இப்படி ஒரு வினோத வழக்கு
"விசாரணை முறையானதல்ல; விசாரித்த நீதிமன்றம் சரியான முறையில்
அமைக்கப் படவில்லை; அரசு வழக்கறிஞர்கள் சட்டத்தை மீறி நடந்து
கொண்டார்கள்; நீதி விசாரணை கண்துடைப்பு. தண்டனையை ரத்து
செய்ய வேண்டும்." என்று ஒரு வழக்கு வந்திருக்கிறது கென்யா
உயர்நீதி மன்றத்தில். இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இந்த
வழக்கு இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட விசாரணை பற்றி. "இயேசுவின்
நண்பர்கள்" என்ற அமைப்பு தொடுத்திருக்கும் இந்த வழக்கு
செல்லத்தக்கதுதான் என்று சட்ட நிபுணர்கள் சொல்லுகிறார்கள்.
ஆனால் கென்யா நீதி மன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிக்கும்
அதிகாரம் இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
உப்பே உவர்ப்பை இழந்தால் அதற்கு யார் உப்பு போடுவது?
இது போன்ற ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறது சென்னை உயர்நீதி
மன்றம். "தனி மனித உரிமையை நிர்வாகம் மீறினால், நீதித் துறை
தலையிட்டு நீதி வழங்க வேண்டும். ஆனால் நீதித் துறையே தனி
மனித உரிமையைப் பறித்தால் யாரிடம் போவார்கள் மக்கள்?" வழக்கு
இதுதான். ஒருவருக்கு, கொலை செய்ய முயன்ற வழக்கில் ஐந்தாண்டு
தண்டனை வழங்கப்பட்டது. அவர் செஷன்ஸ் கோர்ட்டுக்கு அப்பீல்
செய்தார். இடையில் அவரை ஜெயிலுக்கும் அனுப்பி விட்டார்கள்.
வழக்கு முடிவதற்குள் அவர் தண்டனைக் காலம் முடிந்து
விடுதலையும் ஆகி விட்டார். செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பு
வழங்குகிறார், " அப்பீல் தள்ளுபடி. குற்றவாளியை ஜாமீனில் வர
முடியாதபடி கைது செய்து, உடனடியாக ஜெயிலுக்கு அனுப்புங்கள்."
இரு தரப்பு வக்கீல்களும் நீதிபதியிடம் மன்றாடுகிறார்கள், "மை
லார்ட், குற்றவாளி முழுத் தண்டனையையும் அனுபவித்து விட்டு
விடுதலையாகி விட்டார், "ஹ்ம், நீதிபதி காதில் வாங்கிக்
கொண்டால்தானே?, "மூச்! நான் சொன்னால் சொன்னதுதான். மீறிப்
பேசினால் கண்டெம்ப்டில் உள்ளே தள்ளி விடுவேன்."
கைதி மறுமுறை ஜெயிலில். அவர் மனைவி கொடுத்த மனுவின் மீதுதான்
உயர்நீதி மன்றம் மேற்கண்டபடி சொன்னது. செஷன்ஸ் ஜட்ஜ் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி சொல்லி விட்டது உ.நீ.மன்றம்.
கைதிக்கு நஷ்ட ஈடு எதுவும் கிடைக்குமா, தெரியவில்லை.
இருட்டைச் சபிக்காதே, விளக்கை ஏற்று!
பழனியில் ரோப்வே விழுந்து 4 பேர் பலி, ஹைதராபாத்
வெடிகுண்டுகள், பீஹாரில் திருட்டுக்காகப் பிடிபட்டவன்
மிருகத்தனச் சித்திரவதை, இத்தனை கோரச் செய்திகளுக்கும் நடுவே
அகல் விளக்கு ஏற்றியது போல் ஒரு சின்ன நல்ல சேதி.
செந்தில்நாதன் சென்னைப் பொறியியல் கல்லூரியில் படித்துப்
பட்டம் பெற்றவர். படிக்கும்போது, கல்லூரிக் கட்டணம் இதர
செலவுகளுக்காக இரவு வாட்ச்மேன் வேலை பார்த்துச் சம்பாதித்தார்.
இப்போது அமெரிக்காவில் உயர்ந்த வேலையில் இருக்கிறார். செய்தி
படித்தார். திருவில்லிப்புத்தூர் சிவந்திப்பட்டி சின்னச்சாமி
12ம் வகுப்பில் 1090/1200 மார்க் வாங்கி விட்டு பொறியியல்
படிக்கப் பணம் இல்லாமல் படிப்பை நிறுத்தும் நிலை என்று.
நான்காண்டுகளுக்கான கல்லூரிக் கட்டணம், மற்றும் ஹாஸ்டல்
செலவுகள் அத்தனையையும் தாமே ஏற்றுக்கொண்டிருக்கிறார். இப்படி
எத்தனையோ செந்தில்நாதன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்கள் ஏற்றி வைக்கும் சின்னச்சாமி போன்ற அகல் விளக்குகள்
மேலும் மேலும் விளக்குகள் ஏற்றிக் கொண்டுதான் இருக்கப்
போகின்றன. (தனி நபர்களின் தர்மத்தால் என்ன பயன், சமுதாயத்தை
அடியோடு புரட்டுகிற புரட்சிதானே தேவை என்று மேடையில்
முழங்கிக் கொண்டிருக்கிற அறிவு ஜீவிகளும் ஒருபக்கம்
இருப்பார்கள்.)
ஜீன்ஸ் போட்டே, தொலைஞ்சே!
பீஹார் அரசு அதிகாரிகள் டி ஷர்ட் ஜீன்ஸ் சகிதம் ஜில்லுனுதான்
ஆஃபீசுக்கு வருவது வழக்கம். அப்படியே ஹைகோர்ட்டுக்கும் ஒரு
வழக்கு சம்பந்தமாகப் போயிருக்கிறார்கள் ஒரு கலெக்டரும் அவரது
சகாவும். ஆளுக்கு 5000 ரூபாய் அபராதம் தீட்டி விட்டார்
நீதிபதி. 1954ல் போட்ட ஒரு சட்டம் இருக்கிறது பீஹாரில், அரசு
அதிகாரிகள் உடைக் கட்டுப்பாடு குறித்து. அதை இப்போது
தீவிரமாக அமல் படுத்த அரம்பித்து விட்டார்கள். அதன்படி ஆண்கள்
கண்ணை உறுத்தாத வெளிர் நிறச் சட்டையும் பேண்ட்டும்
போட்டுக்கொள்ள வேண்டும். பெண்கள் புடைவை, முழுக்கை ரவிக்கை,
அல்லது சல்வார் கமீஸ், துப்பட்டா அவசியம்.
ஜோக் எழுத்தாளர்களே, ஒன்றுபடுவீர்!
சென்னை மெரினா கடற்கரையை அழகு படுத்தும் முயற்சி தீவிரமாகி
விட்டது. அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டு
விட்டார்கள். ஐஸ்க்ரீம், பேல்பூரி, சுண்டல் விற்பனைக்குக்
கூட அனுமதி கிடையாது. ஜோக் எழுத்தாளர்கள் தங்கள் (காதலன் -
காதலி - சுண்டல்) ஜோக் எழுதும் உரிமை பறி போய் விட்டது
என்பதற்காகக் கண்டன ஊர்வலம் நடத்தப் போவதாக ஆதாரமற்ற
செய்திகள் கூறுகின்றன.
*******