மனிதரில் எத்தனை நிறங்கள்! (33)

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ள நிறைவாமோ?- நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ?- நன்னெஞ்சே.
-பாரதியார்

ஆர்த்தி அன்று மாலை இரண்டு முறை ஆகாஷை நேருக்கு நேர் பார்த்தாள். ஒரு முறை கூட அவன் அவளைத் தன் பார்வையால் அங்கீகரிக்கவில்லை. அனாயாசமாக அவன் பார்வை அவள் மீது படாமல் விலகியது. அவள் அந்த இடத்தில் இல்லவே இல்லை என்பது போல அவன் நடந்து கொண்டான். அவளால் மட்டும் ஏனோ அது முடியவில்லை. அவன் வெறுக்கிறான், அலட்சியமாக நடந்து கொள்கிறான் என்று தெளிவாகத் தெரிந்த பிறகும் அவள் இதயத் துடிப்பு அவனைப் பார்க்கும் போதெல்லாம் அதிகரிக்காமல் இருக்கவில்லை. அவனது கம்பீரமான நடையையோ, அவன் அழகையோ ரசித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் துன்பம் தான் அதிகம் என்றாலும், மனம் மேலும் ரணமாகத் தான் ஆகிறது என்றாலும் அவள் இதயம் அவள் அறிவுக்கு அடங்க மறுத்தது. அது தனி சுயாட்சி வாங்கிக் கொண்டு இயங்கியது.

சில நாட்களே பழகி இருந்த போதிலும் அவன் அவள் இதயத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தான். நேற்று கூட அவள் அறைக்கு அவன் கொண்டு வந்து வைத்த செடிகள், நள்ளிரவில் அவள் கனவு வந்து பயத்தில் விழித்த போது கனிவாக அவள் தலையைக் கோதியது, அவளைத் தன் தோளில் சாய்த்து அழவிட்ட அந்தப் புரிந்து கொள்ளல் எல்லாம் அவள் நினைவுகளில் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தன.

அன்றிரவு சாப்பாட்டு நேரத்திலும் அவன் அவள் அருகில் உட்காரவில்லை. ஒரு புறம் அவளருகில் பார்த்திபன் உட்கார்ந்திருந்தான். மறுபுறத்தில் இருக்கை காலியாகவே இருந்தது என்றாலும் அந்த இருக்கைக்கு அடுத்த இருக்கையிலேயே வந்து அமர்ந்தான். முந்தைய நாள் அவர்கள் நெருக்கத்தைக் கவனித்திருந்த அனைவரும் இந்த விலகலையும் கவனித்தார்கள்.

மூர்த்திக்குத் தங்கள் திட்டம் வெற்றி அடைந்ததில் மிகவும் திருப்தியாக இருந்தது. பார்த்திபன் ஆர்த்தியிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் பார்த்திபனை அவன் ஒரு போட்டியாக நினைக்கவில்லை.

மருமகளின் அருகில் இருந்த காலி இருக்கையில் அமிர்தம் வந்தமர்ந்து இடையிடையே அவளிடம் பேசினாள். அவர்கள் இருவரிடமும் பேசியபடி சாப்பிட்டதில் ஆர்த்திக்கு ஓரளவு தன் வேதனையை மறக்க முடிந்தது. பார்த்திபன் நல்ல நகைச்சுவையுடன் பேசி அவள் முகத்தில் சிறு புன்னகைக் கீற்றுகளை அவ்வப்போது கொண்டு வந்தான்.

சந்திரசேகருக்கு மகள் சந்தோஷமாக இல்லை என்று தெரிந்தது. காரணம் ஆகாஷின் விலகல் தான் என்பதையும் ஊகித்தார். அதன் காரணம் தெரியாவிட்டாலும் அவருக்கு ஆகாஷ் மீது கோபம் வந்தது. தனக்கு எதிரே அமர்ந்திருந்த சிவகாமியைப் பார்த்தார். சிவகாமி தன் கணவரிடம் ஏதோ பேசியபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.

வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் ஆகாஷால் ஆர்த்தியை நினைத்த அளவுக்கு முழுவதும் மனதில் இருந்து ஒதுக்கி விட முடியவில்லை. தாயைப் பற்றி அவள் சந்தேகப்பட்டாள் என்ற கோபம் அவனுள் எத்தனை கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், ஆர்த்தி நினைத்திருந்தால் அதை மறைத்திருக்கலாம் என்ற உண்மை அவன் மனதில் ஒரு மூலையில் உறுத்திக் கொண்டு இருந்தது. அவளுக்குப் பாவம் பொய் கூட சொல்ல வருவதில்லை என்பது அறிவுக்கு எட்டாமல் இல்லை.

ஆனால் அதற்காக அவளிடம் பழையபடி பழக முடியும் என்று அவனால் நினைக்க முடியவில்லை. அவளிடம் அவனுக்கு ஏற்ப்பட்ட ஈர்ப்புக்கு அவன் இன்னும் பெயர் வைக்கவில்லை. அதை ஆராயவும் அவன் முனையவில்லை. அது எதுவாக இருந்தாலும் அது அற்பாயுசில் இறந்து விட்டது என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் தாய் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்பதில் அவனுக்கு சந்தேகம் இல்லை. அவளை சந்தேகித்தவள் வேறு எந்த விதத்தில் நல்லவளாக இருந்தாலும் அவளிடம் அவன் எந்த உறவும் வைத்துக் கொள்ள முடியாது…. அவனுக்கு ஏனோ சாப்பிடச் சாப்பிடக் கோபம் வந்தது. பார்த்திபனுடன் பேசிக் கொண்டிருந்த ஆர்த்தி மீது கோபம் வந்தது. நீலகண்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் தன்னை அனுப்பிய அம்மா மீது கோபம் வந்தது. ‘இந்த அம்மா மட்டும் என்னைப் பாண்டிச்சேரிக்கு அனுப்பாமல் இருந்திருந்தால்……’

பக்கத்தில் அமர்ந்திருந்த ஆகாஷ் கோபமாக இருக்கிறான் என்பதை அவன் முகபாவனையில் இருந்தே ஊகித்த அமிர்தம் எதற்காகக் கோபப்படுகிறான் என்று கேள்விக்குறியுடன் அவனைப் பார்த்தாள்.

அங்கிருந்த எல்லோருடைய சிந்தனையையும் பேச்சையும் கலைத்தது ஒரு கலகலப்பான குரல். "ஹாய் சந்துரு".

அமிர்தம் புன்னகையுடன் ஆர்த்தி காதில் சொன்னாள். "இது தான் உங்கப்பாவோட சினேகிதன். சின்னதுல இருந்தே சேர்ந்தே தான் சுத்துவானுக. இப்ப டாக்டரா இந்த ஊர்ல தான் இருக்கான். பேரு டேவிட். கூட இருக்கிறது அவன் மனைவி மேரி….. கடைசி வரைக்கும் உங்கம்மாவும் அவளும் நெருங்கின சினேகிதிகளா இருந்தாங்க…."

ஆர்த்தி அந்த தம்பதியரை ஆர்வத்துடன் பார்த்தாள். தம்பதியர் இருவரும் மாநிறமாக, நடுத்தர வயதினராக இருந்தார்கள்.

"டேய் டூர்ல இருந்து இப்ப தான் திரும்பி வந்தேன். உன் மகள் வந்திருக்கறதா சொன்னாங்க. உடனடியா வந்துட்டேன். எங்கே உன் பொண்ணு?" டேவிட் உற்சாகமாகக் கேட்க சந்திரசேகர் பெருமிதத்துடன் ஆர்த்தியை சுட்டிக் காட்டினார்.

டேவிட் மேரி தம்பதியரின் அதிர்ச்சியை ஆர்த்தி தெளிவாகக் காணமுடிந்தது. டேவிட் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து விட்டு சந்திரசேகரை பொருள் பொதிந்த பார்வை பார்க்க சந்திரசேகர் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார். மேரி ஆர்த்தியைப் பார்த்து திகைத்து நின்றாள். அவள் கண்களில் லேசாக நீர் திரை போட்டது.

