இந்த வாரம் எம்மைக் கவர்ந்த விளம்பரம்
இட்லி குமார், வடகறி வெங்கடேஷ், பொடிமாஸ் பாண்டி வரவேற்கும் 'தட்டுக்கடை'க்கு வருக என்று விளம்பரப்
படுத்தியிருக்கிறார்கள் தாஜ் கன்னிமாரா ஹோட்டல். பூப் போட்ட லுங்கியுடன், ஸ்டாண்ட் போட்ட சைக்கிளில் நின்றபடி சாப்பிடலாமாம்.
'அந்த' பாஷை மட்டும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படுகிறது!
ஒரு வித்தியாசமான நீதிபதி
ஜார்கண்ட் மாநில ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதி கற்பக வினாயகம் அதிரடி உத்தரவுகளுக்குப் பெயர் போனவர். அவருக்கு ஒரு
கடிதம் வந்தத. ஓர் அபலைப் பெண்னிடமிருந்து. கருப்புக் கண்ணாடி போட்ட காருக்குள் என்னைக் கற்பழித்து விட்டார்கள் என்று.
அதையே ஒரு மனுவாக ஏற்றுக் கொண்டு அவர் உடனடியாக ஓர் உத்தரவு பிறப்பித்து விட்டார், கார்களில் கருப்புக் கண்ணாடி
போடுவதைத் தடை செய்து!
இவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் பணியாற்றியபோது ஒரு எம்.எல்.ஏ. மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு
வந்தது. இவர் வழங்கிய தண்டனை:
'காந்திய நூல்களை வாங்கி ரசீது காட்ட வேண்டும். அவற்றைப் படிக்க வேண்டும். தினசரி, ஒரு
மாதத்துக்கு, மதுரை காந்தி மியூஸியம், அல்லது சென்னை காந்தி கல்வி மையம் சென்று அங்குள்ள லைப்ரரியில் புத்தகங்கள் படிக்க
வேண்டும்!'
உன்னால் முடியும் தம்பி
முடியாது, நடக்காது, நாம என்ன செய்ய முடியும், என்று அழுகுரல் எழுப்பிக் கொண்டிருப்பவர்களுக்கிடையே, வித்தியாசமான இரண்டு
பேர். அகிலாவும் மாலதியும். ஈரோடை அடுத்த காரைப்பாளயத்தில் ஈராசிரியர் பள்ளியில் 2004ல் பொறுப்பேற்றுக் கொண்டபோது,
அவர்கள் பார்த்தது, மண்டிக் கிடந்த புதர்கள், பாம்புகள் நடமாட்டம், திறந்த வெளிக் கழிப்பிடம். இப்போது அந்தப் பள்ளி நந்தவனமாக
அனைத்துப் பள்ளிகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இடமும் பிள்ளைகளும் அத்தனை சுத்தம். ஊரார் இவர்களை உச்சி மேல்
தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் வியப்பில்லை. கலெக்டர் உதய சந்திரன், (ஆமாம், இலக்கியவாதி, பாப்பாபட்டி, கீரிப்பட்டி புகழ்
உதயசந்திரன்தான்.) கல்வி கற்பதற்கு இதை விட உகந்த இடம் வேறு இருக்க முடியாது என்று புகழ்ந்த வினாடியே இவர்கள் சந்தோஷம்
'ஓங்கி வளர்ந்த' தருணம்.
ஒரு இந்தியக் கனவு
இந்திய சுதந்திரத்தின் வைர விழா கொண்டாடும் இந்தத் தருணத்தில் எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் மஹாஸ்வேதா தேவி
இந்தியாவைப் பற்றிக் காணும் கனவைப் பார்ப்போம்.
நான் கனவு காணும் இந்தியாவில்
'பிற்படுத்தப்பட்ட' என்ற வார்த்தையே இருக்காது. அது மூன்றாவது உலக நாடல்ல. முதல் உலக நாடு.
