மனிதரில் எத்தனை நிறங்கள்! (36)

If you love someone, set them free.
If they come back they’re yours;
If they don’t they never were.
-Richard Bach

அன்று அதிகாலையிலேயே கோயமுத்தூருக்கு சிவகாமியும் சந்திரசேகரும் கிளம்பி விட்டார்கள். காரை அர்ஜுன் ஓட்ட, சிவகாமி அமைதியாக சிந்தனையில் ஆழ்ந்திருக்க, சந்திரசேகர் தன் தமக்கையிடம் சொல்ல வேண்டியதை மனதில் தொகுத்து ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். தெளிவில்லாமல், குழப்பமாகப் பேசினால் அவளிடம் முறைப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்ற பயம் அவருக்கு இருந்தது.

கார் திடீர் என்று வேகம் குறைய சிவகாமி எதிரே ஏதாவது வாகனம் உள்ளதா என்று பார்த்தாள். இல்லை. தெருவின் ஓரமாக ஒரு இளம் பெண் நடந்து கொண்டிருந்தாள்; வேறு யாரும் இல்லை. அந்தப் பெண்ணை சிவகாமி கூர்மையாக கவனித்தாள். அவளைக் கடந்தவுடன் கார் மறுபடி பழைய வேகம் எடுத்தது.

சந்திரசேகர் இந்தச் சின்ன சம்பவத்தைக் கவனிக்கவில்லை. தொண்டையைச் சரி செய்து கொண்ட அவர் மெல்ல ஆரம்பித்தார். "அக்கா, ஆகாஷுக்கும், ஆர்த்திக்கும் இடையே எதாவது பிரச்சினையா?"

"தெரியலையே, ஏன் கேட்கிறாய்?"

"நேத்து வரைக்கும் எப்பவுமே நெருக்கமாய் இருந்தவங்க, நேத்து ராத்திரி சாப்பிடறப்ப பேசிக்கக் கூட இல்லை. ஆகாஷ் அவ மேல் ஏதோ கோபமாய் இருக்கற மாதிரி தோணிச்சு"

சிவகாமி ஒன்றும் சொல்லவில்லை.

"ஆர்த்தி ரொம்பவே வருத்தத்துல இருக்கறாக்கா."

சிவகாமி தன் தம்பியின் முகத்தில் வாட்டத்தைப் பார்த்தாள். ஆனால் அப்போதும் ஒன்றும் சொல்லவில்லை.

"அவங்க ரெண்டு பேருடைய ஆரம்ப நெருக்கத்தைப் பார்த்தப்ப ரெண்டு பேரும் காதலிக்கிற மாதிரி இருந்தது. அதுக்குள்ள இந்த மாதிரி விலக என்ன காரணமாய் இருக்கும்?"

"சின்ன வயசுக்காரங்களுக்கு ஒட்டிக்கவும் பெரிய காரணங்கள் வேண்டாம். வெட்டிக்கவும் பெரிய காரணங்கள் வேண்டாம்"

அக்காவின் பதில் சந்திரசேகருக்குத் திருப்தி அளிக்கவில்லை. "நீ ஆகாஷ் கிட்ட கேட்டுப் பாரேன்க்கா."

"இதப்பார். இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் பெரியவங்க நாம தலையிடறது முட்டாள்தனம். அவங்க நீ சொன்ன மாதிரி நிஜமாவே காதலிச்சிருந்தாங்கன்னா அவங்களா கண்டிப்பா சேர்ந்துக்குவாங்க. அப்படியில்லைன்னா நாம என்ன செஞ்சாலும், சொன்னாலும் அது பிரயோஜனப்படப் போறதில்லை"

சந்திரசேகர் பெருமூச்சு விட்டார். அக்காவின் பேச்சில் உண்மை இருந்தாலும் அவரால் மகள் முகத்தில் பதிந்திருந்த சோகத்தை ஜீரணிக்க முடியவில்லை.