சிவகாமி வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டாள். "ரெண்டு பேருக்கும் தட்டு வைங்க. டேவிட் உட்காருடா. மேரி உட்காரும்மா"

டேவிட் சொன்னார். "இல்லைக்கா. நேரமானதால் வழியிலேயே டிபன் சாப்பிட்டுட்டோம். அதுவும் இங்க வர்ற ப்ரோகிராம் இருக்கலை. ஆர்த்தி வந்துருக்கான்னு கேட்டதால உடனடியா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்." மேரி ஆர்த்தியிடம் வந்து அவள் தோளில் கைவைத்து குரல் கரகரக்கச் சொன்னாள். "எனக்கு ஒரு நிமிஷம் ஆனந்தியே இங்க வந்துட்ட மாதிரி தோணிடுச்சு"

மனைவியின் கூடவே வந்த டேவிட்டும் சொன்னார். "ஆமாம்மா உங்கம்மாவைப் பார்த்த மாதிரியே இருக்கு"

அவர்களது அன்பான பேச்சில் ஆர்த்தி நெகிழ்ந்து போனாள். எழுந்து நிற்கப் போனவளை அவர்கள் இருவரும் அனுமதிக்கவில்லை. டேவிட் சொன்னார். "உட்காரும்மா. சாப்பிடு. பிறகு பேசலாம். நாங்க உள்ளூர் தான். அது மட்டுமல்ல. எனக்கு லோக்கல்ல இருக்கற வரைக்கும் தினமும் ஒரு தடவையாவது வந்து உங்கப்பன் கிட்ட ஏதாவது வம்பிழுத்து சண்டை போடலைன்னாலும், உன் பெரியத்தை கிட்ட ஏதாவது திட்டு வாங்கலைன்னாலும் தூக்கம் வராது…..நீயும் எங்க வீட்டுக்கு ஒரு தடவை வா. இந்த மாதிரி எங்க வீடெல்லாம் பெருசா அரண்மனை மாதிரி இருக்காது……"

மனிதர் பேசிக் கொண்டே போனார். பத்து நிமிடம் கழித்து சிவகாமி சொன்னாள். "டேவிட், கொஞ்சம் நிறுத்துடா. அவ பயந்துக்கப் போறா."

டேவிட் புன்னகையுடன் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். "பயந்துக்காதேம்மா. என் சுபாவமே இப்படித் தான். யாராவது ப்ரேக் போடலைன்னா பேசிகிட்டே இருப்பேன். கடைசில என்ன பேசினேன்னு யாராவது கேட்டா எனக்குத் தெரியாது. உன் சின்னத்தை எனக்கு வச்சிருக்கற பேரு எக்ஸ்பிரஸ்ஸுன்னு. சின்னதுல இருந்தே நான்…."

"டேவிட்…" சிவகாமி குரல் கொடுக்க டேவிட் "அக்கா நான் நிறுத்திட்டேன்" என்றார். அதன் பிறகு சில நிமிடங்கள் சந்திரசேகருடன் பேசிக் கொண்டு இருந்து விட்டு டேவிட் மனைவியுடன் கிளம்பினார்.

"என்ன டேவிட் அவசரம்?" என்று அமிர்தம் கேட்டாள்.

"இல்லைக்கா. எல்லாம் போட்டது போட்ட மாதிரியே இருக்கு. க்ளீன் செய்யாம தூங்க முடியாது.. நாளைக்கு வர்றோம். வர்றேன் ஆர்த்தி.." என்றாள் மேரி.

வெளியே வந்த பின்னர் டேவிட்டும், மேரியும் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. சால்வையைப் போர்த்திக் கொண்டு குளிரில் மௌனமாக வீடு நோக்கி நடந்தனர்.

"அவளைப் பார்த்தவுடன் உனக்கு முதல்ல என்ன தோணுச்சு மேரி?" டேவிட் தான் முதலில் மௌனத்தைக் கலைத்தார்.

"ஆனந்தியோட கடைசி நாட்கள் தான் ஞாபகம் வந்துச்சு…." மேரி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

பழைய நினைவுகள் அழுத்த இருவரும் மறுபடியும் மௌனமானார்கள்.

(தொடரும்)

About The Author