மனிதரில் எத்தனை நிறங்கள்!(44)

And thus he has stumbled upon the first of his natural enemies: fear! A terrible enemy–treacherous, and difficult to overcome. It remains concealed at every turn of the way, prowling, waiting. – Carlos Castenada in "The Teachings of Don Juan"

சிவன் கோயிலில் வலம் வந்து கொண்டிருந்த அமிர்தத்தின் உதடுகள் ஸ்தோத்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தாலும் மனம் வேறு பாதையில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தது. மகனின் எதிர்காலம் பற்றி மனம் கவலைப்பட்டது.

ஆர்த்தி வருவதற்கு முன்னால் தன் மகன் அவள் மனதில் புக ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது என்று ஒரு நம்பிக்கை பிறந்திருந்தது. ஆகாஷ் தான் அவள் மனதில் இருக்கிறான் என்றறிந்த போது அந்த நம்பிக்கை செத்துப் போனது. இப்போது ஆகாஷ¤க்கும் ஆர்த்திக்கும் இடையே விரிசல் பிறந்துள்ளதால் மறுபடியும் மனதின் ஒரு மூலையில் நம்பிக்கை உருவாகி இருக்கிறது. சிவன் மனம் வைத்தால் ஒரு நல்ல விடியல் அவள் மகன் பார்த்திபனுக்கும் வரும்.

ஆனால் சில நாட்களாக பார்த்திபனுக்கு நிறைய வேலை இருப்பதால் அவன் வீடு திரும்பவே நேரமாகி விடுகிறது. ஆர்த்தியுடன் பேசக் கூட நேரமில்லை. சொந்த மாமன் கம்பெனியில் தான் வேலை என்றாலும் சிவகாமி வேலை விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பாள். பெற்ற மகனுக்குக் கூட சலுகை காட்டாதவள் என்பதால் இவன் விஷயத்தில் அப்படி இருப்பதை குறை சொல்ல அமிர்தத்தால் முடியவில்லை.

சுவாமி சன்னிதிக்கு முன் வந்த போது மனதை பலவந்தமாக பக்திக்குக் கொண்டு வந்தாள். பிறகு கண்களை மூடிக் கொண்டு வேண்டினாள். "கடவுளே வாழ்க்கையில் இதுவரை எப்பவுமே நீ என்னை ஜெயிக்க விடலை. இனிமேயாவது ஒரு நல்ல வழி காட்டேன்….. அக்கா எப்பவுமே பெரிய பக்தி காமிச்சதில்லை. ஆனா நீ அவளை எப்பவுமே சிகரத்துல தான் வச்சுருக்கிறாய். அவள் அதிர்ஷ்டத்துல எனக்கு பொறாமை இல்லை. ஆனா உன்னை எப்பவுமே பூஜிக்கிற என் கிட்ட நீ ஏன் பாராமுகமாய் இருக்கிறாய் என்கிறது தான் என் வருத்தம். அந்தப் பொண்ணு ஆர்த்திக்கும் பார்த்திபனுக்கும் கல்யாணம் ஆக கொஞ்சம் கருணை காமியேன்…. …."

கடவுளிடம் பேசி முடித்து கண் திறந்த போது எதிர் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருத்தி அவசரமாக அமிர்தத்திடம் இருந்து தன்னை மறைத்துக் கொள்ள முயல்வதைப் பார்க்க நேர்ந்தது. வேறொரு பெண் பின்னால் அவள் மறைந்து கொள்வதைப் பார்த்த போது அமிர்தம் சந்தேகத்தோடு எட்டிப் பார்த்தாள். அந்தப் பெண் அர்ச்சகரிடம் விபூதி கூட வாங்காமல் அவசர அவசரமாக அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக நகர்ந்தாள்.

