மனிதரில் எத்தனை நிறங்கள்! (84)

With you is the key that opens the door to reality; none can offer it for it is yours. Through your own awareness you can open the door; through your own self-awareness only can you read the rich volume of self-knowledge, for in it are the hints and the openings, the hindrances and the blockages that prevent and yet lead to the timeless, to the eternal.
– J.Krishnamurthy

"ஹலோ ஆர்த்தி எப்படி இருக்கீங்க?"

அவளைக் கண்டதில் டாக்டர் ப்ரசன்னா ஆத்மார்த்தமாய் மகிழ்ந்தது போல ஆர்த்திக்குத் தோன்றியது. இது போல ஒவ்வொரு பேஷண்டிடமும் காட்டிக் கொள்வானோ என்றும் சந்தேகம் கூடவே வந்தது. ஆனாலும் அவனுடைய நட்புடன் கூடிய மகிழ்ச்சியைக் காண ஆர்த்திக்கும் சந்தோஷமாக இருந்தது.

"ஃபைன். தேங்க் யூ"

ஆர்த்தியை உள்ளே இருந்த இன்னொரு அறைக்கு ப்ரசன்னா அழைத்துப் போனான். மங்கலான வெளிச்சத்தில் இருந்த அந்த அறையில் ஒரு அழகான சாய்வு நாற்காலியும், டேப் செய்யும் உபகரணங்களும் இருந்தன. சுவரில் தியானத்தில் இருந்த ஒரு பெரிய புத்தர் ஓவியம் தொங்கிக் கொண்டிருந்தது. ப்ரசன்னா ஆர்த்தியை அந்த நாற்காலியில் அமரச் செய்தான்.

"ஆர்த்தி உங்களுக்கு டென்ஷன் எதுவும் இல்லையே"

"பெருசா இல்லை. இருந்தாலும் கொஞ்சம் இருக்கு"

ப்ரசன்னா புரிகிறது என்பது போல் புன்னகைத்தான். "ஆர்த்தி நம்மைச் சுற்றி நடக்கிற எல்லாமே ஆழ்மனசுல பதிவானாலும் நமக்குத் தேவைன்னு நினைக்கிற ஒருசில விஷயங்களை மாத்திரம் ஆழ்மனசு மேல்தள மனசுக்கு அனுப்புகிறது. அது எல்லாத்தையுமே கவனத்துக்குக் கொண்டு வந்தா மனிதன் சிறப்பா இயங்க முடியாதுங்கறது தான் காரணம். உண்மையில் இது ஒரு மிகவும் புத்திசாலித்தனமான மெக்கானிசம். ஆனாலும் அபூர்வமான சில சமயங்கள்ல அது மேல்தள மனசுக்கு அனுப்பாமல் புதைச்சு வைத்திருக்கிற ஒருசில விஷயங்களை நாம் பிற்பாடு முக்கியம்னு உணர்கிறப்ப மறுபடி அந்த ஆழ்மனசுக்குள்ளே போய் அந்தத் தகவல்களைத் தேட வேண்டி இருக்கிறது. இப்ப இந்த ஹிப்னாடிஸ செஷன்ல நாம் அதைத் தான் செய்யப் போறோம். இது ஒரு சிம்பிளான விஷயம். இதுல டென்ஷனுக்கு ஒண்ணுமே இல்லை. புரியுதா?"

ஆர்த்தி தலையசைத்தாள்.

"சரி ஆர்த்தி. ரிலாக்ஸ். மூச்சை நல்லா இழுத்து வெளியே விடுங்க. உள்ளே இருக்கிற டென்ஷனை எல்லாம் அந்த மூச்சுக் காத்துல வெளியே விடற மாதிரி கற்பனை செய்துக்குங்க…. அப்படி மூணு தடவை செய்யுங்க…..ஓகே. இப்ப நீங்க ரிலாக்ஸ் ஆக ஆரம்பிக்கிறீங்க…."

அவன் குரல் மிகவும் மென்மையாக இருந்தது. மயிலிறகாய் அவள் மனதை வருடுகிறது போலிருந்தது.

