<<<<<சென்ற வாரம்8மருத்துவ
வெப்பமானியைப் பயன்படுத்திய பின்னர் அதிலுள்ள
பாதரசத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர, அதனை நன்றாக
உதறுவது ஏன்?
மனித
உடலின் வெப்பநிலையை அளவிடுவதற்கு மருத்துவ
வெப்பமானியைப் பயன்படுத்துகிறோம். இவ்வெப்பமானியின்
குமிழ்ப் பகுதிக்குச் சற்று மேலே இடுக்கான (Constricted)
சிறு பகுதி இருப்பதைக் காணலாம். வெப்பநிலை உயரும்போது
பாதரசம் விரிவடைந்து குமிழ்ப் பகுதியிலிருந்து
இடுக்கு வழியாக குழாயினுள் செல்லும். வெப்பமானியைப்
பயன்படுத்திய பின்னர் வெளியே எடுக்கும்போது பாதரசக்
கம்பம் இடுக்குப் பகுதியில் பிளவுற்று, தடைப்படுகிறது.
இதனால் இயல்பான வெப்பநிலையில் குழாயினுள் இருக்கும்
பாதரசம் குமிழ்ப்பகுதிக்குச் செல்லாமல் முன்பிருந்த
நிலையிலேயே நின்றுவிடுகிறது. மேலும் பாதரசத்தை
வலிந்து செலுத்துவதற்கான விசை எதுவுமில்லாததும்,
குழாயில் பாதரசத்தின் நிலை மாறாமல் இருப்பதற்கு அது
ஒரு காரணமாக உள்ளதெனலாம். இந்நிலையில் வெப்ப மானியை
நன்றாக உதறும்போது அதிர்வின் காரணமாக குழாயினுள்
இருக்கும் பாதரசம் இடுக்கு வழியாக குமிழ்ப் பகுதியைச்
சென்றடையும். சாதாரண வெப்பமானிகளில் மேற்கூறிய
இடுக்குப் பகுதி இல்லாததால், வெப்பத்தின் உயர்வு
தாழ்வுக்கு ஏற்ப பாதரசக் கம்பத்தின் உயரம் ஏறுவதும்
இறங்குவதும் தடையேதுமின்றி இயல்பாக நிகழ்கிறது.
8நீர்வேட்கை
மிகுந்த நிலையில் பலரும், வெதுவெதுப்பான பானங்களைவிட,
குளிர்ந்த நீர் அல்லது பானங்களை, விரும்பிப் பருகுவது
ஏன்?
மூளையின்
அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக்களாலான (Nerve
cells)
வேட்கை மையம் (Thirst
center)
எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு
குறைந்து போகும்போது மேற்கூறிய வேட்கை மையத்தில் அது
உணரப்பெற்று நமக்கு நீர் வேட்கை உண்டாகிறது. தொண்டை
உட்பகுதியின் மென்தோல்
(lining) வறண்டு போகும்போதும்
வேட்கை மையத்தில் தண்ணீரின் வறட்சி உணரப்பெற்று
அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும்
உணர்த்தப்பெறுகிறது. வறட்சியால் கிளர்ச்சியுற்ற
மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது
பானங்களைப் பருகும்போது தண்மையடைந்து வறட்சி
தணியப்பெறுகிறது. இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை
அருந்தும்போது நடைபெறுவதைவிட குளிர்ந்த பானங்களை
உட்கொள்ளும்போது விரைந்தும், மிகுதியாகவும்
நடைபெறுகிறது.
8சமையல்
பாத்திரங்களை, சாம்பலைப் பயன்படுத்தி எவ்வாறு
தூய்மையாகக் கழுவ முடிகிறது?
விறகோ
அல்லது கரியோ எரிக்கப்பட்டு சாம்பல் உண்டாகிறது.
காரத்தின்
(Alkaline)
மிச்சங்களும், சிலிக்கா (Silica)
போன்ற கழிவும் சேர்ந்ததே சாம்பலாகும். இந்தக் காரக்
கூட்டுப்பொருளில் கலந்துள்ள கார்பனேட்டுகள்
(Carbonates) தூய்மையாக்கும் பணிக்குக் காரணமாக
அமைகின்றன. சாம்பலைக் கொண்டு தேய்த்துக் கழுவும்போது
பாத்திரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் பிசுபிசுப்புப்
பொருள்களும், அழுக்குகளும் நீக்கப்பெறுகின்றன. மேலும்
பொடியான சிலிக்காத் துகள்கள் பாத்திரத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்குகளையும், பிசுப்புப்
பொருள்களையும் சுரண்டி நீக்குவதுடன், கழுவிய பின்னர்
பாத்திரங்கள் தூய்மையாகவும் பளபளப்பாகவும்
காட்சியளிக்கவும் துணை செய்கின்றன
8கைகள்
இரண்டும் கட்டப்பட்ட நிலையில் ஏன் வேகமாக ஓட
முடிவதில்லை?
கைகள்,
கால்கள் ஆகியவை முன்னும், பின்னும் ஒருங்கிணைந்து
இயங்குவதால் நம்மால் நடக்கவும் ஓடவும் முடிகிறது.
சாதாரணமாக நின்றுகொண்டிருக்கும் போது உடலின் ஈர்ப்பு
மையம் (Centre
of gravity)
நமது காலடியில் விழும்; இதனால் நமது உடல் சமநிலையில்
நிற்க முடிகிறது. நடக்கும்போதும், ஓடும்போதும்
கால்கள் இயல்பு நிலையில் இருந்து மாற்றமுறுவதால்
ஈர்ப்பு மையம் முன்னோக்கிச் செல்லும். இந்நிலையில்
நமது கைகள் கட்டப்பட்டிருக்குமானால், உடலின் சமநிலை
தடுமாறி கீழே விழ நேரிடும். இயல்பாக நடக்கும்போதோ,
ஓடும்போதோ, இந்நிலை ஏற்படாதற்குக் காரணம், நமது கை
கால்கள் முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குவதனால்,
ஈர்ப்பு மையம் உடலின் அடிப்பகுதியிலேயே
நிலைபெற்றிருக்குமாறும், அதனால் உடலின் சமநிலை
தடுமாறாதவாறும் பார்த்துக்கொள்ளப் படுகிறது. ஆனால்
கைகள் கட்டப்பட்ட நிலையில் நடக்கும்போதும்,
ஓடும்போதும் மேற்கூறிய சமநிலை பராமரிக்கப்படுவதில்லை.
எனவே அந்நிலையில் ஓடுவதோ அல்லது நடப்பதோ மிகவும்
கடினமான செயலாகிவிடுகிறது.
*******