போகின்ற போது ஓரளவு நன்றாகவே அமிர்தத்தால் அவளை ஒரு கணம் பார்க்க முடிந்தது. "நன்றாக பரிச்சயமான முகம்….. ஆனால் பார்த்து பல காலமாகி விட்ட முகம்….யாரவள்? ஏன் என்னை பார்த்த பின் ஓடி ஒளிகிறாள்?……. அமிர்தம் தன் மூளையை கசக்கிக் கொண்டு நின்றாள். கடவுளையும், அதுவரை உருக்கமாக வேண்டியதையும் ஓரிரு நிமிடங்கள் அமிர்தம் மறந்தாள்.

ஏன் என்ற கேள்வி பூதாகாரமாக எழும் போது அதன் விடையை கண்டுபிடிக்காவிட்டால் மண்டை வெடித்து விடுவது போல உணரும் மனிதர்களில் அமிர்தமும் ஒருத்தி. அவள் மூளை பல தகவல்களை அலசி ஆராய்ந்தது. கடைசியில் மின்னலாக விடை வந்தது. பழைய வேலைக்காரி விஜயா. ஆனந்தி இறந்த போது காணாமல் போய் அவளும் அந்த விபத்தில் இறந்திருக்க வேண்டும் என்று பலராலும் நம்பப்பட்ட அதே விஜயா.

அப்படியானால் இவள் சாகவில்லையா? சரி பிழைத்து விட்டுப் போகட்டும். என்னைப் பார்த்து ஏன் ஓடி ஒளிகிறாள்?……

*********

கார் ஊட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த போது சந்திரசேகரும் பவானியும் பேசியதற்கு ஆர்த்தி எந்திரத்தனமாகப் பதில் அளித்தாள். அவள் மனமெல்லாம் அந்த ஜவுளிக்கடை முன் நின்றிருந்த கார் மீதும் அதன் உள்ளே உட்கார்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்ததாய் அவள் சந்தேகப்பட்ட நபர் மீதும் இருந்தது.

‘யாரது? சிறுவயதில் இருந்து என்னைக் கவனிப்பதாய் எனக்கு அடிக்கடி தோன்றிய அதே நபரா? இல்லை வேறு நபரா? அதே நபராக இருந்தால் ஏன் இத்தனை காலமாய் என்னைக் கண்காணிக்க வேண்டும்? பாண்டிச்சேரியில் ஆகாஷ¤டன் கேண்டீனில் இருக்கும் போது ஒரு பெண்மணி என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்த போது அது சிவகாமி அத்தை அனுப்பிய ஆளாகக் கூட இருக்கலாம்னு சந்தேகப்பட்டேனே. இதுவும் அதே நபரா? இப்போது அத்தை அனுப்பி இருக்க வாய்ப்பே இல்லையே. நான் தான் அவர்களுடனேயே வசிக்க இங்கு வந்து விட்டேனே. இப்போது கண்காணிக்க என்ன இருக்கிறது? அதுவும் அப்பாவுடன் இருக்கையில் என்னைக் கண்காணிக்க அவசியம் என்ன இருக்கிறது?’

‘இல்லை, அது வேறு இது வேறு என்றால் பலர் என்னைக் கண்காணிக்க என்ன காரணம் இருக்கிறது?’

ஆர்த்திக்குத் தலை வெடித்து விடும் போல இருந்தது. பின்னால் அந்தக் கார் தொடர்ந்து வருகிறதா என்று பல தடவை திரும்பிப் பார்த்தாள். இல்லை. இதே போல் தான் ஓட்டலுக்கு சென்று மூவரும் சாப்பிட்ட போதும் திரும்பிப் பார்த்தபடி இருந்தாள். அப்போது அந்த கண்காணிக்கப்படுவது போன்ற உணர்ச்சி இருக்கவில்லை என்றாலும் எச்சரிக்கை உணர்வு பார்க்க வைத்திருந்தது. சந்தேகத்துக்குரியவர்கள் யாரும் ஓட்டலில் தென்படவில்லை. முன்பு தோன்றியது மனப்பிராந்தியாக இருக்குமா? என்று தன்னை கேட்டுக் கொண்டாள். ஆழ் மனதில் இருந்து கொண்டு ஒரு குரல் வந்தது. ‘மனப்பிராந்தி இல்லை. அந்தக் காரின் உள்ளே ஆள் இருந்ததும் கண்காணித்ததும் உண்மை’.

