இந்தியாவில்
நாமெல்லாம் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டிய விஷயம், இங்குதான்
favouritsm, nepotism
எல்லாம் இருக்கிறது என்று அங்கலாய்த்துக்
கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல சேதி, உலக வங்கித் தலைவர்
பால்வுல்ஃப் ஓவிட்ஸ் என்று பெயர், அவர் என்ன செய்திருக்கிறார்
தெரியுமோ? தன் சினேகிதிக்கு வருஷம் 20 லட்சம் டாலர்
சம்பளத்தில், வைஸ் ப்ரெசிடெண்ட் வரை உத்தரவாத பிரமோஷன்,
மற்றும் பல சலுகைகளுடன் வேலை போட்டுக் கொடுத்து விட்டார்.
விஷயம் இப்போது அமளி துமளிப்படுகிறது. உலக வங்கியின்
குறிக்கோள் என்ன? வறுமையை எதிர்த்துப் போராடுவதுதானே?
ஒருத்தர் ஒருத்தர் வறுமையாகத்தானே கவனித்துக் கொண்டு வர
முடியும்?
***
மனுஷனுக்கு (மனுஷிக்கும் கூட) எப்படி எல்லாம் கஷ்டங்கள் வரும்
என்று சொல்வதற்கில்லை. இப்போ, சென்னை அடையாரில் பாருங்கள்,
ஒரு தனியார் காய்கனி அங்காடியில், ஆறு கிலோ எடையுள்ள
பூசணிக்காய் மேல் தட்டிலிருந்து ஒரு பெண்மணியின் தலையில்
விழுந்து அவர் இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சின்னக்
குழந்தையாக இருந்தால், உடனடி சமாதி என்கிறார்கள். முதலாளி
என்ன சொல்கிறார்? "இது ஒரு சின்ன விஷயம். இதற்குப் போய்
இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறீர்களே?" நல்ல வேளை, இது
சோற்றுக்குள் மறைக்க முடியாத பெரிய பூசணிக்காய்.
இல்லாவிட்டால் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று
சாதித்தாலும் சாதித்திருப்பார்!
***
ஜார்கண்ட்
முதலமைச்சர் கோடாவின் மனைவி கீதா ப்ரூலி அவரை விட்டுப்
பிரிந்தே இருந்தாராம். இப்போது கோடா முதலமைச்சரான பிறகு
அவர்கள் இணைந்துவிட்டார்கள். இதற்காகப் பெரிய விருந்தே
ஏற்பாடு செய்தாராம் முதல்வர் கோடா. "என் பெண்டாட்டி ஊருக்குப்
போயிட்டா" என்று சந்தோஷப்படுபவர்களுக்கிடையே இப்படியும்
ஒருவர்.
***
தர்மபுரி அருகே உள்ள கிராமத்தில் வாழ்கிறார் பெருமாயி.
இவருக்கு இப்போது வயது 110. அவரது குடும்பம் மகன், மகள்,
பேத்தி, பேரன் எனப் பெருகி 281 பேர்களாகியுள்ளது. இவருக்குக்
குடும்ப விழா ஒன்று எடுத்துள்ளார்கள். 281 பேர்களுக்கும்
அழைப்பு, கிராமமே திருவிழாக் கோலம். இவர் இது வரை
நோய்வாய்ப்பட்டதில்லையாம். தனது வேலைகளை இன்றும் செய்து
கொள்கிறார். இவரது ஆயுளின் ரகசியம், ராகி கூழ், ராகி களிதான்
இவரது உணவாம். உணவுக்கேற்ற உழைப்பு இருந்தால் பல ஆண்டுகள்
வாழலாம் என்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் காளத்தி மடம் என்னும் குக்கிராமத்தில்
வாழ்கிறார் ஞானவடிவு என்னும் 100 வயதைத் தாண்டிய பாட்டி
உயிர்ப்போடும் உற்சாகத்தோடும். இன்னும் காலையில் கையில்
அரிவாளோடு சென்று சுள்ளி பொறுக்கி வருகிறார். காலையில் தோசை
சுட்டு வியாபரம் செய்கிறார். வெளியூரிலிருந்து அவரது மக்கள்
பேரப் பிள்ளைகள் வரும்போது அவர்களை எந்த வேலையும் செய்ய
விடாமல் விருந்து படைக்கிறார். உழைப்பில், சுயமரியாதையில்
நம்பிக்கை வைத்திருக்கும் இவர் இன்னும் மருத்துவமனைப்
படிகளைப் பார்த்ததில்லை.
உள்ளம் மட்டும் மகிழ்ச்சியா இருந்தா வயசென்ன வயசு? எப்பவுமே
நீங்க இளசு!
***
ஹவுரா ரயில்வே
மருத்துவமனையில் ஐந்து வயதில் ஒரு சிறுகட்டிக்காக
அனுமதிக்கப்பட்ட பானுமதி என்ற சிறுமி 39 வருடங்களாக இன்னும்
குணமாகாமல் மருத்துவமனையிலேயே தனது வாழ்நாள் முழுதும்
செலவிட்டிருக்கிறார். தனது மகள் சரியாகக் குணமடையாமல்
ஆஸ்பத்திரியை விட்டுப் போக மாட்டேன் என்கிறார் அவரது தாயார்.
டிவிஷனல் மேனேஜரிடம் கேட்டபோது 'இது பற்றித் தனக்கு ஏதும்
தகவல் இல்லை' என்று சொல்கிறாரம்.
***
அமெரிக்காவில்
வாழும் தம்பதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் வீடியோ
கான்ஃபரன்சிங் மூலம் விவாகரத்து வழங்கி, இ-மெயில் மூலம்
தீர்ப்பு நகலையும் அனுப்பி வைத்தது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த மோகன். அவரது மனைவி
சாந்தி. இருவரும் அமெரிக்காவில் வேறு வேறு நிறுவனங்களில்
சாஃப்ட்வேர் என்ஜீனியர்களாக உள்ளனர். திருமணத்திற்குப்
பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக
வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்துக் கோரி
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த வழக்கை
நீதிபதி தேவதாஸ் விசாரித்தார். சில முறை இருவரும் விசாரணைக்கு
நேரில் வந்தனர் இந்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு
வந்தபோது அமெரிக்காவில் இருந்ததால் இருவரும் நேரில் ஆஜராக
முடியவில்லை, எனவே வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடத்த
வேண்டும் என அவர்களது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்றார் நீதிபதி தேவதாஸ். வீடியோ கான்பரன்சிங் மூலம்
விவாக ரத்து வழங்கப்பட்டது. விவாகங்கள் மட்டுமல்ல விவாக
ரத்துக்கள் கூட கம்ப்யூட்டர் மூலம் நிச்சயிக்கபடுகின்றன.
*******