"என் குரலை மட்டும் கவனமாய் கேளுங்க ஆர்த்தி….நீங்க இப்ப ரிலாக்ஸ் ஆயிட்டு இருக்கீங்க. உங்களோட உடல் ரிலாக்ஸ் ஆகறதை உங்களால் உணர முடியுது….உங்க மனசும் அப்படியே அமைதியடையறதையும் உங்களால் உணர முடியுது….ஆமா, கொஞ்சம் கொஞ்சமா உங்க டென்ஷன், மன இறுக்கம் குறைஞ்சுட்டே போகுது…. நீங்க நல்லாவே ரிலாக்ஸ் ஆயிட்டு இருக்கீங்க. உங்க இமைகள் கனமாயிட்டே வருது…. உங்களுக்கு தூக்கம் தூக்கமா வருது…. கண்களை மூடிக்குங்க…. நீங்க ஆழமான உறக்கத்துக்குப் போய்கிட்டிருக்கீங்க. கவலைப்படவோ பயப்படவோ எதுவுமில்லை…. நிம்மதியாய் நீங்க தூங்க ஆரம்பிக்கிறீங்க….."

ஆர்த்தியை ஹிப்னாடிசம் செய்யத் தேவையான ஆழ்நிலைத் தூக்கத்தில் ஆழ்த்த ப்ரசன்னாவுக்குப் பத்து நிமிடங்களே தேவைப்பட்டன.

"ஆர்த்தி நீ இப்ப மூணு வயசு சின்னக் குழந்தை. நீ உங்க ஊட்டி பங்களா வீட்டில் இருக்கிறாய். நீ உங்கம்மா, அப்பாவோட இருக்கிறாய். உனக்கு அம்மாவை ஞாபகம் இருக்கா ஆர்த்தி"

"உம். இருக்கு" அவள் குரல் ஏதோ தொலைவில் இருந்து கேட்பது போல் இருந்தது. அவள் குரலில் மழலை ஒலித்தது.

"அம்மா பத்தி உனக்கு என்னவெல்லாம் ஞாபகம் இருக்கு ஆர்த்தி?"

"அம்மா நல்லா பாடுவாங்க. ‘நீல வண்ணக் கண்ணா வாடா, நீ ஒரு முத்தம் தாடா…..’" ஆர்த்தி மழலைக் குரலில் பாடிக் காட்டினாள். "அம்மா பாடிட்டே கன்னம் காமிப்பாங்க. நான் கிஸ்ச் குடுப்பேன்…." ஆர்த்தி உதட்டைக் குவித்தாள்.

"உங்க வீட்டுல அப்ப யாரெல்லாம் இருந்தாங்க?"

"அம்மா, அப்பா, அண்ணா….."

"யார் அண்ணா?"

"ஆகாஸ்ச்"

"வேற யாரெல்லாம் இருந்தாங்க"

ஆர்த்தி பதில் சொல்லவில்லை. அவளுக்கு வேறு யாரும் நினைவில் இல்லை என்று தோன்றியது. சிவகாமியும், சங்கரனும் அவள் நினைவில் இல்லை.

"அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் நீ செல்லம் இல்லையா?"

"உம்" அவள் குரலிலும் முகத்திலும் பெருமிதம் தெரிந்தது.

"அவங்களைப் பத்தி உனக்கு என்னவெல்லாம் ஞாபகம் வருது ஆர்த்தி"

ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு ஆர்த்தி சொன்னாள். "அவங்க ரெண்டு பேருக்கும் டூ. பேசிக்க மாட்டாங்க" ஆர்த்தி முகத்தில் வருத்தம் படர்ந்தது.

"ஏன் ஆர்த்தி?"

அவள் முகத்தில் குழப்பம் தெரிந்தது. அவளுக்கு பதில் தெரியவில்லை என்பது தெரிந்தது.

"ஆர்த்தி அப்பவும் அடிக்கடி மழை பெய்யும். சிலப்ப இடி மின்னல் சேர்ந்து பெரிய மழை பெய்யும். ஞாபகம் இருக்கா?"

"ம்" அவள் முகத்தில் கலவரத்தின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்க ப்ரசன்னா அதைப் பிறகு வைத்துக் கொள்ளத் தீர்மானித்தான்.

"ஆர்த்தி, உங்கம்மா அப்ப எல்லாம் அதிகமா ஃபோன்ல பேசுவாங்களா?"