"என்ன ஆர்த்தி களைப்பாய் இருக்கா?" சந்திரசேகர் கேட்க ஆமென்று தலையசைத்து அப்படியே உரிமையுடன் அவர் தோளில் அவள் தலை வைத்து சாய்ந்து கொண்டாள். அந்தச் சின்ன செய்கை சந்திரசேகர் மனதில் பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியது. ‘என் மகள்!….’

பவானிக்கும் அந்தப் பயணத்தில் ஆர்த்தியுடன் சற்று அதிக நெருக்கமும், பாசமும் வந்திருந்தது. இந்த ஒரு கணத்தில் அவள், அவள் கணவன், அவர்கள் மகள் என்ற ஒரு குடும்பம் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் இருப்பதாய் எண்ணம் தோன்ற வாத்சல்யத்துடன் ஆர்த்தியின் முடியை லேசாகக் கோதி விட்டாள். குழந்தை பெறும் பாக்கியம் தனக்கு இல்லாவிட்டாலும் இப்போது தான் தாயின் ஸ்தானத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பே பெரிய மனநிறைவைத் தந்தது.

பவானியின் அந்த அன்பான செய்கையால் சந்திரசேகர் மனம் இளகியது. அவளுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டது போல நேசத்துடன் அவர் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார். இப்படி அவர் அவளைப் பார்த்துப் புன்னகைத்து எத்தனையோ வருடங்கள் ஆகியிருந்தன. பவானியின் கண்களில் லேசாக நீர் நிரம்பியது. பதிலுக்கு லேசாகப் புன்னகைத்தவள் மனதிற்குள் ஆர்த்திக்கு நன்றி சொன்னாள்.

ஆர்த்தி வருகிறாள் என்று கேள்விப்பட்ட போது அவள் மனதில் எத்தனையோ பயங்கள் இருந்தன. தாயின் இடத்தில் இருக்கும் ஒருத்தியை அந்தப் பெண்ணால் நேசிக்க முடியும் என்று அவளுக்கு தோன்றி இருக்கவில்லை. ஏற்கெனவே தன்னைப் பெரிதாக மதிக்காத கணவர் அவள் வந்த பின் மேலும் மனதளவில் விலகக் கூடும் என்று பயந்து கொண்டிருந்தாள். ஆனால் ஆர்த்தி நல்ல மனதுடன் பழகிய விதத்தில் எண்ணியதற்கெல்லாம் எதிர்மாறாக பந்தம் பலப்படுகிறது….

ஆர்த்திக்கும் மனம் அமைதியடைய ஆரம்பித்த போது தந்தை சித்தியுடன் இப்படி சேர்ந்திருப்பது சந்தோஷத்தைத் தந்தது.

அவர்கள் வீட்டை அடைந்த போது நள்ளிரவாகி இருந்ததால் வீட்டில் எல்லோரும் தூங்கி இருந்தார்கள். இருவரிடமும் குட்நைட் சொல்லி விட்டு ஆர்த்தி தனதறைக்குப் போனாள்.

பயணத்தின் களைப்பால் உறக்கமும் சீக்கிரமே வந்தது. சிறிது நேரத்தில் அந்தக் கனவும் வந்தது.

வெளியே இடி மின்னலுடன் பேய் மழை பெய்து கொண்டு இருக்கிறது….அழைப்பு மணியை யாரோ விடாமல் அழுத்திக் கொண்டே இருந்தார்கள்…அந்த மழை சத்தத்துடன் சேர்ந்து கேட்கும் போது அந்த அழைப்பு மணியின் தொடர்ச்சியான சத்தம் நாராசமாகக் கேட்கிறது…… கடைசியில் ஈனசுரத்தில் யாரோ ஆர்த்தி என்றழைத்த போது ஆர்த்தி அலறினாள்.

இந்த முறை அலறல் இரவின் அமைதியை விரட்டி பங்களா முழுவதும் எதிரொலித்தது.

(தொடரும்)

About The Author