மனிதரில் எத்தனை நிறங்கள்! (87)

என்னுடைய துயரங்கள் என்னிடமே இருக்கட்டும். நீங்கள் ஒன்றும் அதில் பங்கு பெற வேண்டாம். நீங்கள் கொடுத்ததிலேயே பங்கு பெறுவது எதற்காக?
– கண்ணதாசன்

"அத்தை"

மூர்த்தி அழைத்தது வெகு தொலைவில் இருந்து யாரோ அழைப்பது போல் பவானிக்குத் தோன்றியது. பேந்தப் பேந்த முழித்தாள். மூன்று முறை ஜன்னல் வழியாக மூர்த்தி அழைத்த பிறகு தான் பவானி அவனைப் பார்த்தாள்.

"என்னாச்சு அத்தை"

"ஒண்ணுமில்லை. ஏன்…ஏன் கேட்கிறாய்" எப்படியோ தன்னை சமாளித்துக் கொண்டு அவள் கேட்டாள்.

"என்னவோ மாதிரி இருக்கீங்க. என்னாச்சு"

"நான் என்னவோ மாதிரி ஆகி பல வருஷங்களாச்சு. இப்ப என்ன கேள்வி?" சென்று அறை வாசற்கதவைத் திறக்காமலேயே கேட்டாள்.

அவள் எதையோ மறைக்கிறாள் என்பது தெரிந்தது. ஆனால் எதை மறைக்கிறாள், ஏன் பேயறைந்தது போல் இருக்கிறாள் என்பதை எல்லாம் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜன்னல் வழியாகவே அவளைச் சுற்றிலும் பார்த்தான். வெறும் டிவி ரிமோட், ஒரு ஆங்கில நாவல் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்ள பஞ்சவர்ணம் தான் சரி என்று முடிவெடுத்த மூர்த்தி தானாகச் சொன்னான்.

"பாட்டி உங்களைக் கூப்பிடறாங்க"

"எனக்கு ஒரே தலைவலின்னு போய் சொல்லு. அப்புறமா வந்து பார்க்கறேன்"

எப்போதும் கூப்பிட்டவுடன் நாய்க்குட்டியாக ஓடிச் சென்று தாயிடம் நிற்கும் பவானி அலட்சியமாய் சொன்ன விதம் மூர்த்தியைத் திகைக்க வைத்தது. அதுவும் ஏனோ கதவைக் கூடத் திறக்க மறுக்கிறாள்.

மூர்த்தியிடம் சொல்லி விட்டுத் திரும்பிய பவானி அடுத்த கணம் அவனை மறந்தே போனாள். டிவியில் பார்த்த காட்சி மனதில் மறு ஒளிபரப்பாக ஆரம்பித்தது. அன்று வேலைக்காரி விஜயா கோயிலில் உயிர்த்தெழுந்து அமிர்தம் கண்ணில் பட்டாள். இன்று டிவியில் இன்னொரு எழுந்தருளல். என்ன தான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்தது. நிறைய நேரம் அவள் யோசித்தாள். எத்தனையோ வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்த ஒரு ஊமைக்காயத்தில் இன்று பலமாய் வலித்தது. தான் இத்தனை ஆண்டுகளாய் ஏமாற்றப்பட்டிருப்பதை பவானி உணர்ந்தாள்…. அவள் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. நிறைய நேரம் வாய் விட்டு அழுதாள். பிறகு மனம் சிறிது சமாதானமடைய ஆரம்பித்தது.

அறிந்த உண்மையை அம்மாவிடம் சொன்னால் என்ன என்று ஒரு கணம் தோன்றியது. மறு கணமே மனம் அதற்கு எதிராக ஓட்டுப்போட்டது. இத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அவளே என்பதால் அவளிடம் சொல்வது மேலும் பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும் என்று அறிவு எச்சரித்தது.

ஆனாலும் பஞ்சவர்ணம் பிணக்கிடங்கில் அழுகிய பிணங்களை புரட்டிப் பார்த்து விட்டு வந்ததையும் என்றேனும் ஒரு நாள் மகனும் மருமகளும் நேரில் வந்து நிற்பார்கள் என்று நம்பியதையும் எண்ணிப்பார்க்கையில் அவளுக்குத் தன் தாயின் அன்றைய நியாயமான சந்தேகத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

நடந்தவை என்ன, அதில் இவர்கள் எல்லாம் தலை மறைவாகக் காரணம் என்ன, இதில் சிவகாமிக்குப் பங்கு உள்ளதா, இருந்தால் அவள் பங்கு என்ன என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. நிறைய யோசித்த பவானி கடைசியில் நேராக சென்னை செல்வது என்று தீர்மானித்தாள்.

