<<<<<சென்றவாரம்8ஓட்டப்பந்தய
வீரர், ஓடத் துவங்கும் முன்னர், நின்ற நிலையில்
இராமல், குனிந்த நிலையில் இருப்பது ஏன்?
ஓட்டப்பந்தய
வீரர் சமிக்ஞை வந்தவுடனே திடீரென ஓடத் துவங்குவதுடன்,
வேகத்தின் முடுக்கத்தையும் (Acceleration)
அதிகரிக்க வேண்டும். பந்தய வீரர் நின்ற நிலையில்
இருந்தால் கீழ்ப்புறம் வினை புரியும் அவரது உடல் எடை
முழுதும், தரையில் இருந்து உண்டாகும் மேற்புற
எதிர்வினையினால் (Reaction)
சமன் செய்யப்பட்டு விடுகிறது. எனவே பந்தய வீரருக்கு
ஓட்டத்தைத் துவக்குவதற்குத் தேவையான முடுக்கத்தைக்
கொடுக்கும் ஒரே விசை, அவரது காலடியினால் தரையைத்
தேய்த்துத் தள்ளிடும்போது தரையின் எதிர்வினையால்
உண்டாகும் விசை மட்டுமே. இவ்விசை, ஓட்டத்தைத்
துவக்குவதற்குப் போதுமானதல்ல. இத்தகைய செயல் நாம்
நடக்கும் போதும் உண்டாகிறது எனலாம். ஆனால் பந்தய வீரர்
முதுகை வளைத்துக் குனிந்த வண்ணம் இருக்கும்போது உடல்
எடையால் உண்டாகும் கீழ்நோக்கு விசை, தரையின் எதிர்
வினையால் உண்டாகும் மேல் நோக்கு விசை ஆகிய இரண்டும்
ஒரே வரிசையில் இருப்பதில்லை. எனவே ஒரு பகுதி, அதாவது
உடல் எடையின் செங்குத்துப்பகுதி (Vertical)
மட்டுமே தரையின் எதிர்வினையால் சமன் செய்யப்படுகிறது.
உடல் எடையின் மீதமுள்ள கிடைப்பகுதி (Horizontal)
எடையினால் உண்டாகும் விசை ஓட்டத்தைத் துவக்குவதற்குத்
தேவையான முடுக்கத்தை அளிக்கிறது; எனவே, பந்தய வீரரால்
மிகுந்த வேகத்துடன் ஓட்டத்தைத் துவக்க முடிகிறது.
8காய்ச்சல்
வந்தவர்களுக்கு உணவின் சுவையுணர்வு மாறுபட்டு
இருப்பது ஏன்?
புலன்களின்
உணர்வுகளைப் பற்றி அனைவரும் நன்கு அறிவோம்; எனினும்
அவற்றின் சில செயல்பாடுகள் அறிஞர்களுக்கு இன்னும்
புரியாத புதிராகவே உள்ளது. அவற்றுள் காய்ச்சலால்
பாதிக்கப்பட்டவர்களின் மாறுபட்ட சுவையுணர்வும்
ஒன்றாகும். இதற்கான காரணம் இன்னும் சரியாக
விளங்கவில்லை; எனினும் சுவையுணர்வு பற்றி இதுவரை
அறிந்தவற்றின் அடிப்படையில் சில யூகங்களை
மேற்கொள்ளலாம். நாக்கில் சுவைமுகிழ்ப் பகுதிகள்
(Taste buds)
உள்ளன; இவற்றின் அடிப்பகுதியில் சுவை
நரம்புகள் (Taste
nerves)
உண்டு; நமது உடலின் சாதாரண வெப்ப அளவு நிலையில் (Temperature)
இந்நரம்புகள் மிகவும் உணர்திறன்
(Sensitivity) கொண்டதாக இருக்கும். மாறாக இயல்பு வெப்ப
நிலையிலிருந்து மிக அதிகமாகவோ அல்லது மிகவும்
குறைந்தோ வெப்ப அளவு இருப்பின் அந்நிலையில் சுவை
நரம்புகளின் உணர்திறன் குறைந்துவிடும். காய்ச்சல்
அடிப்பவரின் உடல் வெப்ப நிலை இயல்பு நிலைக்கு
மிகுதியாக இருப்பது, உணவின் சுவையுணர்வு
மாறுபாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
8புல்வெட்டு
கருவியை (Lawn-Mower)
இழுப்பது எளிதாகவும் தள்ளுவது கடினமாகவும் இருப்பது
ஏன்?
