தாஜ்மகால்
காதலிக்காக ஷாஜஹானால் மட்டும்தான் தாஜ்மகால் கட்டமுடியும்
என்பதில்லை. பெங்களூருவைச் சேர்ந்த முனியப்பாவினாலும்
முடியும். என்ன, இந்த தாஜ்மகால் செங்கல்லால்
கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் காதலிலும் பாசத்திலும் அந்த
தாஜ்மகாலைவிட இது ஒசத்திதான். கவுரிதாஜ் என்ற இந்த
தாஜ்மகாலில் கவுரம்மா இறந்த ஜனவரி 14ம் தேதியன்று அன்னதானம்,
பூஜைகள் நடக்கின்றன. தாஜ்மகால் அழகாக அலங்கரிக்கப்படுகிறது.
அடுத்த பிறவியில் இவர் ஷாஜஹானாகப் பிறக்க வேண்டுமென
ஆசைப்படுகிறாராம். அந்தப் பிறவியில் கவுரம்மாதான் மும்தாஜாக
இருப்பார் என நம்புகிறார்.
மறுபக்கம்
அரசியல் தலைவர்களின் மறுபக்கம் சில நேரங்களில் ஒரு ஆனந்த
அதிர்ச்சியைக் கொடுக்கிறது. விஜய் டி.வி.யில் ஜயந்தி நடராஜன்
பேட்டி அவ்வளவு கலகலப்பாக இருந்தது. தன் பள்ளி நாட்களையும்
நாட்டியக் கலைஞர் அனிதா ரத்தினத்துடன் சுடிதாரில் கிரிக்கட்
மாட்ச் சென்று அப்பாவிடம் மாட்டிக்கொண்டதையும் சுவையோடு
விவரித்தார். அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? என்று கேட்டால் 'அதுதான்
தினமும் யோசிக்கிறேன்' என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.
ராஜிவ் காந்தியின் படுகொலைக்கு முன்னால் அவர் சென்னை விமான
நிலையத்திற்கு மனைவி சோனியா காந்தியுடன் வந்தபோது இவர்தான்
அவர்களை வரவேற்றார். ராஜிவ் காந்திக்கு தோசையென்றால்
அப்படியொரு ஆசையாம், ஆனால் மனைவி சோனியாவிடம் பயம் 'உங்களுக்காக
தோசைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்' என்று சொன்னபோது தன்
மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேண்டாம் என்று சொல்லிக்
கண்ணசைத்தாரம்.
தில்லிக்கு ராஜான்னாலும் மனைவி
சொல்லைத் தட்டாதே!
சக்கர இதிலே அக்கற
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வேப்பங்குச்சிகளில் வைத்து
செல்போன்களைச் சார்ஜ் செய்யலாம் என்று செய்தி வந்தது. இப்போது
வாக்மேனை சார்ஜ் செய்ய சர்க்கரையை உபயோகப்படுத்தலாமாம்.
சர்க்கரை வியாதிக்காரர்கள் இதன் மூலம் சர்க்கரையைக் குறைக்க
முடியுமா என்று தெரியவில்லை.
இட்டவி
தற்போதுள்ள உணவுப் பொருட்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் கிடையாது,
சங்ககால இலக்கியத்தில் இட்டலிக்கு இட்டவியென்றும் தோசைக்கு
தோய்வை என்றும் பெயர். டிபனுக்கு சிற்றுணா என்பதுதான் சரியான
தமிழ்ச் சொல்.
- மாஜி துணைவேந்தர் சுந்தரமூர்த்தி
நடமாடும் கம்ப்யூட்டர்
20 வயதான முகமது ·பைசல் எனும் இளைஞர் ஒரு நிமிடத்தில் 50
மொபைல் ஃபோன்களின் எண்களைத் தடங்கலின்றிக் கூறுகிறார். 224
நாடுகளின் தலை நகரங்கள் மற்றும் அதன் ஐ.எஸ்.டி.
எண்களனைத்தையும் மளமளவெனக் கூறும் இவர் எந்த நாட்டைப்பற்றிய
செய்தியையும் 0.8 விநாடிகளில் தந்து நடமாடும் களஞ்சியமாக
இருக்கிறார்.
