மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்
போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்தியாவிற்கு
ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மருந்தாக அமைந்தது 20 ஓவர்கள்
கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்தியாவின் எழுச்சி.
அதிலும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்திய
ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நம்மவர்கள் எப்போதுமே
சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டியதை விளையாட்டாகவும்,
விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியதை சீரியசாகவும்
எடுத்துக்கொள்வார்கள். இந்தியாவிற்கும் பாகிஸ்தனுக்கும்
காஷ்மீரில் நடக்கும் பனிப்போரைப்பற்றி நாம் கவலைப்படாமல்
விளையாட்டாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் கிரிக்கெட்
விளையாட்டையோ பரம எதிரி பாகிஸ்தான் என்ற அடைமொழி கொடுத்து
சீரியசாக எடுத்துக்கொள்கிறோம்.
ஆரம்பத்தில் ஐந்து நாள் டெஸ்ட் பந்தயங்களில் நாள் முழுதும்
மாங்கு மாங்கு என்று விளையாடி 90 ஓவர்களில் 200 ரன்கள்
எடுப்பதற்குத் திக்கு முக்காடி ஐந்து நாள் கடைசியில் ஆட்டம்
வெற்றி தோல்வியில்லாமல் முடிய இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு போர்
அடிக்க அரம்பித்து விட்டது. பின்னர் உருவான 60 ஓவர் ஒரு நாள்
பந்தயங்கள் பலத்த வரவேற்புப் பெற அறுபது ஓவர் ஐம்பது
ஓவர்களாகின. ஒரே நாளில் பந்தயம் முடிந்துவிடும்; விளையாட்டு
வீரர்களின் அதிரடி ஆட்டத்தைக் காண முடியும். கிரிக்கெட்
வாரியத்திற்கும் ஸ்பான்சர்கள் தயவால் பணம் கொட்டோ கொட்டென்று
கொட்டியது.
இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகில் ஐம்பது ஓவர்களும் அதிகம் என்ற நிலை
ஏற்பட உதித்ததுதான் 20 ஓவர்கள் பந்தயம். கழுதை தேய்ந்து
கட்டெறும்பானது போல. கட்டெறும்பானாலும் சுள்ளென்றிருக்கிறது
இந்த ஆட்டம். கால் பந்து, ஹாக்கி விளையாட்டுக்களைப் போல
இதையும் குறைந்த நேரத்தில் விறுவிறுப்பான விளையாட்டாக ஆக்கும்
முயற்சிதான் இது. பந்தயம் ஆரம்பித்துவிட்டது என்று
சொல்வதற்குள் பத்து ஓவர்கள் வீசப்பட்டு விடுகின்றன, அவ்வளவு
வேகம். இந்தத் திருவிழா நடந்த இரண்டு வாரங்களில் சிக்சர்
மழைதான், 200க்கும் மேல் சிக்சர்கள். யுவராஜ் ஆறு பந்துகளில்
ஆறு சிக்சர் அடித்து சும்மா அதிர வைத்துவிட்டார் மைதானத்தை.
20 - 20 ஓவர் பந்தயத்தில் முப்பதைத் தாண்டிய பெரிசுகளுக்கு
இடமில்லை. உலக சாம்பியன்களான ஆஸ்திரேலியா கூட
இளம்புயல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வெளியேற நேர்ந்தது.
யாரும் எதிர்பார்க்காத அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும்
இறுதிப் பந்தயத்திற்குத் தகுதி பெற்றன. கடைசி ஓவரில் எந்த
அணியும் வெற்றி பெறலாம் என்ற நிலையில் பாகிஸ்தான் அணியின்
மிஸ்பா கெந்தி அடித்த பந்தை ஸ்ரீசாந்த் பிடிக்க இந்தியா
வெற்றி வாசலைத் தொட்டது. அந்த நேரம் இந்திய கிரிக்கெட்
வரலாற்றில் மறக்க முடியாதது. வெற்றிக் களிப்பில் இந்திய
வீரர்கள் ஓடி வந்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ள,
ஸ்டம்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு களியாட்டம் போட, அங்கு
மைதானத்தில் மிஸ்பா மட்டையைக் கையில் வைத்துக்கொண்டு சோகமாக
உட்கார்ந்திருந்தது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. 1983ம்
ஆண்டிற்குப் பிறகு உலக அரங்கில் இந்தியாவிற்கு கிரிக்கெட்
போட்டியில் கிடைத்த மகத்தான வெற்றி இது. உலகக்கோப்பைப்
போட்டியின் போது பெற்ற அவமானத்தை இது மறக்க வைத்து விட்டது.
அன்று தோல்வியின் போது தோனியின் வீட்டில் கல்லெறிந்த
ரசிகர்கர்கள் இன்று அவரை வானளாவப் பாராட்டுகிறார்கள். அன்றைய
நிலையில் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே தீண்டப்படாத
ஜந்துக்களாக வெறுப்பை உமிழ்ந்த நமது இந்திய ரசிகர்கள் இன்று
அப்படித் துள்ளிக் குதிக்கிறார்கள்; வீரர்களை ஏதோ வானத்தில்
குத்திதவர்களைப் போலக் கொண்டாடுகிறார்கள் விளையாட்டில்
வெற்றியும் தோல்வியும் சகஜமப்பா என்று உணரும் மனப்பக்குவம்
எப்போது நமக்கு வரும்?
நமது கிரிக்கெட் அணிக்கு உலக கிரிக்கெட் சங்கம் சார்பாக, நமது
இந்திய கிரிக்கெட் சங்கம் சார்பாக என்று கோடிக் கணக்கில் பணம்
குவிகிறது. ஒவ்வொருவருக்கும் பல லட்சங்கள் கிடைக்குமாம்.
அதைத்தவிர ஸ்பான்ஸர்கள், அந்தந்த மாநில அரசுகள் என்று வாரி
வழங்கும் பரிசுகள் வேறு. பிரதம மந்திரி, ஜனாதிபதி என்று
பலரும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். அத்தனை
பிடுங்கல்களுக்கிடையேயும் பிரதமர் மாட்ச் முழுதும் பார்த்து
ரசித்தாராம்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில் கிரிக்கெட்
மட்டும்தான் விளையாட்டா? மற்ற ஹாக்கி, கால் பந்து, டென்னிஸ்
போன்ற விளையாட்டுக்களுக்கு நாமும் இந்த அரசும் எந்த அளவுக்கு
ஆதரவு கொடுக்கிறோம்? ஒலிம்பிக்சில் இந்தியா ஒரு பதக்கமாவது
பெற எத்தனை பேரை நாம் ஊக்குவித்திருக்கறோம்? மாநில தேசிய
ஆசிய அளவில் வெற்றி பெற்றவர்களுக்குப் பண உதவி
செய்திருக்கிறோம்? இந்தக் கேள்விகள் மனதைக் கொஞ்சம்
நெருடத்தான் செய்கின்றன..
*******