மறைந்து போகும்
மனித நேயங்கள்
நாட்டின் பல இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மைக்
கவலைப்பட வைக்கின்றன. மராட்டிய மாநிலம் ஜெல்னா மாவட்டத்தில்
ஒரு பள்ளியில் எட்டாவது படிக்கும் மூன்று மாணவர்கள் அதே
பள்ளியில் படிக்கும் எட்டு வயது, ஐந்து வயதான இரண்டு
சிறுவர்களைக் கொலை செய்திருக்கிறார்கள். தில்லியில் ஒரு
ஆசிரியையை மாணவர்கள் பாலியல் தொழிலில்
ஈடுபடுத்தியிருக்கிறார்க்ள். பீஹார் மாநிலம் வைஷாலி
மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பத்து சில்லரைத் திருடர்கள்
அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அரசாங்கம் மூன்று
நாட்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அந்த சடலங்களைக் காவல்துறையினர் முறையாக அடக்கம் செய்வதற்கு
பதிலாக நதியில் வீசியெறிந்திருக்கிறார்கள். புத்தர்பிரான்
பயணம் செய்த, அஹிம்சையை போதித்த ஜைனமதத் தலைவர் மஹாவீரர்
அவதரித்த புண்ய பூமி வைஷாலி. பகல்பூரில் ஒரு செயினைத்
திருடியதற்காக நடுரோடில் பொதுமக்களே ஒருவனை அடித்து
உதைத்தார்கள். போலீஸும் அதன் பங்கிற்கு மோட்டார் சைக்கிளில்
கட்டி இழுத்துச் சித்திரவதை செய்தது.
மனித உயிர்களுக்கும் மனித நேயத்திற்கும் இடமில்லாத நிலை
இந்தியாவில் உருவாகிறதோ என்று கவலையுடன் சிந்திக்க
வைக்கின்றன இந்த செய்திகள்.
*****
குறும்பு
செய்தி
(குறும் செய்தி) எஸ்.எம்.எஸ்-சில் வந்த ஒரு சேதி.
வக்கீல் சரியில்லென்னா கேஸ் முடியாது, டாக்டர் சரியில்லன்னா
கேஸ் முடிஞ்சுடும்.
*****
நிர்வாகங்கள்
புதிய புதிய செயல் திட்டங்களை உருவாக்குவது எப்படி? முதன்மை
ஐடியா அதிகாரி என்று ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும்
என்கிறார், ஹர்ஸிம்ரன் சிங் என்ற நிபுணர். இங்கிலாந்தில் ஒரு
பாங்க் தினம் காலை 9.00 மணி முதல் 9.30 வரை எல்லா ஊழியர்களும்
சும்மா உட்கார்ந்து சிந்திப்பது என்ற ஒரு நடைமுறையை
ஏற்படுத்தியிருக்கிறதாம்.
இவர் மேலும் சொல்வது: ஓர் ஆண் பெண்ணிடம் திருமணம் செய்து
கொள்ளும்படி கேட்பது எப்படி? "நான் இது வரை பார்த்ததில்
நீதான் மிக அழகானவள், மென்மை உணர்வு கொண்டவள், நீ பார்க்கக்
கூடியவர்களுள் நான்தான் மிகவும் புரிதலுள்ள ஆசாமி. என்னை
மணந்து கொள்வாயா?"
அது சரி . பெண் ஆணிடம் எப்படிக் கேட்க வேண்டும்? "உன்னை விட
அழகான ஆசாமிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். கொஞ்சம்
காத்திருந்தால் நான் அப்படி ஒருவரைப் பார்க்க முடியும். ஆனால்
நான் எத்தனை நாள் காத்திருப்பது? உனக்கும் வயதாகிறது.
எனக்கும் வயதாகிறது. ஏன் நாம் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது?."
*****
சாதனை
சாதனைகளில் எத்தனையோ வகையுண்டு. ஒரு தொண்ணூறு வயது இளைஞர்
தனது இருபத்தோராவது குழந்தைக்குத் தந்தையானது ஒரு
சாதனையென்றால் 15 வயதிலேயே ஒரு சிறுவன் குழந்தைக்குத்
தந்தையானதும் ஒரு சாதனைதான.
