மனிதரில் எத்தனை நிறங்கள்! (18)

<<<<சென்ற வாரம்

Agonies are one of my changes of garments,
I do not ask the wounded person how he feels, I myself become the
wounded person,
My hurts turn livid upon me as I lean on a cane and observe.
– Walt Whitman

ஆகாஷ் தன் தாய் இங்கு இல்லாதது தான் பிரச்சினை என எண்ணினான். அவள் இருந்திருந்தால் தன் பார்வையிலேயே தம்பியை இயக்கியிருப்பாள். அமிர்தம் தன் தம்பி அழைக்காத போது தான் அவர்களை அழைத்தால் சரியாக இருக்காது என்று எண்ணி மௌனமாக இருந்தாள். பவானியும் அதே அபிப்பிராயத்தில் தான் பேசாமல் இருந்தாள். ஆர்த்திக்கு தன் தாத்தா பாட்டியின் நிலை தாங்க முடியாத துக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அவர்களுக்கு இடமில்லாத இடத்தில் தானும் இருக்க அவள் பிரியப்படவில்லை. தந்தையிடம் இருந்து விலகி தானும் வெளியேறத் தீர்மானித்தாள்.

அந்த நேரத்தில் தான் "நமஸ்காரம் வாங்க, வாங்க" என்ற வரவேற்புக் குரல் வீட்டின் உள்ளே இன்னொரு மூலையில் இருந்து கேட்டது. ஆகாஷின் தந்தை சங்கரன் புன்னகையுடன் நீலகண்டன் தம்பதியரை நோக்கி நடந்து வந்தார்.

அவரைப் பார்த்தவுடன் ஆர்த்திக்கு நினைவு வந்த வார்த்தை – "கனிவு". அவர் முகத்தில் சாந்தமும், கனிவும் நிறைந்திருந்தது. அவர் தான் ஆகாஷின் தந்தை என்று அவளுக்குத் தெரியாவிட்டாலும் இந்த வீட்டில் மரியாதை தெரிந்த ஒரு பெரியவர் இருப்பது மனதை நிறைத்தது. ஆகாஷ் தந்தையை நன்றியுடன் பார்த்தான். எப்போதும் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் அவர் அனாவசியமாக அடுத்தவர் விஷயங்களில் தலையிட விரும்பாதவர். அதுவும் தன் மனைவியின் வீட்டாரின் விஷயங்களில் ஒதுங்கியே இருக்கக் கூடியவர்.

அவர் வரவும், வரவேற்பும் சந்திரசேகரையும் அசைத்தது போல் இருந்தது. அவரும் ஒரு அடி முன்னால் நடந்து சென்று "வாங்க மாமா, வாங்க அத்தை" என்று புன்னகை இல்லாமல் அழைத்தார்.

ஆர்த்தி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவள் முகத்தில் தெரிந்த நிம்மதியைக் கவனித்த சந்திரசேகர் தான் நினைத்ததை விட அதிகமான கேள்வி ஒன்றை மாமனாரிடம் கேட்டார். "இப்ப எப்படியிருக்கீங்க"

நீலகண்டன் வரண்ட குரலில் சொன்னார். "இப்ப பரவாயில்லை"

சந்திரசேகர் மனைவியிடம் சொன்னார். "அவங்களுக்கு அவங்க ரூமைக் காண்பி பவானி". அதோடு தன் கடமை முடிந்தது போல முகம் திருப்பிக் கொண்டவர் பின் நீலகண்டன் தம்பதியர் பக்கம் முகத்தைக் கூட திருப்பவில்லை. உள்ளே நுழைந்த அவர்களை பவானி புன்னகையுடன் வரவேற்றாள்.

நீலகண்டனிடம் சங்கரன் சொன்னார். "பார்த்து பல காலம் ஆயிடுச்சு இல்லையா? நீங்க பெருசா மாறலை"

நீலகண்டன் அந்த வீட்டில் முதன் முதலாகக் கேட்ட அந்தக் கனிவான பேச்சுக்கு மனம் நெகிழ்ந்தார். ஆர்த்திக்கும் அவர் நடந்து கொண்ட விதம் மனதைக் குளிர்வித்தது. அவள் ஆகாஷிடம் "இது யார்" என்று சைகையில் கேட்க அவன் பெருமிதத்துடன் சொன்னான். "எங்கப்பா"

ஏழைகள் என்றுமே பெரிதாய் மாறி விட முடிவதில்லை என்று சொல்ல நினைத்த நீலகண்டன் அப்படிச் சொன்னால் தவறாக அவர் எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்று நினைத்து ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்து அவருக்குக் கை கூப்பினார். கணவனின் பதில் பேசாமை பார்வதிக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ‘பெரிய மனுஷன் இவ்வளவு பேசறார். இவர் ஏதோ ஊமையாட்டம் நிற்கிறார்’ அவரிடம் ஏதாவது பேசாவிட்டால் மரியாதை இல்லை என்று நினைத்தவள் "சிவகாமி இல்லையா" என்று சங்கரனிடம் கேட்டாள்.

