<<<சென்றவாரம்
8வளி
அடுப்பைப் (gas
stove)
பற்றவைக்கும்போது உருளைகளில் (cylinders)
அடைக்கப்பட்டுள்ள நீர்மப் பெட்ரோலிய வளி (liquefied
petroleum gas-LPG)
எவ்வாறு தீப்பற்றிக்கொள்ளாமல் இருக்கிறது?

வளி அடுப்பைப் பற்றவைத்தவுடனே,
அதிலுள்ள வளிப்பொருள், உலையைச் (burner)
சுற்றியுள்ள காற்றுடன் கலப்பதால் உடனே தீப்பிடித்து
எரியத் தொடங்குகிறது. தேவையான அளவு காற்று கலக்காவிட்டால்
தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டு எரியும் நிகழ்ச்சியும்
நடைபெறாது. உருளையின் வாய்ப்பகுதி மிகவும் குறுகி
இருப்பதாலும், உருளையையும் அடுப்பையும் இணைக்கும்
குழாயினுள் காற்று நுழையும் வாய்ப்பு மிகக் குறைவாக
இருப்பதாலும் நீர்மப் பெட்ரோலிய வளி தீப் பிடித்துக்கொள்வது
பெருமளவு தவிர்க்கப்பட்டு விடுகிறது. அடுத்து உருளையின்
வாய்ப்பகுதியில் உள்ள சீரியக்கி (regulator)
நீர்மப் பெட்ரோலிய வளியை வெளியே செல்ல அனுமதிக்குமே
ஒழிய வெளியே உள்ள காற்றை உருளையின் உள்ளே செல்ல
அனுமதிப்பதில்லை. இதனால்தான் உருளையில் அடைக்கப்பட்டுள்ள
வளி தீப்பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்கமுடிகிறது.
மேலும் வளி தீப்பிடிப்பதற்கு அதன் சில மூலக்கூறுகளின்
வெப்ப நிலையை மிகுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காகவே
தீக்குச்சி அல்லது தீக்கொளுவியினால் (lighter)
தீப்பொறிகளை உண்டாக்கி வளியை விரைந்து தீப்பிடிக்கச்
செய்யவேண்டியுள்ளது.
8இனிப்பு
மாத்திரைகள் சர்க்கரையைப் போன்ற இனிப்பையே தந்தாலும்
குறைவான கலோரி (calorie)
ஆற்றலையே பெற்றிருப்பது எவ்வாறு?

இனிப்பு மாத்திரைகளுக்கு
மட்டுமின்றி வேறு பல கூட்டுப்பொருள்களுக்கும் (compounds)
கூட சர்க்கரையைப் போன்றும், அதை விடக் கூடுதலாகவும்
இனிப்புச் சுவை இருப்பதுண்டு. சர்க்கரைப் பொருள்களை
உணவில் சேர்த்துக் கொண்டால் வளர்சிதை மாற்றத்தின்போது
(metabolism)
கூடுதலான கலோரி ஆற்றலைத் தந்து அவை உடலில் கூடுதலான
கொழுப்பு சேர்வதற்கு வழி வகுத்துவிடும். அதிகக்
கொழுப்பு சேர்வது உடல் நலத்திற்குத் தீங்கானது என்பது
நாம் அறிந்ததே. சாக்கரின் (saccharine)
போன்ற கூட்டுப்பொருள்கள் சர்க்கரையைவிடக் கூடுதலான
இனிப்புச் சுவையைத் தந்தாலும் வளர்சிதை மாற்றத்திற்கு
உட்படாததால் அவை பூஜ்யம் கலோரி ஆற்றலையே தரும்.
பெரும்பாலும் இத்தகைய சாக்கரின் கலந்த இனிப்பு மாத்திரைகளையே
நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துகின்றனர். குறைந்த
கலோரி ஆற்றலுள்ள அதே நேரத்தில் தேவையான இனிப்புச்
சுவையும் கொண்ட வேறு சில இனிப்பு மாத்திரைகளும்
உள்ளன. அசெஸ¤ல்·பாம்-கே (acesulfam-K)
போன்றவை வளர்சிதை மாற்றத்திற்கு உள்ளாகாமல் அதே
நேரத்தில் தேவையான இனிப்புச் சுவையையும் தரும்.
8நீரினால்
கண்ணாடி ஈரமாவதுபோல் பாதரசத்தால் ஏன் ஈரமாவதில்லை?