டிவியில் அந்தப் பெண் தான் படிக்கும் கல்லூரியின் பெயரையும் படிக்கும் பட்டத்தின் பெயரையும் சொல்லி இருந்தாள். அந்தப் பெண் மூலமாக அவர்கள் வீட்டைக் கண்டு பிடிப்பது ஒன்றும் கஷ்டமில்லை. ….

முடிவுக்கு வந்த பவானி ஒரு தீர்மானத்துடன் எழுந்தாள். அப்போது தான் மூர்த்தி நினைவு வந்தது. அவள் ஜன்னல் பக்கம் பார்க்க மின்னல் வேகத்தில் மூர்த்தி தன் தலையைத் தாழ்த்திக் கொண்டான். பவானி எழுந்து வந்து கதவைத் திறந்து பார்க்க முற்பட, கதவின் தாழ் திறக்கப்படும் சத்தம் கேட்ட மூர்த்தி அந்த இடத்தை உடனடியாகக் காலி செய்ய வேண்டி வந்தது.

பவானி சில நிமிடங்கள் வராந்தாவில் நின்றாள். பிறகு அறைக்குள் நுழைந்தவள் டிராவல்ஸிற்கு போன் செய்து சென்னைக்கு விமானத்தில் என்று டிக்கெட் உள்ளது என விசாரிக்க ஆரம்பித்தாள்.

அதே சமயம் பஞ்சவர்ணம் பேரனைக் கேள்விகளால் குடைந்தெடுத்துக் கொண்டிருந்தாள். "கடைசியா யார் கிட்ட பேசுனா, யாரைப் பார்த்தான்னு தெரியுமாடா?"

"தெரியல பாட்டி. பக்கத்துல ஒரு நாவலும், டிவி ரிமோட்டும் இருந்துச்சு. போரடிக்கிற நாவலைப் படிச்சோ, மெகா சீரியல் ஏதாவது ஒன்னைப் பார்த்தோ அத்தை அப்படி ஆயிருக்கலாமோ என்னவோ?"

பேரன் நகைச்சுவையை பஞ்சவர்ணம் ரசித்தது போல் தெரியவில்லை. தான் கூப்பிடுவதாகச் சொல்லியும் வராததும், வாய் விட்டு அவள் நிறைய நேரம் அழுததும், மூர்த்தி இருக்கிறானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வராந்தாவில் வந்து நின்றதும் மகளின் நடவடிக்கையில் பெரியதோர் மாற்றத்தை அவளுக்கு அறிவித்தன.

பாட்டி யோசிப்பதைப் பார்த்த மூர்த்தி சொன்னான். "இன்னொரு தடவை நீங்கள் கூப்புடறதா சொல்லட்டுமா? இல்லை நீங்களே அத்தையைப் போய்ப் பார்க்கிறீங்களா?"

"அவள் சொல்ல வேண்டாம்னு தீர்மானிச்சுட்டாடா. இனி நான் கேட்டாலும் சொல்ல மாட்டா. இப்படி சில தடவை அவள் பிடிவாதமா இருந்துடறதும் உண்டு. ஆனா அந்த மாதிரி நேரங்கள்ல அவளோட அண்ணன் கூட இருந்தான்…."

"அப்பாவும் அத்தையும் ரொம்ப பாசமா இருந்தாங்களா பாட்டி….."

அப்போது தான் அவன் சொன்ன உறவுமுறை உறைத்தது போல நாக்கைக் கடித்துக் கொண்ட பஞ்சவர்ணம் அவசரமாக பேச்சை மாற்றினாள். "நீ போகிற வரைக்கும் காத்திருந்துட்டு உள்ளே போனான்னா அவள் யார் கிட்டயாவது போன் பேசவோ, முக்கியமான எதையோ படிக்கவோ போயிருக்கணும்னு தோணுது. உனக்குத் தெரிய வேண்டாம்னு நினைக்கிறாள்னா அதில் ஏதோ ஒரு மர்மம் இருக்குதுடா மூர்த்தி…"

