<<<சென்றவாரம்
8நனைந்த
துணியில் உள்ள நீரை வெளிக்கொணர, அத்துணியை முறுக்கிப்
பிழிவது ஏன்?
பருத்தித்
துணியானது உள்ளீடற்ற (Hollow)
செல்லுலோஸ் எனப்படும் நார் இழைகளாலானது. பருத்தித்
துணியை தண்ணீரில் நனைக்கும்போது மேற்கூறிய இழைகளின்
வெறுமிடத்தில் தண்ணீர் சேர்ந்து தங்கி விடுகிறது.
இத்தண்ணீர் சாதாரணமாக வெளியேறுவதில்லை; எனவே வலிந்து
வெளியேற்ற வேண்டியதாகிறது. ஈரத்துணியை முறுக்கிப்
பிழியும்போது துணியின் இழைகளில் தங்கி இருக்கும்
தண்ணீர்த் துளிகள் அழுத்தப்பெற்று
வெளியேற்றப்படுகின்றன. ஆனால் நைலான் பாலியஸ்டர்
(Polyester) போன்ற
செயற்கை இழைகளில் (Synthetic
fibers) பருத்தித் துணியிழைகளில் இருப்பது
போன்ற உள்ளீடற்ற பகுதி இல்லை. எனவே அவ்விழைகள்
தண்ணீரை உறிஞ்சுவதில்லை. மேலும் அவை நீரெதிர்ப்புத்
தன்மையுடையன. எனவே செயற்கை இழைத் துணிகளை நீரில்
நனைத்தால், தண்ணீர் அத்துணிகளின் மேற்பரப்பில்
மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே அவற்றை
முறுக்கிப் பிழியாமல் உலர்த்தினாலே போதும்.
8வெப்பத்தினால்
பிளாஸ்டிக் உருகுவது போன்று மரக்காட்டை ஏன்
உருகுவதில்லை?
ஒவ்வொரு
பொருளும் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு அமைப்பைக்
(Molecular structure)
கொண்டுள்ளது; இவ்வமைப்பில் மூலக்கூறுகள் அல்லது
அணுக்கள் எளிய விசையினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
ஒரு பொருள் உருக வேண்டுமெனில், அதனை அதன் உருகுநிலை
(Melting point)
அளவுக்குச் சூடுபடுத்த வேண்டும். ஒரு பொருளைச்
சூடுபடுத்துவதன் வாயிலாக, அப்பொருளின் மூலக்கூறுகளை
இணைத்து வைத்திருக்கும் எளிய விசை முறிக்கப்படுகிறது.
அதாவது வெப்பநிலை உயர்வினால் இம்மூலக்கூறுகள் ஆற்றல்
பெற்று தம்மை இணைத்து வைத்திருக்கும் அமைப்பை
அழித்துவிடுகின்றன. எடுத்துக்காட்டாக பிளாஸ்டிக்கைச்
சூடுபடுத்தினால் அது உருகுவதற்குக் காரணம் அதன்
மூலக்கூறுகளைப் பிணைத்து வைத்திருக்கும் எளிய விசைகள்
முறிக்கப்படுவதேயாகும். ஆனால் மரக்கட்டை போன்ற
பொருட்கள் உருகுநிலைப் புள்ளி நிலையை
(Melting point stage)
அடைவதற்கு முன்பே உயிர்வளியுடன்
(Oxygen)
கலந்து எரிந்துவிடுகின்றன. எனவே இத்தகைய பொருட்களை
உருகவைப்பது இயலாததாகும்.
8குழந்தைகளின்
பால் பற்கள் ஏன் விழுந்து விடுகின்றன?