கேரள மாநிலம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆயிஷா
செங்கோட்டையன் என்ற 84 வயதான பெண்மணி மாநில அரசின்
பாடத்திட்டத்தின் கீழ் பத்தாவது வகுப்பில் தேர்ச்சி
பெற்றிருக்கிறார். இதற்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல்
அவருக்கு.
106 வயதான ரோசாக்குட்டிக்கு இன்னும் படிக்க வேண்டும் என்ற
ஆவல் தீரவில்லை. தனது பேரன் பேத்திகள் கம்ப்யூட்டர்
படிப்பதைப் பார்த்துத் தானும் படிக்க வேண்டும் என்று
தீர்மானித்தார். மீன்குட்டி தண்ணிரில் நீஞ்சுவதைப்போல அவர்
கம்ப்யூட்டர் படிப்பையும் கப்பெனப் பிடித்துக் கொண்டார்.
அறிவுப்பசிக்கு வயது ஒரு தடையில்லை.
*****
பெட்ரோல் டீசல்
விலைகள் எப்போது உயரும், எவ்வளவு உயரும் என்று எல்லாரும்
வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் வேளையில்
கெர்ரிபெர்டன் என்ற விஞ்ஞானி வைக்கோலிலிருந்து (வைகோவிற்கு
எந்த சம்பந்தமும் இல்லை) பெட்ரோல் தயாரிக்க முடியும் என்று
காட்டியிருக்கிறார். நமது தமிழ்நாட்டில் கூட ராமர் என்பவர்
மூலிகையிலிருந்து பெட்ரோல் தயாரித்ததாக செய்தி, அவர் இப்போது
என்ன ஆனார்?.
*****
மோனிகா துபே
ஜான்பூர் மாவட்டத்தில் வசிப்பவர். அவருக்குத் திருமணம் ஆகி
ஒன்பது ஆணடுகள் ஆகின்றன. ஆனாலும் மாப்பிள்ளை வீட்டார் அவரைத்
தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகும் வழியாக இல்லை. மேலும்
டாக்டரான தங்களது பையனுக்கு வேறு பெண் வேறு பார்த்துக்
கொண்டிருந்தார்களாம். பார்த்தார் துபே, பொறுத்தது போதும்
என்று பொங்கியெழுந்து மேளதாளம் வாணவேடிக்கையுடன் ஊர்வலமாகக்
கணவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். வீடு பூட்டியிருக்க, ஒரு
நாள் காத்திருந்து மறு நாள் கதவையுடைத்து, இது என் வீடு நான்
இங்கேதான் தங்குவேன் என்று தங்கிவிட்டார். கணவன் வீட்டார்
இவள் இருப்பது தெரிந்து தங்கள் வீட்டுப்பக்கமே இன்னும் தலை
காட்டவில்லை. காத்திருக்கிறார் மது துபே.
இது சமீபத்தில் நாம் பார்த்த ஸ்ரீகாந்த் வந்தனா கதைபோல இல்லை?
*****
ராமர் இருந்தாரா
இல்லையா என்கிற சர்ச்சை ஒரு பக்கம் நீடிக்க, தேசிய சமஸ்கிருத
சன்ஸ்தானம் என்ற கல்லூரி ராமர் வனவாசம் சென்ற போது அவர்
பரதனுக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பது பற்றி வழங்கிய
அறிவுரைகளைத் தனது மேலாண்மைப் பொதுநிர்வாகம் பற்றிய துறையில்
பாடமாக வைத்துள்ளது.
*****
நகைச்சுவை நடிகர்
வடிவேலுவிற்கும் தே.மு.தி.க தொண்டர்களுக்கும் இடையே நடந்த
கைகலப்பில் வடிவேலுவிற்கு அடி, உதை- செய்தி
உதை வாங்கும்போது, "வேணாம்...., வலிக்குது..அழுதுடுவேன்"
என்றிருப்பாரோ.
*******