"முதலில் ஒரு பொருளை நினைவில் நிறுத்திக்கொள்ள ஆர்வம் இருக்க
வேண்டியது அவசியம். நான் எந்தப் பொருளையும் பர்த்து, கேட்டு,
தொட்டு, உணர்ந்து, படித்து, அனுபவித்து ஐம்புலன்களின் மூலம்
மூளையில் பதிவு செய்கிறேன்" என்கிறார் இவர். நாமும் இதை
நினைவில் கொள்ளலாம்.
நாய்ப்பாசம்
அமெரிக்காவில் வசித்துவந்த லியோனா ஹெம்ஸ்லி என்ற கோடீஸ்வரி
தான் இறக்கும்போது தனது நாய்க்கு 49 கோடி ரூபாய் சொத்து எழுதி
வைத்துள்ளார். நாய் இறந்த பிறகு அதையும் தன்னருகில் புதைக்க
வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். பேரன் பேத்திகளுக்கு ஒரு
பைசா கூட ஒதுக்கவில்லையாம்.
தீராத வழக்குகள்
மாவட்ட கோர்ட்டுகளில் கடந்த மார்ச் 31 வரை 2 கோடியே 49
லட்சத்து 56 ஆயிரத்து 999 வழக்குகள் தேங்கியிருக்கின்றனவாம்.
சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்ட தகவல் இது. 1957ல் நிலம்
தொடர்பாகத் தொடரப்பட்ட ஒரு வழக்கு, கோர்ட்டுகளாக மாறி இன்னும்
தீர்ப்பு வழங்கப் படவில்லையாம். வாய்தாவிற்கு மேல் வாய்தா,
சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளில் தஞ்சம் புகுந்து கொள்ளுதல்
என்று பலவாறாக வழக்கை இழுத்தடிக்கும் நுண்கலையை வக்கீல்கள்
தெரிந்து வைத்திருக்கிறார்கள். பல நேரங்களில் தீர்ப்பு வரும்
வேளையில் குற்றவாளிகள் உயிருடனேயே இருப்பதில்லை. லஞ்ச ஊழல்,
மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள், பெரும்
புள்ளிகள் சுதந்திரமாக உலாவுகையில் 10 ரூபாய் லஞ்சம் வாங்கிய
குப்பனும் சுப்பனும்தான் கடைசியில் மாட்டிக்கொள்கிறார்கள்.
காலம் தாழ்த்தப்பட்ட நீதி
மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வார்கள்.
காணாமற்போகும் குழந்தைகள்
இந்தியாவில் வருடத்திற்கு கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகள்
காணாமற் போகிறார்களாம். அதாவது ஒவ்வொரு முப்பது
விநாடிகளுக்கும் ஒரு குழந்தை. கடத்தப்பட்ட பல குழந்தைகள் கொலை
செய்யப்படுகின்றனர், பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
காணமற்போகும் குழந்தைகளுக்கான தேசிய மையம் என்ற அமைப்பு,
குழந்தைகளைத் திரும்ப பத்திரமாகப் பெற்றோர்களிடம் சேர்க்கும்
பணியில் ஈடுபட்டிருக்கிறது. இது அரசியல் சார்பில்லாத பொதுநல
மையம். இதற்கு வழக்கமான முறைகளையும் தாண்டி நாம் அனைவரும்
ஒன்று சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும் எனக் கூறுகிறது இந்த
அமைப்பு.
http://www.missingindiankids.com/
என்ற இணையப் பக்கத்தில் இதுபற்றிய தகவல்களை நீங்கள் பெறலாம்.
நம்பிக்கை
இறைவனிடம் நம்பிக்கை யில்லையென்றால் உங்களிடம் தன்னம்பிக்கை
இருக்காது. முன்னேற்றம் வேண்டுமானால் முதலில் நம்மிடமும்
பிறகு இறைவனிடமும் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான்
வாழ்க்கை நல்வழியில் செல்வதோடு எதையும் உங்களால் வெல்ல
முடியும்
- விவேகானந்தர்
*******