வளர்ந்து வரும் தாடை எலும்புகளில்
(jaw bones)
32 பற்களுக்கும் இடமளிக்கும் பொருட்டு பால் பற்கள்
விழ வேண்டியது கட்டாயமாகிறது. பின்னர் தோன்றப் போகும்
இப்பற்கள் அளவில் பெரிதானவை; பல ஆண்டுகளுக்கு
உறுதியாக நிலைத்திருக்கப் போகின்றவை. குழந்தை பிறந்த
ஆறேழு மாதங்களில் சுமார் 20 பால் பற்கள் முளைக்கத்
துவங்குகின்றன; இவையனைத்தும் அதற்கு இரண்டரை அல்லது
மூன்றாண்டுகள் நிரம்பும்போது முழுமையாக வளர்ந்து
விடுகின்றன. குழந்தை வளர வளர அதன் தாடை எலும்பும்
பெரிதாக வளர்கிறது. அப்போதுதான் பின்னர்
தோன்றப்போகும், அளவில் பெரிய, நிலையான பற்களுக்கு
இடமளிக்க இயலும். பால் பற்கள் தோன்றும்போதே, நிலையான
பற்களும் முளைக்கத் துவங்குகின்றன என்பதுதான் உண்மை.
இப் பற்கள் வளர்கையில், பால் பற்களின் வேரைத்
துண்டித்து விடுகின்றன. இதனாலேயே பால் பற்கள் விழ
வேண்டியதாகிறது. முதலாவது கடைவாய்ப் பல் முளைக்கத்
துவங்கும் போது குழந்தையின் பால் பல்
விழத்துவங்குகிறது; இந்நிகழ்ச்சி குழந்தையின் ஆறாவது
வயதில் நடைபெறுகிறதெனலாம்.
8பதியம்
செய்யப்பெற்ற உறுப்புகளை
(transplanted organs)
உடல் ஏற்க மறுப்பது ஏன்?
தனிப்பட்ட ஒவ்வொருவரின் உடலிலும் சில சிறப்புப்
புரோட்டின் மூலக்கூறுகள்
(molecules) உள்ளன. இவையே பதியம்
செய்யப்பெற்ற சிறுநீரகம் போன்ற உறுப்புகள்
நிராகரிக்கப் படுவதற்குக் காரணமாக அமைகின்றன.
எதிர்ப்புப் பொருள்கள்
(anti-bodies) என அழைக்கப்பெறும் மேற்கூறிய
மூலக்கூறுகள், அயல் உறுப்புகளை அவற்றிலுள்ள
எதிர்ப்புத் தூண்டிகள்
(antigens) வாயிலாக எளிதில் இனம் கண்டு
கொள்ளுகின்றன. நோயாளி ஒருவருக்குப் பதியம்
செய்யப்படவேண்டிய உறுப்பு மற்றொருவர் உடலில் இருந்து
பெறப்படுவதாகும். இவ்வாறு பெறப்படும் உறுப்பில் உள்ள
எதிர்ப்புத் தூண்டிகள் நோயாளியின் உடலில்
இருப்பதில்லை. எனவே நோயாளிக்கு உறுப்பு பதியம்
செய்யப்பட்டவுடன், அவரது உடலில் எதிர்ப்புப்
பொருள்கள் தோன்றுகின்றன; அவை பதியம் செய்யப்பட்ட
உறுப்பிலுள்ள எதிர்ப்புத் தூண்டிகளை எதிர்த்துப்
போரிடத் துவங்கும். இதனால் கொடையாகப் பெறப்பட்ட
உறுப்பு அழிக்கப்படுகிறது அல்லது
நிராகரிக்கப்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு
நெருங்கிய உறவினர்களிடமிருந்து உறுப்புகளைப் பெற்றுப்
பதியம் செய்தல், அல்லது மாற்றுக் குருதியை
விரவிக்கும் (blood
transfusion) போது கடைபிடிக்கப்பெறும் திசு
ஒத்திசைவு (tissue matching)
முறையைக் கையாளுதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும்
பதியம் செய்யப்பெற்ற பிறகு தகுந்த மருந்துகளை
நோயாளிக்கு அளிப்பதன் வாயிலாகவும் உறுப்புகள்
நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
(இத்துடன்
இந்த அறிவியல் கேள்வி-பதில் தொடர் முடிவடைகிறது.
ஆதரவளித்த வாசக நெஞ்சங்களுக்கு நன்றி!!)