***********

"ஆர்த்தி, நான் நாளைக்கு ஈரோடு போகலாம்னு இருக்கேன். வந்து நாளாயிடுச்சு. அவருக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கறதுமில்லை. மூனு தடவை போன் செய்துட்டார்"

லிஸா சொன்ன போது ஆர்த்தி லேசான சோகத்தோடு தலையசைத்தாள். இந்த சில நாட்களில் அவள் லிஸாவிடம் நிறையவே நெருங்கி விட்டிருந்தாள். கலகலப்பான சுபாவம், வெளிப்படையான பேச்சு, எதையும் சீக்கிரமாகவே புரிந்து கொள்ளும் சுட்டித்தனம் எல்லாம் லிஸாவிடம் அவளுக்கு நிறையவே பிடித்திருந்தன.

ஆர்த்தி முகத்தில் படிந்த அந்த சோகத்தால் உருகிப் போன லிஸா அவளைக் கட்டிக் கொண்டு சொன்னாள். "எனக்கும் கஷ்டமாய் தான் இருக்கு ஆர்த்தி. ஆனா என்ன செய்யறது?"

தோழிகள் இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பிறகு லிஸாவாக மௌனத்தைக் கலைத்தாள். "ஆர்த்தி, ஒரு உண்மையை உன் கிட்ட நான் இது வரை சொன்னதில்லை…. நட்புல எதையும் மறைக்கிற அவசியமில்லைன்னு உறுதியா நம்பறவ நான்…. இத்தனை நாளாய் ஊட்டிக்கு வராததுக்கான காரணம் நீ அன்றைக்குக் கேட்டாய். காரணம் இங்கே வந்தா சில நினைவுகள் என்னைக் கஷ்டப்படுத்தும்கிறது தான்…."

ஆர்த்தி மனம் படபடக்க லிஸாவைப் பார்த்தாள். லிஸா தொடர்ந்தாள். "…நானும் ஆகாஷும் சின்னதில் இருந்தே நல்ல நண்பர்களாய் இருந்தோம். ஒரு கால கட்டத்தில் என்னையும் அறியாமல் நட்பு காதலாய் என் மனதில் அரும்பிடுச்சு. அவன் அழகு, புத்திசாலித்தனம் எல்லாமே அவன் மேல் என்னைப் பைத்தியமாக்கிடுச்சுன்னே சொல்லலாம்….ஒரு நாள் நான் அவன் கிட்ட காதலைத் தெரிவிச்ச போது அவன் நட்பை நட்பாகவே தான் வைத்திருந்தான்னு தெரிஞ்சுது. அவன் ரொம்ப இதமாய் மென்மையாய் அதைச் சொன்னான். தப்பாக நினைக்கிற மாதிரி தனக்கே தெரியாமல் அவன் நடந்திருந்தால் மன்னிக்கச் சொன்னான்……" சொல்லச் சொல்ல அவள் குரல் உடைந்தது.

ஆர்த்திக்கு அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். லிஸா தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள். "நல்லா யோசிச்சுப் பார்த்தப்ப அவன் என் கிட்ட அந்த மாதிரி பழகலைங்கறது எனக்கும் புரிஞ்சுது. காதலை இழந்தவள் நட்பையும் களங்கப்படுத்திட்ட மாதிரி தோணல்…..ஆனா உலகத்திலேயே ரொம்ப துக்கமான விஷயம், அவமானமான விஷயம் என்ன தெரியுமா ஆர்த்தி. காதல் மறுக்கப்படறது தான்….மூணு நாள் வீட்டுல உட்கார்ந்து நல்லா அழுதேன். மூணு மாசம் ஒரு ஜடம் மாதிரி இருந்தேன். நான் அவன் சொன்னதுக்கு ரியாக்ட் செஞ்ச விதம் அவனையும் ரொம்பக் கஷ்டப்படுத்திடுச்சுன்னு நினைக்கிறேன். அப்புறமா ரெண்டு வார்த்தைக்கு மேல் பேசிக்க எங்க ரெண்டு பேராலயும் முடியலை. கடைசியில் அப்பா அம்மா பார்த்து தேர்ந்தெடுத்த பையனைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சேன்…கல்யாணமாகி போனவளுக்கு இங்கே திரும்பி வந்து ஆகாஷைப் பார்க்க ஒரு கூச்சம் இருந்தது……அதனால தான் வரலை"

ஒளிவு மறைவில்லாமல் அவள் சொன்ன விதம் ஆர்த்தி மனதை உருக்கியது. "சாரி….லிஸா" என்றாள். அவளையும் அறியாமல் மூர்த்தி லிஸாவையும் ஆகாஷையும் பற்றிச் சொன்னதை எண்ணிப் பார்த்தாள். அவனும் பொய் சொல்கிறவனாய் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் நட்புடன் இயல்பாய் இருந்த தருணங்கள் அவன் பார்வைக்கு விகற்பமாய் தோன்றியிருக்கலாம்…..