ஈரமாதல் நிகழ்ச்சியானது
திரவம் மற்றும் அது தொடர்புகொள்ளும் பரப்பு ஆகியவற்றிடையே
நிலவும் ஒட்டு விசை (adhesive
force)
மற்றும் ஈரமாகும் திரவத்தின் மூலக்கூறுகளுக்கிடையே
நிலவும் பிணைப்பு விசை (cohesive
force)
ஆகியவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டையே பெரிதும் பொறுத்துள்ளது.
திரவத்தின் மூலக்கூறுகட்கிடையே நிலவும் பிணைப்பு
விசையே அதன் பரப்பு இழுவிசையின் (surface
tension)
அளவுக்கும் காரணம் எனலாம். பாதரசம் கண்ணாடிப் பரப்பை
ஈரமாக்க இயலாமைக்கு முக்கிய காரணம் அதன் பரப்பு
இழுவிசை மிக அதிகமாக இருப்பதே; தண்ணீரின் பரப்பு
இழுவிசையைவிட பாதரசத்தின் பரப்பு இழுவிசை ஆறு மடங்கு
அதிகம். மேலும் பாதரசத்தின் மூலக்கூறுகளுக்கிடையே
உள்ள பிணைப்பு விசை பாதரசத்திற்கும் கண்ணாடிக்கும்
இடையே நிலவும் ஒட்டு விசையைவிட மிகவும் வலிமை வாய்ந்ததாகும்.
இதன் காரணமாகவே பாதரசம் கண்ணாடியின் மீது பரவுவதும்
இல்லை, அதன் பரப்பில் ஒட்டுவதுமில்லை. அதே நேரத்தில்
தண்ணீருக்கும் கண்ணாடிப் பரப்புக்கும் இடையே நிலவும்
ஒட்டு விசையானது தண்ணீர் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும்
பிணைப்பு விசையைவிட மிக வலிமையானது; இதன் விளைவாகவே
நீர் கண்ணாடியுடன் ஒட்டிக்கொள்வதோடு, அதன் பரப்பின்
மீது விரைந்தும் பரவுகிறது.
8ஊற்றுப்
பேனாவின் (fountain
pen)
முள்ளில் (nib)
பிளவு இருப்பது ஏன்?
ஊற்றுப் பேனாவைக் கொண்டு
எழுதும்போது அதன் மை, முள்ளின் வழியாக வெளியேறி
தாளில் கோடுகளாகவும், எழுத்துக் குறிகளாகவும் பரவி
உலர்ந்து போகிறது. மை சீராகவும், மென்மையாகவும்
வெளியேறுவதால் எழுத்துக் குறிகளும் ஒரே சீராக அமைகின்றன.
பரப்பு இழுவிசை (surface
tension)
மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவை காரணமாக வெளியேறும்
மை பேனாவின் முன் பகுதியிலுள்ள பிளாஸ்டிக் நாக்கிற்கு
மேல் வந்து, பேனா முள்ளின் நடுவேயுள்ள சிறு துளையருகே
சேர்கிறது. எழுதும்போது பேனாவைச் சற்று அழுத்தவேண்டியுள்ளது;
அப்போது முள் இரண்டாகப் பிளவுபட்டு, சிறு குழாய்/நுண்
புழை (capillary)
போன்ற அமைப்பு உருவாகி அதன் வழியே மை வெளியேறுகிறது.
இவ்வெளியேற்றத்திற்கான விசை நுண்புழை விசை எனப்படும்.
முள்ளிலுள்ள பிளவு, குழாய் போன்றும் குழாயினுள்
இருக்கும் தடுக்கிதழ் (valve)
போன்றும் பணிபுரிந்து மை ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.
இப்பிளவு மட்டும் இல்லாவிடில் வெளியேறும் வாய்ப்பே
உண்டாகாமல், மை, பேனாவிற்கு உள்ளேயேதான் தங்கி இருக்கும்.