மனிதரில் எத்தனை நிறங்கள்! (71)

"Asking the right questions takes as much skill as giving the right answers."
– Robert Half

தேசிகாச்சாரிக்கு வரும் மாதம் எழுபத்தைந்து வயது முடிகிறது. வக்கீல் தொழிலில் புலி என்று அந்தக் காலத்தில் கருதப்பட்டவர். மகன் வேங்கடாச்சாரி தந்தை வழியில் இப்போது பிரபலமாக இருக்க அவர் எல்லாவற்றையும் மகனிடம் ஒப்படைத்து ரிடையராகி ஆன்மீகத்தில் மூழ்கி இருக்கிறார். சொற்பொழிவுகள் கேட்பது, வேத பாராயணம் செய்வது என்று அவருடைய நேரம் கழிகிறது. ஆனால் அவர் ரிடையராக முடியாத விஷயம் இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது. அது அவருடைய காலஞ்சென்ற கட்சிக்காரர் தர்மலிங்கத்தின் உயில் சம்பந்தப்பட்ட விஷயம். அதை அவர் மகன் வேங்கடாச்சாரி பார்த்துக் கொள்ள மாட்டார் என்றல்ல. அதை அவர் தன் தொழில் சம்பந்தப்பட்ட விஷயமாக நினைக்காமல் தனிப்பட்ட விஷயமாக நினைப்பதே அதற்கு முக்கியக் காரணம்.

தர்மலிங்கத்தின் பெயரில் மட்டுமே தர்மம் இருந்தது. வாழ்க்கையில் இருக்கவில்லை. ஆனாலும் அடிமட்டத்திலிருந்து மேலே வந்த அந்தக் கட்சிக்காரர் மீது தேசிகாச்சாரிக்கு ஒரு தனிப்பட்ட மரியாதை இருந்தது. இத்தனைக்கும் மனிதர் ஃபீஸைக் கூட அவ்வப்போது கொடுத்து விட மாட்டார். கேட்கும் போதெல்லாம் ‘கொடுக்கலாம். நான் எங்கே ஓடியா போயிடப்போறேன்’ என்று சொல்வார். நாள் கழித்துக் கொடுக்கும் போதும் ‘இத்தனை கஷ்டப்பட்டு தொழில் செய்யறதுக்கு பதிலா பேசாம வக்கீலாயிருக்கலாம் போல இருக்கு. கஷ்டப்படாமல் காசு சம்பாதிக்கலாம்’ என்று சொல்லிக் கொடுப்பார். ஆனாலும் படித்து முடித்து ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்த போது முதன் முதலில் தன்னை வக்கீலாக நியமித்தவர் தர்மலிங்கம் தான் என்பதை தேசிக்காச்சாரி மறக்கவில்லை. ‘ஆரம்பம் சரியானால் அனைத்தும் சரியாகும்’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த தேசிகாச்சாரி தன் வக்கீல் தொழில் வளர்ச்சிக்கு இந்த ராசியான மனிதர் முதல் கட்சிக்காரராக வந்தது முக்கிய காரணம் என்று நம்பினார். அந்த நன்றியுணர்வு அவருக்கு இன்று வரை இருக்கிறது.

எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய தர்மலிங்கம் தன் மூத்த மகள் சிவகாமியிடம் வைத்திருந்த பாசம் எல்லையில்லாதது. ‘ஒண்ணுமில்லாம ஆரம்பிச்ச வாழ்க்கை இவள் பிறந்த பிறகு தான் பெருக ஆரம்பிச்சது’ என்று பல முறை அவர் தேசிகாச்சாரியிடம் சொல்லி இருக்கிறார். சிவகாமி அருகில் இருக்கும் போதெல்லாம் தர்மலிங்கம் முகத்தில் ஒருவித பெருமிதம் தாண்டவமாடுவதை தேசிகாச்சாரி பல முறை பார்த்து இருக்கிறார். ஆனால் மற்ற இரண்டு பிள்ளைகள் அவருக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை.

சிவகாமி கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த காலங்களிலேயே தந்தையின் வியாபாரத்தில் பங்கெடுக்க ஆரம்பித்து விட்டாள். அதன் பிறகு அவள் ஆதிக்கம் அவர் கம்பெனி விவகாரங்களில் அதிகரிக்க ஆரம்பித்தது. பல முக்கியமான முடிவுகள் அவளாலேயே எடுக்கப்பட்டது. தேசிகாச்சாரி தந்தையை விட மகள் கெட்டிக்காரி என்பதை உணர ஆரம்பித்தார். சட்ட நுணுக்கங்களைப் புரிந்து கொள்வதில் சிவகாமி தந்தையைக் காட்டிலும் அறிவு பெற்றிருந்தாள். என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பதில் அவளுக்கு என்றுமே அதிக நேரம் தேவைப்பட்டதில்லை.

