்திக்கு மூர்த்தி அவளையும் ஆகாஷையும் பற்றி சொன்னது தான் உடனடியாக நினைவுக்கு வந்தது. பார்க்க மிகவும் அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் கவர்ச்சியான உடற்கட்டோடு இருந்தாள். ஆகாஷுக்கு இவள் மேல் ஈடுபாடு இருந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை….. எண்ண ஓட்டத்தை அதற்கு மேல் ஓட ஆர்த்தி விடவில்லை. எது எப்படியிருந்தாலும் பெற்றோர் எத்தனை கூப்பிட்டும் வராதவள், தன் தந்தை தனக்காக அழைத்ததும் இங்கு வந்திருக்கிறாள் என்ற நிஜம் அவளுக்குள் நன்றியுணர்ச்சியை ஏற்படுத்தியது. முகம் மலர ஆத்மார்த்தமாக லிஸாவை வரவேற்றாள்.

லிஸா ஆர்த்தி இவ்வளவு அழகாக இருப்பாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் பிறந்தநாளையொட்டி ஆர்த்தியை பவானி நன்றாகவே அலங்காரப்படுத்தி இருந்தாள். தன்னை வரவேற்றவளின் கள்ளங்கபடமில்லாத அந்த முகமலர்ச்சி லிஸாவுக்கு மகிழ்ச்சியை அளித்தது. "ஹேப்பி பர்த்டே ஆர்த்தி"

சிறிது நேரத்திலேயே இருவரும் நெருக்கமாகி விட்டார்கள். தூரத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரசேகர் சந்தோஷப்பட்டார். "பார்த்தாயா டேவிட். நான் நினைச்ச மாதிரியே அவங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸாயிட்டாங்க."

தோட்டத்திற்குத் தாயுடன் வந்து கொண்டிருந்த ஆகாஷுக்கு ஆர்த்தியுடன் பேசிக் கொண்டிருந்த லிஸாவைப் பார்த்தவுடன் திகைப்பு ஏற்பட்டது. "லிஸாவை யார் கூப்பிட்டாங்க?"

சிவகாமிக்கும் லிஸாவின் வரவு ஆச்சரியத்தைத் தான் ஏற்படுத்தியது. சந்திரசேகர் அவளை அழைத்தது பற்றி அவளிடம் சொல்லியிருக்கவில்லை என்றாலும் அவளால் ஊகிக்க முடிந்தது. மகனிடம் சொன்னாள். "உன் மாமா தான் கூப்பிட்டிருப்பான். ஆர்த்திக்கு மனம் விட்டுப் பேச அவ வயசுல ஒரு தோழி இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்லிகிட்டு இருந்தான்…."

ஆகாஷ் ஒன்றும் சொல்லவில்லை. தர்மசங்கடமான சில நினைவுகள் அவனை அழுத்தினாலும் வெளியே காண்பிக்காமல் தாயுடன் நடந்தான். சிவகாமிக்கு அவன் தர்மசங்கடத்தை ஊகிக்க முடிந்தாலும் அதைப் பற்றி மேற்கொண்டு சிந்திக்கப் போகவில்லை. சந்திரசேகர் தன் மகளுக்காக யோசித்து யோசித்து செயல்படுவது பற்றி மனம் சிந்தித்தது…..

ஆகாஷைப் பார்த்தது லிஸாவும் ஒரு வித தர்மசங்கடத்தில் நெளிந்ததை ஆர்த்தி கவனித்தாள். மூர்த்தி சொன்னதில் உண்மை இருக்குமோ?

லிஸா தன்னை சமாளித்துக் கொண்டு "ஹாய் ஆகாஷ்" என்றாள். ஆகாஷும் "ஹாய் லிஸா. ஊட்டிக்கு எப்ப வந்தாய்?"

"மத்தியானம்"

அதற்கு மேல் பேசும் வாய்ப்பை சந்திரசேகர் தரவில்லை. "அக்கா எல்லாரும் வந்தாச்சு. ஆரம்பிக்கலாமா?" என்று அவர் சத்தமாய் கேட்க சிவகாமி தலையசைத்தாள்.

தோட்டம் மின் விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருக்க அங்கு எல்லோரும் கூடியிருந்தார்கள். கடைசியாக பஞ்சவர்ணம் விலையுயர்ந்த பட்டுச்சேலை உடுத்திக் கொண்டு தோட்டத்தில் பிரவேசித்தாள். மாடியை விட்டு அவள் கீழே இறங்கி அவர்கள் எல்லோரும் பார்த்து பல நாட்கள் ஆகியிருந்ததால் அவளை எல்லோரும் அதிசயமாகப் பார்த்தார்கள். அமிர்தம் சிவகாமியிடம் முணுமுணுத்தாள். "இந்தக் கிழவி எதுக்கு திருஷ்டி மாதிரி இந்த இடத்துல?"

சிவகாமி பஞ்சவர்ணத்தை அங்கீகரிப்பது கூடத் தன் தகுதிக்குத் தகுந்ததல்ல என்பது போல் இருந்தாள்.

ஆர்த்தி கேக்கை வெட்ட எல்லோரும் கூடி நின்று ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ பாடினார்கள். ஆர்த்திக்கு மனம் நிறைந்திருந்தது. இத்தனை வருடங்களும் பிறந்த நாள் என்றால் கோயிலிற்குப் போவதும், வீட்டில் பாட்டி பாயாசம் செய்வதும் மட்டுமே நடக்கும். இது போன்ற ஒரு கூட்டமான வாழ்த்துகள் கேட்டு அவளுக்குப் பழக்கமில்லை. அந்த நிகழ்ச்சியை வீடியோ வேறு எடுக்க சிவகாமி ஏற்பாடு செய்திருந்தாள். காமிரா ஆர்த்தியையே மையம் கொண்டு இருந்தது.