ஆர்த்தியின் கண்களில் லேசாய் திரையிட்ட கண்ணீரைப் பார்த்த லிஸா அவளைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். "ஸோ ஸ்வீட். நீ ஒரு குழந்தை மாதிரி ஆர்த்தி. உன் ஸ்பெஷாலிட்டி உன் அழகல்ல. உன்னோட இந்த கள்ளங்கபடமில்லாத மனசு. இது தான் ஆகாஷை நிறைய கவர்ந்துடுச்சுன்னு நினைக்கிறேன். உண்மையா சொல்லணும்னா உன் பர்த் டே பார்ட்டிக்கு வர்ற வரைக்கும் கூட எனக்கு ஆகாஷ் என்னை மறுத்ததில் கொஞ்ச வருத்தம் மனசுல தங்கி இருந்ததுன்னு சொல்லலாம். ஆனா பர்த் டேயில் உன்னை அவன் பார்த்துட்டு நின்ன விதத்தைப் பார்த்தப்ப மனசுல பட்சி சொல்லிச்சு "டீ இது தாண்டி காதல்னு". அப்படியொரு பார்வை அவன் எப்பவுமே என்னைப் பார்த்ததாய் எனக்கு ஞாபகம் இல்லை. வேறு யாரையும் பார்த்ததாயும் எனக்கு ஞாபகம் இல்லை…."

ஆர்த்தியின் கண்களில் இப்போது வேறு காரணத்திற்காக நீர் கோர்த்தது. "நீ நினைக்கிற மாதிரி இல்லை. லிஸா. உண்மையில் அவர் என்னை வெறுக்கிறார்…"

"முட்டாள். உன்னை அவன் ஏன் வெறுக்கணும்?"

"எங்கம்மாவைக் கொன்னது அவங்கம்மாவாய் இருக்கலாம்னு நான் சந்தேகப்பட்டதால் தான்"

லிஸா அதிர்ந்து போய் அவளைப் பார்த்தாள். "என்னது….?"

(தொடரும்)”

About The Author

11 Comments

  1. Angel

    The author does not need to waste entire page to say that Bavani going to cennai and Lisa telling Arthi about her past. When he is going to finish this story. Jeez

  2. mini

    Tகிச் ச்டொர்ய் இச் வெர்ய் நிcஎ. ஆச் எவெர்யொனெ சைட், ஈட் இச் கின்ட் ஒf வெர்ய் ச்லொந் அன்ட் ஷொர்ட். Bஉட் தெ த்ரில்ல்,சரcடெரிசடிஒன்,சுச்பென்செ அன்ட் எவெர்திங் எல்செ இச் சொ நொன்டெர்fஉல்!

  3. Mini

    This story is really very nice. But As everyone said, it is very slow and short.
    Please try to give more.

  4. siva

    கதை மிகவும் சுவாரஸியமாக ஆரம்பித்தது, ஆனால் இவ்வளவு அத்தியாயங்கள் சென்ற பிறகும் முடிக்காமல் இருப்பது மிகவும் அலுப்பை தருகிறது.

  5. N.Ganeshan

    சுவாரசியமான கதையின் இடையே தொய்வு ஏற்பட்டதற்கு மன்னிக்கவும். தங்கள் ஆலோசனைக்கு ஏற்ப அடுத்த வாரம் முதல் அத்தியாயத்தின் நீளமும், சம்பவங்கள் நகரும் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முடிவை நோக்கி வேகமாக நடரும் இந்தத் தொடரின் விறுவிறுப்பு இனி குறையாது. தங்கள் பொறுமைக்கு நன்றி.

    என்.கணேசன்

  6. Roz

    Thanks Mr.N.Ganeshan. We would be glad if you keep your words. Please write new stories as well. You have described the events too much. Thats why the story was not moving fast.

  7. C

    i did not read this story for a month and when i read it again it was in the same point. There is no improvement..

Comments are closed.