ஆனால் மனிதர்களை எடை போடுவதில் சமர்த்தரான தேசிகாச்சாரி சிவகாமி விஷயத்தில் குழம்பிப் போனார். அவள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை பல சமயங்களில் அவரால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. சில சமயங்களில் ஏன் அப்படி நடந்து கொள்கிறாள் என்பதற்கும் காரணம் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. தன் எண்ணங்களையோ, செயல்களையோ அவள் என்றுமே விளக்கியதில்லை. எத்தனையோ பாதகமான நிகழ்வுகளுக்கு மத்தியில் இருக்கும் போது தர்மலிங்கம் காட்டிய பதட்டம் அவள் காட்டியதில்லை. அவசர முடிவு எடுத்ததில்லை. அலட்சியமாக இருப்பது போல் தோன்றினாலும் திடீரென்று அருமையான முடிவெடுத்து எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதை தேசிகாச்சாரி பார்த்திருக்கிறார்.

தந்தையை விட தர்மசிந்தனை அதிகம் உள்ளவள் என்று பல தடவை அவருக்குத் தோன்றி இருக்கிறது. ஆனால் தன் வியாபார எதிரிகளை மண்ணைக் கவ்வ வைப்பதிலும் தந்தையே தேவலை என்று தோன்றுமளவு கடூரமாக நடந்து கொள்வதையும் தேசிகாச்சாரி பார்த்திருக்கிறார். பல நேரங்களில் யாருமே எதிர்பாராத முடிவுகளை அவள் எடுத்து திகைக்க வைத்திருக்கிறாள்.

அப்படி எடுத்த முடிவுகளில் ஒன்று தான் அவள் சங்கரனைத் திருமணம் செய்து கொள்ள எடுத்த முடிவு. அவளைத் திருமணம் செய்து கொள்ள எத்தனையோ அழகான, கோடீசுவர இளைஞர்கள் போட்டியில் இருக்க நடுத்தர வர்க்க ஒரு வக்கீல் இளைஞனை அவள் தேர்வு செய்த போது தர்மலிங்கம் அவரிடம் பையன் எப்படி என்று விசாரித்தார்.

"பையன் தங்கமான பையன். புத்திசாலி. எங்க வக்கீல்கள் மத்தியில் நல்ல பேர் இருக்கு. ஆனா சொத்து பத்து எதுவும் இருக்கிற மாதிரி தெரியலை."

"நல்ல பேர்ல நாலு எஸ்டேட் வாங்க முடியுமா? கார் பங்களா ஐஸ்வர்யம்னு சுபிட்சமா இருக்க முடியுமா? நம்ம அந்தஸ்துக்கு ஏத்த பையனா பார்க்கணுமா வேண்டாமா? இதைச் சொன்னா ‘குடும்ப வாழ்க்கையையும் வியாபாரத்தையும் ஒண்ணா கணக்கு போட்டு குழப்பிக்காதீங்கப்பா’ன்னு சொல்றா. ஒரு முடிவு எடுத்துட்டா மாத்திக்க மாட்டா. அதனால சரின்னுட்டேன்."

பணம் அந்தஸ்து மட்டுமல்ல குணாதிசயங்களில் கூட முற்றிலும் மாறுபட்ட ஒருவனைக் கணவனாக அவள் தேர்ந்தெடுத்தாலும் தர்மலிங்கத்திற்கு மகள் மீது இருந்த அன்பு குறையவில்லை. அந்தப் பாசம் முன்பை விட அதிகமானதாகவே தோன்றியது. அப்படிப்பட்டவர் உயில் எழுத அழைத்த போது முக்கால்வாசி சொத்து சிவகாமிக்கே போய் விடும் என்று தேசிகாச்சாரி நம்பினார். ஏனென்றால் பல முறை தர்மலிங்கம் அவரிடம் சொல்லி இருக்கிறார். "எல்லாத்தையும் அவள் பேரிலேயே எழுதிடலாம்னு தோணுது. இவங்களுக்கு அவ அக்காவா இல்லை. அம்மாவா இருக்கா. அவ பார்த்து இவங்களுக்கு என்ன செய்யணுமோ செய்வாள். இவங்க பேர்ல எழுதி வெச்சா இவங்க சொத்தை தக்க வச்சுக்குவாங்களான்னு சந்தேகமா இருக்கு."

ஆனால் அங்கு போன பின் தர்மலிங்கம் எழுதச் சொன்ன உயில் தேசிகாச்சாரிக்கு திகைப்பை ஏற்படுத்தியது.

"ஏன்?" என்று தேசிகாச்சாரி கேட்டதற்கு தர்மலிங்கம் விளக்கம் தரவில்லை.

"நல்லா யோசிச்சிட்டீங்களா"

தர்மலிங்கம் நன்றாக யோசித்தாகி விட்டது என்று தலையை மட்டும் அசைத்துத் தெரிவித்தார். அவர் பேசும் மனநிலையில் இல்லை என்று புரிந்து கொண்ட தேசிகாச்சாரி இன்னொரு நாள் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார். ஆனால் அப்படியொரு சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்கவில்லை. உயில் எழுதி பத்து நாளில் தர்மலிங்கம் இறந்து விட்டார். தர்மலிங்கத்தின் மனமாற்றத்திற்கான காரணம் கடைசி வரை தேசிகாச்சாரிக்குத் தெரியாமலேயே போய் விட்டது.

தர்மலிங்கத்தின் மரணத்திற்குப் பின்பும் நடந்த சம்பவங்கள் சிவகாமி மேல் பல சந்தேகங்களைக் கிளப்பின…

(தொடரும்)

About The Author