கேக் வெட்டி முடித்ததும் சந்திரசேகர் மகளுக்கு வைரத்தால் ஆன நகை செட்டை பரிசாக அளித்தார். ஆர்த்திக்கு ஒரு பிறந்த நாளுக்கு இவ்வளவு விலை உயர்ந்த பரிசு மிக அதிகம் என்று தோன்றியது. ஆனால் தந்தையிடம் சொன்னால் அவர் மனம் வருத்தப்படும் என்று தோன்றியது. சிவகாமி வந்து நெக்லஸை அவளுக்கு அணிவித்தாள். அவளும் சங்கரனும் சேர்ந்து அவளை ஆசிர்வதித்தார்கள். அமிர்தம் தங்க வளையல்களை ஆர்த்தி கைகளில் நுழைத்து ஆசிகள் சொன்னாள். பஞ்சவர்ணம் விலை உயர்ந்த கடிகாரத்தை ஆர்த்தி கையில் கட்டி வாழ்த்தினாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நீலகண்டனுக்கு தாங்கள் எடுத்து வந்திருந்த நானூறு ரூபாய் புடவையை ஆர்த்தியிடம் தர கூச்சமாக இருந்தது. முன்பே அவர்கள் செய்யப்போவதை அறிந்திருந்த போதிலும் எல்லாருக்கும் முன் அந்த சேலை துச்சமாகத் தோன்றும் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை. ஆனால் பார்வதி அவரைத் தள்ளாத குறையாய் நகர்த்தினாள். "நடங்க"

பள்ளிக்குப் பிரியமில்லாமல் செல்லும் மாணவனைக் கூட்டிக் கொண்டு போவது போல அவரை அழைத்துச் சென்ற பார்வதி அந்த சேலையை அவர் கையால் பேத்திக்குத் தர வைத்தாள். ஆர்த்தி ஆவலாக அந்த சேலையை அங்கேயே பிரித்துப் பார்த்த போது நீலகண்டனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. கூனிக் குறுகிப் போனார்.

"எவ்வளவு அழகா இருக்கு. எனக்குப் புடிச்ச கலர்." பெரிதாக மகிழ்ந்த ஆர்த்தி "தாத்தா தான் செலக்ட் செஞ்சிருப்பார். எனக்குத் தெரியும்" என்று தாத்தாவின் கையைப் பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்த போது கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்துவது கிழவருக்குப் பெரும்பாடாக இருந்தது. அவர் உணர்வுகளை அறிய முடிந்த பார்வதி அந்த வீடியோவில் அவர் அழுவதைப் படம்பிடித்து விடப் போகிறார்கள் என்று பயந்து ஆர்த்தியை வாழ்த்தி விட்டு அங்கிருந்து அவசரமாக அவரை இழுத்துப் பின் வாங்கினாள்.

வைரத்தில் ஒரு முழு செட்டையே செய்து தந்தும் அது ஏற்படுத்தாத மகிழ்ச்சியை அந்த மலிவான சேலை மகளுக்குத் தந்ததை சந்திரசேகரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் இந்தக் காட்சியைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்த சங்கரன் தன் மனைவியிடம் முணுமுணுத்தார். "இந்தப் பொண்ணு ரொம்பவும் நல்ல பொண்ணு சிவகாமி". தாயின் அருகில் நின்றிருந்த ஆகாஷ் காதிலும் அது விழுந்தது. தாயின் அபிப்பிராயத்திற்காக ஆகாஷ் சிவகாமியைப் பார்க்க அவள் கணவரின் கருத்துக்கு வெறுமனே தலையை ஆட்டினாள்.

டேவிட், மேரி தம்பதிகள் பட்டுச்சேலையையும், லிஸா மேக்கப் செட்டையும், மூர்த்தி இதய வடிவில் ஒரு கடிகாரத்தையும், பார்த்திபன் சில பாடல் சி.டிக்களையும் தந்து அவளை வாழ்த்தினார்கள். அவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கையில் ஆகாஷ் அமைதியாக அமர்ந்திருந்தானே ஒழிய எழுந்து வாழ்த்தப் போகவில்லை.

அவன் மனம் இரண்டாகப் பிரிந்து வாதாடிக் கொண்டிருந்தன. இன்று எப்போதையும் விட ஆர்த்தி அழகாகத் தெரிந்தாள். அவனைத் தவிர எல்லோரும் சென்று வாழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வீட்டின் உள்ளேயிருந்து பல வருடங்களாக வெளியே வராத பஞ்சவர்ணம் கூட அபூர்வமாய் வாசலைத் தாண்டி வந்துள்ளாள். சென்று வாழ்த்த ஒரு மனது காதலுடன் உந்த, இன்னொரு மனது கட்டுப்பாட்டை விட்டு விடாதே என்று எச்சரித்தது.

(தொடரும்)

About The Author

2 Comments

  1. BB

    Yoo finish it soon or update it twice a week.. i cant wait to read the ending… 🙁 its been 78 weeks…. more than an year.. .following the story is really hard…. i had to read again the entire thing.. so yea pls write twice a week.

  2. DB

    எனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருக்கு……. ஆனா………….கவலை எதுக்குன்னா அடுத்த பகுதிய இப்பவே வாசிக்க ஏழான்னு தான்………….தயவு பண்ணி அவசரமாக பிரசுரீங்க ………….

Comments are closed.