''சிங்காரச்
சென்னை" - இந்தியாவின் நான்காவது 'மெட்ரோ' மாநகரம்.
''பீக் ஹவர்ஸ்" என்று சொல்லப்படுகின்ற உச்ச நேரங்கள் தினமும்
(காலையும் மாலையும்) சென்னை மாநகர வாசிகளுக்கு தலைவலி
நேரங்கள்தான்.
அலுவலகம் செல்லும் ஊழியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள்,
பள்ளிக் குழந்தைகள் என கூட்டம் அலைமோதும் பேருந்துகளையும்,
மின்சார தொடர் வண்டிகளையும் இந்த உச்ச நேரங்களில்
பார்க்கும்போது, மும்பை மாநகரில் பிரயாணிப்பது போல் ஒரு
இறுக்கமான உணர்வு ஏற்படுகிறது. படாதபாடு பட்டு
பேருந்துகளிலும், மின்தொடர் வண்டிகளிலும் கூட்டத்தை சமாளித்து,
இடிபாடுகளில் நசுங்கி பயணம் செய்யும் மக்கள் ஒருபுறம் இருக்க,
இந்த உச்ச நேரங்களில் வண்டியைத் தவறவிட்டு உரிய இடத்திற்கு
நேரத்திற்குள் போய் சேர ஆட்டோவில் பயணிக்கும் மக்களின்
எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் சென்னை மாநகரில் மீட்டர் போட்டு ஓடிய ஆட்டோக்கள்
பயணிகளிடமிருந்து நியாயமான தொகையை வசூலித்தார்கள் என்பது
முற்றிலும் உண்மையென்று சொல்லிவிடமுடியாது. ஆனால்
பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் நியாயமான தொகையைத்தான்
பயணிகளிடம் வசூலித்தார்கள். ஒருசிலர் ''மீட்டருக்கு மேலே
போட்டுக்கொடு சார்", என்று பயணிகளிடம் நச்சரித்து வாங்கும்
நடைமுறைகளும் இருந்தன. அதிலும் வெளியூர்காரர்கள்
அகப்பட்டுக்கொண்டால் போதும்., தீபாவளி பார்த்துவிட்டுத்தான்
விடுவார்கள்.
இன்று ஆட்டோக்களில் மீட்டரே கிடையாது., 35 ரூபாய், 50 ரூபாய்
என்று ஆட்டோக்காரர்களால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான். எந்த
முறையில், எதைத் தழுவி கட்டணத்தை நிர்ணயித்தார்கள் என்பது
இன்று வரை வெளிச்சத்துக்கு வரவில்லை. யாரும் தெரிந்து
கொள்ளவும் முன்வரவில்லை. வேலை அவசரத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள்
கேட்கும் தொகையை சிறிதும் குறையாமல் கொடுத்துவிட்டு
செல்பவர்களே அதிகம்.
சென்னையைப் போல் ஆட்டோக்கள் அதிகம் ஓடும் நகரம் மும்பை.
இந்தியாவின் இரண்டாவது 'மெட்ரோ' மும்பை மற்றும் சென்னையின்
ஆட்டோ கட்டணங்களை ஒப்பிட்டுபார்க்க வேண்டியதும் அவசியம்.
உதாரணத்திற்கு...
'காந்திவளி'யும்' 'போரிவளி'யும்' மும்பையின் மிக முக்கியமான
பகுதிகள். இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே உள்ள தூரம் சுமார்
5 கி.மீ. அங்குள்ள ஆட்டோக்கள் மீட்டர் போடுவதால் இந்த
தூரத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணம் சுமார் 25 ரூபாய் முதல்
30 ரூபாய் வரை. (மீட்டர் அளவின்படி).
