இப்படியும்
யோசிக்கலாமே!
இந்திய ஹாக்கிக்
கழகம் ஆசிய ஹாக்கிப் போட்டிகளின்போது இந்தியா மற்ற அணிகளுக்கு
எதிராகப் போடும் ஒவ்வொரு கோலிற்கும் 1000 ரூபாய் என்று தாராள
மனதுடன் அறிவித்தது. அதே சமயம் எதிரணி போடும் ஒவ்வொரு
கோலுக்கும் மொத்த ஊதியத்திலிருந்து 2000 ரூபாய்
பிடிக்கப்படுமாம். இதே லாஜிக்கைக் கிரிக்கெட்டுக்கும் பயன்
படுத்தினால் இந்திய அணி 157 ரன்கள் எடுத்ததற்கு ஊக்கத்தொகை
கொடுத்துவிட்டு பாகிஸ்தான் அடித்த 152 ரன்களுக்கு
இரட்டிப்பாகக் கழிக்க வேண்டாமோ?
சிலம்பாயணம்
பெருமகன் ஏவல்
அல்லது யாங்கனும்
அரசே தஞ்சம் என்று அருங்கான் அடைந்த
அருந்திறல் தெரிந்த அயோத்திபோல
பெரும்பெயர் மூதூர்பெரும் பேதுற்றுதும்
சிலப்பதிகாரம்
- புறஞ்சேரியிருந்த காதை (63-66)
பொருள்:
கோவலன் பிரிந்து சென்றவுடன் அவலமாகக் காட்சியளித்த
காவிரிப்பூம் பட்டினம் ராமபிரான் காட்டிற்குச் சென்றபோது
அயோத்தி இருந்த நிலையை நிகர்த்தது.
சப்தார்த்த
சிந்தாமணி
தஞ்சை சரஸ்வதி
மகால் நூலகத்தில் உள்ள அபூர்வ சுவடி நூல்களில் சப்தார்த்த
சிந்தாமணியும் ஒன்று. இதை எழுதியவர் தஞ்சை மராத்திய அரசில்
புலவராக இருந்த சிதம்பரக்கவி என்பவர். முதல் சுவடியிலிருந்து
படிக்கத் துவங்குகையில் ராமாயண காவியமாகவும் சுவடியின் கடைசி
வரியிலிருந்து வலது இடமாகப் படிக்கும்போது (உருது மொழிபோல)
பாகவதம் நூலாகவும் அமைந்துள்ளது இந்நூலின் தனிச் சிறப்பு.
படிப்பறிவைப்
பரப்பும் பசந்தி
ஒரிஸ்ஸா
மாநிலத்தில் பலிகாம் என்ற கிராமத்தில் பசந்தி என்ற 34 வயதுப்
பெண்மனி மாநில அரசின் எழுத்தறிவு இயக்கங்கள் செய்ய முடியாத
சாதனையை தனி ஒரு பெண்ணாகச் செய்து காட்டியிருக்கிறார். ஏழாவது
மட்டுமே படித்த பசந்தி தனது திருமணத்திற்குப் பின்பு
கல்வியறிவில்லாத தன் கணவருக்கு முதலில் கல்வியளித்து பின்பு
தான் படித்து
அறுபது கிராம மக்களுக்கு எழுத்தறிவு அளித்துள்ளார். இவரது
சாதனையைப் பாரட்டி அரசு மாவட்ட எழுத்தறிவு இயக்கத்தில் ஒரு
பொறுப்பாளராக இவரை நியமித்திருக்கிறது.
நீளமானது
யாதெனக் கேட்பின்
உலகிலேயே மிக
நீளமானது எது? என்று கேட்டால் அது சீனப்பெருஞ் சுவருமல்ல,
நைல் நதி செல்லும் பாதையுமல்ல, வேலையில்லாதவனின் பகல்
பொழுதுதான் என்று சொல்கிறார் சிந்தனையாளரும் எழுத்தாளருமான
எஸ். ராமகிருஷ்ணன்.
பிரச்சினை
"பிரச்சினைகளெல்லாம்
உங்கள் பிரச்சினை அல்ல. எப்படி அவற்றை
எதிர்கொள்ளப்போகிறீர்கள் என்பதுதான் உங்கள் பிரச்சினை.
ராமாயணத்தில் லட்சுமணன் போரில் மூர்ச்சையாகி இருந்தபோது
அனுமன் சஞ்சீவி மலையிலிருந்து மூலிகையை எடுத்துவரச் சென்றார்.
எந்த மூலிகை என்று தெரியாததால் சஞ்சீவி பர்வதத்தையே
தூக்கிவந்தார். அப்போது அனுமன் சிறியவராகவும் மலை
பெரியதாகவும் இருந்ததைக் கண்டு மலைத்து விடாமல் மலையைத்
தூக்குவதற்காகத் தன்னை மலையைவிடப் பெரியதாக ஆக்கிக் கொண்டார்.
இப்படித்தான் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் அந்தப்
பிரச்சினையைவிட பெரிதாக ஆக்கிக் கொள்ளும்போது பிரச்சினை
சிறிதாகிவிடுகிறது"- சொன்னவர் சேவாலயா முரளிதரன்.
ஜமாயுங்கள்
ஜவஹர்!
ஒரு கிராமப்
பகுதியைப் பார்வையிடச் சென்ற மதுரை மாவட்ட ஆட்சியர் ஜவகர்
அங்கு கொதிக்கும் வெயிலில் தார்ச் சாலையில் பரட்டைத்
தலையுடனும் ஒழுகின மூக்குடனும் பல சிறுவர்கள் காட்சி
அளிப்பதைக் கண்டார். உடனே சில சேவை அமைப்புக்களுடன் தொடர்பு
கொண்டு அவர்களுக்கு சீப்பு, சோப்பு, செருப்பு முதலியவற்றை
வாங்கி அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அது மட்டுமன்றி
மதுரை மாவட்டம் முழுதும் உள்ள கிராமங்களில் இந்த உதவியைச்
செய்ய பல சமூக சேவை மையங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்.
அரசுப்பணியை வெறும் சம்பிரதாயச் சடங்காகச் செய்யாமல் மனித
நேயத்துடனும், அக்கறையுடனும் செய்யும் ஜவஹரே, நீங்கள்
ஜமாயுங்கள்!
எப்பொழுது
வயதாகிறது?
இனிமேல் நாம்
ஒன்றும் செய்ய முடியாது என்று நீங்கள் கருதும் அளவுக்கு
எப்போது வயதாகிறது?
93வது வயதில் பெர்னார்ட் ஷா
Far fetched
Fables.
எழுதினார்.
91 வயசில்
Eamon de
Valera
அயர்லாந்து ஜனாதிபதியாக இருந்தார்.
90 வயதில் கூட பிகாசோ வரைவதை நிறுத்தவில்லை.
82 வயசில் சர்ச்சில்
A History Of
The English Speaking peoples
என்ற நான்கு தொகுதிகள் கொண்ட புத்தகத்தையும் லியோ டால்ஸ்டாய்
"I
cannot be Silent"
என்ற புத்தகத்தையும் எழுதினார்கள்.
எப்போது உங்களுக்கு உண்மையிலேயே வயதாகிறது? எப்போது உங்களால்
உலகுக்குக் கொடுக்க ஒன்றுமில்லை என்று தோன்றுகிறதோ அன்றுதான்.
ஒரு நல்ல செய்தி - அந்த நாள் என்றுமே வராது -
Steve Goodier
*******