குழந்தை
குட்டிகளுடன் குடும்பத்துடன் குதூகலம் அடைவதில்
மட்டற்ற மகிழ்ச்சி அடைவது பாலூட்டி உயிரினங்களில்
உயர்வான இடத்தில் இருக்கும் மனிதனிலிருந்து ஆரம்பித்து,
ஊர்வன, நீந்துவன, பறப்பன என நீண்டு கொண்டே செல்கிறது.
ஒரு குடும்பமாக, ஆணுக்கு பெண் துணை அவசியமாகிறது.
பெண்ணின் துணையோடுதான் சந்ததி விரிவடைகிறது. இதில்
குடும்பப்பாரம் எனப்படும் குழந்தை பிறப்பு, வளர்ப்பு
என்ற சுகமான சுமையை சுமப்பதில் பெண்களின் பங்கு
இன்றியமையாததாகிறது.
பேச்சளவிலேயே பெரும்பாலும் கூறப்படும் ஆணுக்கு பெண்
சமம் எனும் நீதி, நீர்வாழ்வினங்களான மீனினங்களில்
கடைபிடிக்கப்படுகிறது என்பதை அறியும்போது ஆறறிவுக்கு
எட்டாத சமூகநீதி, மற்ற விலங்கினங்களில் இருப்பது
குறித்து ஆனந்தமும் அளவில்லாத வியப்பும் ஏற்படுவது
தவிர்க்க முடியாததாகிறது.
பெற்ற குழந்தையைப் பேணிக்காப்பதில் பெரும்பாலான
நேரத்தை செலவிடுவது குறைந்து கொண்டே வரும் இக்காலத்தில்
போட்டி போட்டுக் கொண்டு கவனிக்கும் மீனினங்களும்
இருக்கத்தான் செய்கின்றன.
ஸ்டிக்கில்பேக் (Stickleback)
என்னும் மீன்வகையானது இனப்பெருக்கத்திற்கு தயாரான
உடன் ஆண் மீன் அதற்கான கூட்டை ஆற்றுப்படுகையில்
கட்டி, பெண் மீனை வரவேற்கிறது. பெண் கூட்டில் முட்டையிட
ஆண்மீன் அதை கருவுறச்செய்ய என காதல் நடனம் களிப்புற
நடக்கிறது. பின் முட்டையை பிற மீன்களிடமிருந்து
பாதுகாத்து அடைகாக்கிறது ஆண்மீன். பெண்ணின் வேலை
முட்டையிடுவதுடன் முடிந்துவிடுகிறது. முட்டையிலிருந்து
மீன் குஞ்சு பொரிந்து வெளியே நீந்திச்செல்லும் வரையிலும்
அடைகாக்கிறது இந்த ஆற்றில் வாழும் ஆண்மீன்.
போராளி மீன் (Fighter
fish)
இம்மீனினத்திலும், ஆண்மீன் நுரையைக்கொண்டு கூட்டைக்கட்டுகிறது.
இந்நுரைக்கூட்டில் பெண்மீன் இட்ட முட்டையை ஆண்மீன்
கருவுறச்செய்து முட்டையை ஆடாது அசையாது அடைகாக்கிறது.
ஏதேனும் முட்டை நுரைக்கூட்டிலிருந்து தண்ணீருக்குள்
விழுந்தால் அதை எடுத்து மீண்டும் கூட்டில் விட்டு
குஞ்சு பொரிந்து விடும்வரை அயராது அடைகாக்கும்.
வாயிருக்க! வயிறெதற்கு?

மனிதர்களுக்கு
வயிற்றிலே வளரும் சிசு, ஆனால் திலேப்பியா மீனினத்தில்
(Sarotherodon)
கருவுற்ற முட்டைகளை ஆண் மீன் தனது வாயிலெடுத்து
வைத்துக்கொண்டு அடைகாக்கும். கடல் கெளுத்தி மீனும்
இவ்வகையிலேயே முட்டையை அடைகாக்கிறது.
கடல்குதிரை காட்டும் வழி
கடல் குதிரையில் ஆணுக்கு கங்காருவின் வயிற்றுப்பகுதியில்
பை இருப்பது போல, ஒரு பை அமைப்புக் காணப்படுகிறது.
இப்பை அமைப்பில் பெண் கடல் குதிரை முட்டைகளை இட்டுச்சென்றுவிடும்.
ஆண் கடல்குதிரை முட்டைகளைக் கருவுறச்செய்து முட்டை
பொரிந்து குஞ்சு வெளிவரும் வரை முட்டைகளைச் சுமந்து
பிரசவ வேதனையைச் சுமக்கிறது. பெண் மீன் அக்கடா துக்கடா
என்று வேலை முடிந்ததும் சென்றுவிடுகிறது.
நம்புங்கள் கடல்குதிரையும் மீன்தான்!
பைப்மீன் (Pipe
fish) என்ற
மீன் வகையிலும் இதே நிலைதான் இவ்வகை மீன்கள் உறவில்
ஈடுபடும்போது பெண்மீன் முட்டைகளை ஆண்மீனிடம் ஒப்படைத்துச்
சென்றுவிடும். பின்னர் ஆண்மீனின் பாடு அதை கருத்தரித்து
பிரசவிக்கும்வரை கண்ணும் கருத்துமாகப் பார்ப்பதுதான்.
கடலா! காதலா!
இன்னுமொரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் நான் முந்தி
நீ முந்தி எனக் குஞ்சுகளை பராமரிப்பதில் கடலில்
வாழும் மீனினங்களை விட, தண்ணீரில் வாழும் மீனினங்கள்
தான் பாசக்கார பயலுகளாகத் திகழ்கின்றன.
குழந்தை/குட்டி/முட்டை/ குஞ்சு பராமரிப்பில்
ஆண்/பெண் உயிரினங்களின் பங்களிப்பு. (சதவிகிதத்தில்)
|
வகைகள் |
ஆண் மட்டும்
|
பெண் மட்டும்
|
ஆண்/பெண் சேர்ந்து
|
அக்கறை இல்லாதவை |
|
பாலூட்டிகள் |
0 |
90 |
10 |
0 |
|
பறவைகள் |
2 |
8 |
90 |
0 |
|
ஊர்வன
|
0 |
15 |
0 |
85 |
|
குட்டி
போடும் மீன்கள் |
6 |
66 |
0 |
28 |
|
முட்டையிடும் மீன்கள் |
11 |
7 |
4 |
78 |
