அறுபது வயதானாலே
ஏதோ வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது போல சோர்ந்து
போகும் பலருக்கிடையே இந்த 106 வயது வாலிபர் ஏழைகளுக்கு இலவச
சிகிச்சை அளித்து வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்துகிறார்.
ஹகீம் சையது முகமது பத்மபூஷன் விருது பெற்றவர். சுதந்திரப்
போராட்டங்களில் கலந்து கொண்டவர். யுனானி மருத்துவப்
படிப்புக்களை முடித்த ஹகீம் 1936ல் கல்கத்தாவிற்கு வந்தார்.
அங்கேயே வாழ்ந்து ஏழைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
தனது 106வது வயதில் இந்த சேவைக்காக பத்ம பூஷன் விருது
பெற்றிருக்கும் இவர் இன்னும் தன் பணியைத் தொடர்கிறார். இந்த
இளைஞரின் தொண்டு தொடரட்டும்.
****
உலகின் பல
பகுதிகளிலும் ஊனமுற்றவர்களுக்கென்று பல வசதிகள் செய்து
தரப்படும் வேளையில்நம் இந்தியாவில் போக்குவரத்து சாதனங்கள்
கூட அவர்களுக்கேற்றவாறு வடிவமைக்கப்படுவதில்லை. இந்த நிலையில்
செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் இல்லாத மாணவர்களுக்காக
சிறப்புப் பட்டப் படிப்பு வகுப்புக்கள் சென்னை மாநிலக்
கல்லூரியில் துவக்கப்பட்டிருப்பதும் அதற்காக சிறப்பாகப்
பேராசிரியர்கள் பதவிக்கு அமர்த்தப்பட்டிருப்பதும்
மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஊனமுற்றவர்களையும் சமுதாயத்தில் ஒரு
அங்கமாக்கி அங்கீகாரம் கொடுக்க வேண்டிய சாதாரணக் கடமையைக்
காலம் தாழ்த்தியாவது செய்துள்ள அரசுக்குப் பாராட்டுக்கள்.
****
நமக்கு ஒரு
மகிழ்ச்சியூட்டும் ஒரு செய்தி உலகப் புராதனச் சின்னங்களில்
முகலாய மன்னர் ஷாஜஹனால் கட்டப்பட்ட செங்கோட்டையும்
சேர்ந்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து போட்டியிட்ட 45
சின்னங்களில் நமது செங்கோட்டை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, ஒரிஸ்ஸாவில் உள்ள சூரியனார்
கோவில் என்று இந்தியாவின் 26 புராதனச் சின்னங்கள் இந்தப்
பட்டியலில் இருக்கின்றன.
****
3000 கோடி
ரூபாய் அளவுக்குப் போலி முத்திரைத்தாள் தயாரித்து
அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாற்றிய வழக்கில் இப்ராஹிம்
தெல்கிக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய்
அபராதமும் விதிக்கப்பட்டிருக்கின்றன. நான்காண்டுகாளாகச்
சிறையிலிருந்து குற்றத்தை ஒப்புக் கொள்ளாத மனிதர் திடீரென
மனம் திருந்திக் கோர்ட்டில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டது
விந்தை. தான் எய்ட்ஸ் நோயால் அவதிப்படுவதாகவும், தனக்குப்
பொது மன்னிப்பு வேண்டும் என்றும் கேட்டாராம். பொதுமக்களை
ஏமாற்றிப் பணத்தைக் கொள்ளை அடிப்பவர்களுக்கு மன்னிப்புக்
கொடுப்பதுதான் பொது மன்னிப்பு என்று நினைக்கிறார்
போலிருக்கிறது. நீதிபதி தீர்ப்பு வழங்கும்போது 100 கோடி
அபராதம் செலுத்தாவிட்டால் இன்னும் மூன்று வருடம் ஜெயில்
தண்டனை அனுபவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார் அவரது
சொத்தை முழுதும் பறிமுதல் செய்ய வேண்டுமென்று தீர்ப்பளிக்க
வேண்டாமோ?
****
மக்கள்
தொகையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று அரசு முழு மூச்சாக
ஈடுபடும் நேரத்தில் மேகாலயாவில் வசிக்கும் பழங்குடி
இனத்தவரிடையே அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் போட்டி
நிலவுகிறது. 17 குழந்தைகளைப் பெற்ற ஒரு பெண்ணுக்கு 16 ஆயிரம்
ரூபாய் பரிசளிக்கப்பட்டதாம். அந்த இனம் அழிந்து வருவதால்
அதைத் தடுக்கவே இந்த மாதிரி முயற்சியாம்.
****
பேராசிரியர்
டி.கே. துரைஸ்வாமி என்ற நகுலன் அண்மையில் காலமானார். சிறந்த
கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மற்றும் நாவலாசிரியர். பெரிதும்
பேசப்படும் அவரது கவிதைகளில் ஒன்று ராமச்சந்திரன் கவிதை.
கவிதை இதுதான்:
நீ ராமச்சந்திரனா என்று கேட்டேன்.
ஆம், ராமச்சந்திரன்தான் என்று சொன்னான்.
எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை.
அவனும் சொல்லவில்லை.”
அப்படிப் பெரிதாய்ப் பேசப்பட இதில் என்ன இருக்கிறது என்று
புரியவில்லை.
அண்மையில் சந்தித்த எழுத்தாளர் பிரபஞ்சனிடம் பாமரத்தனமாகவே
இது பற்றிப் பிரஸ்தாபித்தோம். அவர் பொறுமையுடன் விளக்கினார்.
நாம் நம் மனத்துக்குள் மனிதர்களைப்பற்றி, விஷயங்களைப் பற்றிப்
பல அனுமானங்களை
(assumptions)
செய்து கொண்டு
விடுகிறோம். அவற்றுக்கு வெளியே சென்று யோசித்துப் பார்க்க
விரும்புவதில்லை. சோதித்துப் பார்க்க பயப்படுகிறோம். இந்தக்
கருத்துதான் கவிதையின் உட்கிடையான பொருள்.
ஆமாம், சரிதான். கவிதைகளை, அதுவும் புதுக்கவிதைகளைப்
படிக்கும் போது, கொஞ்சம் தட்டி, கொஞ்சம் உரசிப் பார்க்க
வேண்டும் என்று புரிந்து கொண்டோம்.
நன்றி, பிரபஞ்சன் சார்!
*******