நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள்
நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத்
தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே
பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.
நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3
வகையில் அடக்கி விடலாம். ஒன்று, எந்தக் கிரகம் தோஷத்தைத்
தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.
இரண்டு, குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று
பூசித்து வருவது. மூன்று, தானம் வழங்குவது (பூமி தானம், கோ
தானம், அன்னதானம் முதலியவை).
1. தேவதைகளுக்கு யாகங்கள்
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை
வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே.
இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய்
நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும்
பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ,
அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்)
பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.
லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில்
நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்)
செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது
புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர்,
சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்)
தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை
அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா?
யோசித்துப்பாருங்கள்!
செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத்
தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம்,
காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி,
ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன்,
8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம்,
12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம்,
இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட
வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன்
அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து
விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச்
சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத்
தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.
2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது
மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள்,
பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார
ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம்
ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே
சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது
என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும்
அது எப்படி சார்ஜ் ஆகும்?
3. தானம் வழங்குதல்
நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின்
அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும்.
எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம்
செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும்.
ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய்,
பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள
நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். அதே சமயம்
கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக்
கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம்
குறையும்.
உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது
விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்!
இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்)
மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய
கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து
விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா?
என்று யோசியுங்கள்! விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும்
போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு
விடுமல்லவா?
சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்
சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள்
எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த
கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு
மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக்
கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள்
அமைந்துள்ளன. இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று
வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன
செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப்
பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம்,
சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம்
ஆகிவிடுகிறது. நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து
விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ,
பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.
பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்)
நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ
முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து
முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான
விளைவுகள் தான் ஏற்படும். நான் இந்தக் கட்டுரையில்
விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய
பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது
என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம்
வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும்,
வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து
நிற்கும்.
ஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய
முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம்
அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால்
நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள்
அறிவீர்களா? இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம்
கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து
"நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப்
பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும்
சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி
மருத்துவத்திற்கு அடிப்படை. அந்த மூலிகைகளைப்போலவே
நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால்
எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில்
நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இனி
கிரகங்கள் பேசட்டும்.
(தொடரும்)