அந்த இடி மின்னல் மழை சம்பந்தப்பட்ட நினைவு அளவுக்கு இந்த ஃபோன் விஷயம் கலவரத்தை ஏற்படுத்தா விட்டாலும் ஆர்த்தி முகத்தில் சங்கடம் தெரிந்தது.

"பேசுவாங்க….. சில தடவை ஃபோனை எடுக்கவே மாட்டாங்க….. சில தடவை எடுத்து கீழ வச்சுடுவாங்க.."

"ஏன் ஆர்த்தி?"

"அம்மாக்கு ஃபோன் பிடிக்கல…" அதற்கு மேல் அவளுக்கு சொல்லத் தெரியவில்லை போல் தோன்றியது. ஆனால் அந்த நாட்களில் வந்த சில ஃபோன் கால்கள் ஆர்த்தியின் தாய் ஆனந்தியைத் தொந்திரவு செய்வதாக இருந்தது என்பது ப்ரசன்னாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

ப்ரசன்னா மெள்ள அந்த ஃபோன் விவகாரத்தை விரிவாக அலசத் தீர்மானித்தான். குறிப்பிட்ட நாள் எதையும் குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவாக ஆரம்பித்தான். "ஆர்த்தி அப்படி அம்மாவுக்குப் பிடிக்காத மாதிரி ஒரு கால் வருது…. ஃபோன் மணி அடிச்சுகிட்டு இருக்கு. அந்த நாள் உனக்கு ஞாபகம் இருக்கா?"

"ம்"

"போன் மணி அடிச்சுகிட்டே இருக்கு…. அம்மா என்ன செய்யறாங்க"

அந்த நினைவை நிகழ்காலம் போல் கொண்டு வர ப்ரசன்னா முயற்சி செய்தான். சில சமயங்களில் அதை அப்படியே ஹிப்னாடிசத்தில் ஆழ்த்தப்படுபவர்கள் நேரில் காண்பது போல விவரிப்பதும் உண்டு. அவ்வளவு தெளிவாக அது மனதில் பதியாதவர்களிடத்தில் பதில் குழப்பமாகவே வருவதும் உண்டு. ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படியொரு நாள் நிகழ்வுகள் ஆர்த்தி மனதில் தெளிவாகப் பதிந்திருந்தன. ஆர்த்தி நேரில் பார்த்துக் கொண்டிருப்பது போல சொன்னாள்.

"மணி அடிச்சுட்டே இருக்கு.. அம்மா பாத்துட்டே இருக்காங்க…"

"ஃபோனை அம்மா எடுக்கலையா?"

"ரொம்ப நேரம் அம்மா எடுக்கல….."

"அப்புறம்….?"

"அம்மா எடுக்கறாங்க…..ஆனா பேச மாட்டேங்கறாங்க….."

"அப்புறம்…?"

"ஃபோனை பேசாமயே பக்கத்தில் வச்சுடறாங்க… ஃபோனைப் பாத்துட்டே இருக்காங்க…. ஃபோன்ல யாரோ சிரிக்கறாங்க…"

"சிரிக்கிறது ஆம்பிளையா பொம்பிளையா?"

"பொம்பிளை தான்….."

"அப்புறம் அம்மா என்ன செய்யறாங்க?"

"ஃபோனைக் கோவமா பாத்துகிட்டே இருக்காங்க….."

"அந்த சிரிக்கற பொம்பிளை யாருன்னு உனக்குத் தெரியுமா?"

"தெரியல". அப்படிச் சொன்ன போதிலும் அது சம்பந்தமான ஏதோ ஒன்று அவள் மனதில் உள்ளதாக அவள் முகபாவனையில் இருந்து தோன்ற ப்ரசன்னா கேட்டான்.

"அந்த சிரிப்பை அடிக்கடி ஃபோன்ல நீ கேட்டு இருக்கிறாய்… அப்படித்தானே"

"ஆமா"

"அப்புறம்…?"

"ஃபோன்ல மட்டும் இல்ல…."

ப்ரசன்னா கவனமாக அடுத்த கேள்வியைக் கேட்டான். "அந்தச் சிரிப்பை நேர்லயும் கேட்டிருக்கியா?"

"ஆமா".

ப்ரசன்னா ஒரு கணம் பேச்சில்லாமல் அவளையே பார்த்தான்.

(தொடரும்)

About The Author