"அக்கா, அவ எத்தனையோ வருஷங்க கழிச்சு எனக்குக் கிடைச்சிருக்கா. அவளோட மனதில் எத்தனையோ துக்கம் தேங்கி இருக்கற மாதிரி படுது. நீ அவ கிட்டயாவது பேசி கொஞ்சம் தைரியம் சொல்லு. நீ பேசினா அவள் மனதில் இருக்கறதை தெரிஞ்சுகிட்டு சரி செய்யலாம்னு தோணுது…. நீ இதுக்கும் ஏதாவது தத்துவம் சொல்லாதே. கண்டிப்பா அவள் கிட்ட பேசறே, சரியா"

சிவகாமி தம்பியின் முகத்தில் தெரிந்த கண்டிப்பைப் பார்த்து புன்னகைத்தாள். "சரி, இன்னைக்கு ராத்திரியே பேசறேன்"

அக்காவிடம் ஒரு விஷயத்தை ஒப்படைத்த பிறகு அதைப்பற்றிக் கவலைப்பட எதுவுமில்லை என்று சந்திரசேகர் நிம்மதியடைந்தார். பின் தன் மனதைக் குழப்பிய நேற்றைய விஷயத்தைச் சொன்னார். "நேத்து என் ரூமுக்கு ஆர்த்தியைக் கூப்பிட்டுப் பேசினேன். கிளம்பறப்ப என் ரூம்ல இருந்த போட்டோவை எல்லாம் ஒரு பார்வை பார்த்தவளோட முகம் திடீர்னு கறுத்து மாறிடுச்சு. இப்படி திடீர் திடீர்னு அவ ஏன் மாறுறான்னு ஒண்ணும் புரிய மாட்டேங்குது"

தம்பி சொன்னதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்த சிவகாமி கேட்டாள். "உன் ரூம்ல ஆனந்தி போட்டோ இருக்கா இல்லையா?"

சந்திரசேகர் மெல்ல சொன்னார். "இல்லை"

பின் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொள்ளவில்லை. அவரவர் எண்ணங்களோடு மௌனமானார்கள்.

********
இரவுச் சாப்பாட்டிற்கு ஒரே நேரத்தில் டைனிங் ரூமில் எல்லோரும் சேர்வது போல் அந்த வீட்டில் மற்ற நேரங்களில் கூடுவதில்லை. அவரவருக்கு வேண்டிய நேரத்தில் அவரவர் வந்து சாப்பிடும் வழக்கம் இருந்தது. தயார் நிலையில் இருக்கும் வேலைக்காரர்கள் பரிமாற சாப்பிட்டு விட்டுப் போவார்கள்.

ஆர்த்தியும் பார்வதியும் டைனிங் ரூமில் நுழைந்த போது ஆகாஷ் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். பார்வதி அவனைப் பார்த்துப் புன்னகைக்க அவன் லேசாகத் தலையை மட்டுமே ஆட்டினான். ஆர்த்தியைப் பார்த்தது போலக் கூட அவன் காட்டிக் கொள்ளவில்லை.

பார்வதியும் ஆர்த்தியும் அவன் எதிர்ப்புறம் உட்கார்ந்தார்கள். ஆகாஷ் பார்வதியிடம் சொன்னான். "நேத்து அம்மா கிட்ட பேசினேன். உங்க மகள் இறக்கிறதுக்கு ரெண்டு மாசம் முன்னாலேயே அம்மா சிங்கப்பூர் போயிட்டாங்களாம். இறந்த தினம் தான் இந்தியா வந்திருக்காங்க. நீங்க சந்தேகம்னா யாரு கிட்டயாவது கேட்டு உறுதிப்படுத்திக்கலாம்."