சென்னையில் மிக பரபரப்பான அதேசமயம் பெரும்பாலான வெளியூர்
பேருந்துகள், குறிப்பாக சொகுசுப் பேருந்துகள் வந்து செல்லும்
இடம் வடபழநி. இந்த நிறுத்தத்திலிருந்து மஹாலிங்கபுரத்திற்கு
இடையே உள்ள தூரம் சுமார் அதே 5 கி.மீ.(ஆற்காடு சாலை வழியே
செல்லும்போது). வடபழநியிலிருந்து எந்த ஆட்டோவில் ஏறினாலும்
இதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 50 ரூபாய். இந்த 50 ரூபாயை
குறைப்பதற்காக அரைமணி நேரம் ஆட்டோ ஓட்டுனர்களிடம் பேரம்
பேசுபவர்களை தினமும் பார்க்கமுடியும். 60 ரூபாய் என்று
முதலில் சொல்லி, அதன்பிறகு 'பெட்ரோல் விலை ஏறிவிட்டது', என்று
பயணிகளிடம் வாதாடி, அவர்களை காக்க வைத்து பிறகு 50
ரூபாய்க்குக் கொண்டு விடுகிறார்கள். இதிலும் சூட்கேஸ்கள்,
இரண்டு மூன்று பைகள் சகிதமாக வெளியூரிலிருந்து இறங்கிவிட்டால்
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொண்டாட்டம்தான். வெளிமாநிலத்தில்
இருந்து வரும் பயணிகள் இதனால் வெறுப்படைவதையும், ஒட்டுமொத்த
சென்னையின் மேல் அவர்களுக்கு ஏற்படும் அதிருப்தி பல கெட்ட
பதிவுகளை ஆட்டோக்கள் மீதும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீதும்
உண்டாக்குகிறது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.
மேற்கண்ட உதாரணத்திலிருந்து பார்க்கும்போது ஒரே அளவுடைய
தூரத்திற்கு மும்பையைக் காட்டிலும் சென்னையில் ஆட்டோ கட்டணம்
20 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல்
விலையேற்றத்தைக் காரணம் காட்டி ஆட்டோ ஓட்டுனர்கள் சமாதானம்
சொல்வது ஏற்கத்தக்கதல்ல. 20 ரூபாய் அதிகமாக வசூலிக்கும்
அளவுக்கு பெட்ரோல் விலை ஏறவில்லை என்பது அனைவருக்கும்
தெரிந்ததே. அதே சமயம் மும்பைக்கும் சென்னைக்கும் பெட்ரோல்
விலையில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒரு ரூபாய், 75
பைசா அல்லது 50 பைசாக்களில் வேறுபடலாம். அவ்வளவுதான். இதற்கு
20 ரூபாய் அதிகமாக கட்டணம் வாங்குவது சரியா?
சென்னை மாநகரில் குறிப்பாக இந்த பீக் ஹவர்ஸில் பேருந்துகள்
மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில்லை. நடுத்தர மக்களின்
வசதிக்காக மீண்டும் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் நடைமுறையை
அரசு அமல்படுத்த வேண்டும். அதே சமயம் நியாயமான ஆட்டோ கட்டணம்
மீட்டரின் வழியே உறுதி செய்யப்பட வேண்டும். மீட்டர் போடாமல்
அல்லது மீட்டரே இல்லாமல் ஓட்டுபவர்களின் உரிமம் ரத்து
செய்யப்பட வேண்டும்.
மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு அதற்கு சூடு வைத்து, கட்டணத்தை
ஏற்றும் ஓட்டுனர்களும் இருக்கவே செய்கின்றனர். இதைத்
தவிர்க்கும் பொருட்டு மாதம் ஒருமுறை மீட்டர் உரிய அரசு
போக்குவரத்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இவைகள் அனைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டால்தான் நியாயமான
கட்டணத்தில் நிறைவான ஆட்டோ பயணத்தை மக்களால்
அனுபவிக்கமுடியும். ஆட்டோ ஓட்டுனர்களின் கொட்டமும் அடங்கும்.
ஒரு நகரத்தின் அழகு என்பது கட்டிடங்களின் கம்பீரமோ,
கடற்கரையின் நீளமோ, சாலைகளின் அகலமோ அல்ல. மக்களின்
நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையே. அந்த
மகிழ்ச்சியும், நிம்மதியும் ஆட்டோ ஓட்டுனர்களின் அதிக கட்டண
வசூலிப்பால் (பகல் கொள்ளை) சூறையாடப்படாமல் தடுக்கவேண்டும்.
பிறகு நாம் ''சிங்காரச் சென்னை" என்று தைரியமாக தலைநிமிர்ந்து
தம்பட்டம் அடித்துக்கொள்ளலாம்.
*******