ஆனால் சங்கரன் நீலகண்டனின் மௌனத்தைத் தவறாக நினைத்தது போல் தெரியவில்லை. பார்வதியிடம் புன்னகையுடன் சொன்னார். "அவளுக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு போயிருக்காள். வந்துடுவாள்". பின் ஆர்த்தியைப் பார்த்து புன்னகையுடன் சொன்னார். "உங்கம்மா கல்யாணம் ஆகி வந்தப்ப இப்படியே தான் இருந்தாள்…."

‘ஆமாம்’ என்று தானும் சொல்ல வாயெடுத்த அமிர்தம், சந்திரசேகர் பேச்சு தன் முதல் மனைவியின் பக்கம் திரும்புவதை ரசிக்கவில்லை என்பதை அவர் முகபாவனையில் இருந்து அறிந்தவுடன் வாயை மூடிக் கொண்டாள். தாத்தா பாட்டியை அப்பா உள்ளே அழைக்காதது கண்டு ஒரு நிமிஷம் ஆர்த்தி ஆத்திரமடைந்ததைப் பார்த்திருந்த அவள் கவனம் பார்வதியிடம் திரும்பியது. ஆர்த்தி மனதில் இடம் பெற அந்த முதியவர்களிடம் நட்புடன் இருப்பது நல்லது என்று அவளுக்குத் தோன்றியது. தம்பியே அழைத்ததற்குப் பிறகு அவர்களிடம் இனி பேசுவதில் தப்பில்லை என்று முடிவெடுத்து புன்னகையுடன் பார்வதி அருகில் சென்றாள். "எப்படி இருக்கீங்க அத்தை…..?"

சிறிது நேரம் சம்பிரதாயமான பேச்சுக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். ஆகாஷ் ஒரு வாரமாக பார்க்காமல் விட்ட ஆபிஸ் வேலையைக் கவனிக்க வேண்டும் என்று கிளம்பி விட்டான். பார்த்திபன் சிறிது நேரம் ஆர்த்தியிடம் ஆர்வத்துடன் பேசினான். பிறகு பவானி நீலகண்டன் தம்பதியருக்கு ஒதுக்கி இருந்த அறையைக் காட்ட அவர்களை அழைத்துப் போக, அமிர்தம் மருமகளுக்கு மாடியில் ஒதுக்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள். மகளுடன் செல்ல தானும் ஓரடி எடுத்து வைத்த சந்திரசேகர் பின் ஏதோ நினைத்துக் கொண்டவராக அப்படியே நின்று விட்டார்.

"இந்த ரூம் ஒரு காலத்தில் உங்கம்மா, உங்கப்பாவோட பெட் ரூமாய் இருந்துச்சு. உங்கம்மா இறந்ததுக்கு அப்புறம் உங்கப்பாவுக்கு அந்த ரூமில் இருக்கப் பிடிக்கலைன்னு வேற ரூமுக்கு மாறிட்டான். அப்புறம் யாரும் யூஸ் செய்யாம பூட்டியே இருந்தது. நீ வர்றதுன்னு தீர்மானம் ஆன பிறகு அக்கா தான் உனக்கு இதையே ஒதுக்கிடலாம்னு சொன்னாள்….. உங்கம்மாவோட பொருள்கள் எல்லாம் கூட ஒரு பீரோல அப்படியே இருக்கு"

அந்தப் பெரிய அறை பாண்டிச்சேரியில் அவர்கள் வாழ்ந்த முழு போர்ஷனை விடப் பெரியதாக இருந்தது. அறையில் சந்திரசேகர்-ஆனந்தி சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் மேசை மீது இருந்தது. அதில் அவர்கள் இருவரும் மலர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அது திருமணம் ஆன புதிதில் எடுத்துக் கொண்ட படம் போலத் தெரிந்தது. அந்தப் புகைப்படமும், தாய் தனது கடைசி நாள் வரை வாழ்ந்த அறை அது என்ற உணர்வும் ஆர்த்தியின் மனதை என்னவோ செய்தது.

ஒரு கணம் கூட இருந்த அமிர்தத்தையும் ஆர்த்தி மறந்தாள். அந்தப் புகைப்படத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தாயின் முகத்தைக் கூர்ந்து அவள் பார்த்தாள். "அம்மா இவ்வளவு சந்தோஷமாய் இதில் தெரிகிறாயே, உன் வாழ்க்கையில் எங்கே எப்போது தப்புத் தாளம் ஆரம்பித்தது?… உன்னை யார் ஏன் கொன்றார்கள்?"

ஆர்த்தியின் தாய் பதிலில்லாத புன்னகையுடன் மகளை புகைப்படத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

(தொடரும்) “

About The Author

3 Comments

  1. leela

    உஙலுஐய எல்லா துடர்கலுமே எனக்கு மிகவும் பிடிதிருக்கின்ட்ரன. இன்ட்ரெச்டிஙக, சின்திக்க வைக்கும்படியக உல்லன. துடரட்டும் பனி!
    டேபவலி வாழ்துக்கலுடன்,
    லேல

  2. Anand

    முன்பை விட இன்னும் நல்ல சுவரஷ்யமா இருக்கிறது. தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.

Comments are closed.