ஒரு
பொருளின் மீது செலுத்தப்படும் பல்வேறு விசைகளின்
உள்வினையைப்
(Interaction) பொறுத்தே அப்பொருளை
இயக்குவது எளிமையானதா? அல்லது கடினமானதா? என்று
உணரப்படும். தள்ளுவிசை அல்லது இழுவிசையில் இரு
பகுதிகள்/கூறுகள் உண்டு. ஒன்று கிடையாகவும்
(Horizontally), மற்றொன்று செங்குத்தாகவும்
(vertically) வினை புரியும். ஒரு பொருளைத்
தள்ளும்போது, விசையின் செங்குத்துப் பகுதி
கீழ்ப்புறம் செலுத்தப்படும்; இது பொருளின் எடையுடன்
சேர்ந்து கீழ்ப்புறம் அழுத்துகிறது. அப்போது
அப்பொருளை இயக்குவதற்கு / தள்ளுவதற்குக்
கிடைப்பகுதியில் அதிகமான விசையைச் செலுத்த
வேண்டியதாகிறது. மாறாக அப்பொருளை இழுக்கும்போது,
அப்பொருளின் செங்குத்துப் பகுதி மேல்நோக்கி வினை
புரியும்; அப்போது கீழ் நோக்கி இழுக்கும் எடையின் ஒரு
பகுதி நீக்கப்படுகிறது. எனவே புல்வெட்டுக் கருவியை
இழுப்பது எளிதாக உள்ளது.
8விரைந்து
செல்லும் வாகனத்தை ஒளிப்படம்
(Photograph)
எடுத்தால் சில சமயம் அது தெளிவற்று இருப்பது ஏன்?
ஓர்
ஒளிப்படம் தெளிவாக இருப்பதும், தெளிவற்று இருப்பதும்
ஒளிப்படக் கருவியில் (Camera)
உள்ள மூடியை (Shutter)
எவ்வளவு விரைவாக விடுவிக்கிறோம் என்பதைப்
பொறுத்ததாகும். வாகனம் விரைந்து செல்லும்போது அதனைப்
படலத்தில் (Film)
பதிவு செய்து கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்
மிகக் குறைவாக இருக்குமானால், அந்நிலையில்
எடுக்கப்பட்ட ஒளிப்படம் மிகத் தெளிவாகவும்
துல்லியமாகவும் இருக்கும். அவ்வாறின்றி விரைந்து
செல்லும் ஒரு பொருளைப் படம் எடுக்கையில் ஒளிப்படக்
கருவியின் மூடியைத் திறந்து விடுவிக்க நீண்ட நேரம்
எடுத்துக்கொண்டால், அந்நிலையில் பதிவாகும் ஒளிப்படம்
தெளிவற்று இருக்கும். மேலும் படம் எடுக்கும்போது
ஒளிப்படக்கருவி அசைந்துவிட்டாலும் கூட, எடுக்கப்படும்
ஒளிப்படம் தெளிவின்றி பதிவாகும் வாய்ப்புண்டு.
தெளிவான, பளிங்கு போன்ற ஒளிப்படங்களை எடுப்பதற்கு
மூடியை விடுவிக்கும் நேரம் மிக மிகக் குறைவாக, அதாவது
ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கு இருப்பதும் சிறந்ததே.
*******