அதுவும் தவறு. ஒரே உலகம்தான்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி,
வெளிச்சத்தில் பெண்கள்,
சாமான்யனுக்கும் சம நீதி,
விவசாயிகள் உயிர் பிழைப்பு,
ஏழைகளுக்கு வீடு, அனைவருக்கும் நம்பிக்கை,
கடன்கள் இன்மை, வறுமை மறைவு,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புனரமைப்பு மட்டுமல்ல, நேசிக்கப்படுதல்,
பண்பட்ட நிலங்கள், தூய்மையான குடிநீர்,
வன விலங்குகளின் பாதுகாப்பு,
தன்னிறைவும், சுயமரியாதையும்,
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலைக்கு மேல் ஒரு கூறை, தண்ணீர், விளக்கு,
அனைவருக்கும் ஒரே தரமான மருத்துவ வசதி,
மூட நம்பிக்கைகளினின்று விடுதலை,
அனைத்து தேச மொழிகளிலும் புத்தகங்கள்,
அனைவருக்கும் எழுத்தறிவு.
எனக்குத் தெரியும், என்னால் முடியும், நான் சாதிப்பேன், என்று
வறுமையோடு அறிவைக்கொண்டு போராடுவோம்.
துவேஷத்தைத் தர்க்கரீதியாய்ச் சந்திப்போம்.
தீமையைப் பேனா வாளால் சம்ஹரிப்போம்.
(2006ல் இந்தியாவின் பிரதிநிதியாக அவர் கலந்துகொண்டு 2006
Frankfurt Bookfairல் பேசிய உரையிலிருந்து.)
சமையல், சமையல்!
ஹாரி பாட்டர் புத்தகங்கள்தான் விற்பனையில் சக்கைப்போடு போட்டு சாதனைகளை முறியடிக்கிறது என்றால் இன்று அந்தச்
சாதனையையும் உட்பக்கம் பார்க்க வைத்துவிட்டது ஒரு சமையல் குறிப்புப் புத்தகம். ஆசிரியை பிரிட்டனில் வாழும் அஞ்சும் ஆனந்த்.
பிரிட்டன் டி.வி. நிகழ்ச்சிகளில் பிரபலமாம். ஏதோ எழுதி வைப்போம் என்றுதான் இந்தியன் ஃபுட் மேட் ஈசி என்ற புத்தகத்தை இவர்
எழுதினார். ஆனால் இத்தனை வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லையாம். இந்தியாவில் நாம் அன்னபூரணியை
வணங்குவதுபோல பிரிட்டனில் நிகல்லா என்ற பெண் தெய்வத்தை வணங்குகிறார்களாம். இப்போது பிரிட்டனின் நிகில்லா அஞ்சும் ஆனந்த்
தான்.
நல்ல சேதி
பகவத் கீதையில் அர்ஜுனன் பகவான் கிருஷ்ணபரமாத்மாவிடம்,
' நீங்கள் யார்?' என்று கேட்கும்போது எல்லாவற்றிலும்
எல்லாமாக இருப்பேன் என்று சொல்கிறார். அதிலிருந்து அர்ஜுனன் மரம், செடி, மலை, கொடி என்று எல்லாவற்றிலும் இறைவனைக்
காணத் துவங்கினான்.
நாம் கடவுளால் அவரது விருப்பப்படி படைக்கப்பட்டிருந்தாலும் கூட 'நான் எனது, என்று குறுகிய எண்னங்களோடு சின்ன வட்டத்திற்குள்
வாழ்கிறோம். நம் மனசு விரிந்து விரிந்து மலர்களில், கொடிகளில் நாம் கடந்து செல்லும் பாதையிலெல்லாம் பரந்து இருப்பதை
அறிவதில்லை. நாம் பிறப்பு என்ற ஒரு அதிசயத்திலிருந்து இறப்பு என்ற ஒரு அதிசயத்தை அடைகிறோம். இதைப் புரிந்துகொண்டால்,
இறைவன் எங்கும் நிறைந்திருப்பதையும் உலக ஞானத்தையும் பெற்றால் நாம் நம்முடைய ஒவ்வொரு செயலையும் சுதந்திரத்துடன்,
மனசுக்குப் பிடித்த வகையில் செய்ய முடியும். வாழ்வில் வரும் சுகங்களும் துக்கங்களும் வெறும் நிகழ்ச்சிகளாக இருக்கும்
-
Paulo Coelho
*******