பார்வதியும் ஆர்த்தியும் திகைத்துப் போனார்கள். அந்த நேரமாகப் பார்த்து அமிர்தம் உள்ளே வந்தாள். ஒரு நிமிடம் கனத்த மௌனம் அங்கு நிலவியது. ஆகாஷாக அமிர்தத்திடம் பேச்சை ஆரம்பித்தான். "சித்தி, அத்தை இறந்த நாள்ல இங்க யாருமே இல்லைங்கறதைப் பத்தி பேசிகிட்டு இருந்தோம்."

"ஆமா. நான் சேலத்துல எங்க வீட்டுல இருந்தேன். அக்கா சிங்கப்பூர் போயிருந்தா. அத்தான் மெட்ராஸ்ல ஜட்ஜஸ் கான்ஃப்ரன்ஸ் போயிருந்தார். சந்துரு கோயமுத்தூர் போயிருந்தான்…. தனியா இருந்த ஆனந்தி அந்த ஏரியாவுக்கு ஏன் போனாள்னு தெரியலை. விதி இழுத்துகிட்டு போயிருக்கு. வேற என்ன சொல்றது"

பார்வதி லேசாகக் கண்கலங்க சொன்னாள். "அப்படித் தான் தோணுது. இப்ப இந்த வீட்டுல இருக்கற யாருமே அந்த சமயத்துல ஊட்டியிலயே இல்லைங்கறப்போ வேற எதுவும் சொல்ல முடியாது"

அமிர்தம் பார்வதியைத் திருத்தினாள். "நாங்க தான் ஊட்டியில் இல்லைன்னு சொன்னேன். இப்ப இருக்கறவங்க இல்லைன்னு சொல்லலை…."

ஆர்த்தி, பார்வதி, ஆகாஷ் மூவருமே கேள்விக்குறியோடு அமிர்தத்தைப் பார்த்தார்கள்.

அமிர்தம் சொன்னாள். "பவானி, அவங்கம்மா எல்லாம் அப்ப ஊட்டியில தானே இருந்தாங்க. இங்க இருந்து ஒரு மைல் தூரத்தில் தான் இருந்தாங்க. அந்த நிலச்சரிவுல ஆனந்தி இறந்த மாதிரி மூர்த்தியோட அப்பா அம்மா கூட இறந்து போனாங்களே, அது தெரியாதா? அந்தக் கிழவி உங்களை எல்லாம் கூப்பிட்டு பேசிகிட்டு இருந்தான்னு கேள்விப்பட்டேன். அவ இதை சொல்லலியா?"

இந்தத் தகவல் அவர்களுக்குப் புதியதாக இருந்தது. மகனும் மருமகளும் ஒரு விபத்தில் இறந்து விட்டதாக பஞ்சவர்ணம் பொதுவாகச் சொன்னாலே ஒழிய இதை ஏன் சொல்லவில்லை என்று பார்வதிக்குப் புரியவில்லை. அதுவும் ஆனந்தியின் மரணத்தைப் பற்றித் தான் அன்றைய முழுப் பேச்சும் இருந்தது. அப்படி இருக்கையில் இயல்பாக எல்லாரும் சொல்லக் கூடிய ஒரு விஷயத்தை பஞ்சவர்ணம் ஏன் மூடி மறைத்தாள்?

"அக்கா வந்து கஷ்டப்பட்டு தேடியதில் ஆனந்தி உடலைக் கண்டுபடிக்க முடிஞ்சது. மூர்த்தியோட அப்பா அம்மாவோட உடல்கள் கூடக் கண்டுபிடிக்க முடியலை. அடையாளம் தெரியாம கிடந்த எத்தனையோ பிணங்கள்ல அவங்களோடதும் இருந்திருக்கணும்."

பார்வதிக்கு இன்னும் அந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. தன் மகனும் மருமகளும் கூட அந்த நிலச்சரிவில் இறந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தால் சிவகாமி மேல் சந்தேகம் குறைந்து விடும் என்று நினைத்தாளா இல்லை அவள் மறைத்ததற்குக் காரணம் வேறு எதாவது இருக்கிறதா?

(தொடரும்)

About The Author